இப்பவெல்லாம் ஸ்பானிஷ் புரபசர் நடத்தும் சர்ச் வகுப்புகளுக்குப் போனால் அன்னிக்கு எந்த கிளாஸில் யாருக்கு உதவுவோம், ஆங்கில கிராமர்ல எதைப் பத்தி சொல்லித் தரனும்னு முன் கூட்டியே தெரிவதில்லை.
புரபசர் ஒரே நேரத்துல மூனு கிளாஸ் எடுக்கிறார். அவருக்கு உதவ குறைந்தது ஒவ்வொரு வகுப்புக்கும் என்னைப் போல் இரண்டு பேர் தேவைப்படுது.
இன்னிக்கு (மார்ச் 2) 5 மணிக்கே வந்துருன்னு நேற்றே தகவல் அனுப்பினாங்க. ஆபீஸ் வேலை முடிஞ்சு போய் சேர ஐந்தேமுக்காலாயிடுச்சு. முதலில் வரச்சொன்ன கிளாஸ் வேற, போனவுடன் வேற வகுப்புக்கு மாத்திட்டாங்க.
அங்க போனால் நான் ஒருத்தன் தான். புரபசர் கிளாஸ் மொத்தத்தையும் என் கிட்ட கொடுத்து எடுக்கச் சொல்லிட்டுப் போயிட்டார். வந்த இரண்டு ஸ்டூண்ட்ல ஒருத்தர் வெனிசுயேலாலேர்ந்து வந்து ஆறு மாசம் தான் ஆவுது. படிச்சது ஐடி இஞ்சினியராம், இங்க நிரந்தர வேலையில்லாம ஒரு எடுபுடி வேலை. இன்னொருத்தர் Ecuador.
ஸ்பானிஷ்ல அள்ளி கொட்டறாங்க, ஒன்னும் புரியல. வாயைப் பொளந்து பார்த்து கிட்டு இருந்த்தேன். ஆனால் செம ஸ்மார்ட்.
புரபசர் அவங்க என்ன பண்ணனும்னனு வெள்ளை போர்டில் ஒரு பெரிய paragraphஐ ஸ்பானிஷில் எழுதி தள்ளிட்டுப் போயிட்டாங்க. முதலில் நான் படிச்சுட்டு அது ஏதோன்னு நினைச்சு விட்டுட்டேன். வந்த ஸ்டூடண்ட் அதைப் படிச்சுட்டு கடகடன்னு அதில் சொன்ன மாதிரி அசைன்மண்ட் வொர்க் எடுத்துகிட்டு வேலை செய்ய தயாராகிட்டாங்க.
அட அப்படி என்னடா இருக்குன்னு இரண்டாவது தடவை மெதுவாப் படிச்சுவுடனே எனக்குப் புரிஞ்சுது. போர்ட்ல என் பேரை வேற எழுதியிருக்காங்க. அட இவ்வளவு சிம்பிளா எழுதியிருக்காங்க, para பெருசா இருக்குன்னு முதலில் சரியாப் படிக்கலையேன்னு வருத்தமாயிடுச்சு.
நல்லவேளை இன்னிக்கு simple present and simple past தான். ஆனால் அதுலேயே அவங்க கிட்ட உச்சரிப்புல மாட்டிகிட்டேன்.
Fix க்கு fixedன்னு எழுதற ஆனால் eat க்கு மட்டும் ஏன் ate? அவங்களுங்க ஏட் சொல்ல வைக்கறதுக்குள்ள பத்து தடவை திரும்ப சொல்லு திரும்ப சொல்லுன்னு கேட்டுகிறாங்க. செல் போன்ல ஒரு தடவை செக் வேற பண்ணிக்குறாங்க.
ஸ்பானிஷ்ல a வை ‘அ’ ன்னு சொல்லுவாங்க. ஆனால் ஆங்கிலத்தில் அது சில சமயம் அ வாகவும் சில சமயம் ஏ ஆகவும் இருக்கும். இதை ஏன் அப்படி உச்சரிக்கறோம்ன்னு குழப்பம். அவங்க ஆசையெல்லாம் உள்ளூர் அமெரிக்கன் உச்சரிப்பு மாதிரி அவங்களுக்கு வரனும்ன்னு ஆசை. நம்ம உச்சரிப்பு ஏதோ ஓகே மாதிரி தான் அவங்களுக்கு.
பேப்பர்ல இருக்கிறதை எல்லாத்தையும் படிச்சு காட்டி, அவங்க ஃபோன்ல ஒரு தடவை கேட்டு, பிறகு அவங்களையே திரும்பத் திரும்ப படிக்க வைச்சு போய்கிட்டே இருந்ததுல இரண்டரை மணி நேரம் மேல ஓடிடுச்சு.
Ecuadorக்காரருக்கு கொஞ்சம் வருத்தம். நிறையப் படிக்கிறேன் ஆனால் பேச வரலைன்னு வருத்தப்பட்டார். நான் நம்ம பீத்தகலசத்தைக் காட்டுவோம்ன்னு, என்னோட ஸ்பானிஷ் நோட்புக்கை திறந்து காமிச்சு, பாரு எவ்வளவு பக்கம் பக்கமா எழுதிப் பழகுறேன் பாரு, நீயும் அப்படி எழுதிப்பாரு, சீக்கிரம் வந்துடும்ன்னேன்.
அவர் தன்னோட நோட்புக்கைத் திறந்து காண்பிச்சார். நான் டக்குன்னு என் நோட்புக்கை மூடிட்டேன். யப்பா மனுசன் கையெழுத்தா அது. அச்சுல இருக்கிற மாதிரி மணிமணியாக எழுத்து. பிரிண்ட் பண்ண மாதிரி இருக்கு. முழு நோட்புக்ல பக்கம் பக்கமா கடைசிப் பக்கம் வரை எழுதியிருக்கார். ஆனால் பேச வரலை உச்சரிப்பு வரலை கிராமர் வரலைன்னு வருத்தம்.
நாடு விட்டு நாடு வந்து நாள் பூரா ஒரு சாதாரண வேலை செய்ஞ்சு, வேலை செய்யற இடத்துல அவங்களை மாதிரி தானும் ஆங்கிலம் பேசனும்ன்னு அவங்க இங்க சர்ச் வகுப்புக்கு வர்ற அவங்க உழைப்பு, உந்துதல் எல்லாம் பார்க்கும் போது, நானும் காலையில ஏழு மணிக்கு ஆபீஸ் வேலை தொடங்கி இரவு வரை இப்படி மாலை வகுப்போடு நமக்கு நாள் ஓடுது, இருப்பினும் அவங்க கமிட்மண்ட் உந்துதல் நமக்குப் பத்தலைன்னு தோனுது.
இருப்பினும் ஏதோ வாழ்க்கை ஓடுது. பல நாட்டு மக்களைச் சந்திக்கிற வாய்ப்பு, பேசும் வாய்ப்பு, அவங்க மொழி, கலாச்சாரம், பண்பாடு பற்றி அறியக் கிடைக்கிற இந்த வாய்ப்பை நினைத்தால்
வாழ்வினிது தான்.
ओलै सिरिय !
¡El presente y el pasado simples no son tan simples para todos!
No comments:
Post a Comment