சின்ன வயசுலேர்ந்தே ஏழ்மையை எங்கள் வீட்டில் பார்க்கலைன்னாலும் அதிகம் எதற்கும் செலவு பண்ணமுடியாத ஒரு சிக்கனமான வாழ்க்கையையே பார்த்து வளர்ந்தாச்சு!
மேலும் அப்பா அம்மா இருவரும் தனக்குன்னு எதுவும் காஸ்ட்லியாக வாங்காம, கடனடைப்பதும், நீண்டகால வாழ்விற்கு சேமிப்பதற்காக மாதா மாதம் வர்ற சம்பளத்துக்கே மாதக்கடைசியில் பட்ஜெட் போட்டே வாழ்க்கையை நடத்தியதால் அதைப் பார்த்து வளர்ந்த எனக்கு, எனக்குன்னு எதுவும் செலவு பண்ண மனசு வருவதில்லை.
அப்பாவைப் போல நீண்ட வாழ்க்கைக்கு தேவைப்பட்டால் என்ன செய்யன்னு ரொம்பவே சிக்கனமாக வாழ்ந்து ரிடையர்மெண்ட்டுக்கும் சேமித்து வைத்தே வாழ்ந்து வந்துவிட்டேன். பேண்ட் ஷர்ட் வாங்கனும்ன்னா கூட 10-25$க்கு மேலே செலவு பண்ணமாட்டேன், அம்புட்டு கஞ்சம், வீட்டுக்கடனை அடைச்சு ஒரு கடனற்ற வாழ்வு வாழனும்ன்னு குறிக்கோள், ரிடையர்மெண்ட்க்காக சேவிங் என கையை குறுக்கி வாழ்ந்தே பழகிடுச்சு.
வெறும் கழுத்தோடயே எப்போதுமிருக்கேனேன்னு பதினைந்து வருடம் முன் 500$க்கு ஒரு செயின் வாங்கினேன். அதுதான் எனக்குன்னு வாங்கியது. மற்றது ஒன்னு சேவிங்கிற்காக வாங்கினேன், அதை அம்மிணி கொண்டு போய் பேங்க் லாக்கர்ல வச்சது தான், இதுவரை கண்ணுல காட்டல. 12 வருடம் ஓடிவிட்டது. அம்மிணியோட பேங்க் லாக்கர் எப்படி ஓபன் பண்ணனும்ன்னு கூட தெரியாது.
போன மாதம் அம்மிணி சொன்னாப்புல அவங்க நண்பி மிகவும் வயதானதால அவங்க புடவை நகை எல்லாத்தையும் விற்கறாங்க, வாங்க போலாம். உங்களுக்கு ருத்ராக்ஷம்ன்னா அவ்வளவு பிடிக்குமே, அவங்க அதை எனக்கு விற்கறேங்கிறாங்க, வாங்க போலாம்ன்னு இழுத்துகிட்டு போனாப்புல.
அந்த வயதான தம்பதியரில் மாமிக்கு 83 வயது, மாமா 87 வயது கேன்சர் வேற. நடக்க முடியாம நடக்கிறார். அவங்க வாங்கினது எல்லாம் 30-35 வருடம் முன்பு, ஆனால் தங்கத்தை இன்றைய விலைக்குத் தான் கொடுப்பேன்னுட்டாங்க!
அம்மிணி அந்த மாமியோட ருத்ராக்ஷ மாலையை இன்றைய விலையில் வாங்கிகிட்டாப்புல.
மாமா என் கழுத்தைப் பார்த்தார். கழுத்துல என்ன போட்டிருக்க காமின்னார், அதைக் கழட்டிக் கொடுன்னார். அதை தொட்டுப் பார்த்தவர் நேரா எழுந்து தடுமாறி நடந்துகிட்டே போய் அவரோட ருத்ராக்ஷ ஸ்படிக மாலையை கொண்டு வந்து கொடுத்து நீ இதை வாங்கிக்கிறன்னு சொல்லி கையில கொடுத்துட்டார்.
மாமா ஒரு சிறந்த வியாபாரி பிசினஸ்மேனாம். 35 வருடம் முன் லிபியாவில் தான் நேரில் தங்கம் வாங்கி, நேபாளில் ருத்ராக்ஷம் வாங்கி, ஸ்படிகம் வேறொரு நாட்டில் வாங்கி தனக்குத் தெரிந்த ஒரு பெரிய ஆளை வைத்து செய்த மாலை.
நீ தான் இதை எடுத்துக்கிற இந்தா பிடின்னு கையில கொடுத்துட்டார். தங்கம் இன்றைய விலைக்கு அது மிகப்பெரிய தொகை வேற. நான் அவர்ட்ட எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்: இது உங்க சந்ததிக்குப் போக வேண்டியது, அவங்களுக்கு கொடுங்கன்னு எவ்வளவோ சொல்லியும் கேட்கலை. அவங்க இங்க பிறந்த வளர்ந்தவங்க, வேல்யூ தெரியாது, டாக்டர் வேற, அவங்களுக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது, தெரிந்தவங்களுக்குத் தான் கொடுக்கனும்ன்னு கையில கொடுத்துட்டார். அதிக தொகை, அவங்க சொன்னதை அப்படியே அவங்க கண்முன்னே பேங்க் ட்ரான்ஸ்பர் பண்ணிட்டேன். மாமா தன் தள்ளாமையிலும் கம்ப்யூட்டர் ஆன் பண்ணி பேங்குல பணம் வந்துடுச்சான்னு செக் பண்ணிட்டு தான் கொடுத்தார். மாமி சொல்றாங்க அவர் பிசினஸ்மேன், எல்லாத்திலும் அது சரியாக இருக்கான்னு அவருக்கு இப்பவும் 86 வயசில் தெரியனும்கிறாங்க.
நீ ருத்ரம் சொல்வேன்னு சொன்னா உண்மையான்னு கேட்டார், ஆமாம்ன்னேன். அவருக்கு ஒரு கை சரியா வேலை செய்யலை. என்னை வீட்டுள்ளே கூட்டிப் போய், அவரோட டேபுள் ட்ராயரைத் திறக்கச் சொல்லி ஒரு டப்பா எடுக்கச் சொல்லி இது என்ன தெரியுமா இது உனக்குத் தான் எடுத்துட்டுப்போன்னு கையில கொடுத்துட்டார்.
உண்மையிலேயே அரண்டு போயிட்டேன். ஐயோ இது உங்க சந்ததிக்கு போக வேண்டியது அவங்களுக்கு கொடுங்கன்னா, அவங்களுக்கு இதைப்பத்தி ஒன்னுமே தெரியாது. ஶ்ரீருத்ரம் சொல்ற உங்கிட்ட தர்றதை விட யாருக்கு கொடுப்பது. என் அண்ணாக்கு இரண்டு கொடுத்துட்டேன். ஒன்னு இப்ப ஓபனாகி இருக்கு, இன்னொன்னு கொஞ்ச நாளில் ஓபனாகும்கிறார். அரண்டு போய் நிற்கிறேன் அங்கே!
அந்த சாலிக்கிராமத்தைத் திறந்தா உள்ளே ஶ்ரீசக்ரமிருக்கு. இன்னொன்னும் கொஞ்ச வருஷத்துல ஓபனாகும்கிறார். அவர்ட்ட எவ்வளவோ கெஞ்சினேன்: மாமா இது உங்க குடும்பத்துக்குப் போகனும் எனக்குத் தர்றாதீங்கன்னு சொன்னா கேட்கலை அவர்.
உன் வயசென்னன்னு கேட்டார். 58ன்னேன். அடுத்த மறுவிநாடி அவர் சொன்னார்: உனக்கு இன்னும் பத்து வருஷம் தான் லைஃப், இனி ஆபீஸில் உன் மேனேஜர் பக்கெட்டைத் தூக்குன்னு சொன்னா தூக்கு, அவன் சின்னவன் அது இதெல்லாம் யோசிக்கக் கூடாது, அவன் அந்த பக்கெட்டை கீழே வையுன்னு சொல்றவரை அதை கீழே வைக்காதே, ரிடையர் ஆகனும்ன்னு யோசிக்காதேங்கிறார்.
அரண்டு போய் நின்னுட்டேன். நம் மனசுல ஓடற ஒவ்வொன்னையும் புட்டுபுட்டு வைக்கிறார். எதை நினைக்கிறோமோ அதை செய்யாதேங்கிறார். ஆடிப்போச்சு. எப்படி இவருக்கு என் மனசுல ஓடறது தெரியுதுன்னு புரியாம உட்கார்ந்திருந்தேன். அவர் சொன்ன அத்தனையும் உண்மை வேற. எப்படி அவருக்கு தெரிந்ததுன்னு தெரியலை.
ரொம்ப கம்பெல் பண்ணி கொடுத்ததால் அவர்கள் காலில் விழுந்து வாங்கிகிட்டேன்.
நேராக சிவன் கோவில் போய் ஸ்வாமி காலில் வைத்துவிட்டு அர்ச்சகரை அங்கேயே பூஜை செய்யச் சொல்லி வீட்டுற்கு எடுத்து வந்தேன்.
இந்த ஜனவரிக்கு மேலே நல்லது நடக்கும்ன்னு போட்டிருந்துச்சு. கஷ்டங்கள் விலக ஆரம்பித்திருக்கு. நல்லது தானாக நடக்குது!
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Luz en el túnel!