நான் இங்குள்ள சர்ச்சிற்குப் போய் ஸ்பானிஷ் பேசும் லத்தீன் அமெரிக்க மற்றும் சுர் அமெரிக்க மக்களோடு கலந்து பேசும் வாய்ப்பு எனக்கு கடந்த எட்டு மாதங்களாகக் கிடைக்கிறது. அவர்கள் கல்வியில் எனது கற்பிதமும் தொடர ஒரு வாய்ப்பு எனக்கு.
அவர்களில் பெரும்பாலோர் வெனிசுலா, க்யூபா, Ecuador, கொலம்பியா, அர்ஜெண்டினா மற்றும் போர்ட்டோரிகோ தான். மெக்ஸிகன் மக்களை இங்கு பெரும்பாலும் பார்த்ததில்லை. ஒன்று இரண்டு தவிர.
ஏனென்று சந்தேகம் இருந்தாலும் அவர்களிடம் நேரிடையாக கேட்டதில்லை. அவர்களது உரையாடல்களிலிருந்து சிலவற்றை கணித்துள்ளேன்.
நான் இங்கு பார்த்த வரை மெக்ஸிகோ மக்கள் கடுமையான உழைப்பாளிகள். மிக குறைந்த கூலியில் பல கடுமையான வேலைகளையும் எளிதாகச் செய்யக் கூடிய உடல்திறன் மற்றும் மனத்திறன் உடையவர்கள். நம்மூர் பீகார் மக்களைப் போன்று. அதே சமயம் இந்த மெக்ஸிகோ கார்ட்டல்கள் மீதான அச்சம் கூட இவர்களைக் கொஞ்சம் வேறுபடுத்திக் காண்பிக்கிறது.
அது மட்டுமல்ல ஸ்பானிஷ் பேசும் பிற நாட்டு மக்கள் மெக்ஸிகன் மக்கள் பேசும் ஸ்பானிஷையும் பகடி செய்வதைப் பார்க்கிறேன். அதுவும் தன் குழந்தைகள் அந்த மெக்ஸிகன் பேசும் சில வார்த்தைகளை உச்சரித்து விட்டால் இந்த சுர் அமெரிக்கப் பிரதேச மக்கள் உண்மையிலேயே இழிவாகப் பார்க்கின்றனர். அரசியல் வேறுபாடுகளின் தொடர்ச்சியுமுண்டு இதில்.
நமக்கு தமிழில் ழ வின் உச்சரிப்பு எவ்வளவு முக்கியமோ அது மாதிரி எஸ்பானியோலில் (español) ñ வின் உச்சரிப்பு. இந்த ñ வை மட்டும் சரியாக உச்சரிக்காவிட்டால் பல வார்த்தைகளை கொலை பண்ணிருவோம். அதைக் கேட்கும் அவர்களுக்கு ஒரு அயர்ச்சி தோன்றுவது மட்டுமல்ல, உடனே நமது உச்சரிப்பை சரி செய்ய மிகவும் உதவுவர்.
நாம் எல்லோரும் போற்றும் ஜேசுதாஸ் கூட ஓரிரு பாடல்களில் ழ வை ள என உச்சரித்த போது நமது உள்ளத்தில் தோன்றிய ஒரு எள்ளல் மாதிரி அது. பிற்காலத்தில் நாம் உதித்நாராயண் பாடும் தமிழையே ஏற்றுக் கொள்ளத் தயாராகி விட்டோம். அது வேற கதை, நமது மன முதிர்ச்சி அது.
அவ்வாறே மெக்ஸிகன் மக்கள் பேசும் ஏஸ்பானியோலை மற்றவர்கள் வித்தியாசமாகப் பார்ப்பது. தனக்கேற்றவாறு பல வார்த்தைகளை வேறு விதமாக உச்சரிப்பதும் மற்ற வார்த்தையே புதிதாக உருவாக்கிப் பேசுவதும் கூட இவர்களிடம் ஒரு அயர்ச்சியைத் தோற்றுவிக்கறது.
மொழிகள் பலவானாலும் அதன் ஆணிவேர் அதன் அக்ஷரங்கள், வார்த்தைகள், உச்சரிப்புகள், இலக்கணம், மற்றும் காலத்துக்கேற்றவாறு தன்னை உருமாற்றிக்கொண்டு புது வார்த்தைகளை உருவாகுவதற்கு ஏற்ப வளைந்து கொடுக்கும் தன்மை ஆகியவையே ஒரு மொழி சிதையாமல் காணாமல் போகாமல் புதிய வளர்ச்சிப் பாதையில் தொடர முடியும்.
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡La belleza de los idiomas reside en sus letras, palabras y pronunciación!
No comments:
Post a Comment