Sunday, May 31, 2020

அசெம்ப்ளி ப்ரோகிராமில் என் நிழல்

எவருக்கும் தன்னோட உழைப்பை அது மற்றவரிடமிருந்து திருடி எழுதப்பட்டதுன்னு சொன்னா செம கோவம் வரும். நியாயம் தான்!

1991-92. கம்ப்யூட்டர் மேற்படிப்பு படித்த நேரம். கிளாஸ்ல கொடுக்கப்பட்ட அசைன்மண்ட் அசெம்ப்ளி லாங்க்வேஜ்ல கோடு எழுதனும். அதுவும் நாம தொட்டு டைப் அடிக்கிற கீ ஸ்ட்ரோக்ஸ் ரிகக்னைஸ் பண்ணி அதை மானிட்டர்ல டிஸ்ப்லே பண்ணனும். இதை அசெம்ப்ளி லாங்க்வேஜ்ல பண்ணனும். கீ போர்ட்ல இருக்கிற அத்தனை கீ களையும் ரிகக்னைஸ் பண்ணனும்ன்னு அஸைண்ட்மன்ட்.

லாங்க்வேஜ் யாருக்கும் கத்துத் தரப்படலை. ஒரு மாதம் கால அவகாசம்.

கிளாஸ்மேட்ஸ் 25 பேருக்கும் இது பெரிய சேலன்ஞ். கூடப்படித்தவர்களெல்லாம் மிகப்பெரிய அறிவாளிகள். அவர்கள் வாங்கிய மார்க் எல்லாம் என்னோட கம்பேர் பண்ணினால் கிளாஸில் என்னோட ரேங்க் 22-23 வரும்.

காலேஜ் லைப்ரரி போய் முதல்முறையா அசெம்பளி லாங்க்வேஜ் எப்படி இருக்கும்ன்னு படிக்க ஆரம்பிச்சேன். அடுத்து கம்பைளர் எப்படி வேலை செய்யும்ன்னு படிக்க ஆரம்பிச்சேன். சனி ஞாயிறு எல்லாம் கம்ப்யூட்டர் லேப்ல உட்கார்ந்து இதைச் செய்தேன்.

மொத்த வகுப்புல இரண்டே பேர் மட்டும் அத்தனை கீ ஸ்ட்ரோக்கும் ரிகக்னைஸ் பண்ணி டிஸ்ப்ளே பண்ணி காமிச்சோம்

கடைசி நாள் புரபசர் என் கூட உட்கார்ந்து என்னோட புரோகிராமைத் எடுத்து ஒவ்வொரு வரிக்கோடையும் விளக்கமாகப் பார்த்தார். சபாஷ் சொல்லிட்டு A+ grade கொடுத்தார்.

கூடப்படிச்சவங்க யாரும் இதை நம்பவேயில்லை. கூடப்படிச்ச நேவல் ஆபீசர் மற்றும் இன்னொரு நண்பி எல்லாம் இது எப்படி சாத்தியம். இவன் போன வருட ஸ்டண்டோட கோடு திருடி கொடுத்திருக்கான்னாங்க. கிளாஸ்ல இவன் மகா மட்டமாக படிக்கிறவன். நம்மில் யாராலையும் செய்ய முடியலை. இவன் திருடியிருக்கான்னு சொன்னாங்க. நான் உட்கார்ந்து வேலை செய்த கம்ப்யூட்டர் லேப்ல போய் மத்தவங்க கோட் எல்லாம் தேடிப்பார்த்திருக்காங்க! எதுவுமே இல்லை.

என் கோடை நான் ப்ளாப்பி டிஸ்க்ல வச்சிருப்பேன். அதுலேர்ந்தே தான் நான் ரன் செய்வதும்.

எனக்கோ மிகப்பெரிய அவமானம். சொல்வதோ கூடப்படிக்கும் நேவல் ஆபீசர். மற்ற இரு மிலிட்டரி மேஜர்கள்கிட்டயும் என் கோடைக் காண்பிச்சேன். சரி விடுன்னாங்க! அதில் ஒரு மேஜர் கோல்ட் மெடலிஸ்ட். புரபசரே அவர் முன்ன கிளாஸ் எடுக்கும் போது உளறிடுவோமான்னு நடுங்குற ஆள்.

கஷ்டப்பட்டு உழைச்சு சுயமாக எழுதியதை திருடிட்டேன்னு சொல்லிட்டாங்களேன்னு செம வருத்தம்.

திரும்ப புரபசர்ட்ட போனேன். சார் நான் ஒரு சீனியர் கோடைத் திருடிட்டேன்கிறாங்க! நீங்க ஒருத்தர் தான் இந்த கோடு என்னுதுன்னு சொல்ல முடியும். சந்தேகமிருந்தா எனக்கு ஏ ப்ளஸ் தராதீங்கன்னு போய்ச் சொன்னேன்.

புரபசர் அந்த நேவல் ஆபீசரையும் இன்னும் இருவரையும் தன்னோட ஆபீஸ்க்கு கூப்பிட்டு நீண்ட விளக்கம் கொடுத்தார் நான் திருடலைன்னு.

அதற்கப்புறம் தான் அந்த ஆபீசரும் மற்றவர்களும் வந்து என்னோட கோடைப் பார்த்து சரி சரி தப்பிச்சுட்டேன்னாங்க. படிக்கிற காலத்திலும் அவர்கள் தான் நெருங்கிய நண்பர்கள். இப்போதும்.

காலேஜ் முடியற சமயத்துல அவர்களில் ஒருவர் என்னைப்பற்றி எழுதிய கவிதை இது:

ப்ரோகிராமிங் கா வேர்ல்ட் மே தோ தும் ஜீத் சுக்கே ஹோ!
லேகின் இஸ்கோ லேப் மே தியா சபீ நே தங்!

Saturday, May 9, 2020

அலையாத அலைதனில் ஓர் அலகு


அலைகளை அளக்கும் அலகு ஓர் அழகு
    அன்னநடை அலையில் மிதக்கும் அதன் உலகு
அவைதனை சுவைக்க தவமிருக்கும் இலவு!

குளிர்தனைப் போக்க தென்னோக்கி பறந்திடும் கொக்கு
   குளிரையும் சுமக்காமல் நம்மிடம் இறக்கி விட்ட மக்கு
நம்கண்ணிற்கு கொடுப்பதோ எழில் விருந்து!

பருவ காலங்கள் மாறும் நேரம்
  பறவைகள் அதன் போக்கை மாற்றும் நேரம்
வடக்கு நோக்கி வரும் நேரம்
  நம்முள் இருக்கும் இருளைப் போக்கும் நேரம்!

வசந்த காலம் வரவேற்கும் நிலையில் நாம்
   இன்னும் குளிர் விலகாத பருவம்
பறவைகளின் வரவேற்பை எதிர்நோக்கும் காலம்
  சிலநாள் காத்திருக்க வேணும் நாம்!

அன்னநடை அலையில் கிறங்கும் மனது
   அலையில் அலையாத மனநிலையில் அதன் இலக்கு
அவை தரும் காட்சிப்பருகலில் கிறங்கும் மனது!

அலையாத அலைதனில் ஓர் அலகு!

இசையின் மீதான ஆசையில்


இசை மீதான ஆசையில்
   பிறரை வசை பாடும் ஓசை
தாளம் தப்பிப் போகிறது!

இசை எனும் ஓசை
  அது ஓர் அமுதசுரபி
கொடுக்கும் போதே சுரக்கும்!

நடிப்பில் இசை தேடி ஓடிய பதத்தில்
  இன்று ராகம் மாற்றிப் பாடுவது
வளரும் இசைக்கு வழுக்கும் ஸ்ருதியோ!

கமல் எனும் கலைஞன்
   அவர் தன் கலைவாழ் அவரது ஓசையில்
அவரவர் வாழ்க்கை அவரது இசை!

இசை முன் நீ மண்டியடி
  உன் வளத்தைக் ஓசையின்றி கொடுக்கும்
தாளம் தப்ப இடம் பெயராமல்!

மீட்டும் நாதத்தில் இனிமையின் சுவை
   அதை உன் இசையில் வசையின்றி கொடு
கேட்போர்க்கு கிடைக்கும் நறுசுவை!

நாள் முழுவதும் தன் இசையில் என் அம்மிணி
  அவள் முன் இவ்வெளி உலகு சர்ச்சை
நிலைப்பதில்லை மீட்டும் அவள் வீணையில்!

பொழுதெல்லாம் அவள் போக்கு தன் இசையில்
   அவள் கவலை தன் இசையின் பயிற்சி
அதன் வளர்ச்சி தன்னிடம் பயில்பவர்களிடம்!

இசையின் மீதான ஓர் ஆசையில்!

Friday, May 8, 2020

பிறர் போற்றும் பெரியோனை


பிறர் போற்றும் பெரியோனை
  தன் குடை கீழ் இறக்கினாலும்
பாடிச் சென்றவை பிச்சைப் பாத்திரங்களன்று!

கையில் ஏந்திய திருவோட்டில்
  விழுந்ததோ ஓரிரு மணிகள்
சொல்லில் விரிந்ததோ மலர்காவியங்கள்!

ஏந்திப் பிடித்தவனை இழித்தாலும்
  ஏந்திய பாத்திரம் அக்ஷயபாத்திரம்
ஒவ்வொரு பருக்கையும் வண்ண ஜீவிதங்கள்!

திருவோட்டில் விழுந்த மணிகள்
   ஒவ்வொன்றும் ராக கீதங்கள்
பசிப்பிணியாற இறைக்கும் உன்னதங்கள்!

அவரவர் வாழ்வில் ஏந்தும் திருவோடுகள்
  காலம் செல்லும் பாதையில் மறையும்
தியாகய்யனின் கீதங்கள் மறையா ஜீவன்கள்!

கையில் ஏந்துவோம் ஒரு திருவோடு
  அதில் விழும் மணிகளை எண்ணுவோம் பலரோடு
அவை ஒன்று கூட இணையாகாது ஆசானோடு!

தியாகய்யரின் திருவோட்டில் எனது பிச்சை இது!

Sunday, May 3, 2020

வில்வாத்ரி பவன் மிக்சர்

ரிடையர்மெண்ட் அக்கௌண்ட்லயும் தனிப்பட்ட ஸ்டாக் அக்கௌண்ட்லயும் ஷேர் வாங்கி வச்சிருப்பதால வருடா வருடம் வருடாந்திர ஷேர்ஹோல்டர்ஸ் மீட்டிங்குக்கு நோட்டீஸ் வரும்.

இது தான் உன்னோட புது போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ். மனசுலாக்கிகிட்டு மீட்டிங்குக்கு வா, ஓட்டுப்போடு, இல்லாட்டி இந்த ப்ராக்ஸி ஓட்டு போடுன்னு அடிக்கடி ஒன்னு வருது!

ஏகப்பட்டது வருவதால பாதி ஓபன்கூட பண்ணமாட்டேன். மீட்டிங் நடக்குற இடம் நாம போகற தூரமில்லை. வாங்குற கொஞ்சூண்டுக்கு பக்கோடாவா கிடைக்கும். நேரா வீசிறுவேன்.

இன்னிக்கு ஒன்னை ஓபன் பண்ணி பார்க்கலாம்ன்னு பார்த்தாஅமேசான்லேர்ந்து வந்திருக்கு. இந்திரா நூயி அம்மாக்கு ஓட்டு போடுன்னு சொல்றாங்க!

பார்த்தவுடன் அப்பா ஞாபகம் வந்தது.

அப்பா வேலை செய்த கம்பெனியோட ஷேர்ஹோல்டர்ஸ் மீட்டிங் நடக்குற அன்னிக்கு அப்பாவைப் பார்க்கனும்! பிரமாதமாக இருப்பார். நல்ல இஸ்திரி போட்ட பளபளன்னு மல்வேஷ்டி, நல்ல மடிப்பு தெரியற அளவுக்கு விரைப்பா அயர்ன் பண்ணின ஒரு புது சட்டை, நெத்தி நிறைய தண்ணியில குழைச்சடிச்ச விபூதி, நடுவுல சந்தனப் பொட்டோட போவார்.

மீட்டிங் மாலை 4 மணிக்கு நடக்கும். ஐயா காலையில ப்ரெஷ்ஷா குளிச்சு முடிச்சு போவற மாதி பிரமாதமா போவார்.

அப்பா பிரமாதமாக இருக்கேம்பேன்.

டேய்! இன்னிக்கு ஷேர்ஹோல்டர்ஸ் மீட்டிங்டா! நான் வாங்கி வச்சிருக்கிறதே ஒரே ஒரு ஷேர், பத்து ரூவாய். அதுக்கு நான் போடற ஓட்டுக்காடா போறேன். சேர்மன் செக்ரட்டரி போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் எல்லாம் டை கட்டிகிட்டு கோட்சூட்ல பிரமாதமாக வருவாங்க! அதை சைடுல நின்னு பார்க்கனும்டா (அவங்க முன்ன சேர்ல உட்காரமாட்டார், தரையில உட்கார தயங்க மாட்டார்).

நானாவது ஒரு ஷேர் வாங்கிட்டு அங்க வர்ற சேலம் வில்வாத்ரி பவன்லேர்ந்து வர்ற நெய் மணக்குற மிக்சர் ஜாங்கிரி வாங்கி சாப்பிட்டுட்டு வரப்போறேன்.

ஆனால் என்னோட இரண்டு மூனு ஸ்டாக் அதிகம் வாங்கிட்டு, மீட்டிங்ல சேர்மன் டைரெக்டர்ஸை எல்லாம் மத்த பயலுகளும் கேள்வி கேட்பானுங்க பாரு, இவங்க தான் கம்பெனியோட பாதி சொத்த வாங்கி வச்சுகிட்டு கேட்கிற மாதிரி கேப்பாங்க பாரு, அதுக்கும் சளைக்காம டைரெக்டர்ஸ் பதில் சொல்வாங்கடா! இதெல்லாம் ரசிக்கனும்டாம்பார்!

அப்பா! எனக்கும் கொஞ்சம் வில்வாத்ரி பவன் மிக்சர் வேணும்ப்பாம்பேன். இன்னொரு பாக்கெட் கிடைச்சா ஒரு ஃபுல் பாக்கெட், இல்லாட்டி தன்னோடதுல இரண்டு எடுத்து வாயில போட்டுகிட்டு மொத்தத்தையும் எங்ககிட்ட கொடுத்துருவார்.

இன்னிக்கு அமேசான் ஸ்டாக் ப்ராக்ஸி நோட்டிஸைப் பார்த்தவுடனே அப்பாவோட ஷேர்ஹோல்டர் மீட்டிங் ஞாபகம் வந்துருச்சு!

கொரோனா காலத்துல இப்ப எல்லாம் வர்ட்யுவல் மீட்டிங் தான், வந்து கலந்துக்கன்னுட்டாங்க! இவிங்க உட்கார்ந்து பக்கோடா திங்கிறதை நாம வேடிக்கைப் பார்க்கனுமா!

நேத்து வாரன் பஃபெட்டும் 50பில்லியன் போயிடுச்சுப்பான்ட்டார்.

இவிங்க போடற வர்ட்யுவல் மீட்டிங்குக்கு இப்ப வில்வாத்ரி பவன் மிக்சரை நாம தான் சப்ளை பண்ணனும் போலிருக்கே!

ஆண்டவா!

Saturday, May 2, 2020

நான் அறியா கிரகணம்

கிரகணம்

அம்மையின் வீட்டெதிரில் அழகிய பூங்காவொன்று
மரம் செடி வளர்ந்து தழைத்து பசுமையின் பசலை பூமி
காக்கை குருவி பருந்து என பலவித பறவைகளின் உறைவிடம்
பசுமையின் பணபலம் காற்றின் சுவாசத்தில் தரும்!

பறவை ஒலி கேட்காத நாளில்லை
விளையாட்டுச் சிறுவர்கள் புரளும் பூமி
கால்நடை பயிலும் மக்கள் திரள் மூட்டமது
இயற்கைச் சுவாசம் இனிக்கும் சூழலது!

கிரகணத்தில் நான் அறியா புதுமை கண்டேன் இன்று!

மேகமூட்டத்தில் முற்பகல் இருளைக் கண்டேன்
என்றும் உணராக் குளிரைக் கண்டேன்
பறவை ஒலி கண்டில்லை
சிறுவர் எவருமில்லை
மக்கள் நடமாட்டமில்லை
தனித்திருந்த பூங்காவாயிற்று!
பறவை ஒலி சிறுவர் சத்தம் எதுவுமில்லா பாலைவனமானது பூங்கா!

பதினொன்று இருபதுக்கு அனைத்தும் புத்துயிர் பெற்றது
பறவையை உறையில் அடைத்தவர் எவரோ
சூரிய ஒளி பட்டு அனைத்தும் கிசுகிசுக்கின்றன!
அடைத்து வைத்த சிறுவர் கூட்டம்
மடை திறந்த வெள்ளமாய் வந்தது!
புத்துயிர் பெற்றது பூங்கா!

இது நான் அறியா ஓர் கிரகணம்!
பெங்களூர் நகர கிரகத்தில் ஒரு கணம்!

கிரகங்களின் கிரகத்தில்

ஆறு கிரகச்சேர்க்கை ஆற்று வெள்ளமாயினும்
கரைசேரும் ஓடத்திற்கு துடுப்பு தேவைப்படுமோ
ஆறு கிரகங்களின் சேர்க்கை
ஆறு விரல் மோதிரங்களன்று!

எட்டி வைக்கும் ஏணிப்படிகள்
இறங்க வேண்டிய படிகளோ!
விண்மீன் ஒளி தரும் விளக்குகள்
இருண்ட குகைக்குள் வெளிச்சம் வீசும் கதிர்களோ!

ஒரே நாளில் துவள வைக்கும் நிகழ்வுகள்
நம்மை தளர வைக்கும் கிரகங்களோ!
இழப்பை ஈடு செய்ய இயலாவிடினும்
பிடித்தம் போக கிடைக்கும் கசிறும் கதை சொல்லும்!

கிரகங்களின் பாதை எவ்வாறு இருப்பினும்
நம் பாதைத் தடங்கள் நமது கையில்!
எட்டி வைக்கும் அடித்தடங்கள்
சகதி மீதாயினும் வலுவாக இருக்கட்டும்!

கிரகங்களின் கிரகத்தில் ஓர் நாள் இது!