Wednesday, March 8, 2023

பிள்ளைக்கு 16 வயதில் வாகனம் தேவை

நம் பிள்ளைகள் ஆணோ பெண்ணோ இங்கு high school போகும் போது அங்கு ஸ்கூலில் உடனடியாக ட்ரைவர் education programல சேர்த்து விட்டுருங்க, அவங்க 16 வயசாகும் போது ட்ரைவிங் லைசன்ஸ் கிடைக்க உதவும். அது நம் குழந்தைகளுக்கு ரொம்ப நல்லது, அவங்க வளர்ச்சிக்கு மிகவும் உதவும்ன்னு இங்கு கடந்து ஆறேழு வருடங்களாக பல பெற்றோர்களுக்கு நேரில் சொல்லி வருகிறேன்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை சொல்வார்கள்: இன்சூரன்ஸ் கன்னாபின்னாவென்று ஏறிவிடும், குழந்தைகளை கன்ட்ரோல் பண்ண முடியாது, படிப்பு போயிரும், கார் போயிடும், ஆக்ஸிடண்ட் ஆச்சுன்னா, என, ஒரு பெரிய லிஸ்ட் சொல்வார்கள்.

என் பதில் அவர்களுக்கு இதான்: நீங்கள் சொல்ற காரணம் எதுவும் சரியில்லை, காரணம் அதுவில்லை, உங்கள் குழந்தைங்க வளர்ச்சிக்கு நீங்க தடையாக இருக்கீங்கன்னு நேரடியாகவே அவர்களை குற்றம் சொல்வேன். யு ஆர் ராங் இன் எவரிதிங் சார் என்பது தான் என் பதில் அவர்களுக்கு.

என் பையன் அநுபவத்தில் சொல்வது தான். அவன் இவ்வாறு பெற்றோர்கள் செய்வதால் அவனோட பள்ளி நண்பர்கள் படும் கஷ்டங்களைச் சொல்வான். கூடவே நமக்கு ஒரு கேள்வி வேற: why you parents are always wrong? This is a different country, understand ம்பான். அவன் சொல்வது சரி தான். உனக்கு நான் என்னோட காரை தியாகம் பண்ணேன்னு ரொம்ப ஆடாதே, எல்லோர் குடும்பமும் ஒரே மாதிரி அல்லன்னு சொல்லி வைப்பேன். 

இருப்பினும் யதார்த்தம் அவன் சொல்வது தான். பசங்க பள்ளியில் படிக்கும் போது நாம் அவர்கள் நண்பர்களாகத் தான் பழகனும், பெற்றோர்களாக மட்டுமேயல்ல.

இதை குறிப்பிடுவதற்கு காரணம்: நேற்று விழாவில் ஒருவர் என்னிடம் வந்து பேசினார். அவர் பையன் இப்ப கல்லூரியில். நீங்க ஐந்து வருடம் முன்ன சொன்ன மாதிரி என் பையனுக்கு உண்மையிலேயே நீங்க சொன்ன அதே ப்ரோக்ராம்ல சேர்த்து விட்டு உடனே காரும் கொடுத்தேன். அது எங்களுக்கு எவ்வளவு உதவியதுன்னு நிறையவே சொல்லலாம். இப்ப எங்க லைஃப் ரொம்ப ஈசியாக இருக்கு, அவனோட தேவைகளை ஈசியாக அவனே செய்து கொள்கிறான். இப்ப காலேஜ்லேர்ந்து வாரா வாரம் வந்து ஓரிரு நாளைக்கு சாப்பாடு கூட எடுத்துப் போறான். உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கு, நன்றின்னார்.

நான் எப்போதும் என் வாழ்க்கையில் வாங்கிய அடிஉதைகளை மற்றவர்களுக்குப் பாடமாக சொல்வது, அவர்களுக்கும் உதவுது. அவர்கள் தட்டிக்கழிக்க முன்பு கூறிய காரணங்கள் எதுவும் நிற்காது என்பது அவர்களே உணர்கிறார்கள். இவரிடம் நான் எப்போது லெக்சர் அடிச்சேன்னு தெரியலை, ஆனால் அந்தக் குழந்தைக்கு உதவியிருக்கு. இவர் அப்போது நான் சொன்னதை எதுவும் மறுத்தும் பேசியதாக ஞாபகம் இல்லை, தன் பையனுக்கு உதவியிருக்கார். நன்று.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Entrena a tus hijos para que aprendan a conducir temprano. Les ayuda!

அசரீரி கேட்குது

என்ன தான் ஊர் உலகத்துல போய் எடுபுடி வேலை செய்தாலும் சொந்த வீட்டுல நாலு பாத்திரம் கூட விலக்கலைன்னா நாம்ப மனுசன்களே இல்லை.

10 தோசை சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள ஒரு சின்க் லோடு பாத்திரம் நிக்குது.

உண்ட மீசைக்கு இழுக்காயிரக்கூடாதேன்னு காயப்போடாம அமைதியாக டிஷ் லோடு பண்ணி சின்க்கை க்ளீன் பண்ணிட்டேன்.

காலையில காபி போடற கை சின்க்கைப் பார்த்து முகம் சுளிக்காம இருக்கும்.

முதுகு வலிக்குது. இன்றைய தினம் கழிந்தது. விடியலை நோக்கி உறங்குவோம்.

அம்மாவின் குரல் கேட்குது: நாள் பூரா ஒருத்தி ஆபீஸ்லையும் உழைச்சுட்டு வீட்டுக்கு வந்தும் இவ்வளவு வேலை செய்யறா, உனக்கு 4 பாத்திரம் தேய்க்க இவ்வளவு நடிப்பாடான்னு.

சரி. நீ சொல்றது கேட்குது தாயீ!

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡La voz de mamá está oyendo!

மொழிச்சிதைவு

இன்றைய மார்ச் 7 2023 தமிழ் தினசரி காலண்டர்ல ‘கௌரவம்’ என்கிற வார்த்தையை ‘கவுரவும்’ன்னு அச்சடிச்சுருக்காங்க!

தமிழில் எழுதுவது அச்சடிப்பதெல்லாம் இந்த லட்சணத்துக்கு இறங்கி கௌரவம் இழந்துச்சுன்னா கண்டிப்பாக கவுர வேண்டிய நிலை ஏற்பட்டிடப் போவுது.

ஸ ஷ ஹ ஜ க்ஷ ஶ்ரீ யைத் தவிர்க்கனும்ன்னு ரொம்ப முயல்வது ஒரு மொழியின் உச்சரிப்பு, வழக்கம், அர்த்தம், மொழியின் பலத்தையும் இழந்து கவுர வேண்டிய நிலையில் தள்ளக்கூடிய நிலை உருவாகலாம்.

ஒவ்வொரு மொழிக்கும் அதன் அக்ஷரம் ஒரு ஆணி வேர்!

மொழிச் சிதைவு நடக்காமல் இருந்தால்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Nuestro idioma es muy querido para nosotros. ¡Escribe correctamente!!

ஸ்பானிஷ் கற்கும் பொழுதில் - 20

நான் இங்குள்ள சர்ச்சிற்குப் போய் ஸ்பானிஷ் பேசும் லத்தீன் அமெரிக்க மற்றும் சுர் அமெரிக்க மக்களோடு கலந்து பேசும் வாய்ப்பு எனக்கு கடந்த  எட்டு மாதங்களாகக் கிடைக்கிறது. அவர்கள் கல்வியில் எனது கற்பிதமும் தொடர ஒரு வாய்ப்பு எனக்கு.

அவர்களில் பெரும்பாலோர் வெனிசுலா, க்யூபா, Ecuador, கொலம்பியா, அர்ஜெண்டினா மற்றும் போர்ட்டோரிகோ தான். மெக்ஸிகன் மக்களை இங்கு பெரும்பாலும் பார்த்ததில்லை. ஒன்று இரண்டு தவிர.

ஏனென்று சந்தேகம் இருந்தாலும் அவர்களிடம் நேரிடையாக கேட்டதில்லை. அவர்களது உரையாடல்களிலிருந்து சிலவற்றை கணித்துள்ளேன்.

நான் இங்கு பார்த்த வரை மெக்ஸிகோ மக்கள் கடுமையான உழைப்பாளிகள். மிக குறைந்த கூலியில் பல கடுமையான வேலைகளையும் எளிதாகச் செய்யக் கூடிய உடல்திறன் மற்றும் மனத்திறன் உடையவர்கள். நம்மூர் பீகார் மக்களைப் போன்று. அதே சமயம் இந்த மெக்ஸிகோ கார்ட்டல்கள் மீதான அச்சம் கூட இவர்களைக் கொஞ்சம் வேறுபடுத்திக் காண்பிக்கிறது.

அது மட்டுமல்ல ஸ்பானிஷ் பேசும் பிற நாட்டு மக்கள் மெக்ஸிகன் மக்கள் பேசும் ஸ்பானிஷையும் பகடி செய்வதைப் பார்க்கிறேன். அதுவும் தன் குழந்தைகள் அந்த மெக்ஸிகன் பேசும் சில வார்த்தைகளை உச்சரித்து விட்டால் இந்த சுர் அமெரிக்கப் பிரதேச மக்கள் உண்மையிலேயே இழிவாகப் பார்க்கின்றனர். அரசியல் வேறுபாடுகளின் தொடர்ச்சியுமுண்டு இதில்.

நமக்கு தமிழில் ழ வின் உச்சரிப்பு எவ்வளவு முக்கியமோ அது மாதிரி எஸ்பானியோலில் (español) ñ வின் உச்சரிப்பு. இந்த ñ வை மட்டும் சரியாக உச்சரிக்காவிட்டால் பல வார்த்தைகளை கொலை பண்ணிருவோம். அதைக் கேட்கும் அவர்களுக்கு ஒரு அயர்ச்சி தோன்றுவது மட்டுமல்ல, உடனே நமது உச்சரிப்பை சரி செய்ய மிகவும் உதவுவர்.

நாம் எல்லோரும் போற்றும் ஜேசுதாஸ் கூட ஓரிரு பாடல்களில் ழ வை ள என உச்சரித்த போது நமது உள்ளத்தில் தோன்றிய ஒரு எள்ளல் மாதிரி அது. பிற்காலத்தில் நாம் உதித்நாராயண் பாடும் தமிழையே ஏற்றுக் கொள்ளத் தயாராகி விட்டோம். அது வேற கதை, நமது மன முதிர்ச்சி அது.

அவ்வாறே மெக்ஸிகன் மக்கள் பேசும் ஏஸ்பானியோலை மற்றவர்கள் வித்தியாசமாகப் பார்ப்பது. தனக்கேற்றவாறு பல வார்த்தைகளை வேறு விதமாக உச்சரிப்பதும் மற்ற வார்த்தையே புதிதாக உருவாக்கிப் பேசுவதும் கூட இவர்களிடம் ஒரு அயர்ச்சியைத் தோற்றுவிக்கறது.

மொழிகள் பலவானாலும் அதன் ஆணிவேர் அதன் அக்ஷரங்கள், வார்த்தைகள், உச்சரிப்புகள், இலக்கணம்,  மற்றும் காலத்துக்கேற்றவாறு தன்னை உருமாற்றிக்கொண்டு புது வார்த்தைகளை உருவாகுவதற்கு ஏற்ப வளைந்து கொடுக்கும் தன்மை ஆகியவையே ஒரு மொழி சிதையாமல் காணாமல் போகாமல் புதிய வளர்ச்சிப் பாதையில் தொடர முடியும்.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡La belleza de los idiomas reside en sus letras, palabras y pronunciación!

Sunday, March 5, 2023

அப்பனைப் போல் பிள்ளை

நான் கல்லூரியில் படிக்கும் போது மெஸ் சாப்பாடு சாப்பிடுவது கடினம். தரம் அப்படி. அது பல்வேறு மாநில மாணவர்களிருந்த மெஸ். ஆந்திராவிலிருந்து வந்த புரபசர் பருப்பு பொடி மற்றும் பலவகைப் பொடிகள் மற்றும் நெய் கொண்டு வந்து அந்த சாப்பாட்டையே ரசிக்க வச்சுருவார். எனக்கு ரொம்பவே கஷ்டம்.

மெஸ்ஸுக்கு மாசம் 700 கட்டினாலும், கூடப்படிச்ச நண்பர்கள் எதிர்த்தாப்புல இருந்த அந்த dhabaக்கு இழுத்துட்டுப் போயிடுவாங்க. அங்க மட்டர் பன்னீர் அல்லது பன்னீர் பட்டர் மசலா வச்சு காலத்தை நாங்க ஓட்டினோம். வேற வழியில்லை.

அப்ப ஸ்காலர்ஷிப் பணம் நிறைய வந்ததால் அது பெருசாத் தெரியலை. ஒரு ஸ்காலர்ஷிப் வாங்கி இரண்டு பேர் படிச்சோம் நானும் என் தம்பியும்.

இப்ப பையனோட க்ரெடிட் கார்ட் பில் கட்டும் போது என்னடா மெஸ்ஸுக்கு அவ்வளவு கட்டியிருக்கேன், எப்ப பார்த்தாலும் வெளிய சாப்பிடறன்னா, அந்த wrapஐயும் பிஸ்ஸாவையும் எப்படிப்பா தினமும் சாப்பிடறதுன்னு கேட்கிறான். வாழனுமில்லங்கிறான்.

அடேய் நான் அப்ப பண்ணினதை நீ இப்ப பண்ற, doordash சிஇஓவை இன்னும் பணக்காரனாக்குற நீ, உன் அப்பனை ஏழை ஆக்குறடான்னா, நான் அப்பனைப் போல் பையன் டாட் ங்கிறான்!

என்னத்தச் சொல்ல!
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Como padre, su hijo!

ஸ்பானிஷ் கற்கும் பொழுதில் - 19

இப்பவெல்லாம் ஸ்பானிஷ் புரபசர் நடத்தும் சர்ச் வகுப்புகளுக்குப் போனால் அன்னிக்கு எந்த கிளாஸில் யாருக்கு உதவுவோம், ஆங்கில கிராமர்ல எதைப் பத்தி சொல்லித் தரனும்னு முன் கூட்டியே தெரிவதில்லை.

புரபசர் ஒரே நேரத்துல மூனு கிளாஸ் எடுக்கிறார். அவருக்கு உதவ குறைந்தது ஒவ்வொரு வகுப்புக்கும் என்னைப் போல் இரண்டு பேர் தேவைப்படுது.

இன்னிக்கு (மார்ச் 2) 5 மணிக்கே வந்துருன்னு நேற்றே தகவல் அனுப்பினாங்க. ஆபீஸ் வேலை முடிஞ்சு போய் சேர ஐந்தேமுக்காலாயிடுச்சு. முதலில் வரச்சொன்ன கிளாஸ் வேற, போனவுடன் வேற வகுப்புக்கு மாத்திட்டாங்க. 

அங்க போனால் நான் ஒருத்தன் தான். புரபசர் கிளாஸ் மொத்தத்தையும் என் கிட்ட கொடுத்து எடுக்கச் சொல்லிட்டுப் போயிட்டார். வந்த இரண்டு ஸ்டூண்ட்ல ஒருத்தர் வெனிசுயேலாலேர்ந்து வந்து ஆறு மாசம் தான் ஆவுது. படிச்சது ஐடி இஞ்சினியராம், இங்க நிரந்தர வேலையில்லாம ஒரு எடுபுடி வேலை. இன்னொருத்தர் Ecuador. 

ஸ்பானிஷ்ல அள்ளி கொட்டறாங்க, ஒன்னும் புரியல. வாயைப் பொளந்து பார்த்து கிட்டு இருந்த்தேன். ஆனால் செம ஸ்மார்ட். 

புரபசர் அவங்க என்ன பண்ணனும்னனு வெள்ளை போர்டில் ஒரு பெரிய paragraphஐ ஸ்பானிஷில் எழுதி தள்ளிட்டுப் போயிட்டாங்க. முதலில் நான் படிச்சுட்டு அது ஏதோன்னு நினைச்சு விட்டுட்டேன். வந்த ஸ்டூடண்ட் அதைப் படிச்சுட்டு கடகடன்னு அதில் சொன்ன மாதிரி அசைன்மண்ட் வொர்க் எடுத்துகிட்டு வேலை செய்ய தயாராகிட்டாங்க.

அட அப்படி என்னடா இருக்குன்னு இரண்டாவது தடவை மெதுவாப் படிச்சுவுடனே எனக்குப் புரிஞ்சுது. போர்ட்ல என் பேரை வேற எழுதியிருக்காங்க. அட இவ்வளவு சிம்பிளா எழுதியிருக்காங்க, para பெருசா இருக்குன்னு முதலில் சரியாப் படிக்கலையேன்னு வருத்தமாயிடுச்சு.

நல்லவேளை இன்னிக்கு simple present and simple past தான். ஆனால் அதுலேயே அவங்க கிட்ட உச்சரிப்புல மாட்டிகிட்டேன்.

Fix க்கு fixedன்னு எழுதற ஆனால் eat க்கு மட்டும் ஏன் ate? அவங்களுங்க ஏட் சொல்ல வைக்கறதுக்குள்ள பத்து தடவை திரும்ப சொல்லு திரும்ப சொல்லுன்னு கேட்டுகிறாங்க. செல் போன்ல ஒரு தடவை செக் வேற பண்ணிக்குறாங்க.

ஸ்பானிஷ்ல a வை ‘அ’ ன்னு சொல்லுவாங்க. ஆனால் ஆங்கிலத்தில் அது சில சமயம் அ வாகவும் சில சமயம் ஏ ஆகவும் இருக்கும். இதை ஏன் அப்படி உச்சரிக்கறோம்ன்னு குழப்பம். அவங்க ஆசையெல்லாம் உள்ளூர் அமெரிக்கன் உச்சரிப்பு மாதிரி அவங்களுக்கு வரனும்ன்னு ஆசை. நம்ம உச்சரிப்பு ஏதோ ஓகே மாதிரி தான் அவங்களுக்கு.

பேப்பர்ல இருக்கிறதை எல்லாத்தையும் படிச்சு காட்டி, அவங்க ஃபோன்ல ஒரு தடவை கேட்டு, பிறகு அவங்களையே திரும்பத் திரும்ப படிக்க வைச்சு போய்கிட்டே இருந்ததுல இரண்டரை மணி நேரம் மேல ஓடிடுச்சு.

Ecuadorக்காரருக்கு கொஞ்சம் வருத்தம். நிறையப் படிக்கிறேன் ஆனால் பேச வரலைன்னு வருத்தப்பட்டார். நான் நம்ம பீத்தகலசத்தைக் காட்டுவோம்ன்னு, என்னோட ஸ்பானிஷ் நோட்புக்கை திறந்து காமிச்சு, பாரு எவ்வளவு பக்கம் பக்கமா எழுதிப் பழகுறேன் பாரு, நீயும் அப்படி எழுதிப்பாரு, சீக்கிரம் வந்துடும்ன்னேன்.

அவர் தன்னோட நோட்புக்கைத் திறந்து காண்பிச்சார். நான் டக்குன்னு என் நோட்புக்கை மூடிட்டேன். யப்பா மனுசன் கையெழுத்தா அது. அச்சுல இருக்கிற மாதிரி மணிமணியாக எழுத்து. பிரிண்ட் பண்ண மாதிரி இருக்கு. முழு நோட்புக்ல பக்கம் பக்கமா கடைசிப் பக்கம் வரை எழுதியிருக்கார். ஆனால் பேச வரலை உச்சரிப்பு வரலை கிராமர் வரலைன்னு வருத்தம்.

நாடு விட்டு நாடு வந்து நாள் பூரா ஒரு சாதாரண வேலை செய்ஞ்சு, வேலை செய்யற இடத்துல அவங்களை மாதிரி தானும் ஆங்கிலம் பேசனும்ன்னு அவங்க இங்க சர்ச் வகுப்புக்கு வர்ற அவங்க உழைப்பு, உந்துதல் எல்லாம் பார்க்கும் போது, நானும் காலையில ஏழு மணிக்கு ஆபீஸ் வேலை தொடங்கி இரவு வரை இப்படி மாலை வகுப்போடு நமக்கு நாள் ஓடுது, இருப்பினும் அவங்க கமிட்மண்ட் உந்துதல் நமக்குப் பத்தலைன்னு தோனுது.

இருப்பினும் ஏதோ வாழ்க்கை ஓடுது. பல நாட்டு மக்களைச் சந்திக்கிற வாய்ப்பு, பேசும் வாய்ப்பு, அவங்க மொழி, கலாச்சாரம், பண்பாடு பற்றி அறியக் கிடைக்கிற இந்த வாய்ப்பை நினைத்தால்

வாழ்வினிது தான்.

ओलै सिरिय !
¡El presente y el pasado simples no son tan simples para todos!

நண்பர்கள் புடைசூழ ஒரு விழா

ஊரில் சின்ன வயசுல, வீட்டுல ஏதாவது விசேஷம்னா, ஊர் மக்கள் எல்லோரும் திரண்டு வந்து உதவுவாங்க. வெறும் மண்டபம் ஒரு குக் போட்டா போதும். சமைப்பவர்க்கு உதவுவதிலிருந்து, வரும் விருந்தினர்களுக்கு இலை போட்டு பரிமாறி, பிறகு இலையை எடுக்கக்கூட தயங்க மாட்டங்க.

இன்னிக்கு (மார்ச் 4) இங்கு நண்பனின் சஷ்டியப்தபூர்த்தி அவ்வாறு தான் நடந்தது. ஊர் நண்பர்கள் ஆண் பெண் எல்லோரும் திரண்டு நேற்றிரவிலிருந்தே விழாக்கோலம் தான்.

மேடை அலங்கரிப்பு, தாம்பூலம் பாக்கெட் போடுதல், அனைவரும் அமர்வதற்கு குறைந்தது 300 சேர், 150 பேர் உட்கார்ந்து ஒரே சமையத்தில் சாப்பிட டேபிள் சேர் எல்லாம் போட்டது நண்பர்களே!

நமக்கு எடுபுடி வேலை செய்ஞே பழகிப் போச்சு. கேட்கனுமா, நேற்று இரவிலிருந்தே ஓடியாடி எடுபுடி வேலை செய்து ஒவ்வொன்றிலும் பங்காற்றியதில் செம சந்தோஷம். ஆனால் அவ்வளவு ஸ்டீல் சேர்களை எடுத்துப் போட்டு வரிசையில் அடுக்கியது மற்றும் தாம்பூலம் பரிசுப் பெட்டிகள் தூக்கியதில் உடம்பு நோவ ஆரம்பித்து விட்டது.

இன்று நண்பன் மேடையில் சந்தோஷமாக சஷ்டியப்தபூர்த்தி செய்து கொள்ள, நாங்கள் வந்தவர்களுக்குப் பரிமாற ரெடியாகிவிட்டோம்.

நம்மூரில் நடப்பது போலவே உலர்ந்த இலையில் செய்த தட்டு போட்டு வரிசையாக ஒவ்வொருவரும் சாதம், வாளியில் சாம்பார், நம்மூர் ஹோட்டல் சர்வர் சட்னி சாம்பார் வைத்திருக்கும் பாத்திரம் போன்ற பாத்திரத்திலும் ஒவ்வொருவராக எடுத்துப் பரிமாற அப்படியே நம்மூரில் பார்த்த அந்த உறவினர் நண்பர் புடை சூழ நடக்கும் விருந்து போஜனத்தை அப்படியே கொண்டு வந்து நிறுத்தியதில் ஒவ்வொருவருக்கும் செம சந்தோஷம்.

சந்தேகத்துக்கு சாம்பார் கேட்பது போல ஒவ்வொன்னும் கேட்டு செமையாகப் பரிமாறினோம். கடைசியில் கால் முட்டி வலி வர, கொஞ்சம் எக்ஸைட்மண்டை நிறுத்திக் கொண்டு கடைசியாக சாப்பிட உட்கார்ந்து விட்டேன்.

கடைசியில் அவரவர் கொண்டு வந்த பாத்திரம் கரண்டிகளைக் கூட கிச்சனில் கழுவி கிச்சனை க்ளீன் பண்ணி கொடுத்து விட்டு வந்தோம்.
ஒவ்வொன்றும் ஊரின் நினைவுகளைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டது.

உற்றார் உறவினர் போல் நண்பனின் விழாவில் பங்கெடுத்ததில் 
வாழ்வினிது!

ओलै सिरिय ।
¡Los amigos hacen que la función sea genial!