Sunday, March 11, 2012

வலையூர் பட்டி கணக்கு

செல்வம் மாமன் தோள் மேல கை போட்டு ஒரு வாஞ்சையோட இழுத்து கிட்டுப் போனாலும், தன் மேல் விழுந்த கையின் வலுமை கொஞ்சம் குப்பண்ணன் மனசை இறுக்கி பிடிச்ச மாதிரியே இருந்தது.

ஊரை பார்க்க வந்தேன் மாமான்னு  சொன்னாலும், அது இருக்கட்டும் மாப்பிள்ள, நீங்க வாங்கன்னு வீட்டுக்கே இழுத்துக் கிட்டுப் போயிருச்சு.

அப்பன் கிட்ட சொல்லாம வந்ததுக்கு வசவு வேறு இருக்குன்னு நினைக்கும் போது குப்பண்ணனுக்கு ஒரு பேச்சும் வரமாட்டீங்குது.

குப்பண்ணன் மெதுவா செல்வம் மாமன் கைய நவுத்துனதும், 'பயப்படாத மாப்ள , அப்பன் கிட்ட சொல்லலைன்னு' மாமன் மெதுவா சொல்ல, மாமன் இப்பிடி மனசைப் படிக்குதேன்னு குப்பண்ணனுக்கு இன்னும் பயம் சேர்ந்து ஒட்டிகிச்சு.

விட்டா ஓடுவதர்க்கே இருந்த குப்பண்ணனுக்கு, அல்லியாம்மா மொவத்தைப்  பார்க்க தைரியம் இல்லாம, மாமன் கிட்ட சொல்லி கிட்டு வயல்வெளி  நோக்கி  நட கட்டிச்சு.

குப்பண்ணனுக்கு மனசு சரியில்லைன்னாலும் சந்தோசமாயிருந்தாலும் ஒத்தையடி வயல் பாதையிலோ ஆத்தங்கரை வோரமா நடக்கத்தான் விரும்பும்.

நடவுக்கு வந்த புள்ளைங்க தன்னைப் பார்த்து சிரிப்பதாகவே தோன்றியதால், எங்கயும் நிக்காம மனசு ஊரை பார்க்கக்  கிளம்பிடுச்சு.

இத்தனையும் மத்தவங்க மூலமே கேள்விப் பட்ட அல்லியம்மா, மாமன் தன்னை ஒன்னும் பார்க்காமலேயே ஊர் திரும்பரதைப் பார்த்து ஒரு அழுகாச்சியா அழுவ, வந்ததே கோவம் அதுக்கு.

'எந்த சிறுக்கி மவன் என் மாமனை கல்லெடுத்து அடிச்சுதுன்னு' ஒரு கத்து கத்திகிட்டே வயல் பக்கம் ஓடிச்சு. எதிர கர்ணம் வீட்டு கணக்கின் மவன் சுந்தரவதனம் வர, மாமன் எங்கேன்னு கேப்போம்ன்னு அவனை நிறுத்திச்சு.

அரண்டு போன சின்ன கணக்கு மொவமே  மாறிருச்சு. அல்லியம்மா கோவம் அம்புட்டும் சுந்தரவதனம் மேல சந்தேகத்தோட திரும்பிருச்சு.

'எலேய்! வலையூர் பட்டி கணக்கு! வாரா இங்கே'ன்னு இழுக்க, பயந்து போன சுந்தரவதனம், 'யக்காவ், தெரியாம கல்லை இட்டுபுட்டேன்'னு சொல்லிட்டு ஓட ஆரம்பிச்சவனை துரத்திகிட்டே ஓட ஓட, சுத்து வட்டம் அலப்பறை பண்ணுவதை கூட கண்டுக்காம அல்லியம்மா ஓடிச்சு.

நடவுக்கு வந்த புள்ளைங்க சத்தமா கூவி சிரிக்க, சிரிக்க, எதிர வந்த ஆளை மோதுறது கூட தெரியாம ஓடிச்சு. திடீர்ன்னு நின்ன சுந்தரவதனம், 'யக்காவ், அதான் உன்ர மாமன் 'ன்னு சொல்லிட்டு ஓடிட்டான்.

எலேய்! வலையூர் பட்டி கணக்கு! வைச்சுகறேண்டா உனக்கு ஒரு நாளுன்னு, சொல்லிப்புட்டு, தன் மாமன் நினவு வர கோவமா  மாமனை நோக்கி திரும்பிச்சு.

குப்பண்ணன்க்கு தான் கட்டிக்கிரப் புள்ளையைப் பார்த்து  ஒரு துளி  என்ன சொல்லன்னு திகிலோட கலந்த ஆச்சரியம்.

 'என்னைப் பார்க்கத்தானே வந்தே நீ'ன்னு கேட்கும் அல்லியம்மாக்கு, மறுபடியும் ஊரைப் பார்க்கத்தான்னு சொன்னா  இங்கயே கொன்னுபுடப்  போவுதுன்னு நினைப்பு வர, எதையோ சொல்லிப் புட்டு நடையை கட்டிருச்சு.

அல்லியம்மா மனசு நோவ ஆரம்பிக்க, அழுகாச்சிய அடக்கிகிட்டே இத்தனைக்கும் காரணம் அந்த சிறுக்கி மவன் வலையூர் பட்டி கணக்கை வைச்சுக்கிறேன் ஒரு நாளுன்னு கருவிச்சு.

நடவு புள்ளைங்களைப் பார்த்து ஒரு முறை முறைச்சுக்கிட்டே போங்கடி போக்கத்தவகன்னு  வைஞ்சுகிட்டே வூட்ட நோக்கி நடக்க ஆரம்பிச்சுது.

1, 2.

Monday, March 5, 2012

இதயம் பேசுகிறது

கருப்பு வெள்ளை டிவி யும் தூர்தர்ஷன் மட்டுமே கொடிகட்டிட்டிருந்த காலம். எத்தனை நாள் தான் வயலும் வாழ்வும் பார்க்கிறது. அதனால எப்போதும் வீட்டு வெளியே விளையாட்டும், வீட்டுக்குள்ள சிறுகதைகளும், குறுநாவல்களும் படிச்சு அலசிக்கிட்டிருந்த காலம்.

பத்தாவது படிக்கும் முன்னே யவன ராணி, கடல் புறா, பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் முடிச்சிட்டு, எவன் முதல்ல எந்த பாகத்தை படிச்சு முடிச்சான்னு அலட்டுவதும் ஒரு த்ரில்லு. கொஞ்சம் மாறுதலாப் படிக்கணும்னு இந்துமதி, சிவசங்கரி, வாஸந்தி, ரமணி சந்திரன், ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் எல்லாம் படிச்சிருவோம். எவன் அதிகமா படிச்சான்னு ஒரு போட்டி இருக்கும்.

என் நண்பன் கொஞ்சம் அறிவு பூர்வமாவே எதையும் செய்வான். அப்ப சுஜாதா படிப்பதெல்லாம் மாடர்ன் trend . என் நண்பன் முதல்ல இருப்பான். இதயம் பேசுகிறது மணியன். லேனா தமிழ்வாணன் பற்றியெல்லாம் பேசக் கூடியவன்.

எப்போதும் பள்ளி மதிய இடைவேளையில ஸ்கூல் ஒட்டி கடை வீதி பஸ் ஸ்டான்ட் எல்லாம் சுற்றி வருவோம். ஒரு நாள் ஒரு ஹோட்டல் வாசலில் ஒரு டூர் பஸ் 'இதயம் பேசுகிறது சுற்றுலா பேருந்து' என்ற banner உடன் நின்று கொண்டிருந்தது. இருவரும் ஆவலுடன் அதை நோக்கி நடந்தோம்.

பஸ்சின் பின் ஒரு பதினைஞ்சு அடி தூரத்தில் நாங்க நெருங்க வரும் போது ஒரு பெண்மணி பஸ்சிலிருந்து தலையை நீட்ட, என் நண்பன் 'டேய்! இந்துமதி' டான்னான். அவங்க எப்பிடிரா இதயம் பேசுகிறது பஸ்ல, கண்டிப்பா இருக்காதுன்னு நான் மறுக்க, என்ன பெட் என்றான். கையில பத்து பைசா மேல வைச்சிருக்காத எனக்கு கம்முனு இருக்கத் தோணாம, பத்து ரூவாடான்னேன். ரொம்பப் பெரிய அமௌன்ட் எனக்கு.

உறுதி செய்ய அவங்க உட்கார்ந்திருந்த ஜன்னலருகில் போனோம். என் அம்மா வயது இருக்கும் அவங்களுக்கு. என்னை மட்டும் பக்கத்தில கூப்பிட்டாங்க. ஒரே தயக்கம். எவ்வளவு பெட் கட்டின என்றாங்க. ஒன்னும் சொல்லலை நான். ஜோப்புல எவ்வளவு இருக்கு. அதை உன் friend கிட்ட கொடுன்னாங்க. எனக்கு ஆடிப் போயிருச்சு. வீடு திரும்ப பஸ்க்கு என்ன பண்ணுவது. ஏழு கிலோ மீட்டர் நடக்கணும். கால் தானாவே பின்ன போக ஆரம்பிருச்சு. பேச்சு சுத்தமா போயிடுச்சு எனக்கு.

உனக்கு மட்டும் ஆட்டோகிராப் தரேன்னு என் friend கிட்ட அவங்க சொல்ல, டேய் சீக்கிரம் ஒரு பேப்பர் பென்சில் கொடுறாங்கிறான், எங்கப் போவது. எனக்கோ அவமானத்திலும் பயத்திலும் கண்ணில நீர் கோர்க்குது. கடைக்காரன் கிட்ட கேட்டா திட்டுவான். தரையில கிடந்த பேப்பரை கொடுத்தேன் அவனிடம். மிக அழகான கையெழுத்திட்டு அவனுக்கு கொடுத்தாங்க.

என் காதில மணியன், தமிழ்வாணன் எல்லாம் கூட வந்திருக்கலாண்டான்னான். எப்பிடிரா அவ்வளவு பெரிய ஆளெல்லாம் இந்த மாதிரி டூர் வருவாரு. MS உதயமூர்த்தி வேணா இருக்கலாண்டான்னேன். எப்பிடி தான் அந்த அம்மா காதில விழுந்துதோ தெரியல, என் friend a மறுபடியும் கூப்பிட்டு, ஹோட்டல் உள்ள சாப்பிடராங்கப், போய்ப் பாருன்னாங்க. கூடவே சிவசங்கரியும் வந்திருக்காங்க என்று சொன்னாங்க.

என்னைப் பார்த்து, முதல்ல அந்தப் பத்து ரூவாயை அவனுக்கு கொடுக்கிரதப் பாருன்னாங்க. இனியும் நான் அங்கு நிப்பேன்னு நினைக்கிறீங்க. அவனுக்கும் அவர்களைப் பார்க்கிற சான்ஸ் போச்சு. பிடிறா மவனே ஓட்டம். நகர்ந்திட்டேன்.

இருபந்தைந்து வருஷம் கழிச்சு இந்த விஷயத்தை நான் நினைவு படுத்த, ரொம்ப நல்லா ஞாபகம் இருக்குடா. அந்த ஆட்டோகிராப் தானில்லைன்னான்.

பல பிரபலங்களை ஒருங்கப் பார்க்கிற சான்ஸ் என்னாலப் போயிடுச்சு. சின்ன வயசு சொலவடையினால, வடை போச்சு.

என்னோட இதயம் தான் இன்னும் பேசுகிறது.

Sunday, March 4, 2012

நிறத்தின் மாற்றம்

சமீபத்தில இது மாதிரி இரண்டு தடவ ஆயிட்டுது. பையனை வயலின் கிளாஸ்ல் விட்டுவிட்டு வரும் போது நல்ல காபி வாங்கிட்டு திரும்பலாம்னு காபி கடை போனேன். நான் வசிக்கும் ஊரில் எந்த கடைக்குப் போனாலும் ஒரு வரவேற்பு அல்லது ஒரு புன்முறுவலுடன் how கேன் i ஹெல்ப் யு என்பார்கள்.

இன்று வழிபாடு முடிஞ்சு திரும்பும் மக்கள் அதே கடையில் படையெடுத்து நின்றிருந்தனர். என் முறை வந்து காபி வாங்கி வெளிய வரும் போது கதவை அடைத்து நின்றிருந்த பெண்மணி உடம்பை அசைத்து வழி விட்டனர். பக்கத்தில் நின்றிருந்த அவள் கணவன், என்னை கடைக்கண்ணில் பார்த்துக் கொண்டே நக்கலாக, 'popular ஷாப், இஸ் இட் நாட்?' என்று அவளிடம் கூறினான். நான் ஒன்றும் பதில் சொல்லாமல் வழி விட்டதற்கு நன்றி சொல்லி விட்டு வந்து விட்டேன்.

சில மாதம் முன் இதே மாதிரி பையனை வகுப்பில் விட்டுவிட்டு காபி கடைக்குப் போய் நின்றேன். பணம் வாங்கும் பெண்ணோ அல்லது கலந்து கொடுக்கும் பெண்ணோ துளி கூட ஏறுடுத்துப் பார்க்கல, ஏதும் வரவேற்பு இல்லை, மற்றவர்களை மட்டும் கவனிப்பதில் ரொம்ப மும்முரமாக இருந்தனர். ஒன்றும் பேசாமல் வெளியேறி விட்டேன்.

அங்கு நிற்கும் போது மதியாதோர் வாசல் மிதிக்க வேண்டாம்னு மிகவும் தோன்றியதால், அருகில் கடை இருந்தாலும் போவதைத் தவிர்த்து வருகிறேன். ஆனால் உங்களிடம் பொல்லாங்கு சொல்லாமல் இருக்க முடியவில்லை.

பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கவும் நற்குணங்களையும் பெற மனமுவந்து சென்று வழிபடுகிறோம். முடிந்து வெளி வரும் போது நிறத்தின் மாற்றம் நம்மை பழையபடி செய்யத் தூண்டுகிறதா?

Friday, March 2, 2012

மாற்றம்

 மாற்றம்
 
நம்ம அன்றாட வாழ்க்கையில திடீர்ன்னு ஒரு மாற்றம் வருதுன்னு வைச்சுக்குங்க. அதற்கு நாம முன்கூட்டியே தயாராயிட்டோம் என்றால் அது நமக்குப் பெரிய அதிர்ச்சியைக் கொடுக்காது. மாற்றம் சொல்லிக்கிட்டா வரும்.
 
ஆறு மாசத்துக்கு ஒரு முறை வந்தா ஒரு பல்லைக் கடிச்சிகிட்டே அதற்கு ஏற்ப தேவைகளை ஏற்பாடு செய்து கொள்ளலாம். ஆனால் வரும் மாற்றம் நமக்கு அதிர்ச்சி அளிக்ககூடிய வகையில் இருந்தால், எப்பிடி மீண்டு வருவது. சிலருக்கு depression வரும். சிலருக்கு அலுவலகத்தில் பகை வரும். வீட்டுல அமைதியின்மை வரும்.
 
உதாராணமா, அலுவலகத்தில நல்ல பதவியிலிருந்து அல்லது நல்ல காசு பார்க்கக் கூடிய இடத்திலிருந்து வெகு சுமாரான இடத்துக்கு மாத்திட்டாங்கன்னா என்ன பண்ணுவது. எத்தனை பேருக்கு இதை சமாளிக்க மன தைரியம் இருக்கு.
 
வழி இல்லையா? இருக்கு. கொஞ்சம் உட்கார்ந்து யோசிங்க. :-)
 
எங்கிருந்து உங்களை மாற்றியிருக்காங்க. என்ன தகராறு ஆயிருக்கு? இதை மேலும் பிரச்சனை பண்ணினா என்ன நடக்கும். அந்த தகராறில உங்க பக்கம் நியாயம் இருந்து நீங்க வெற்றி அடைஞ்சிட்டா, என்ன நடக்கும். திருப்பி அதே மக்களோட சேர்ந்து வேலை செய்யணும். பழையப் பகையை வைச்சு மறுபடியும் குடைச்சல் தரலாம். நிலைமை இன்னும் மோசமாகலாம்.
 
விடுங்க. இப்ப புதுசா வந்திருக்கிற இடத்தைப் பாருங்க.
 
இங்க நீங்க அதிக experience உள்ள ஆளா இருக்கலாம். அல்லது ஒரு பெரிய பாப்புலரான பதவியிலிருந்தோ அல்லது அதிக தொழில்நுட்பம் தெரிஞ்ச இடத்திலிருந்து வந்திருப்பதால புதிய இடத்தில் மதிப்பும் மரியாதையும் தர வாய்ப்பு உள்ளது. இங்கு பெரிய பதவி கிடைக்க அதிகம்  வாய்ப்பு உள்ளது.
 
அங்கு நீங்கள் பத்தில ஒருத்தர். இங்க நீங்க பத்தில முதல்வர். உங்களை மதித்து நடக்க புதிய இடத்தில் வாய்ப்பு அதிகம்.
 
பழைய இடத்துப் பகைமையை நினைத்து வருந்துவதினால், நமக்கு மன உளைச்சலும், அதனால் குடும்பத்தில் மாறுபட்டு நடக்க வாய்ப்பு உள்ளது.
 
பழைய ஆளுங்களோட மறுபடியும் மல்லுக்கு நின்னா புது  இடத்திலும் உங்களை கண்டு பயப்பட வாய்ப்பு உள்ளது. புது இடத்திலும் பெரிய பதவிக்கு  உங்கள எடுப்பதற்கோ அல்லது கூட வேலை செய்பவர்கள் உங்களோடு அணுகுவதற்கு, பேசுவதற்கோ பயப்பட மாட்டாங்களா? 
 
விட்டுத் தள்ளுங்க மக்கா. toilet பேப்பர் தொடைச்சி தூக்கி விட்டேறிஞ்சிட்டு வருவதில்லையா? திருப்பி அது நம்ம மேல ஒட்டாமப் பார்த்துக்கணும். இல்லையா  மக்கா.
 
மாற்றம் நம்ம வீழ்த்திடாம, நம்ம முன்னேற்றத்திற்கு உதவுவதற்கு மாற்றத்தை சாதகமாக மாற்றிக் கொள்ளுங்க. நம்மால முடியும். நம்ம கையிலத் தானிருக்கு.

Sunday, February 26, 2012

புரியாமப் புரியுது

அம்மா என்னை காலையில ஆட்டி எழுப்பும் போதே என்ர அப்பன் கருப்பட்டி காபியோட வெளியே நிப்பாரு. கண்ணத் துறக்கலாமா வேணாம்னு யோசிச்சு அசையும் போதே அம்மாவ்வோட கேப்பக் களியோட வாசம் இல்லாட்டி ராகிக் கஞ்சி வாசம் இழுத்து அணைக்கும்.

அம்மா இன்னையாவது இட்லி வைக்கலையான்னு லேசா குரல் விடுவேன். அடி சக்கை ன்னு குரலோ அல்லது பெரிய துரைமாரு புள்ளைன்னு நெனப்பு சத்தம் கொஞ்சம் பக்கத்துல வர மாதிரி இருந்துச்சுன்னா புடுறா சொக்கா ஓட்டம்னு இழுத்தெரிஞ்சு ஒரு ஓட்டம் புழனி பக்கம் ஓடிர வேண்டியது தான்.

கழனி மேட்டுல வேலை செய்ய இட்லி தோசை உதவாதுட போக்கத்தப் பயலேன்னு திட்டிக்கிட்டே அம்மா வந்து பல்ல விளக்குறாங்கும். அது கையில வேப்பன் குச்சி ஒன்னு ரெடியா நிக்கும். அத வாங்கி கையில வைச்சு கிட்டே, எப்பிடிரா நம்மஅப்பன் வேணும்னா மட்டும் அம்மா இட்லி வடை சுடுதுன்னு யோசிக்கையில அந்தக் குச்சி முதுக சொரியவாக் கொடுத்தேன் கண்ணுங்கும்.

அப்பன் என்னிக்குமே தனக்கு எதுவும் வேணும்ன்னு நேரச் சொல்லாது. களி திங்கும் போது அந்த அய்யண்ணன் கடை வழியாப் போனேன், இட்லி வடை வீச்சம் நம்ம தோட்டத்துக்கே வந்துருச்சுப் புள்ளங்கும். அம்மா ஒரு பார்வையோட உள்ளாரப் போய் சிரிச்சிக்கும். அடுத்த நாள் காலயில ராசக்காவை வைச்சு வடை சுட வைச்சிரும். அள்ளி வைச்சப் புருசனுக்கு ஆட்டவைச்சுப் படைக்குது பாரு உன்ர ஆத்தான்னு ராசக்கா சுட்டுக் கொடுக்கும்.

அப்பனும் ராசக்கா மாமனும் தோட்டத்துல இதச் சொல்லி சிரிச்சுக்கும். அப்பன் மாமன்கிட்ட எப்பவும் சொல்லுவாரு. எலேய் விளையாட்டுக்கு கூட பொஞ்சாதி மேல கையைத் தூக்கிராதரே, பொஞ்சாதியப் பகைச்சுகிட்டா நட்டம் உனக்குத்தாம்ல என்கும். மாமன் கேட்காத மாதிரி அங்கிட்டு எதோ சத்தம் வந்தம் மாதிரி நடிக்கும்.

ராசக்கா எந்த வேலையை செய்தாலும் ஒரு காரியத்தோட தெரிஞ்சுவைச்சு செய்யும். கவனமா செய்யும். ஆனால் மாமன் வந்தாலே அங்கிட்டு எல்லாமே மாறிரும். மாமன் அதக் கொண்டா இத செய்யுன்னு மிரட்டுவதும் உதைப்பதுமா இருக்கும். அக்கா ஒரு பிடிப்பில்லாமலே செய்யும். நான் மாமன் இல்லாத சமையமாத் தான் ராசக்கா வூட்டுப் பக்கம் தலைஎடுப்பேன், எங்க நம்மையும் சாத்திருமோன்னு. அக்கா புள்ள இல்லாம படர கஷ்டமும் சேர்த்துப் படும். எலேய்! உன்ர அப்பனாத்தவைப் பாருலே. ஒண்ணா இருக்க மாதிரியும் இல்லாம சேர்ந்தா மாதிரியும் இல்லாம பாசாங்காப் பழகிற மாதிரி நடிச்சு ஒட்டிகுதுங்க. என்ர நிலைமையைப் பாருலேங்கும்.

ராசக்கா சொல்றது புரியுதா இல்லையான்னு யோசிக்கத் தெரியாம, அக்கா தெரிஞ்சுவைச்சு தான் சொல்லும்ன்னு வந்துருவேன்.

Thursday, February 23, 2012

வலையூர் பட்டி

வலையூர் பட்டி

பொதுவா கிராமம்னா ஆத்துக்குப் பக்கத்தில இருக்கணும் இல்ல சாலை வசதியோட கொஞ்சமான தண்ணி அள்ளிகிட்டு வர மாதிரியோ இருக்கணும். இரண்டும் இல்லாம ரோடு வந்து சேரவே இரண்டு கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் ஒரு குக்கிராமம் வலையூர் பட்டி.

வலையூர் பட்டியில உனக்கு பொண்ணு எடுக்கப் போறோம்ல என்று குப்பண்ணனோட அப்பத்தா சொல்லிட்டுப் போச்சு. அது சொன்னாலும் சொல்லிச்சு வலையூர் பட்டி எப்பிடி இருக்கும்ன்னு தான் குப்பண்ணனுக்கு நினைப்பே தவிர கட்டப் போறவளப் பத்தி நினைக்கத் தெரியல. அது எப்பிடிஇருந்தா என்ன, அந்த கிராமத்தை பார்த்திடனிம்டின்னு பஸ் ஏறிடிச்சு.

பஸ் நின்ன இடத்துல வழி கேட்கக் கூட சுத்து வட்டம் யாரும் இல்லை. எதோ நடுக்காட்டுல இறக்கி விட்டாப்பல இருக்கேன்னு யோசிக்கும் போது சுளிர்ந்னு முதுகுல ஒரு கல் விழுந்தது. குப்பண்ணன் வலியில ஒரு திட்டு திட்டி சுதாரிக்கும் போது அடுத்து ஒரு செங்கல் வந்து விழுந்தது.

அரண்டு போன குப்பண்ணன் யாருலேன்னு கத்திக்கிட்டே ஒரு ஓட்டம், இருந்த ஒத்தையடிப் பாதையில ஓடிச்சு ஓடிச்சு கண்ணுல ஒரு குடிசை வந்த பிறகு தான் நிப்பாட்டிச்சு. மூச்சிறைப்பு வேகமா நெஞ்சு அடிக்கையில நின்னு தலை தூக்கினா குடிசையிலேர்ந்து செவப்பாட்டி தலையை நீட்ட, குப்பண்ணன் பயந்து போய் ஒ ஊன்னு ஒரு கத்து தன்னையறியாம கத்திருச்சு. செவப்பாட்டி மறுபடியும் யாருன்னு கேட்டப் பொறவு தான் குப்பண்ணனுக்கு உசிரு வந்தது.

ஊரு பாக்க வந்தேன் பாட்டி ன்னு சொல்லி முடிக்கையில செவப்பாட்டி ஒரு கத்து கத்தி ஊரையே கூப்பிட்டிருச்சு. அரண்டு போன குப்பண்ணன் முழிக்கையில ஊர்ப் பஞ்சாயத்து முன்ன நிப்பாட்டிடாங்க. வேறு வழியில்லாம தான் வந்த காரணத்தை சொல்ல வேண்டியாதாப் போச்சு.

பஞ்சாயத்து சனம் அத்தனைக்கும் சிரிப்புத் தாளால. எலேய் நம்ம அல்லியம்மாவ நோட்டம் வுட வந்திருக்காகன்னு ஒரு சிறுக்கிப் பையன் கத்த, குப்பண்ணன் அங்கிட்டுர்ந்து மறுபடியும் ஓடிரலாமான்னு யோசிச்சிட்டிருக்கையில, தோள் மேல ஒரு கனமான கை விழுந்து, நம்ம மாப்பிள்ளை அப்பத்தாவோடையே வந்திருக்கலாமேன்னு சொல்லி இழுக்கையில, மாட்டிநோமடா சாமின்னு தலையத் தூக்கினா பக்கத்தில செல்வம் மாமன் நிக்கறாரு.

மாமா! நீங்க எப்பிடி இங்கன்னு இழுக்கையில, மாப்பிள்ளை வருதுன்னு சொல்லிருந்தா வண்டி கட்டி வந்திருப்போம்ல என்று சொல்ல, தனக்கு வந்த அழுகாச்சிக்கிடையில சிரிப்பு தான் வந்துது. இந்த ஒத்தையடிப் பாதையில என்ன வண்டி கட்டப் போற மாமான்னு திருப்பி கேட்கவும், பாரு மாப்பிள்ளை இந்த தடத்தில நீயே ரோடுபோடறயா இல்லையான்னு செல்வம் மாமன் சொல்லிகிட்டே நடந்தது.

இப்பிடி ஒரு சந்திப்பு வலையூர் பட்டியோட நடக்கும்ன்னு குப்பண்ணன் நினைச்சிப் பார்க்கலை!

Monday, February 20, 2012

ராசக்கா

ராசக்கா

ராசக்கா சந்தைக்கு புறப்பட்டுச்சுன்னா கூடவே ஓடியாந்திருவேன். அக்கா திட்ட திட்ட அது முன்ன நடுந்துகிட்டே இருப்பேன். எலேய் பொறுப்பத்தப் பயலே! உன்ற அப்பனாத்தாட்ட சொல்லி புட்டு வாரான்னு கத்தும். நான் கேட்காத மாதிரியே முன்ன நடப்பேன். அதுவே என்ர அப்பன் ஆத்தாக்கு குரல் கொடுக்கும் ஒரு நமிட்டு சிரிப்போட.

ராசக்கா தலையில ஒரு கூடை தக்காளியும் இடுப்பில ஒரு கூடை வெண்டை கத்திரி அள்ளிகிட்டு இரண்டு கிலோமீட்டர் டவுனு பஸ்சுக்கு நடக்கும். எலேய்! உன்ற மாமன் வந்தா ஒத்தாசையாய் இருந்திருக்கும், எடுப்பெடுத்தவனே உன்னை எப்பிடி டே நான் கவனிப்பது. வ்யாவாரத்தை யாருலே பார்ப்பதுன்னு திட்டும்.

டவுன் பஸ் கண்டக்டர் இடம் கூடை வைக்கிறதுக்கு திட்டு வாங்கும், சின்னப் புள்ளைக்கு என்ன டிக்கெட்டு வேண்டி கிடக்குன்னு சொல்லி இன்னும் வெறுப்பேத்தும். என்னால ஒரு உதவியும் இல்லைன்னாலும் அக்காக்கு ஒரு தெரிஞ்சப் பய உடனிருப்பதை எதோ ஒரு பாதுகாப்புன்னு நினைக்கும்.

ராசக்கா ஒரு ஆம்பிளை கணக்கா விறு விறுன்னு பஸ்சு மேல ஏறி கூடையை ஏத்திரும். இறக்கும் போது யாராவது ஆம்பிளை கிடைக்குமான்னு பார்க்கும். லேட் ஆச்சுன்னா பஸ்காரன் கிட்ட திட்டு வாங்கும். சந்தை வாசலில தரகு மேஸ்திரி ஆளுக இருக்கும். ஆனா உதவாது. அக்கா அவிங்க குறைஞ்ச விலைக்கு கேட்கிராக எங்கும். மேஸ்திரி ஆளு அவிங்க கூடையை முதல்ல இறக்கிய பிறகுதான் அக்காவோட கூடையை இறக்க விடும். ஓரிரு தடவை அக்காவே எடுத்து வந்துச்சு.

ஆனால், தரகு மேஸ்திரி ஆளு பேச்சும் பார்வையும் சரியில்லாததால, பக்கத்து கடை சொர்ணக்கா புருஷனை நாடும். சொர்ணக்கா மிரட்டி சொன்னதால சொர்ணக்கா புருஷன் உடந்தையா இருக்கும். தரக முறைச்சிக்கிட்டா எப்பிடி புள்ள வியாவாரம் நடக்கும்ங்கும். ஒவ்வொரு தடவையும் என்னாத்துக்குப் பொல்லாப்புன்னு தரகுக்கு வணக்கம் சொல்லிப்புட்டு போயிரும்.

ராசக்கா ஒரு தடவை நல்ல செழுப்பா கூடை நிறைய தக்காளி எடுத்து வந்துச்சு. தரகு பஸ் கிட்டயே நிப்பாட்டி இருபது ரூபாய்க்கு கூடையை கொடுத்து விட்டுப் போயிருன்னு மிரட்டுச்சு.அக்கா நல்லா சண்டை போட்டுச்சு. முடியாதுன்னு விறுவிறுன்னு வந்து சொர்ணக்கா கடை பக்கத்திலேயே கடை விரிச்சிகிச்சு.

சொர்ணக்கா தரகப் பகைச்சிக்காத புள்ளன்னு சொல்லிச்சு. இருபது ரூபாய்க்கு கொடுக்க இது என்ன சொத்த தக்காளியா ன்னு சொர்ணக்கவோட கூடையை ஒரு பார்வை பார்த்துச்சு. சொர்ணக்கா ஒன்னும் சொல்லாம தன வ்யாவாரத்தப் பார்க்க ஆரம்பிச்சிருச்சு.

ராசக்கா கடையை அடுக்கிற விதமே அழகாயிருக்கும். லாவகமா தக்காளி அடுக்கும். கூறு கூறா வெண்டை கத்திரி தனியா அடுக்கி வைக்கும். சில ஆளுங்க அக்காவை லுக் விட்டுகிட்டே காயெல்லாம் வாங்கிட்டுப் போயிருவானுக. அப்பிடியும் கடைசியில கொஞ்சம் தங்கிரும்.

மாலை மங்குற நேரத்தில காய் தக்காளி நிறைய தங்கிருச்சுன்னா அக்கா முகம் கறுப்பிலும் கொஞ்சம் மங்கிப் போயிரும். திருப்பி பஸ் கட்டணம் கொடுக்கணும். காலி கூடைக்கு காசு கிடையாது. ஆனா அக்காக்கு காயை மலிசா கொடுக்க மனசு வராது. தரகு கேலி பேசும். இல்லாட்டி இரண்டு ரூபாய்க்கு தா ங்கும்.

ஒரு தடவை பேசாம கொடுத்துட்டு வாயேன்க்கான்னேன். எலேய்! பொறுப்பத்தவனே! வீட்டுல ஒரு சொட்டு வைக்காம அள்ளிட்டு வந்திருக்கேன். நானும் மாமனும் சாப்பிடலாம் அல்லது உங்கப்பன் ஆத்தாக்கு கொடுக்கலாம்லே! மீதியைப் பக்கத்து ஊரு பெரிய சனம் வீட்டுக்கே போய் வித்துட்டு வரலாம்லே ன்னுச்சு.

திரும்பி வரும் போது ராசக்காவைப் பார்க்க பெருமையா இருந்துச்சு. மெதுவா கையப் பிடிச்சு நடந்தேன். அக்காவோட சுரசுரப்பான கை கூட சுகமா இருந்துச்சு. அக்கா அழகா ஒரு புன்முறுவலோட கூட வந்துது.