அம்மாவோட இயற்கையான மரணத்திலிருந்து இன்னும் விடுபட முடியலை. தினமும் அம்மா அப்பாவின் நினைவுகள் இரவில் கனவில் அவர்களுடன் இருந்த குழந்தைப் பருவத்தையே நிழலாய்க் கொண்டு வருகிறது.
அதிலிருந்து மீண்டுவருவதற்குள் இங்கே உள்ளூரில் ஒரு நண்பரின் அகால மரணம் மிகவுமே பாதித்து விட்டது.
போன மாதம் இதே நாள் அவரே போன் பண்ணி ஒரு உதவி கேட்டு போன் பண்ணினார். பத்து நிமிடத்திற்கும் மேல் அவரோடும் அவர் குடும்பத்தோடும் பேசிக்கொண்டிருந்தேன். அவரே போன் பண்ணி ஒரு உதவி கேட்க, முடிந்தவரை தெரிந்த தகவல்களைச் சொன்னேன். அன்றிலிருந்து துவங்கி பத்து நாட்களில் ஐந்து ஆறு முறை பேசியுள்ளோம். அது அவர் என்னிடம் கேட்ட அவரது கடைசி ஆசையாகிப் போய்விட்டது. அவற்றை நிறைவேற்றி வைக்கக்கூடிய அளவிற்கு கூட ஒரு கையாலாதவனாகிவிட்ட வருத்தமே இப்போது மிஞ்சி நிற்கிறது.
இரண்டு வாரம் முன் மாலையில் வாக்கிங் போகும் போது ஒரு மனநோயாளியால் ஐந்து முறை சுடப்பட்டு அகால மரணம். இரண்டு நாள் கழித்து தமிழ் சங்கத்திலிருந்து வந்த ஈமெயில் மூலம் தான் அவரது மரணமே எனக்குத் தெரிந்தது. கேட்ட இரண்டு மணி நேரம் மிகவும் துடித்து விட்டேன். மரணத்தை துளி கூட ஏற்க முடியவில்லை. பையனும் மனைவியும் என் நிலை கண்டு அசந்தே போய் விட்டனர். அந்தளவுக்கு பாதித்து விட்டது.
எப்போதும் மலர்ந்த முகத்தோடு எதையும் மிகவும் பாசிடிவ்வாக பேசுவது மட்டுமல்ல, ஒரு அழகிய தூய கொங்கு தமிழில் அன்போடு அவரது பேச்சு வந்து விழும். பேச்சில் அவ்வளவு அன்பு, தெளிவு இருக்கும.
என் பையனும் அவர் பெண்ணும் தமிழ் வகுப்பு போன போதெல்லாம் அந்த 4-5 ஆண்டுகள் ஒவ்வொரு ஞாயிறு மதியமும் வகுப்புகள் முடியும் வரை வெளியில் உட்கார்ந்து பேசுவோம். என் blog படிச்சுபுட்டு வந்து இன்னும் நிறைய எழுதுங்க, உங்களுக்கு எழுத வருதுன்னு ரொம்ப என்கரேஜ் பண்ணுவார். நான் அந்தளவுக்கெல்லாம் வொர்த் இல்லைங்கன்னு நழுவிடுவேன். ஸ்டாக்ஸ் பத்தி பேசியிருக்கோம், இணையம் பற்றியெல்லாம் பேசியிருக்கோம்.
உள்ளூர் தமிழ் சங்கத்தில் தலைமைப் பொறுப்பாலர்களில் ஒருவராக இருந்தார். போன வருடம் ஜூலையில் சி மகேந்திரன் ஐயாவும் ஸ்டாலின் குணசேகரன் அவர்களும் வந்த போது அவர்களிடமும் என்னை அறிமுகப்படுத்தியது மட்டுமில்லாமல், ஸ்டாலின் குணசேகரனிடம் நான் எழுத்தாளர் என அவர் சொல்ல, ஸடாலின் குணசேகரன் என்னை ஏதோ பெருசா நினைச்சு அவர் விசிடிங் கார்ட் கொடுத்து தொடர்புகொள்ளச் சொல்ல எனக்கு ஒரே embarrassing ஆகப் போயிருச்சு! ஏன் செல்வா அவ்வளவு பெரிய மனிதர்களிடம் அப்படி சொல்றீங்க, இதெல்லாவற்றிற்கும் எனக்கு தகுதியில்லைன்னு சொன்னா, உங்களால் முடியும்ங்க செய்யுங்கன்னார் செல்வா! எதையும் பாசிடிவ்வாகவே பார்த்து பேசியவர். அமைதியாகவே இருந்து விட்டேன்.
இதற்கு முன் எழுத்தாளர் ஜெயமோகன் இரண்டு வருடம் முன் வந்த போதும் அவர் கூட்டத்தில் நானும் செல்வாவும் கலந்து கொண்டோம். கையிலிருந்த எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய புத்தகங்களில் ஜெயமோகன் கையொப்பத்தையும் பெற்று வந்தேன். அப்போதும் செல்வாவுடன் பேசி விட்டுதான் வந்தேன்.
எப்போதும் அவரே தான் தொடர்பு கொள்வார். பேசுவார். பேச்சில் கொங்கு தமிழ் கவர்ந்திழுக்கும்.
இப்படி ஒரு மிக ஜாலியான மனிதரின் அகால மரணம் அதுவும் சமீபத்தில் போன மாதம் பேசி உறவாடியவரின் மரணம் ஒரு ஒரு வார இடைவெளியில் நடந்ததின் பாதிப்பிலிருந்து மீள கஷ்டமாக இருந்தது.
இறந்து ஒரு வாரம் கழித்து நடந்த இறுதிச் சடங்கில் இருமுறை உடலருகில் சென்று ஒரு சுற்று சுற்றி வந்து அஞ்சலி செலுத்தி வந்தேன். எப்போதும் தலைநிமிர்ந்து கம்பீரமாக சிரித்துப் பேசுபவரின் முகம் கறுத்துப் போய் ஒரு பக்கமாக சாய்ந்து இருந்தது மிகுந்த துக்கத்தைக் கொடுத்தது. நான் கொண்டு போன ரோஜா மலர்க்கொத்து மற்ற மலர்களோடு அவரது காலடியில் கிடத்தப்பட்டு அதுவும் ஒன்றாகவே எரியூட்டப்பட்டு மண்ணோடு மண்ணாய்ப் போனது.
ஒரே சம வயதுடையவரின் மலர்ந்த நட்பு இனி நினைவலைகளாக மட்டும் நின்று விட்டது!
2 comments:
செல்வராஜ் வெள்ளியங்கிரி அல்லவா அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்
ஆமாம்.
நன்றிங்க! நீங்க யாருன்னு தெரியலையே!
Post a Comment