எனது ஏழெட்டு வயதில் கீழே மண்ணில் விளையாடிகிட்டு இருக்கும் போது, மேலே மாடியில் மாலையில் எல்லோருக்கும் சம்ஸ்கிரதம் ஹிந்தி சொல்லித் தரும் எனது குரு, ஆசான், ஆச்சார்யர் என்னை மாடியிலிருந்து கூப்பிடுவார்.
காலில் ஒட்டியுள்ள மண்ணைக் கூட உதறாம மாடிக்கு ஓடுவேன். அவரே பேப்பர் பென்சில் கொடுத்து கரும்பலகையில் அவர் எழுதியுள்ளதை எழுதச் சொல்லி, படிக்கச் சொல்லி, ஒப்புவிக்க உதவுவார்.
அப்படி கத்துகிட்டது தான்:
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
வித்யா ததாதி விநயம்
குருப் ப்ரம்மா குரு விஷ்ணு
இன்று வரை அவர் சொல்லித் தந்த எதுவும் மறக்கவில்லை.
தனது பள்ளி ஆசிரியர் வேலை முடிந்தவுடன், தனது தந்தை முல்லைவாசல் ராஜகோபால கனபாடிகளின் குருகுல வசிப்பிற்கு நேராகப் போகாமல், அனைவருக்கும் மாலை 4.30யிலிருந்து ஆறு வரை சம்ஸ்கிரத ஹிந்தி வகுப்பு எடுத்துவிட்டுதான் வீடு திரும்புவார்.
எவ்வளவோ புத்தி சொல்லி படி படின்னார். படிக்காம இவ்வளவு வாங்குற, படிச்சா நல்லதுடாம்பார். என் அப்பா மீது மிகுந்த அன்பும் பாசமும் உடையவர்.
பின்னாளில் எனக்கு பத்தாம் வகுப்பில் கணக்கு வாத்யாரும் இவரே. கடைசி பரிட்சையில் இவர் வைத்த கணக்கு டெஸ்ட்டில் என்ன மார்க் வாங்கினேனோ அதே தான் பத்தாவது பப்ளிக் பரிட்சையிலும் வாங்க முடிந்தது.
அப்ப கூட சொல்வார் வந்து சம்ஸ்கிரதம் ஹிந்தி படி, உருது சுலபமாக புரிய வரும். ரொம்ப உதவும்டாம்பார். அப்பவும் கேட்கலை.
கல்லூரி படிப்பு முடிஞ்சு அஸ்ஸாம் போகலாம்ன்னு முடிவெடுத்தவுடனே மறுபடியும் அவரிடம் ஓடினேன். அன்று எனது ப்ரைமரி ஸ்கூலில் சின்னப் பசங்களுக்கு மாலையில் சம்ஸ்கிரதம் ஹிந்தி சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார்.
உன் கிட்ட எத்தனை வருஷமாக சொல்லி வர்றேன், கேட்கவேயில்லை. இப்ப தேடி வர்ற. போய் இன்னும் பத்து பேரை கூட்டி வா, சொல்லித் தர்றேன்னார். எனது 23வது வயதில் கூடப்படிக்க விரும்புகிறவன் இன்னும் ஒருவனைப் பிடிக்கவே சிரமம். ஒன்னும் சொல்லாம அஸ்ஸாம் கிளம்பிப் போய்ட்டேன்.
வாழ்க்கையில் நமக்கு தானாக ஒரு குரு கிடைப்பது அரிது. கூடவே அன்பாக இருந்து அவ்வளவு அறிவுரை சொன்ன எனது ஆச்சார்ய குரு இவர் முல்லைவாசல் ஆர் சுப்ரமண்ய சர்மா.
அப்ப அவரிடம் விட்டதை மறுபடியும் தொடர்கிறேன். நேற்று இரவு கூட ஐஐடி சென்னை வெப்சைட்டிலுள்ள சம்ஸ்கிரத கிராமரைக் கற்கும் போது கூட எனக்கு இவர் ஞாபகம் தான்! இன்று காலை சம்ஸ்கிரத வேத புத்தகங்களை தரவிறக்கம் செய்யும் போதும் இவர் ஞாபகம்.
பஞ்சகச்சம் வேஷ்டியைத் தவிர வேறு வித உடை அணிந்ததில்லை. எளிமை, பக்தியின் சிகரம்.
தனது குருகுலத்தில் வசிக்கும் அத்தனை மாணவர்களையும் நாங்கள் படிக்கும் ரெகுலர் பள்ளி கல்லூரிகளிலும் அந்த குருகுல மாணவர்களை மேலும் படிக்க வைத்து வளர்த்தவர்கள் இவர்கள்.
ஶ்ரீ குருப்யோ நம: எனது ஆச்சார்ய குரு முல்லைவாசல் ஆர் சுப்ரமண்ய சர்மா! சென்னை சம்ஸ்கிரத கல்லூரி முன்னாள் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சகோதரர்! ஐஐடி மும்பை புரபசர் கே ராமசுப்ரமணியன் அவர்களின் பெரியப்பா!
அவரிடம் சென்று ஆசி பெற வேண்டுமென்று நினைத்திருந்தேன். இன்று சற்று முன் தன் ஆச்சார்யப் பணியை, தன் வாழ்நாள் முழுதும் மாணவர்களுக்கு கற்பிக்கும் பணியை நிறுத்திக் கொண்டார் எனது குரு ஆர் எஸ் சார்!
ஶ்ரீ குருப்யோ நம:
தாங்கள் கொடுத்த கல்வியில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Saludo a mi profesor R S sir 2/26/2023!
No comments:
Post a Comment