Sunday, June 18, 2023

நடைபாதையில் ஒரு நாடகம்

நேர்மறை எண்ணம் தேடி வர
  தினம் தொடும் வெறுப்பைத் தாண்டுதல்
நேசிக்க வைக்கும் நம்மை
  பிறர்தன் பொருளை வார்த்தைகளில் தொடாமலில்!

கூடியிருக்கும் கூட்டில் பறவைகள் பலவிதம்
  சிறகடித்து தன் பாதையில் பறந்தாலும்
கூட்டில் கூடுவதில் இயல்பாய்த் தேவை நேசம்!

வண்ண நிறங்கள் பலவிதம்
  அவை கூடுகையில் மாறிடும் பரிணாமங்கள்
எண்ணங்கள் நம்மில் பலவிதம்
    எதிர்மறை கூட்டலில் அவை மிளிராது!

எட்டி வைக்கும் பாதை இமயமே என்றாலும்
  கூட்டி இழுக்கும் உறவின் பிடியில்
கட்டிப்பிடிக்கும் நேசமன்றி கரையேற தூரமன்றோ!

நடைபாதையில் ஒரு நாடகம் அது!

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Camina por la calle!
மே 26 2023

நம் வீட்டு செங்கோல்

எல்லோரும் செங்கோலைப் பத்திப் பேசறாங்க! 

நம்ம கவலையெல்லாம்

இனி ஒவ்வொரு மேடையிலும் வர்றவங்க போகிறவங்க எல்லாம் பரிசுப் பொருளாக சால்வைக்குப் பதில் ஒரு செங்கோலைக் கொடுப்பாங்கன்னு நினைச்சாத் தான் கெதக்ன்னு இருக்கு!

சால்வை போர்த்திக்க உதவும், இந்த செங்கோல் மேடையிலேயே அடிதடிக்கு உதவுமோ!

நம்ம வீட்டு செங்கோலை ஒளிச்சு வக்கனும்பா! செங்கோல் கொடுக்கிறது ட்ரெண்ட் ஆகி நம்மளது பூடப்போறுது!

சால்வையோட நிப்போம்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Bastones o mantas!
மே 26 2023

அர்ச்சனை மாலைகள்

காலையில எழுந்த உடனேயே சூடா காபி கிடைச்ச சந்தோஷத்துல பிஏகே சார் யாரையோ போட்டு சாத்து சாத்துன்னு சாத்திகிட்டே இருக்காறே!

எங்கம்மா அப்பா தினமும் காலையிலே எழுந்தவுடனே முதல்வேலையா வாசலில் விழற எல்லாப் பவளமல்லியையும் மல்லிகையையும் எடுத்து கோர்த்து சாமிக்குப் போட்டது போக பக்கத்திலுள்ள கோவிலுக்கு எட்டு மணிக்குள்ள கோவில்ல கொண்டு போய் கொடுப்பாங்க!

இங்க சாரை மாலை கோர்க்கக்கூட விடமாட்டேங்கறாங்க! சார் டைரெக்டாவே அர்ச்சனையில காலையிலேயே இறங்கிட்டாரே !

யாரப்பா அது! நேத்து டிவி பேட்டியில ஏதாவது ஏடா கூடமா!

மனதில் சாந்தி நிலவட்டும்!
வாழ்வினிது
ओलै सिरिय।
¡Un café tranquilo por la mañana es tan dulce como la sonrisa de un niño!
மே 25 2023

பயங்கலந்த வாழ்க்கை

இரண்டு நாளாகவே நம்ம வீட்டை யாரோ பராக் பார்க்கிறாங்கன்னு எனக்கும் அம்மிணிக்கும் ஒரு ஃபீலிங். 

நாலு நாள் முன்ன இரவு இரண்டு மணிக்கு அம்மிணி எழுப்பறாப்புல, கீழ ஏதோ சத்தம் வாங்கப் போலாம்ன்னு. எந்த சத்தமும் தெரியாத ஒரு ஆழ்ந்த உறக்கம் எனக்கு. இரவு கீழே வந்துப் பார்த்தா ஒன்னுமில்லை. அடுத்த நாள் பார்த்தா ஏதோ ஒரு தட்டுமுட்டு சாமான் விழுந்துருக்கு.

நேற்று ஜுகல்பந்தி போக காரை எடுத்தா பின்னாடி ட்ரைவ் வே ல ஒருத்தன் நிற்கறான். ஏதோ மார்கெட்டிங். அதற்கு முதல்நாள் அவன் கூட்டாளியை ஒன்னும் வேணாம்ன்னு அனுப்பி விட்டேன். இன்னிக்கு இவன். வேண்டாம்ன்னு சொல்லியும் அவன் பக்கத்து வீட்டு வாசலுக்குப் போய் ஃபோன் எடுத்து பேச ஆரம்பிச்சுட்டான்.

சந்தேகத்தோடவே கச்சேரிக்குப் போனோம்.

பொதுவாகவே நான் வேஷ்டி கட்டுவது குறைவு. அதுவும் வேஷ்டி கட்டி சட்டையில்லாம இருப்பது ஏதோ ஒரு விசேஷமான நாட்களில் தான். அதுவும் கொஞ்ச நேரம் தான்.

இன்னிக்கு காலையில எல்லா எடுபுடி வேலையும் செய்துபுட்டு, ஏதோ மனசுல தோணிச்சு குளிச்சு வேஷ்டி கட்டி சாளக்கிராமத்திற்கு பூஜை பண்ணனும்ன்னு. பண்ணி முடிச்சுப் பார்த்தா மணி மதியம் 1.30. 

லேட்டாச்சு சாப்பிட தட்டு எடுத்தேன். வாசல்ல மணி சத்தம். புதுசா 4 பேர் வடக்கத்தி ஃபேமலி நிற்கறாங்க. யாருன்னே தெரியலை. நானோ ஷர்ட்டில்லாம சாமியார் மாதிரி வேஷ்டியோட நிற்கிறேன். இவங்க யாரோ புதுசா! என்ன நினைச்சுருப்பாங்கன்னு தெரியலை!

எப்போதும் பக்கத்தில இருக்கும் சர்ச் ஆளுங்க தான் ஏதாவது பிரச்சாரத்துக்கு வருவாங்க! இவங்க பார்த்தா நெற்றியி்ல் பொட்டோடு வடக்கத்தி மராட்டி குஜ்ஜு தாலியோட நிற்கறாங்க!

நீங்க யாரு உங்களுக்கு எப்படித் தெரியும் நான் இங்கே இருக்கேன்னு கேட்டா எல்லாம் பப்ளிக் ரிக்கார்ட் பார்த்து வாரோம்ங்கிறாங்க! வந்தவங்க குஜராத்தி ஃபேமிலி. அவங்க அதாவளேன்னு ஒரு மராட்டி சாமியார் பேரைச் சொல்லி, அவர் எப்போதும் சொல்வார்: வெளியே போய் 4 பேரைப் பார்த்து வான்னு. அதன்படி உங்க தெருவில இருக்கிற இந்திய மக்களைப் பார்க்க வந்திருக்கோம்கிறாங்க!

ஹிந்தியிலப் பேசலாமான்னு கேட்டு ஹிந்தியிலேயே உரையாடல் அவங்க. நமக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தியிலேயே டாம் டமால் டக் னு அடிச்சு விட்டாச்சு!

நம்ம வாய் தான் எப்போதும் சும்மா இருக்காதே! இன்னிக்கு சந்திராஷ்டமம் வேற! நேராவே கேட்டுவிட்டேன். நீங்க குஜராத்தி. ஆனால் ஒரு மராட்டி சாமியார் பேரச் சொல்லி வர்றீங்களேன்னு. அவங்களும் சளைக்காம ஸ்வாமிஜி பெருமைகளை சொல்லிட்டு, உள்ளூர் கம்யூனிட்டி சென்டர்ல ப்ரார்த்தனைக் கூட்டம் வச்சுருக்கோம் வாங்கன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க! ஃப்ரண்ட் ரூம்ல உட்கார வச்சு நல்லபடியாகப் பேசி அனுப்பிட்டேன்!

என்னைப் பார்த்தாலே ஏதோ சாமியாரைப் பார்த்ததா நினைச்சுருப்பாங்க! அமைதியாக சந்தோஷமாக அவங்க முகம் கோணாமப் பேசி அனுப்பிட்டேன்!

அம்மிணி வீட்டுள்ளே போன ஆளு, அவங்க போற வரைக்கும் ரூமை விட்டு வெளியவே வரலை!

இவங்களுக்கெல்லாம் நாம இங்க இருக்கோம்ன்னு எப்படித் தெரியும்ன்னு அவங்க போன பிறகு நம்மகிட்ட கேள்வி வேற!

யாமறியேன் பராபரமே!
ஸ்வராசியமான பயங்கலந்த வாழ்க்கை
வாழ்வினிது
ओलै सिरिय ।
¿Cómo saben que estamos aquí?
மே 21 2023

லால்குடி விஜயலக்ஷ்மி

இன்னிக்கு லால்குடி விஜயலக்‌ஷ்மி மற்றும் உஸ்தாத் சாகித் ஃபர்வேஸ் கானின் ஜுகல்பந்திக்கு போய்ட்டு வந்தோம். 

இரண்டு மணி நேரம் போனதே தெரியலை.

அதுலையும் பண்டிட் பத்ரி சதீஷ்குமாரின் மிருதங்கம், யப்பா அதகளம்.

ஹிந்துஸ்தானி ராக தாள லயத்துக்கு லால்குடி விஜியும் உஸ்தாத் ஃபர்வேஸ் சாகேப்பும் கையில் தாளம் போடறது அவ்வளவு perfect ஆக synchronize ஆவுது. 

செம ட்ரீட் இன்னிக்கு!

வீடு திரும்பும் போது இரவு எட்டேமுக்காலானாலும் இன்னும் இருட்டலை இன்னிக்கு. 

அம்மிணி திடீர்ன்னு இப்ப வாக்கிங் போலாமான்னாப்புல. இதென்ன புதுசா இருக்கு. ரைட்டு. இரண்டு பேரும் முக்கால் மைல் நடந்துட்டு வந்தோம். இருட்டிடுச்சு வேற. 

இரண்டு பேரும் ஒரு வார்த்தை பேசாம நடந்து போய் வந்தோம்.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Caminar en silencio suena nuestra melodía!
மே 20 2023

நடைபாதை பல்புகள்

நாள் பூரா ஆபீஸ் வேலை பார்த்துபுட்டு எப்படா ஆறு மணியாகும், இருட்டறதுக்குள்ள ஒரு நடை வாக்கிங் போய் விட்டு வந்துரலாம்ன்னு நினைச்சா, தெரு விளக்குல பல்ப் இல்லைன்னு நினைச்சாங்களான்னு தெரியலை, ரோட்டுல நடக்குற நமக்கு பல்பு கொடுக்க எல்லோரும் ரெடியாக இருக்காங்கப்பா!

இன்னிக்கு வேலை முடிஞ்சு கிளம்பினேன். வெளிய கொஞ்ச தூரம் கூட போகலை, பக்கத்துல ஒருத்தர் வெளியூர் போறாராம், அவர் வீட்டுச் செடிகளுக்கு தண்ணி காமிக்கனும்ன்னார். சரின்னேன். 

அம்புட்டு தான்.

மநுசன் என் வீட்டுத் தண்ணிக்குழாயை நீ எப்படி திறக்கனும், இந்த hoseல நீ எப்படி தண்ணிப் பாய்ச்சனும்ன்னு லைவ் ட்ரைனிங் கொடுக்க ஆரம்பிச்சுட்டார் வேற. இந்தா பைப்பை திற, ரொம்பத் திறக்காதே, கொஞ்சமா, இங்க வா, இந்த ஹோஸைப் பிடி, இத்துனூண்டு திறக்காத, முழுசா திற என லெக்சர் டெமான்ஸ்ட்ரேஷன்.

ஒரு டெக்னிகல் காலேஜ் போய் டிப்ளமா பல்ப் வாங்கி வந்துருக்கேனப்பா! முடியலை. அந்த பிரபலம் வந்தப்ப கச்சேரியிலேயே தான் பார்க்கப் போறேயேன்னு சொன்ன அதே ஆளு!

அடுத்து, ஒரு அரை மைல் தாண்டல. முன்பு சொன்ன ஒரு லோக்கல் மேனேஜர், இந்தியா மற்றும் வெளிநாட்டு இஞ்சினியர்களை பணியில் அமர்த்தி வேலை வாங்குபவர். 

அவர் பிடிச்சுகிட்டார்!

என்ன இப்படி தலைகுனிஞ்சு சோகமா வர்ற, ஏதும் பிரச்சனையில்லையேங்கிறார்!

ஐயா நீங்க கொஞ்சம் என் பின்னாலே பாருங்க, மூஞ்சிக்கு நேரா வெயில் அடிக்குது. Sunglasses போட்டும் தலை நிமிர்த்தர நிலையிலா இருக்குன்னேன்!

அவர்ட்ட எப்படி கொஞ்ச நேரம் முன்ன வாங்கின பல்ப் பத்தி சொல்றது! மானஸ்தனில்லையா! அது டெக்னிகல் டிப்ளமான்னா, இவர் இஞ்சினியரிங் டிப்ளமா கொடுக்கத் தயாராகிட்டார்!

மநுசன் வாக்கிங் போறவனை தடுத்து நிறுத்தி தன்னோட லெக்சரை ஆரம்பிச்சுட்டார்.

போன வாரம் ஒரு சென்னை இஞ்சினியரை சேர்த்திருக்கேன். அவன் racquetball அமெரிக்காவுக்கே விளையாடற தகுதி பெற்றவன். அவன் இதுக்கு முன்னாடி அங்க கிரிக்கெட்லையும் கலக்குவானாம், ஆனால் அங்க இந்தியாவுல இருக்கிற ஜாதிப்பிரச்சனையினால் அவனுக்கு கீழ இருந்த மூனு பேருக்கு சான்ஸ் கிடைச்சுதாம், அவனுக்குப் போச்சாம்! இங்க அமெரிக்கா தான் அவனுக்கு பெஸ்ட்டுன்னு அவன் சொல்றான்னார்!

அவருக்கு நான் எப்படி பதில் சொல்வேன்னு தெரியும், நம்ம வாய் தான் சும்மாயிருக்காதே, மநுசன் பேச்சை மாத்தி, எனக்கு பல்பு கொடுத்த திருப்தியுடன், இடத்தை காலி பண்ணிட்டார்.

போகறதுக்கு முன்ன, நீ என் முன்ன வந்ததை விட,  இப்ப உன் சிரிப்பு எப்போதும் போலத் தானிருக்குன்னு வாழ்த்தி அனுப்பிட்டார் மநுசன்.

கொஞ்சம் சான்ஸ் கிடைச்சா அந்தப் பையன் இங்க வந்து வண்ணங்களின் சிறப்புகளை நன்கு கத்துப்பான்னு சொல்றதுக்குள்ள மநுசன் பல்பு கொடுத்த திருப்தியோட கடந்து போயிட்டார்.

வீட்டுக்கு வந்து அம்மிணி கிட்ட சொன்னா, அவங்கெல்லாம் நல்லா சொல்லிக் கொடுக்கிறாங்க, நல்லா கத்துக்கங்கிறாப்புல!

யப்பா வாக்கிங் போவது உடல்நலத்துக்கா மனநலத்துக்கான்னு சந்தேகமாக இருக்குப்பா!

பல்பு எல்லாம் பழகிப் போச்சு இப்ப! 
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Caminar es bueno para la salud, pero …
மே 17 2023

பொன்னியின் செல்வன் 2 பார்க்க

அம்மிணி ஒரு வாரமாக சொல்லிட்டிருந்தாப்புல இந்த ஞாயிறு பிஎஸ்2 பார்க்கனும்ன்னு. 

சரி இப்ப மதியம் ஷோ போலாம் வான்னு போனா மதியம் ஷோ மட்டும் தெலுகுல, தியேட்டர் ஃபுல். மத்த மூனு ஷோ தமிழாம், படம் பார்க்க 4 தமிழர்கள் சேர்ந்து வந்தா பெரிய விஷயம், அதுக்கு மூனு ஷோ!

அம்மிணிக்கு பொன்னியின் செல்வன் கதை தெரியாது. தமிழை விட தெலுகு நல்லா பேசப்படிக்கத் தெரியும்.

நாக்கு தெலுகு தெலீதே! நானு தெலுகுல சூஸலேதுன்னு வாபஸ் ஆயிந்தி!

அடுத்த வாரம் போய் தனியா சூஸலாம்ன்னு வந்துட்டோம்!

தமிழில் ஒன்னுக்கு இரண்டு தடவை கதையைப்படிச்சவன் அங்ஙன போய் தெலுகுல பார்த்தா ஆதித்த கரிகாலன் எப்புடு மரிச்சுப்போனாருன்னு அம்மிணியில்ல எனக்கு ட்ரான்ஸ்லேட் பண்ணனும்!

இன்னாத்துக்கு இந்த கஷ்டம். வாபஸ் ஆயிந்தி!

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Mira la película en un idioma que entiendas!
மே 7 2023