Monday, November 2, 2020

அசரீரி வாழ்த்தில் நனைகையில்

 டின்னர் சாப்பிடும் போது எதுவும் பேசக்கூடாதுன்னு அமைதியாக தட்டு எடுத்துகிட்டு வந்து டைனிங் டேபுள்ள உட்கார்ந்தேன். நல்லப்பையனா முன்னாடியே டிஷ் லோடு வேறபண்ணியாச்சு. சிக்கல் எதுவும் வேண்டாம்ன்னு அமைதியாக இருந்தேன்.

தோசை வார்த்துகிட்டு இருந்த அம்மணி திடீர்ன்னு ஏதோ சொல்ல, exhaust fan சத்தத்துல ஒரு அசரீரியாட்டும் வந்து விழுந்துச்சு.

அம்மணி முகத்துல சிரிப்போட வேற வந்துச்சா : how come you are always perfect in judging people and say in advance ன்னாப்புல.

பக்குன்னுச்சு. என்னடா ஒன்னுமே சொல்லலை. வசிஷ்டர் வாயில பிரம்மரிஷின்னு வந்து விழுவது. நாளைக்குத் தானே சந்திராஷ்டமம் ஆரம்பம்ன்னு பார்த்தேன். இது என்ன pre-existing conditions மாதிரி வந்து விழுதுன்னு நினைச்சேன்.

வாயில உள்ள போன தோசை தொண்டையிலேயே நின்னுருச்சு.

என் முகம் வெளிறிப்போனதைப் பார்த்த அம்மிணி சிரிச்சுகிட்டே சொல்றாப்புல, அன்னிக்கு வீணைக்கச்சேரிக்குத் தாளம் போட என் நண்பியைக் கூப்பிட்டேன், அப்ப அதெல்லாம் வேணாம்; இத்தனை வருசமா வாசிக்கிற சரளமாக வரவேண்டாமா, வேணும்ன்னா ஃபோன் appஐ வச்சு சவுண்ட் கம்மியாக வச்சு தாளம் போட்டுக்கன்னு சொன்ன, நான் கேட்கலை அப்பன்னாப்புல.

அதுசரி. இப்ப என்ன அதுக்குன்னேன்?

இல்லை. நாலு நாளா உன் கிட்ட சொல்லலை, சொன்னா திட்டுவன்னு. நீ சொன்ன மாதிரியே அந்த நண்பி தப்பு தப்பா தாளம் போட நான் தடுமாறிட்டேன். பக்கவாத்தியம் மிருதங்கம் சின்னப்பையன், அவன் கூட அந்த தாளத்தைத் தவிர்த்துட்டான். 

தாளம் தப்பா போட்டது மட்டுமல்ல, பின்னாடி உடனே ஃபோன்ல கூப்பிட்டு நீ இந்தந்த இடத்துல எல்லாம் கேப் விட்டு வாசிச்சுட்டேன்னு சொல்றா! எனக்கு தலையே சுத்துது ஒன்னும் சொல்ல முடியலைன்னாப்புல.

எப்படி உன்னோட லைப்ல இப்படி பர்பெக்டாவே எல்லாத்தையும் வச்சுக்கிறன்னாப்புல, மறுபடியும்.

என்னய்யா ஆச்சு இன்னிக்கு எனக்குன்னு ஒன்னும் புரியமாட்டேங்குது. சந்திராஷ்டமம் சீக்கிரம் கூட துவங்குமா, இல்லை இந்தியா டயத்துக்கு இங்கிட்டு எபக்டா!

தொண்டையில நின்ன தோசை அதுவும் துப்பாம உள்ள இறங்கிடுச்சு!

அம்மாடி!

வாழ்வினிது.

Friday, October 30, 2020

வாழ்வில் மெய்யறிவைத் தேடுகையில்

ஏணிப்படிகளில் ஏற நினைப்பவனுக்கு 
ஒவ்வொரு படியும் 
ஸ்திரமான நம்பிக்கை.

மேலிருந்து நோக்கின் 
படியேறுபவனின் தடுமாற்றங்கள் 
குடிகாரனின் பாதங்கள்.

நாம் நோக்கும் பாதை
நமக்களிக்கப்படும் மாயை
எளிதில் வழுக்கும் சரிவு!

வாழ்க்கையில் கற்கும் நல்லவை
நம் படிகளின் ஸ்திரங்கள்
கொடுப்பவைகள் நம் முதிர்ச்சி!

வாழ்வில் மெய்யறிவைத் தேடுகையில்!

Sunday, October 18, 2020

வெற்று அப்ளிகேஷனின் தயவில்

 பத்தாவது வரைக்கும் சுகமாக தமிழ் மீடியத்துல படிச்சு வந்தேன். தமிழகத்தில் ப்ளஸ் 2 துவங்கிய இரண்டாவது பேட்ச். பெரியண்ணன் நேரா கொண்டு போய் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில மீடியத்தில் சேர்த்து விட்டான். ஆங்கிலம் கத்துக்கலைன்னா வாழ்க்கையில உருப்பட முடியாது ஒழுங்கா இதுலேயே இருன்னு மிரட்டல் வேற. அப்பா அம்மா படிப்பு பத்தி ஒன்னும் கண்டுக்க மாட்டாங்க, இத்தனைக்கும் அப்பா ஒரு அக்கௌண்டன்ட் வேற.

தட்டுத்தடுமாறி படிச்சு முடிச்சு காலேஜ் போக அப்ளிகேஷன் வாங்கி பூர்த்தி பண்ணனும். வாங்கின 4 காலேஜ் அப்ளிகேஷனும் இங்கிலீஷ்ல இருக்கு. பெரியண்ணனுக்குத் தான் வூட்டுல இங்கிலீஷ் தெரியும். அவன்ட்ட போனா திட்டு அடி தான் விழும்.

அதுக்கு பயந்து வெறும் பெயர் அட்ரஸ் மட்டும் ஃபில்லப் பண்ணி, எந்த கோர்ஸ் எடுக்கனும்ன்னு கூட தெரியாத காலம் அது, திருச்சி ஜோசப் கல்லூரிக்கும் இன்னும் இரண்டுக்கும் அனுப்பினேன். அண்ணன்ட்ட சொல்லலை.

அவன் என்னை சென்னைக்குக் கூட்டிப் போய், சென்னையிலத் தான் படிக்கனும், நல்லா ஆங்கிலம் பேசக்கத்துக்க இங்க தான் முடியும் வான்னு இழுத்துகிட்டு்போய், விவேகானந்தா, பிரசிடன்சியில சேர்க்கனும்ன்னு சொல்லி, என்னைக் கூட்டி அலைஞ்சு ஒன்னும் கிடைக்காம ஊர் திரும்பி வந்தோம்.

ஊர் திரும்பின மறுநாள் திருச்சி ஜோசப் கல்லூரியிலேர்ந்து நான் அரைகுறையாக அனுப்பின அப்ளிகேஷன்லேர்ந்து தேர்ந்தெடுத்து, முதல்ல பி ஏ சரித்திரம் கொடுத்து, அதை அவங்களே அடித்து, புள்ளியியல் மாத்திக் கொடுத்து அனுப்பின போஸ்ட் கார்ட் வந்தது.

பெரியண்ணன் முகத்துல கடுவன் பூனை, அவன்ட்ட சொல்லாமப் போட்டது, இன்னொரு பக்கம் இவ்வளவு சுத்தியும் சென்னையில அலைஞ்சு கிடைக்காம வந்தும், இவன் ஒன்னும்ந்தெரியாம நல்ல காலேஜ்ல வாங்கியிருக்கானேன்னு சந்தோஷமும் கூட.  ஒழுங்காப்படின்னு போயிட்டான். அடி வாங்காம தப்பிச்சோம்டான்னு சந்தோஷம்.

இப்ப இதுவெல்லாம் நினைக்கக் காரணம், பையன் இப்ப காலேஜஸ்க்கு அப்ளை பண்றான். அப்பனுக்கு ஒன்னுந்தெரியாதுன்னு நினேச்சு தானே கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்து, அவன் ப்ரெண்ட்ஸ் வச்சு எல்லாத்தையும் பண்ணிகிட்டு, கடைசியில துட்டுகட்டும் போது உங்கிட்ட வர்றேன், அப்ப நீ அப்ளிகேஷனைப் பார்த்தா போதும்கிறானே!

அப்ளிகேஷனைக் கடைசியில காண்பிக்கும் போது அவன்ட்ட அம்புட்டு சரக்கு இருப்பது தெரியுது. 

மவனே! உன்ர அப்பனுக்கு ஒன்னுந்தெரியாம வாடா இம்புட்டு வருசம் வாழ்ந்திருக்கேன். நாம வேலைக்கு அப்ளை பண்ற நம்ம ரெசூமே மாதிரி காலேஜ் அட்மிஷனுக்கு அப்ளை பண்றானுக! அம்புட்டு சரக்கோட அப்ளை பண்றானுக. 

வெத்து அப்ளிகேஷனை வெறும் பேரும் அட்ரஸும் மட்டும் போட்டு படிச்சுபுட்டு வந்தேன்! அது ஒரு கனாக்காலம்!

அமெரிக்க வாழ்வின் தேவை

 ஒவ்வொருத்தரும் ஒரு நாட்டுல ஒரு குறைந்தபட்ச வசதியோடு அடிப்படை தேவையோடு வாழ்வதற்கு ஏதாவது ஒரு விதத்துல தன்னை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். அது ஒரு நாட்டில் இறங்கியவுடன் அந்த நாட்டில் எது முதலில் தேவைப்படும் என தெரிந்து கொண்டு அதை உடனே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அத்தகைய ஒன்று, அமெரிக்காவில் வாழ்வதற்கு, ஒரு குறைந்தபட்ச அடிப்படை வாழ்வு வாழ்வதற்கே தேவையானது, இன்சூரன்ஸ். 

இன்சூரன்ஸ் இன்றி அமெரிக்காவில் வாழ்வது சாத்தியமில்லை. இல்லாமல் இருந்தால் பிரயோசனமில்லை, என்றாவது ஒரு நாள் கடும் சிக்கலில் மாட்டுவது தவிர்க்க இயலாது.

எனக்கு 20 வயது தான், 30 வயதிற்குள் தான், 40ற்குள் தான், 50ற்குள் தான். அதனால் சில basic இன்சூரன்ஸ் எடுத்தா போதும். பின்னாள் தேவைப்படும் போது மற்றவற்றை எடுத்துக்கொள்ளலாம் என்று நினைப்பதெல்லாம் தவறு. முட்டாள் தனம்.

அமெரிக்காவில் அக்டோபர் 15லிருந்து துவங்கும் ஓபன் என்ரோல்மெண்ட் பீரியட் சில இடங்களில் அக்டோபர் கடைசியிலோ, நவம்பரிலோ அல்லது டிசம்பரிலோ முடியலாம். இது அடுத்த வருடத்திற்குத் தேவையான இன்சூரன்ஸிற்கு இப்போதே தன்னையும் தன் குடும்பத்தையும் குழந்தைகளையும் பதிவு செய்து கொள்வது. இந்த ஓபன் என்ரோல்மெண்டை தவறவிட்டால் பின்னர் ஏதாவது ஒரு லைஃப் சேஞ்சிங் ஈவன்ட் அப்ப தான் மாற்ற முடியும்.

இது அமெரிக்காவில் அனைவருக்கும் மிகவும் தேவையானது. நமது சம்பளத்தில் இது ஒரு கணிசமான தொகையாக இருந்தாலும் இதை தவிர்க்காமல் கண்டிப்பாக எடுக்கனும்.

கீழ்கண்டவை அனைவருக்கும் அனைத்து வயதினருக்கும் தேவை. இதைத் தவறவிட்டால் இழப்பு அதிகமாக இருக்கும், இவையனைத்தும் இருந்தால் இடர்காலத்தில் போண்டியாகாமல் நாம் நமது குடும்பம் மீண்டு வர ஏதுவாக இருக்கும்.

கீழ்கண்டவற்றில் பெருமளவில் என் சொந்த அநுபவத்தில் எடுத்து ஆபத்திலிருந்து மீண்டவை. இப்போதும் தொடர்கிறது.

1. Health insurance that covers pre-existing conditions

2. Life insurance ( term life or whole life)

3. Critical health insurance (that covers heart attack, major surgeries, cancer, etc)

4. Cancer insurance 

5. Accident and Death insurance 

6. Disability insurance 

7. Sports and special games insurance if the family members participate in any school games or professional games 

8. Flexible spending account to keep aside some amount to cover our deductibles and coinsurance.

9. Child day care spending account if you have qualifying children.

10. Home insurance and apt rental insurance 

11. Auto insurance.

12. Long term care insurance 

இவையனைத்தும் இங்கு பாதுகாப்பாக வாழ அனைவருக்கும் தேவை. மாதம் 500$லிருந்து 1000$க்கு மேல் கூட இது வரலாம்.  நமது சம்பளத்தில் இது ஒரு பெருந்தொகையாகக்கூட (one-third) நிற்கலாம். இவை அமெரிக்க வாழ்வின் அத்தியாவசியமானது. நிரந்தரத் தேவை. தவறாமல் எடுக்கனும்.

இவை மட்டுமே இடர்காலத்தில் நம்மை, நம் குடும்பத்தைக் காப்பாற்றும். 

1/3 - வீடு

1/3 - இன்சூரன்ஸ்

1/3 - வாழ்க்கையில் பிறவற்றிற்கு

வரக்கூடிய ஓபன் என்ரோல்மண்ட் பீரியடைத் தவறவிட்டு விடாதீர்கள்.

நம்மைக் காப்போம். நம் குடும்பத்தைக் காப்போம்.

Friday, September 25, 2020

தன் தசையின் அமைதியில் ஓய்ந்த குரல் இசை

தசையின் ஓய்வில் ஓர்இசை!

தசை தேடிய அமைதியில் ஓய்ந்த இசை
இசையில் அழைத்தவை பல கோடுகள்
ஒவ்வொரு இழையும் பிழியும் உணர்வுகள்
தசையதனை மாற்றி ஓய்ந்தது இசை!

உள்ளம் உருக வேதமாய் ஒலித்த கீதங்கள்
அலை போல் ஆர்ப்பரிக்கும் மன ஓசைகள்
அழகிய அடுக்குகளாய் கொடுத்த சாதனைகள்
சந்தம் ஏற்ற இறக்கத்தில் மலரும் மலர்கள்!

தன் பாடல்களை அசை போடுகையில்
மறவாமல் இசைத்தவரை ஆராதிக்கும் சமர்பணங்கள்
இசை படைப்பவரின் ஞானம் கொடுப்பவரின் ஆலிங்கனம்!

குழந்தைப்பருவம் முதல் கிடைத்த அமுதகீதங்கள்
அலைகடலாய் பெருகி வளர்ந்த நம் காலங்கள்
ஒவ்வொரு பருவமும் அவர்தன் பாடலின் வழியாக
நாம் பெற்ற வரம் வளரும் காலத்தில் கிடைத்த
இம்மகானுபாவலுவின் குரல் இசை!

பலகோடி மக்களின் மனதில்
நீங்காத நினைவாய் நிற்கின்ற பாடல்கள்
பொழுதன்றும் அசைபோடும் நம் மனதில்
அமரராய் நிற்கப்போகும் குரலுக்கு நம் அஞ்சலிகள்!

தன் தசையின் அமைதியில் ஓய்ந்த குரல் இசை!

Thursday, September 10, 2020

நினைவலைகளாய் மாறிப்போன நட்பு

அம்மாவோட இயற்கையான மரணத்திலிருந்து இன்னும் விடுபட முடியலை. தினமும் அம்மா அப்பாவின் நினைவுகள் இரவில் கனவில் அவர்களுடன் இருந்த குழந்தைப் பருவத்தையே நிழலாய்க் கொண்டு வருகிறது.

அதிலிருந்து மீண்டுவருவதற்குள் இங்கே உள்ளூரில் ஒரு நண்பரின் அகால மரணம் மிகவுமே பாதித்து விட்டது.

போன மாதம் இதே நாள் அவரே போன் பண்ணி ஒரு உதவி கேட்டு போன் பண்ணினார். பத்து நிமிடத்திற்கும் மேல் அவரோடும் அவர் குடும்பத்தோடும் பேசிக்கொண்டிருந்தேன். அவரே போன் பண்ணி ஒரு உதவி கேட்க, முடிந்தவரை தெரிந்த தகவல்களைச் சொன்னேன். அன்றிலிருந்து துவங்கி பத்து நாட்களில் ஐந்து ஆறு முறை பேசியுள்ளோம். அது அவர் என்னிடம் கேட்ட அவரது கடைசி ஆசையாகிப் போய்விட்டது. அவற்றை நிறைவேற்றி வைக்கக்கூடிய அளவிற்கு கூட ஒரு கையாலாதவனாகிவிட்ட வருத்தமே இப்போது மிஞ்சி நிற்கிறது.

இரண்டு வாரம் முன் மாலையில் வாக்கிங் போகும் போது ஒரு மனநோயாளியால் ஐந்து முறை சுடப்பட்டு அகால மரணம். இரண்டு நாள் கழித்து தமிழ் சங்கத்திலிருந்து வந்த ஈமெயில் மூலம் தான் அவரது மரணமே எனக்குத் தெரிந்தது. கேட்ட இரண்டு மணி நேரம் மிகவும் துடித்து விட்டேன். மரணத்தை துளி கூட ஏற்க முடியவில்லை. பையனும் மனைவியும் என் நிலை கண்டு அசந்தே போய் விட்டனர். அந்தளவுக்கு பாதித்து விட்டது.

எப்போதும் மலர்ந்த முகத்தோடு எதையும் மிகவும் பாசிடிவ்வாக பேசுவது மட்டுமல்ல, ஒரு அழகிய தூய கொங்கு தமிழில் அன்போடு அவரது பேச்சு வந்து விழும். பேச்சில் அவ்வளவு அன்பு, தெளிவு இருக்கும.

என் பையனும் அவர் பெண்ணும் தமிழ் வகுப்பு போன போதெல்லாம் அந்த 4-5 ஆண்டுகள் ஒவ்வொரு ஞாயிறு மதியமும் வகுப்புகள் முடியும் வரை வெளியில் உட்கார்ந்து பேசுவோம். என் blog படிச்சுபுட்டு வந்து இன்னும் நிறைய எழுதுங்க, உங்களுக்கு எழுத வருதுன்னு ரொம்ப என்கரேஜ் பண்ணுவார். நான் அந்தளவுக்கெல்லாம் வொர்த் இல்லைங்கன்னு நழுவிடுவேன். ஸ்டாக்ஸ் பத்தி பேசியிருக்கோம், இணையம் பற்றியெல்லாம் பேசியிருக்கோம்.

உள்ளூர் தமிழ் சங்கத்தில் தலைமைப் பொறுப்பாலர்களில் ஒருவராக இருந்தார். போன வருடம் ஜூலையில் சி மகேந்திரன் ஐயாவும் ஸ்டாலின் குணசேகரன் அவர்களும் வந்த போது அவர்களிடமும் என்னை அறிமுகப்படுத்தியது மட்டுமில்லாமல், ஸ்டாலின் குணசேகரனிடம் நான் எழுத்தாளர் என அவர் சொல்ல, ஸடாலின் குணசேகரன் என்னை ஏதோ பெருசா நினைச்சு அவர் விசிடிங் கார்ட் கொடுத்து தொடர்புகொள்ளச் சொல்ல எனக்கு ஒரே embarrassing ஆகப் போயிருச்சு! ஏன் செல்வா அவ்வளவு பெரிய மனிதர்களிடம் அப்படி சொல்றீங்க, இதெல்லாவற்றிற்கும் எனக்கு தகுதியில்லைன்னு சொன்னா, உங்களால் முடியும்ங்க செய்யுங்கன்னார் செல்வா! எதையும் பாசிடிவ்வாகவே பார்த்து பேசியவர். அமைதியாகவே இருந்து விட்டேன்.

இதற்கு முன் எழுத்தாளர் ஜெயமோகன் இரண்டு வருடம் முன் வந்த போதும் அவர் கூட்டத்தில் நானும் செல்வாவும் கலந்து கொண்டோம். கையிலிருந்த எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய புத்தகங்களில் ஜெயமோகன் கையொப்பத்தையும் பெற்று வந்தேன். அப்போதும் செல்வாவுடன் பேசி விட்டுதான் வந்தேன்.

எப்போதும் அவரே தான் தொடர்பு கொள்வார். பேசுவார். பேச்சில் கொங்கு தமிழ் கவர்ந்திழுக்கும்.

இப்படி ஒரு மிக ஜாலியான மனிதரின் அகால மரணம் அதுவும் சமீபத்தில் போன மாதம் பேசி உறவாடியவரின் மரணம் ஒரு ஒரு வார இடைவெளியில் நடந்ததின் பாதிப்பிலிருந்து மீள கஷ்டமாக இருந்தது.

இறந்து ஒரு வாரம் கழித்து நடந்த இறுதிச் சடங்கில் இருமுறை உடலருகில் சென்று ஒரு சுற்று சுற்றி வந்து அஞ்சலி செலுத்தி வந்தேன். எப்போதும் தலைநிமிர்ந்து கம்பீரமாக சிரித்துப் பேசுபவரின் முகம் கறுத்துப் போய் ஒரு பக்கமாக சாய்ந்து இருந்தது மிகுந்த துக்கத்தைக் கொடுத்தது. நான் கொண்டு போன ரோஜா மலர்க்கொத்து மற்ற மலர்களோடு அவரது காலடியில் கிடத்தப்பட்டு அதுவும் ஒன்றாகவே எரியூட்டப்பட்டு மண்ணோடு மண்ணாய்ப் போனது.

ஒரே சம வயதுடையவரின் மலர்ந்த நட்பு இனி நினைவலைகளாக மட்டும் நின்று விட்டது!

Sunday, August 23, 2020

முதல் சம்பளம் ஒரு கனாக்காலம்

1987ல pgdca முடிச்ச கையோட மறுநாள் கிளம்பி நானும் அப்பா அம்மாவும் சேலத்தில் ரயிலேறி கொச்சின்-கௌஹாத்தி எக்ஸ்பிரஸில் அஸ்ஸாம் போயி இறங்கியாச்சு.

போய் இறங்கி 10-20 நாள் கூட வீட்டுல சும்மா இருக்க விடாம என் அண்ணன் அங்க ஒரு ஃபேமஸ் சிஏ கிட்ட இவனே இவ்வளவு சம்பளம் கொடுத்தா என் தம்பியை அனுப்பறேன்னு சொல்லி அவர்ட்ட மாசம் 1000 ரூபாய் சம்பளத்துக்கு அனுப்பிவிட்டான். அப்ப டிஸ்பூர் பக்கத்துல நாங்க இருந்த 2 பெட்ரூம் அபார்ட்மண்ட்டுக்கு 700 ரூபாய் வாடகை! போக வர பஸ் சார்ஜ் 100 ரூபாய்.

சிஏ அங்க ரொம்ப பிரபலம். பல டீ எஸ்டேட் முதலாளிகள் ஒரு மூட்டையில சிங்கிள் என்ட்ரி அக்கௌண்டிங் நோட் புக்குகளை கொண்டு வருவாங்க! சிஏ கீழ ஏகப்பட்ட சிஏ மாணவர்கள். பெரும்பாலோர் ஜெயின்ஸ்/மார்வாடீஸ். 

சம்பாஷனைகள் எல்லாம் ஹிந்தியில். எனக்கு ஹிந்தி ஒரு வார்த்தை கூட தெரியாது. ஏக் காவ் மேம் படிச்சது கூட 8-10 வயசுல. எங்க போனாலும் விழி பிதுங்கறது தான். பரிதாபப்பட்டு ஆங்கிலத்தில் சொல்வாங்க!

சிஏ ஒரு சின்ன கம்ப்யூட்டர் டப்பா வாங்கி வச்சிருந்தார். ஃப்ளாப்பி டிஸ்க் 5-6. கம்ப்யூட்டர் மெமரி 64கேபி தான். மண்டபத்துல யாருக்கும் அதை ஆன் ஆஃப் பண்ணக் கூட தெரியாது! மூன்ற ஏசி ரூம்ல ஒன்னு அவருக்கு, ஒன்னு அவர் தம்பி (சிஏ), இன்னொன்னு இந்த புனித கம்ப்யூட்டருக்கு.

விண்டோஸ் 3 ஆபரேட்டிங் சிஸ்டம். காலையில போனா ஒன்னு இரண்டு பாலன்ஸ் ஸீட் டைப் பண்ணி வந்து என் கிட்ட கொடுத்து இதை கம்ப்யூட்டர்ல போட்டுக் கொடும்பாங்க. பைனான்சியல் அக்கௌண்டிங் சாஃப்ட்வேர் இந்தியாவுல இன்னும் வரலை. அந்த பாலன்ஸ்ஸீட்டை ஒரு வேர்ட்பேட்ல டைப் பண்ணிக் கொடுப்பேன். அதைக் கொண்டுபோய் இது கம்ப்யூட்டர் ஜெனரேட்டட், சயின்டிஃபிக்ன்னு சொல்லி அவங்க கிட்ட நிறைய கறந்துருவாங்க!

ஒரு கட்டத்துல இது புரிய ஆரம்பிக்க, அவரிடம் சார் இது டைப்பிங் மிஷன்ல பண்ணாலே போதுமே, எதுக்கு கம்ப்யூட்டர்னனு கேட்டா, கம்ப்யூட்டர்ல் டைப் பண்ண ஷீட்டுக்கு வேல்யூ ஜாஸ்தி நீ சொன்னதைச் செய்யுன்னுட்டார். 

2 மாதத்தில் சிலது இம்ப்ரூவ் பண்ணிக்கொடுக்க,  அவர் இனி அக்கௌண்டிங் சாஃப்ட்வேரை நீயே எழுது, உனக்கு சுளையாக 1000 கொடுக்கிறது அதுக்குத்தானுட்டார். சார் இது இந்த கம்ப்யூட்டரில் சாத்தியமில்லை. அக்கௌண்டிங் சாஃப்டேவேர் விக்கறாங்க, அதை வாங்கி ட்ரை பண்ணலாம்ன்னேன். அவன் 15000-20000 கேட்கிறான். நீ எழுதுன்னுட்டார்.  சிம்பிள் அக்கௌண்டிங் புரசீஜர்ஸ் தெரியாம என்னத்த எழுதறது. எல்லாம் சிங்கிள் என்ட்ரி லெட்ஜர்ஸ். 

ஒன்னு இரண்டு ப்ரோக்ராம் எழுதி கொடுத்துவிட்டு, அடுத்த வேலையைப் பார்த்து அரசுவேலை பக்கம் நகர்ந்துவிட்டேன்.

சில வருடங்களில் உல்ஃபா இவர்களை டார்கெட் பண்ண சிஏ ஃபார்மை மூடிவிட்டு அத்தனை சொத்துக்களையும் விட்டுவிட்டுப் போய் விட்டனர். ஊர் டவுன்டவுன் ஃபான்சிபஜாரில் பல அடுக்குமாடி கட்டடங்கள் இவர்களிடமிருந்தது!

முதல் சம்பளம் பத்தி கேட்டதில் வந்த நினைவலைகள்!