Sunday, June 2, 2019

பல மொழி கற்றலின் அவசியம்

ஒரு மொழி கற்கும் வாய்ப்பை சிறு வயதில் இழந்து விட்டால் பிறகு வயதான பிறகு கற்பது சுலபமல்ல! பாடவழித் திட்டமாக கற்பிக்கப்படும் போது ஒரு மொழியின் அடிப்படை இலக்கணத்தை இலகுவாக புரிந்து கொள்ள முடியும். 

தமிழ்வழிக் கல்வியிலேயே ப்ளஸ்2 வரை அரசுப்பள்ளியில் படித்த போது ஆங்கிலம் இரண்டாம் பாடமாக இருந்தால் அதைக்கூட முறையாக கற்றுக்கொள்ள பிரயத்தனப்படவில்லை என்றால் பின்னாட்களில் கல்லூரியில் ஆங்கிலத்தில் பாடம் புரிந்து கொள்ள மற்றவர்களுடன் பேசத் தடுமாறிய காலமும் நிறைய வரும்!

பின்னாட்களில் இந்த கம்யூனிகேஷன் பிரச்சனையினாலேயே பல ப்ரொமோஷன்களை இழந்து கடைமட்ட ஊழியனாகவே வாழ வேண்டி வருகிறது பலருக்கு!

ஆங்கிலம் ஹிந்தி சரளமாகப் பேசத்தெரியாத பல அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் மாநிலத்தை விட்டு தங்கள் கட்சியின் அகில இந்திய தலமைப்பதவியில் இடம்பெற முடியாதவர்களையும் பார்க்கிறோம்!

ஆங்கிலம் ஹிந்தி தெரிந்த பல மாநில மக்கள் ரயில்வே, ias, ifs, ips எக்ஸாமெல்லாம் ஆங்கிலம் ஹிந்தியில் எழுதி சீக்கிரம் அத்துறையில் அதிகாரிகளாகி வருகிறார்கள்! ஆனால் ஹிந்தி மறுப்பு என்ற பெயரில் வேறு மொழிகளைக் கற்காமல், எல்லா போஸ்ட்லையும் ஹிந்திக்காரன் வந்து நிற்கிறான்னு அலறும் நிலைக்கு மக்களைத்தள்ளுவது இத்தகைய குணமே!  தவறு அவர்கள் மேலில்லை என்று உணரும் காலத்தில் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் போது தெரியும்.

பொதுவாக தெலுகு மக்கள் அமெரிக்காவில் நிறைய பார்ட்டி வைத்து கொண்டாடுவார்கள். உரையாடல்கள் தெலுங்கிலிருக்கும். பிற மாநிலத்தவர்கள் சேரும்போது உரையாடல் ஆங்கிலம் கலந்த ஹிந்தியோடு சலனமின்றி மாறிவிடும். ஹிந்தி தெரியாத தமிழ் மக்கள் மட்டும் அநாதையாக ஒதுங்குற நிலைவருது! 

சிறுவயதில் கற்கக்கூடிய வாய்ப்பை இழந்தால் பின்னர் தேவைப்படும் போது கற்றுக்கொள்ளலாம் என்றால் நினைத்தால் கூட வராது!

ஹிந்தியும் ஆங்கிலமும் சரளமாகப் பேசக்கூடியவர்கள் வாயைப் பார்த்து கிட்டு அவங்க வளர்ச்சியைப் பார்த்து பொறாமைபட்டுகிட்டு நிற்க வேண்டியது தான்!

தாய்மொழியை உயர்வாக நினைப்பவன் பிற மொழிகளையும் கற்றுத்தேர்ந்து அதன் பிறகு அவர்கள் தன் தாய்மொழியில் எழுதும் போது செழுமை பெற்ற சொற்கள் வார்ததைகள் வாக்கியங்களைப் படைக்க முடியும்!

ஆதிசங்கரர் அருளிய சமஸ்கிரத ஸ்தோத்திரங்கள் நீங்காத நீண்ட ஆயுள் பெற்றவை! காரணம் ஒரு மொழியில் அவருக்கு கிடைத்த பற்று, அறிவு, ஞானம்! அவை இன்னும் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து செல்லும்!

அமெரிக்காவில் கல்லூரி க்ரெடிட்காக பள்ளிகளில் ஸ்பானிஷ், ப்ரென்ச், ஜெர்மனி மற்றும் பிற மொழிகள் கட்டாயப்பாடமாக வைக்கப்பட்டுள்ளது. அதில் அதிகம் மாணவர்கள் எந்த மொழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள், எத்தனை வருடம் கற்கிறார்கள், ஏன் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்று அறிந்து கொள்வது உதவியாக இருக்கும். இதைத் தவிர நம் தமிழ், தெலுகு மக்கள் குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக மூன்றாவது மொழியும் திணிப்பதுண்டு.

இன்னொரு மொழி கற்பதைத் தவிர்ப்பதால் நஷ்டம் பிறருக்கல்ல! அது உங்களுக்கே! உங்கள் குடும்பத்திற்கே!


மொழி கற்போம்!

Tuesday, April 2, 2019

நிழல் தேடும் உறவுகள்

திறந்த வெளியில் மூடிய பாதைகள்
மறுதுவாரம் நோக்கி ஓடும்
எறும்புகளானோம்!

வானவெளியில் நீண்டதொரு துவாரம்
உலகில் எங்கும் சங்கமிக்கும்
பறவைகளானோம்!

விண்ணில் பறக்க முயலும் போது
பெய்யும் மழையில் குடை தேடும்
விட்டில் பூச்சிகளானோம்!

பறந்த வானில் ஒளிரும் நட்சத்திரங்களுக்கு
அண்டசராசரமும் குடை விரிக்க
நமக்கோர் மரம் அருகில் தோன்றும்!

மரத்தடி மனிதர்களுக்கு
நிழலில் இளைப்பாற
காலம் தேடி காத்திருப்போம்!

Monday, February 11, 2019

மலர் தூவி வாழ்த்திடவோர் மறுமணம்

இன்று ஓர் திருமணம்
ஊரறிய ஓர் அழகிய மறுமணம்
கொண்டாட வேண்டியதோர் தருணம்!

பெண்ணின் வாழ்க்கை
ஒரு மணத்தோடு ஒடியாமல்
பெற்றோர் மனம் குளிர தொடர்தல்
எல்லோர் வாழ்விற்குமோர் தோரணம்!
மறுமணமன்று! அது மறுமனம்!

கொஞ்சி விளையாடும் பிஞ்சுக்கோர்
வந்ததோர் உறவு தோளில் சுமக்க!
அது பஞ்சு மெத்தை போல் ஏறி ஓட
தஞ்சமடை மண்ணுக்கோர் உறுதி!

ஊரறிய ஒரு பிரபலம் காட்டிய வழி
மண்ணில் பிறரும் தேட வேண்டிய பாதை!
அடுப்படியோடு புகைந்து போகாமல்
மறுவாழ்வில் தொடரச் சொல்லும் சேதி!

மகிழ்வாய்த் திரண்டு வரும் புகைப்படங்கள்
ஒவ்வொன்றும் ஆயிரம் கதைகள் சொல்கின்றன!
கோடி ஆனந்தம் கூடிடும் மனதின்
(மறு)மணத்திர்கோர் இலக்கணம்!

மலர் தூவி வாழ்த்திடவோர் மறுமணம்!

Saturday, February 2, 2019

ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
You are blessed 

இந்த வார்த்தைகளை நான் அஸ்ஸாம்ல இருக்கும் போது அசாமியர்களிடம் கேட்டது அதிகம் . அவங்க அசாமி மொழியில சொன்னாலும் அதன் பொருள் அதே தான்.

ஆனால் எதைப்பார்த்து சொன்னாங்க/சொல்றாங்கன்னு நேர்ல பார்த்தபோது ஆச்சரியமாக இருந்துச்சு!  புல்வெளிகளில் மேய்ஞ்சுகிட்டிருக்கிற rhino, ஆடு மாடுகளைப் பார்த்து சொல்வார்கள்! புல் பசுமையாக இருந்தாலும் காய்ஞ்சு இருந்தாலும் கவலையில்லாம வாழறீங்கன்னு ரொம்ப பொறாமையாகச் சொல்வாங்க! எங்க கஷ்டம் உனக்கில்லைன்னு!

அடுத்து 
we are blessed !
நாங்கள் ஆசீர்வதிக்கப்பபட்டவர்கள்!

அமெரிக்கா வந்த நாளிலிருந்து எல்லா இடங்களிலும் மிக அதிகம் புழங்கக்கூடிய வார்த்தைகள் we are blessed.

எந்த ஒரு அமெரிக்க gatheringலையும் ஒருத்தர் முன் வந்து பிரேயர் சொல்வார்! அதில் முக்கியமாக இருப்பது நமக்கு இந்த ஒருவேளை உணவைக் கொடுத்து உதவிய கடவுளுக்கு நன்றி சொல்லி, எங்களை இவ்வாறு படைத்ததால் we are blessedம்பாங்க!

அதைத் தவிர ஆபீஸ்ல புழங்கும் போது கூட, ஹெல்த்கேர் இன்சூரன்ஸ் கிடைச்சவன் கிடைக்காதவனையும், பென்ஷன் கிடைச்சவன் பென்ஷன் கிடைக்காதவனையும், ரிடையர் ஆகிறவன் இன்னும் ரிடையர் ஆக பல வருஷம் இருப்பவனைப் பார்த்தும், நீண்ட க்யூவில நிற்கும் போது ஒரு சின்ன க்யூவுல நின்னுட்டு வாங்கிட்டுப் போறவங்கெல்லாம், சில சமயம் அடுத்த நாட்டு மக்கள் படும் அல்லல்களைப் பார்த்து அந்த கஷ்டம் நாம் படலை என்கிறபோதும் இவர்கள் அடிக்கடி சொல்கிற வார்த்தை we are blessed!

ஒருத்தருக்கு நல்லது நடக்கும் போது சொல்லக்கூடியது you are blessed நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்ன்னு!


ஆகவே இந்த மாதிரி போஸ்டுகள் எல்லாம் வெட்டியாக எழுதி பொழுதி போக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ள நாம் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!

Wednesday, January 9, 2019

இசையும் வசையும் அவரவர் வாழ்வின் நேர்மை

இசைக்கு நாதம் இனிமை
வசைக்கு எதுவும் இனிமை
உண்மை போலி என பேதமின்றி!

இசைக்கு லய சுத்தம் வேணும்
வசைக்கு எந்த நேர்மையும் பேதமில்லை!

இசையை ரசிப்பவன் வாழ்வினிது
மெய்மறந்து லயத்தில் உறங்கலாம்
இசை பிசிறும் போதும் நேர்மை தேட
வசைகளிடத்தில் எதுவுமில்லை!


இசையும் வசையும் அவரவர் வாழ்வின் நேர்மை!

Tuesday, January 1, 2019

வாழ்க்கை எனும் கலவை சாதம்

2019 வருடத்தின் முதல் நாள்

காலையில நிதானமாக எழுந்திரிச்சு அம்மாக்கு முதல் போன் கால் போட்டேன். இப்ப தான் கோவில்ல உனக்கு அர்ச்சனை பண்ணிட்டு உள்ள வர்றேன். உன்னோட போன் கால் தான் முதல் கால்ன்னாங்க! உடனே அடுத்து டிவியில உன் நண்பன் ஜோசியம் சொல்றாரு, துலா ராசிக்கு சொல்லப் போறாரு போனை வைன்னு வச்சுட்டாங்க! புலவர் என்ன ஜோசியம் சொன்னாரோ!

அடுத்த கால் சேலம் நண்பருக்குப் போட்டேன். இப்ப தான் பத்மநாபசாமி கோவில் தரிசனம் முடிச்சு வெளிய வர்றேன்; உங்க கால் முதல் கால்ன்னார். மகிழ்ச்சியாகத் தொடங்கியது நாள்.

கூப்பிடறவங்கெல்லாம் கோவில்ல இருக்காங்க. மார்கழி மாதம் ஆரம்பிச்சதிலேர்ந்தே பெருமாள் கோவிலுக்குப் போடான்னு அம்மா சொல்லிகிட்டு இருந்ததால, நாமளும் இன்னிக்கு லன்சுக்கு முன்ன போயிடனும்ன்னு கிளம்பி மதியம் 12.30க்குப் போனேன். பையன் அவன் நண்பர்களோடப் போனதால நானும் மனைவியும் தான் போனோம்.

பெருமாள் கோவிலுள்ள கார் போக வழியில்லை அவ்வளவு கூட்டம். ரோட்டோரம் நிறுத்திபுட்டுப் போனா கோவில் உள்ள போக க்யூ ரொம்ப தூரம் நிக்குது. அதுக்குள்ள சிவன் கோவில் போய் வந்துடலாம்ன்னு போனா உள்ள ஒரு நிமிடம் நிக்க வழியில்லை. க்யூல தள்ளி அனுப்பிடறாங்க. 

சிவ பரிவார் தரிசனம் முடிஞ்சு மறுபடியும் பெருமாள் கோவில் வந்தா க்யூ இன்னும் பெரிசாயிடுச்சு. உள்ளப் போய் வர ஒரு மணி நேரமாகும். அதுக்குள்ள பையன் திரும்பி வந்து சாவி எடுத்துப் போகலை வாசல்ல உட்கார்ந்து கிட்டு தொடர்ந்து கூப்பிட்டு கிட்டேயிருக்கான்.  பெருமாள் தரிசனம் கிடைக்காம பிரகாரம்்மட்டும் சுத்திபுட்டு வந்தோம். 

கோவில் புளியோதரையை அள்ளி கிட்டு வந்து சாப்பிட்டு செம தூக்கம். எழுந்திரிச்சா 3 1/2 நேரமா வீட்டுல பவர் இல்லை. சுத்துவட்டு 60 குடும்பங்களுக்கு இரவு எட்டு மணிக்கு கரெண்ட் வந்துச்சு!

வாழ்க்கை எனும் கலவை சாதம் மறுபடியும் துவங்கி விட்டது!


Monday, December 31, 2018

வருடத்தின் கடைசியில

2018

வருடம் முழுவதும் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்தாலும் இந்த வருடத்தின் கடைசி மாதமும் கடைசி நாளும் நிறைவாக முடிவுற்றது. கழிந்த கடினங்களை கழட்டிவிட்டுச் செல்ல மனது இலகுவாகியது.

வீட்டில் இன்றைய வருடக்கடைசி நாள் சமையல் பிரமாதம். மனைவியிடம் மனம் திறந்து பாராட்டினேன். என்ன ஆச்சு இப்படி கலக்குது சமையல்ன்னா புது வருட ஈவ்விற்கான சிறப்புன்னு சிம்பிளா சொல்லிட்டாங்க! எந்த கொண்டாட்டமுமில்லாத ஒரு அமைதியான நாள் இன்று. கடைசி நாளில் செய்ய முடிந்த charityயும் செய்தாகி விட்டது. இரவின் அமைதியில் புலரும் புது வருடத்தை நோக்கி ஆனந்தமாய் எதிர்பார்த்து உறங்கப் போகலாம். 

போன வாரம் முழுவதும் Florida மாநிலத்தில் என்னுடன் படித்த திருச்சி ஜோசப் கல்லூரி நண்பர் ஒருவர் வீட்டில் விடுமுறை நாட்களைக் கழித்தோம். இன்னும் இரண்டு கல்லூரி நண்பர்கள் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டனர். அந்த இருவர் 34 வருடம் கழித்து இப்போது தான் தங்களுக்குள் சந்திக்கின்றனர். ஒரே வீட்டில் 4 குடும்பங்கள் ஒரு வாரம் தங்கி உண்டு களிப்புற்றோம். குழந்தைகளுக்கு அளவிலா மகிழ்ச்சி. ஒரு நாள் யுனிவர்சல், ஒரு நாள் டிஸ்னி கிறிஸ்மஸ் அன்று, ஒரு நாள் பீச். ஒரு நாள் வீட்டிலேயே அடைந்து கிடந்து 4 படங்கள் (3 தமிழ் 1 தெலுங்கு) பார்த்தனர். யாருக்கும் பிரிய மனமில்லாமல் பிரிந்து வந்தோம்.

ஃப்ளோரிடா போறேன்னு ஆபீஸ்ல லீவு போட்ட உடனேயே, மூனு மாதம் பிறகு முடிக்க வேண்டிய வேலையை இப்பவே செய்து கொடுன்னு நிர்பந்திக்க ஆரம்பிச்சாங்க! எப்படியோ தடுமாறி வேலையை முடிக்க வேண்டியதாகப் போயிட்டுது. அடுத்த வருடத்திற்கான ஒரு பெருமைப்படக் கூடிய வொர்க்காக இது இருக்கும் என்கிற நம்பிக்கை. விடுமுறை spoil ஆகாமல், நிறைவாக முடிவுற்றது.

போன வாரம் ராமராஜ்யத்தில் செலவளிந்த நாட்கள் வீட்டில் அனைவருக்கும் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்துள்ளது. பிரிந்து சென்ற நண்பர்கள் குடும்பத்திற்கும் குழந்தைகளுக்கும் அதே ஃபீலிங். போன டிசம்பர் விடுமுறையும் இவர்களுடனே கழிந்தது. இந்த வருடமும்.

எங்களைப் பிரிந்து தவிக்கும் ஜீவன் அவர்கள் வீட்டில் இப்போது துவண்டு படுத்துள்ளது. ஒரு வாரம் இது அத்தனை பேருடனும் ஆடிய ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல. டென்னிஸ் பந்தை கவ்வி வந்து நம் பக்கத்தில் போட்டு தன்னோடு விளையாடுன்னு கெஞ்சும். பாலை கால் பக்கத்தில் போட்டு விட்டு நாம் அதைத் தொடப்போகிற நேரம் வரை வைட் பண்ணும். பக்கத்துல நம்ம கை போகுற நேரத்துல கவ்வி கிட்டு ஓடி நமக்கு பெப்பே பெப்பே காட்டும் அழகு! அப்பா முடியல! அவ்வளவு ஸ்வீட்.

அனைவருக்கும் 2019ம் வருட இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!