Monday, February 27, 2023

குருவிற்கு சமர்ப்பணம்

எனது ஏழெட்டு வயதில் கீழே மண்ணில் விளையாடிகிட்டு இருக்கும் போது, மேலே மாடியில் மாலையில் எல்லோருக்கும் சம்ஸ்கிரதம் ஹிந்தி சொல்லித் தரும் எனது குரு, ஆசான், ஆச்சார்யர் என்னை மாடியிலிருந்து கூப்பிடுவார். 

காலில் ஒட்டியுள்ள மண்ணைக் கூட உதறாம மாடிக்கு ஓடுவேன். அவரே பேப்பர் பென்சில் கொடுத்து கரும்பலகையில் அவர் எழுதியுள்ளதை எழுதச் சொல்லி, படிக்கச் சொல்லி, ஒப்புவிக்க உதவுவார்.

அப்படி கத்துகிட்டது தான்:
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
வித்யா ததாதி விநயம்
குருப் ப்ரம்மா குரு விஷ்ணு

இன்று வரை அவர் சொல்லித் தந்த எதுவும் மறக்கவில்லை.

தனது பள்ளி ஆசிரியர் வேலை முடிந்தவுடன், தனது தந்தை முல்லைவாசல் ராஜகோபால கனபாடிகளின் குருகுல வசிப்பிற்கு நேராகப் போகாமல், அனைவருக்கும் மாலை 4.30யிலிருந்து ஆறு வரை சம்ஸ்கிரத ஹிந்தி வகுப்பு எடுத்துவிட்டுதான் வீடு திரும்புவார். 

எவ்வளவோ புத்தி சொல்லி படி படின்னார். படிக்காம இவ்வளவு வாங்குற, படிச்சா நல்லதுடாம்பார். என் அப்பா மீது மிகுந்த அன்பும் பாசமும் உடையவர்.

பின்னாளில் எனக்கு பத்தாம் வகுப்பில் கணக்கு வாத்யாரும் இவரே. கடைசி பரிட்சையில் இவர் வைத்த கணக்கு டெஸ்ட்டில் என்ன மார்க் வாங்கினேனோ அதே தான் பத்தாவது பப்ளிக் பரிட்சையிலும் வாங்க முடிந்தது. 

அப்ப கூட சொல்வார் வந்து சம்ஸ்கிரதம் ஹிந்தி படி, உருது சுலபமாக புரிய வரும். ரொம்ப உதவும்டாம்பார். அப்பவும் கேட்கலை.

கல்லூரி படிப்பு முடிஞ்சு அஸ்ஸாம் போகலாம்ன்னு முடிவெடுத்தவுடனே மறுபடியும் அவரிடம் ஓடினேன். அன்று எனது ப்ரைமரி ஸ்கூலில் சின்னப் பசங்களுக்கு மாலையில் சம்ஸ்கிரதம் ஹிந்தி சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார்.

உன் கிட்ட எத்தனை வருஷமாக சொல்லி வர்றேன், கேட்கவேயில்லை. இப்ப தேடி வர்ற. போய் இன்னும் பத்து பேரை கூட்டி வா, சொல்லித் தர்றேன்னார். எனது 23வது வயதில் கூடப்படிக்க விரும்புகிறவன் இன்னும் ஒருவனைப் பிடிக்கவே சிரமம். ஒன்னும் சொல்லாம அஸ்ஸாம் கிளம்பிப் போய்ட்டேன்.

வாழ்க்கையில் நமக்கு தானாக ஒரு குரு கிடைப்பது அரிது. கூடவே அன்பாக இருந்து அவ்வளவு அறிவுரை சொன்ன எனது ஆச்சார்ய குரு இவர் முல்லைவாசல் ஆர் சுப்ரமண்ய சர்மா.

அப்ப அவரிடம் விட்டதை மறுபடியும் தொடர்கிறேன். நேற்று இரவு கூட ஐஐடி சென்னை வெப்சைட்டிலுள்ள சம்ஸ்கிரத கிராமரைக் கற்கும் போது கூட எனக்கு இவர் ஞாபகம் தான்! இன்று காலை சம்ஸ்கிரத வேத புத்தகங்களை தரவிறக்கம் செய்யும் போதும் இவர் ஞாபகம்.

பஞ்சகச்சம் வேஷ்டியைத் தவிர வேறு வித உடை அணிந்ததில்லை. எளிமை, பக்தியின் சிகரம்.

தனது குருகுலத்தில் வசிக்கும் அத்தனை மாணவர்களையும் நாங்கள் படிக்கும் ரெகுலர் பள்ளி கல்லூரிகளிலும் அந்த குருகுல மாணவர்களை மேலும் படிக்க வைத்து வளர்த்தவர்கள் இவர்கள்.

ஶ்ரீ குருப்யோ நம: எனது ஆச்சார்ய குரு முல்லைவாசல் ஆர் சுப்ரமண்ய சர்மா! சென்னை சம்ஸ்கிரத கல்லூரி முன்னாள் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சகோதரர்! ஐஐடி மும்பை புரபசர் கே ராமசுப்ரமணியன் அவர்களின் பெரியப்பா!

அவரிடம் சென்று ஆசி பெற வேண்டுமென்று நினைத்திருந்தேன். இன்று சற்று முன் தன் ஆச்சார்யப் பணியை, தன் வாழ்நாள் முழுதும் மாணவர்களுக்கு கற்பிக்கும் பணியை நிறுத்திக் கொண்டார் எனது குரு ஆர் எஸ் சார்!

ஶ்ரீ குருப்யோ நம:

தாங்கள் கொடுத்த கல்வியில்
வாழ்வினிது

ओलै सिरिय ।
¡Saludo a mi profesor R S sir 2/26/2023!

Saturday, October 29, 2022

நமக்கான ஒரு தூண் நிற்கையில்

நமக்கென ஒரு இடம்
 அதில் ஒரு ஓரமாய் அமர்வதில்
இருளிலும் ஒதுங்க ஏதுவானது!

நாம் சொல்லும் சொற்கள்
  நம் புலம் பார்த்து மதிப்பிடப்படுகையில்
ஓரமாயிருக்கும் நம்மிடமே தூண்!

ஒரு கல்மண்டபத்தில் ஒதுங்கும் போது
  நமெக்கென இருக்கை ஓரமாய் இருக்கும்,
மண்டபத்தின் தூண்களும் ஊன்றுகோல்கள்!

மண்டபத்தில் பலவகை உரையாடல்கள்
   நம் உரையாடல் ஒரு மூலையில்
எட்டிப் பார்ப்பவர்களின் தூரம் பார்வையில்!

கண்களால் பேசும் அம்மண்டபம்
  நமக்கான ஓரத்தையும் ஏற்கும் பாரம்
இருளிலும் ஏதுவான தூண்கள் அவை!

நமக்கான ஒரு தூண் நிற்கையில்!

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Nuestro lugar en la sala del templo!

Friday, October 28, 2022

சப்பாத்திக்கு சாம்பார்

பக்கத்து ஊரிலுள்ள பஞ்சாபி நண்பனின் பெண் வந்து எங்களைப் பார்த்து விட்டுப் போனாள். 

நம்ம பையன் அம்மிணிகிட்ட தனக்கு வேணும்கிற சாம்பார் உருளைக்கிழங்கு சமைச்சு வைக்கச் சொல்ல, பஞ்சாபி பெண்ணுக்கு தோசை சட்னி சாம்பார் வச்சு ஏமாத்திரலாம்ன்னு அம்மிணி ட்ரை பண்ணாங்க, வேலைக்காவல.

நல்ல கொலைப்பசியில வந்த அந்த பொண்ணு சப்பாத்தியே சாப்பிட்டுக்கிறேன்னு சொல்ல, இங்ஙன வீட்டுல முழிக்கிற முழி ஆஹா!

வாழ்க்கையில ஒரு வீர பஞ்சாபி மங்கைக்கு வந்த சோதனை, சப்பாத்திக்கு சாம்பாரையும் உருளைக்கிழங்கையும் தொட்டுகிட்டு, சாப்பிட முடியாம சாப்பிட்டுவிட்டுப் போயிடுச்சு. பாவம் குழந்தை.

அப்புறம் ஏன் சார் அவங்க நம்மளை சாம்பார்ன்னு சொல்ல மாட்டாங்க.

வாழ்வினிது
ओलै सिरिय !
¡Come cualquier cosa cuando tengas hambre!

வெடிச்சத்தம் கொடுக்கும் தீபாவளி வருகை

வீட்டு பக்கத்துல இந்த வருட தீபாவளி கொண்டாட்ட வெடிச்சத்தம் (fireworks) தொடர்ந்து பதினைந்து நிமிடமாகக் கேட்குது.

வெடிச்சத்தம் கேட்டுத் தான் இன்னிக்கு ஊர்சனம் தீபாவளி கொண்டாட்டமே தெரிகிறது.

என்னமோ நம்ம உலகமே தனியாக இயங்குது. எதையும் முன் கூட்டியே தெரிந்து கொண்டு அதில் பங்கேற்க நேரமேயில்லை.

இயந்திரத்தனமாக எங்க இரண்டு பேருக்கும் வேகமாக வாழ்க்கை ஓடுது. மூனு டிவியிருந்தும் ஒன்று கூட ஆன் பண்ணுவதில்லை. ரிமோட் தேடனும்.

அடிக்கடி அம்மிணி கேட்கிறாப்புல: ஏன் நமக்கு நேரமே பத்தமாட்டேங்குது என.

தெரியலை.

வாழ்க்கை இயங்குகிறது. அதன்படி நாங்கள் ஓடுகிறோம்.
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Fuegos artificiales en la vida!

கந்தையேயானாலும் கசக்கிக் கட்டு

வீட்டிலுள்ள பழைய எலக்ட்ரானிக் சாதனங்கள் லேப்டாப்பில் ஏதாவது உடைந்தாலோ பழுதடைந்தாலோ முன்பெல்லாம் தூக்கிப் போட வேண்டிய நிலமைதான்.

வீட்டிலிருந்த மூனு பழைய லேப்டாப்புகளை நானே அப்கிரேட் பண்ணி இன்னும் பத்து வருடமாகியும் அதெல்லாம் சிறப்பாக ஓடுது. 

ஆனால் பையனோட மேக்புக்கின் ஸ்க்ரீன் உடைஞ்சவுடனே அந்தப் பழசைத் தூக்கிப் போட மனசு வரலை. 

சின்ன வயசுல அண்ணன் ஷர்ட்ஸை நான் போடுவதும் என்னோட பேண்ட் ஷர்ட்ஸை காலேஜில் படிக்கும் போது கூட என் தம்பி போடுவதும் எங்க வீட்டில் சகஜம். இப்ப கூட என் பையன் வாங்கி விட்டு போடாம மற்றும் அவன் வளர்ந்து விட்டதால் அவனுதை நானும் என் அண்ணனும் போடுகிறோம். அல்பத்தனமாக இருந்தாலும் எங்க சின்ன வயசு பழக்கவழக்கங்கள் மாறவில்லை. சின்ன வயசில் பணப்பற்றாக்குறையை நிறைய சந்தித்ததால் இது எங்கள் வீட்டில் சகஜமாய்ப் போனது.

பையனோட பழைய மேக்புக் லேப்டாப்பை ஆப்பிளுக்கே எடுத்துப் போயும் பல கடைகளில் ஏறி இறங்கியும் அந்த ஆயிரம் டாலர் பொருளை வீணாகத் தூக்கிப் போட மனசு வரலை. ரிப்பேர் பண்ண ஆகிற செலவுக்கு இன்னும் கொஞ்சம் போட்டு புதுசு வாங்கிடலாம்.

பல இடங்களில் தேடுகையில் ஒரு கடையில் சொன்னார்கள்: இங்கு மாதம் 25$ மெம்பர்ஷிப் எடுத்துக்க. உன் வீட்டிலுள்ள எந்த எலக்ட்ரானிக்ஸ் பொருளையும் அது சுக்கு நூறாக உடைஞ்சா கூட நாங்க ரிப்பேர் பண்ணித் தர்றோம்ன்னாங்க. இரண்டு மூனு மாசம் கழிச்சு தேவையில்லைன்னா மெம்பர்ஷிப் கேன்சல் பண்ணிக்கன்னாங்க. உன் மேக் ஐ நாங்க 100$க்கு ரிப்பேர் பண்ணித் தர்றோம்ன்னாங்க.

இது என்ன புதுசா இருக்கேன்னு நினைச்சேன். மெம்பர்ஷிப் எடுத்த அடுத்த மாதம், உடைஞ்சு கிடந்த லேப்டாப்பை மூன்றே நாளில் உயிர்ப்பித்துக் கொடுத்து விட்டார்கள்.

வாங்கும் போது போனால் கடையில் செம கூட்டம். எல்லோரும் அவர்களிடம் உடைஞ்ச போனை ரிப்பேர் பண்ணுவதும், பிஎஸ்4 என பல விளையாட்டு கேமிங் எலக்ட்ரானிக்ஸ் ஐட்டமெல்லாம் அதன் ரிமோட் கூட உயிர்ப்பித்து வாங்கிகிட்டுப் போறாங்க.

இன்னொரு லேப்டாப்புக்கும் 100 கொடுத்து ssd ட்ரைவ் மாத்திப் போட்டுகிட்டேன். பத்து வருடம் முன்ன வாங்கிய லேப்டாப் இப்ப விண்டோஸ் 10 ssd 1tbல செமையாக ஓடுது.

இப்ப இங்க நிறைய எலக்ட்ரானிக்ஸ் சிப் பற்றாக்குறை. முன்பு எதையுமே வாங்கி தூக்கி எறிந்து கொண்டிருந்த மக்கள் இப்பவெல்லாம் எல்லாப் பொருட்களின் விலையெல்லாம் யானை விலையாக இருப்பதால் பழசை ரிப்பேர் பண்ணி உபயோகிக்கிற நிலைக்கு வந்து விட்டார்கள். பெரிய மாற்றம் தான்.

கந்தையேயானாலும் கசக்கிக் கட்டு.

பழசை உயிரூட்டி புதுப்பிபதில் 
வாழ்வினிது.
ओलै सिरिय 
¡Intenta reutilizar antes de lanzar!

தினபலன் சொல்லும் கதை

நம்ம ஜாதகம் அவங்க கையில எப்படி கிடைச்சதோ தெரியலை அவங்க போடற தினப்பலன் மாதிரியே நடக்குதே! நான் என்ன செய்ய!

போன் மூலம் பொன்னானத் தகவல் வரும்ன்னு இன்னிக்கும் போட்டாங்க!

வருதே! வரிசையாக மூனு போன் கால். (அண்ணன்) பொண்ணே மாப்பிள்ளையோட சேர்ந்து, ஃபோன் பண்ணி வாங்கன்னு கூப்பிடறாங்க. முன்னவே அண்ணன்ட்டேர்ந்தும் ஃபோன்.

ஒரு வருஷமாப் பேசாம ஓடி ஒளிஞ்சு கிட்டு இருந்த நண்பன் இன்னிக்கு திடீர்ன்னு போன் .

எல்லாம் ஒரே சமயத்துல ஒன்னு கட் பண்றதுக்குள்ள இன்னொன்னு.

கூடவே இதையுமல்ல எழுதிப் போட்டிருக்காங்க: இன்னியிலிருந்து 3 நாளைக்கு சந்திராஷ்டமமாம். வாயை மூடி கிட்டு இருங்கிறாங்க. நாளைக்கு peakஆம்.

எப்படி இருக்கிறது. கஷ்டமான காரியமாச்சே! 

எப்படியோ ஓடற வாழ்க்கை வழக்கப்படியே ஓடுது. பழகிடுச்சு!

வாழ்வினிது
ओलै सिरिय ।
¿Cómo lo predicen?

மாகாளி மோரில்

அம்மாக்கு மாகாளி வாசனையைக் கண்டாலே ஆகாது. ஆனால் அப்பாக்கும் எனக்கும் ரொம்பப் பிடிக்கும். மத்த சகோதரர்கள் அது பக்கமே வரமாட்டாங்க.

அம்மா எங்களுக்காகவே சகிச்சுகிட்டு எந்தக் குறையிமில்லாம மிக அருமையாக மாகாளி ஊறுகாய் போடுவாங்க.

எனக்கு மாகாளியைப் பார்த்தா கிறுக்கு பிடிச்சுரும். ரொம்பவே விரும்பி சாப்பிடுவேன்.

அம்மிணி இரண்டு நாளைக்குத் தேவையான கறிவேப்பிலை உப்பு போட்ட நீர்மோர் பண்ணி ஃபிரிட்ஜ்ல வச்சுட்டாங்க.

ஒரு பெரிய கப் நீர் மோர் எடுத்து அதுல கொஞ்சம் மாகாளியைப் போட்டுக் குடிக்கிற சுகமே சுகம் தான்.

இன்றைய வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Tómpalo de suero de leche!