Wednesday, January 9, 2019

இசையும் வசையும் அவரவர் வாழ்வின் நேர்மை

இசைக்கு நாதம் இனிமை
வசைக்கு எதுவும் இனிமை
உண்மை போலி என பேதமின்றி!

இசைக்கு லய சுத்தம் வேணும்
வசைக்கு எந்த நேர்மையும் பேதமில்லை!

இசையை ரசிப்பவன் வாழ்வினிது
மெய்மறந்து லயத்தில் உறங்கலாம்
இசை பிசிறும் போதும் நேர்மை தேட
வசைகளிடத்தில் எதுவுமில்லை!


இசையும் வசையும் அவரவர் வாழ்வின் நேர்மை!

Tuesday, January 1, 2019

வாழ்க்கை எனும் கலவை சாதம்

2019 வருடத்தின் முதல் நாள்

காலையில நிதானமாக எழுந்திரிச்சு அம்மாக்கு முதல் போன் கால் போட்டேன். இப்ப தான் கோவில்ல உனக்கு அர்ச்சனை பண்ணிட்டு உள்ள வர்றேன். உன்னோட போன் கால் தான் முதல் கால்ன்னாங்க! உடனே அடுத்து டிவியில உன் நண்பன் ஜோசியம் சொல்றாரு, துலா ராசிக்கு சொல்லப் போறாரு போனை வைன்னு வச்சுட்டாங்க! புலவர் என்ன ஜோசியம் சொன்னாரோ!

அடுத்த கால் சேலம் நண்பருக்குப் போட்டேன். இப்ப தான் பத்மநாபசாமி கோவில் தரிசனம் முடிச்சு வெளிய வர்றேன்; உங்க கால் முதல் கால்ன்னார். மகிழ்ச்சியாகத் தொடங்கியது நாள்.

கூப்பிடறவங்கெல்லாம் கோவில்ல இருக்காங்க. மார்கழி மாதம் ஆரம்பிச்சதிலேர்ந்தே பெருமாள் கோவிலுக்குப் போடான்னு அம்மா சொல்லிகிட்டு இருந்ததால, நாமளும் இன்னிக்கு லன்சுக்கு முன்ன போயிடனும்ன்னு கிளம்பி மதியம் 12.30க்குப் போனேன். பையன் அவன் நண்பர்களோடப் போனதால நானும் மனைவியும் தான் போனோம்.

பெருமாள் கோவிலுள்ள கார் போக வழியில்லை அவ்வளவு கூட்டம். ரோட்டோரம் நிறுத்திபுட்டுப் போனா கோவில் உள்ள போக க்யூ ரொம்ப தூரம் நிக்குது. அதுக்குள்ள சிவன் கோவில் போய் வந்துடலாம்ன்னு போனா உள்ள ஒரு நிமிடம் நிக்க வழியில்லை. க்யூல தள்ளி அனுப்பிடறாங்க. 

சிவ பரிவார் தரிசனம் முடிஞ்சு மறுபடியும் பெருமாள் கோவில் வந்தா க்யூ இன்னும் பெரிசாயிடுச்சு. உள்ளப் போய் வர ஒரு மணி நேரமாகும். அதுக்குள்ள பையன் திரும்பி வந்து சாவி எடுத்துப் போகலை வாசல்ல உட்கார்ந்து கிட்டு தொடர்ந்து கூப்பிட்டு கிட்டேயிருக்கான்.  பெருமாள் தரிசனம் கிடைக்காம பிரகாரம்்மட்டும் சுத்திபுட்டு வந்தோம். 

கோவில் புளியோதரையை அள்ளி கிட்டு வந்து சாப்பிட்டு செம தூக்கம். எழுந்திரிச்சா 3 1/2 நேரமா வீட்டுல பவர் இல்லை. சுத்துவட்டு 60 குடும்பங்களுக்கு இரவு எட்டு மணிக்கு கரெண்ட் வந்துச்சு!

வாழ்க்கை எனும் கலவை சாதம் மறுபடியும் துவங்கி விட்டது!


Monday, December 31, 2018

வருடத்தின் கடைசியில

2018

வருடம் முழுவதும் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்தாலும் இந்த வருடத்தின் கடைசி மாதமும் கடைசி நாளும் நிறைவாக முடிவுற்றது. கழிந்த கடினங்களை கழட்டிவிட்டுச் செல்ல மனது இலகுவாகியது.

வீட்டில் இன்றைய வருடக்கடைசி நாள் சமையல் பிரமாதம். மனைவியிடம் மனம் திறந்து பாராட்டினேன். என்ன ஆச்சு இப்படி கலக்குது சமையல்ன்னா புது வருட ஈவ்விற்கான சிறப்புன்னு சிம்பிளா சொல்லிட்டாங்க! எந்த கொண்டாட்டமுமில்லாத ஒரு அமைதியான நாள் இன்று. கடைசி நாளில் செய்ய முடிந்த charityயும் செய்தாகி விட்டது. இரவின் அமைதியில் புலரும் புது வருடத்தை நோக்கி ஆனந்தமாய் எதிர்பார்த்து உறங்கப் போகலாம். 

போன வாரம் முழுவதும் Florida மாநிலத்தில் என்னுடன் படித்த திருச்சி ஜோசப் கல்லூரி நண்பர் ஒருவர் வீட்டில் விடுமுறை நாட்களைக் கழித்தோம். இன்னும் இரண்டு கல்லூரி நண்பர்கள் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டனர். அந்த இருவர் 34 வருடம் கழித்து இப்போது தான் தங்களுக்குள் சந்திக்கின்றனர். ஒரே வீட்டில் 4 குடும்பங்கள் ஒரு வாரம் தங்கி உண்டு களிப்புற்றோம். குழந்தைகளுக்கு அளவிலா மகிழ்ச்சி. ஒரு நாள் யுனிவர்சல், ஒரு நாள் டிஸ்னி கிறிஸ்மஸ் அன்று, ஒரு நாள் பீச். ஒரு நாள் வீட்டிலேயே அடைந்து கிடந்து 4 படங்கள் (3 தமிழ் 1 தெலுங்கு) பார்த்தனர். யாருக்கும் பிரிய மனமில்லாமல் பிரிந்து வந்தோம்.

ஃப்ளோரிடா போறேன்னு ஆபீஸ்ல லீவு போட்ட உடனேயே, மூனு மாதம் பிறகு முடிக்க வேண்டிய வேலையை இப்பவே செய்து கொடுன்னு நிர்பந்திக்க ஆரம்பிச்சாங்க! எப்படியோ தடுமாறி வேலையை முடிக்க வேண்டியதாகப் போயிட்டுது. அடுத்த வருடத்திற்கான ஒரு பெருமைப்படக் கூடிய வொர்க்காக இது இருக்கும் என்கிற நம்பிக்கை. விடுமுறை spoil ஆகாமல், நிறைவாக முடிவுற்றது.

போன வாரம் ராமராஜ்யத்தில் செலவளிந்த நாட்கள் வீட்டில் அனைவருக்கும் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்துள்ளது. பிரிந்து சென்ற நண்பர்கள் குடும்பத்திற்கும் குழந்தைகளுக்கும் அதே ஃபீலிங். போன டிசம்பர் விடுமுறையும் இவர்களுடனே கழிந்தது. இந்த வருடமும்.

எங்களைப் பிரிந்து தவிக்கும் ஜீவன் அவர்கள் வீட்டில் இப்போது துவண்டு படுத்துள்ளது. ஒரு வாரம் இது அத்தனை பேருடனும் ஆடிய ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல. டென்னிஸ் பந்தை கவ்வி வந்து நம் பக்கத்தில் போட்டு தன்னோடு விளையாடுன்னு கெஞ்சும். பாலை கால் பக்கத்தில் போட்டு விட்டு நாம் அதைத் தொடப்போகிற நேரம் வரை வைட் பண்ணும். பக்கத்துல நம்ம கை போகுற நேரத்துல கவ்வி கிட்டு ஓடி நமக்கு பெப்பே பெப்பே காட்டும் அழகு! அப்பா முடியல! அவ்வளவு ஸ்வீட்.

அனைவருக்கும் 2019ம் வருட இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

Tuesday, December 4, 2018

கோவில் மணி ஓசை

கோவில் மணி ஓசை

இது இந்தியாவிற்கான பிரத்யேக ஒலிபெருக்கின்னு நினைச்சு கிட்டு இருந்த காலம் உண்டு. ஆனால் இது ஒரு யுனிவர்சல் சக்தி ஒலின்னு புரிய ஆரம்பிக்கிறது.

சின்ன வயசுல எப்போதும் மார்கழி மாதம் காலையில 4.30 மணிக்கு எழுப்பி அப்பா பஜனைக்கு கூட்டிட்டுப் போவார். எழுந்திரிக்கலைன்னா விட்டுபுட்டு போயிடுவார்ன்னு அரைகுறை தூக்கத்துல குளிக்காம வெறும் பல்லைத் தேய்ச்சுபுட்டு அவரோட ஓடிய காலம் உண்டு. வசித்த காலனியைச் சுற்றி பஜனை பாடி வரும் போது வரும் ஜால்ரா சவுண்டில் உள்ளூர் மக்கள் எழுந்து வந்து வாசலில் நமஸ்கரித்துப் போவதைப் பார்த்து மார்கழி குளிரோடு ரசித்த காலம் ஒன்று உண்டு.

சில வருடங்களுக்குப் பிறகு டீக்கடையிலும் கோவில்களிலும் விடியற்காலையில் ஒலிபெருக்கி மூலம் பாடல்கள் பரவ ஆரம்பித்தது. உள்ளூர் தர்காவிலிருந்து விடியற்காலையில் எல்லா நாட்களில் வரும் அல்லாகு (உ) அக்பர் ஒலி கோவில் மணி ஓசை கேட்க ஆரம்பித்தது. ஜோசப் கல்லூரியில் படிக்க வந்த போது தான் சர்ச்பெல் நாதமும் குறிப்பிட்ட நேரத்தில் ஓங்கி ஒலிப்பதைக் கேட்க முடிந்தது.

ஆன்மீகத்துல ஈடுபாடு இருந்த காலகட்டத்தில் இவையெல்லாம் ஒரு பொதுப்பிரச்சனையாக கருதியதில்லை. மணி ஓசை ஒலிகளின் நாதம் சிலிர்க்க வைத்தது. சத்தங்களிடையே எழுந்திரிப்பதும் தூங்குவதுமானது பெரிய பிரச்சனையாகத் தோன்றியதில்லை!

ஆன்மீகத்தை விட்டு விலக ஆரம்பித்த பிறகு இது ஒரு பொதுப்பிரச்சனையாகத் தோன்ற ஆரம்பித்தது. சிலசமயங்களில் சத்தத்தில் உறக்கம் வரவில்லை. இவர்கள் noise pollution உருவாக்குகிறார்கள்; சட்ட ஒழுங்க நடவடிக்கை எடுக்கனும் என்று தோன்றிய காலமும் உண்டு.

இப்போது மனது ஆன்மீகத்தை நாடும் போது கோவில் மணியும், சர்ச் பெல்லும், தர்கா துவாவும் பிரச்சனையாகத் தோன்றவில்லை. 

இத்தனை நாட்களாக இது இந்தியாவிற்கான ஒரு பிரத்யேக நிகழ்ச்சின்னு நினைச்சு கிட்டு இருந்தேன். இது ஒரு யுனிவர்சல் பிரச்சனைன்னு இன்னிக்கு புரிந்தது.

இன்று ஆபீஸ்லேர்ந்து வரும் போது எப்போதும் கேட்கிற NPRல ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட் ஒலிபரப்புனாங்க. அதில் பாங்காக்கில் ஒரு பௌத்த மதகோவில் மணியோசை பிரச்சனை பற்றியது.

அந்த பௌத்தமதக் கோவிலில் காலை 3 1/2 மணிக்கு கோவில் மணி அடித்து மத்த புத்த பிக்சுக்களை பிரார்த்தனைக்கு அழைப்பார்களாம். இது Bangkokல் சாதாரண வழக்கமாம்.

இப்போது புதிதாக தாய்லாந்திலிருந்து குடியேறிய ஒரு தம்பதி அந்த பௌத்தவளாகத்திற்கு பக்கத்திலுள்ள ஒரு ப்ளாட்டில் வந்து சில நாட்களில் இந்த மணிச்சத்தம் அதிகமாக இருக்குன்னு கம்ப்ளைன்ட் பண்ண, உள்ளூர் நிர்வாகம் கோவிலுக்கு சத்தத்தைக் குறைக்கச் சொல்லி உத்தரவு போட்டிருக்கு. கோவிலும் சத்தத்தைக் குறைக்க, உள்ளூர் மக்கள் கடுப்பாகி கொதித்து எழுந்து விட்டனராம். சிலர் கோவிலுக்கு முன்பிருந்ததை விட ஒரு பெரிய மணி வாங்கிக் கொடுக்கப் போவதாக அறிவிக்க பிரச்சனை மேலும் பெரிசாயிடுச்சாம். உள்ளூர் மக்களோட பேட்டிகளையும் என்பிஆர்ல ஒலிபரப்பினாங்க.

பிரச்சனை அதிகமாவதை உணர்ந்த அந்த தாய்லாந்து மக்கள் எப்ப ப்ளாட்டை காலி பண்ணிட்டு எங்க போனாங்கன்னு தெரியலையாம்.

NPRன் ஒலிபரப்புகளை அவங்க எப்போதும் ஆர்க்கைவ் பண்ணி அவங்க வெப்சைட்ல வைப்பாங்க. இன்னொரு தடவை கேட்கனும்.


கோவில் மணி ஓசையின் நாதம் ஆன்மீகத்தின் ஈடுபாட்டிற்கும் வெறுப்பிற்குமான இடைவெளியை அளவுகோலில் measure செய்யக்கூடிய மாதிரி உலகளவில் பரந்து விரிந்திருக்குறது.

Sunday, December 2, 2018

ஆவணி அவிட்டம்

ஆவணி அவிட்டம்

இது ஆகஸ்ட் மாதம் வரக்கூடிய ஒரு பண்டிகை. அன்றைய தினம் போட்டிருக்கிற பூணலை மாற்றிக் கொண்டு அடுத்த நாள் காயத்ரி ஜபத்திலிருந்து தொடர்ந்து 80-90 நாட்கள் வேதம் கற்றுக் கொண்டு தினமும் வேத பாராயணம் பண்ணனும்ன்னு இந்த ஆவணி அவிட்டப் பண்டிகைக்கு அர்த்தம்.

இப்ப பூணல் போட்டிருக்கிறவர்களில் 90% பிராமின்ஸ் பூணலை மட்டும் மாத்திப்பாங்க. வேதபாராயணம் பண்ணமாட்டாங்க. அதனால வேதத்தில என்ன எழுதியிருக்குன்னு அவர்களுக்கு பெரும்பாலும் தெரியாது.

வீட்டுக்கு வர்ற பெரியவர்கள் காலில் விழுந்து அபிவாதயே சொல்லச் சொல்லுவாங்க. அதில் சொல்லும் போது ஆபஸ்தம்ப சூத்ரஹ யஜுசாஹ அத்யாதி ன்னு தொடர்ந்து வரும். ஆனால் ஆபஸ்தம்ப சூத்ரத்துல என்ன எழுதியிருக்குன்னு தெரியாது!

வீட்டுல பெரியவங்க திட்டுவாங்க! பூணல் போட்டுகிட்டதற்காக அன்னிக்காவது ஒழுங்கா வேதம் கத்துக்க; இல்லாட்டி கஷ்டப்படுவ; பகவானே வந்து உனக்கு கத்துக் கொடுத்து காப்பாத்துவாங்கம்பாங்க! இப்ப வேதம் கத்துக்காதவங்களுக்கு மத்தவங்க வேதம் கத்துக் கொடுக்கிறாங்க!

முப்பது வருடத்திற்கு பிறகு இப்போது தான் திருப்பி பூணலை எடுத்து போட்டுகிட்டு வேதத்துல என்ன எழுதியிருக்குன்னு படிக்க வரும் போது இணைய ஆசான்களில் ஒருவர் தைத்ரீய உபநிஷத் எடுத்து படின்னார். படிக்க ஆரம்பிச்சேன்.

வேதம் என்பது கல்வி, ஞானம், அறிவு. இந்த உபநிஷத்தில் கற்றுத் தரப்படுவது கணிதம், விஞ்ஞானம், வாழ்வின் ஆதாரத்திற்குத் தேவையான நீர் நிலம் காற்று நெருப்பை போற்றி வழிபட்டு காப்பது மட்டுமின்றி மாணாக்கர்களுக்கு வேண்டிய முக்கிய அறிவுரைகள் சொல்லப்படுகிறது.

வேதம் கல்வி ஞானம் அறிவு என்று சொல்லும் போது அன்றைய காலகட்டத்திலிருந்த வாழ்வியல் முறைகள், எதிர்ப்புகள், எதிரிகளை எதிர் கொள்ளுதல் என்பதுவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருக்கலாம். எவற்றை படித்துப் புரிந்து கொள்ள வேண்டும்; எவற்றை நித்யகர்மங்களாகச் செய்ய வேண்டும், எத்தகைய வழிபாட்டு முறைகள் என்று கூட பல வேத குறிப்புகளில் உண்டு. சிலவற்றை புரட்டிப் பார்த்ததில் இருப்பதாகத் தெரிகிறது.

முழுவதும் படித்து அறிந்தவர்கள் குறைவு. இருக்கிற பிராமணர்களில் ஒரு சதவீத மக்களுக்கு கூடத்தெரியாது. ஏனென்றால் வேதம் படிப்பதில்லை. சமஸ்கிரதம் புரியாத காரணமும் கூட.

வேதத்தில் சிலவற்றை மட்டுமே நித்ய கர்மாக்களாகவும், சிலவற்றை படித்து அறிந்து கொள்ள வேண்டியவை என மட்டுமே என்றிருக்கிறது! அன்றைய சூழ்நிலையில் இருந்தவற்றை எழுதி வைத்ததை வாசிக்க மட்டுமே வேண்டும்.

பொதுவாக வேதம் கற்றுக் கொள்ள விடியற்காலையில் எழுந்து குளித்து விட்டு நித்ய கர்மா சந்தியாவந்தனம் செய்த பிறகு வேத பாராயணம் ஆரம்பிக்கனும்பாங்க! பிராமணர்கள் செய்வதில்லை. ஆனால் இப்ப பிராமணர் அல்லாதவர்கள் தான் விடியற்காலை பல் விலக்குவதற்கு முன்னரே எழுத்தவுடன் இன்னிக்கு வேதத்தில் என்ன இருக்கு, 80-90 வருடம் முன் எந்த கோவில்ல யாரை எந்த பார்ப்பான் விடலை, எந்த பார்ப்பான் உள்ள விட்டான், என ஒரே பார்ப்பன புராணமவே இவர்கள் தினம் விடிகிறது.

பார்ப்பான் வேதம் படிக்கிறானோ இல்லையோ
இவர்கள் படிக்க வைத்து விடுவார்கள். அந்த காலத்து பிராமணன் தன்னோட எதிரிகளைத் தன்னோட வேத புத்தகங்களில் எழுதி வைத்து விட்டுப் போனார்கள். இந்த காலத்து பிராமணன் என்ன எழுதி வச்சுட்டுப் போகப் போறானோ! வருந்தக் கூடிய விஷயங்கள்.


Stop preaching hatred.

Friday, November 23, 2018

இடம் பொருள் ஏவல் உடையில்

காலேஜ் மூன்றாவது வருடம் போகுற போது, வெள்ளிகிழமை திறந்த காலேஜ்க்கு, அடுத்த இரண்டு நாள் தள்ளி திங்கள்கிழமை விடியற்காலை கிளம்பி காலேஜ் போனேன். நேரா காலேஜ் போயிட்டு சாயந்திரம் ஹாஸ்டல் அட்மிஷனுக்கு புதுசா வந்த வார்டனைப் பார்க்கப் போனா அவரில்லை.

அங்கயே தங்கிட்டு காலையில எழுந்த கையோட வேகமா அவரைப் பார்க்க ஓடினேன். ஹாஸ்டல் கிடைக்கலைன்னா படிப்பு காலி.

என்னைப் பார்த்த ஃபாதர் வார்டன் செம காண்டாயிட்டார். எவ்வளவு தைரியமிருந்தா ஒரு jesuit சாமியாரை, காலேஜ் புரொபசரை பெரிய மனிதரை சந்திக்க லுங்கியில வருவ! உனக்கு ஹாஸ்டல் கிடையாது வெளிய போன்னு துரத்திட்டார். ஆடிப் போச்சு எனக்கு. எவ்வளவு கெஞ்சியும் விடலை. வெளிய துரத்திட்டார்.

அன்று இரவு காலேஜ் ஆடிட்டோரியத்துல தங்கிட்டு மறுபடியும் போய் கெஞ்சினேன். இரண்டு நாள் கெஞ்சினதுல கழிச்சு விட்டு 25 ரூபாய் பைன் கட்டச் சொன்னார். மெஸ் பீஸ் போக வீட்டுல மாசம் பத்து ரூபாய் தான் கொடுப்பாங்க. கடன் வாங்கி கட்டினேன். உனக்கு அலாட் ஆன தனி ரூம் கிடையாதுன்னுட்டார்.

இனி பெரிய மனிதர்களைப் பார்க்கப் போகும் போது ஒழுங்க ட்ரஸ் பண்ணுன்னார். இனி என்னை லுங்கியில வந்து பார்ப்பன்னேர்.

அது தவறுன்னு அதுவரை தெரியாம சுற்றிய காலம். அது ஒருத்தரை அவமதிக்கும்ன்னு அன்று புரிந்தது.

பாடம் நம்பர் ஒன்னு இது. 

கல்லூரி முடிந்து இரண்டு மூனு படிப்புகள் முடிந்து டிசிஎஸ்ல வேலை கிடைச்சு பாம்பே போனேன். அப்ப கழுத்துல tie கட்டுவது மேற்கத்திய கலாசாரம்ன்னு கட்ட மாட்டேன். வேலை ஒழுங்கா பண்ணதுல ஒன்னரை வருசத்துல job confirmation பண்ணுவதற்கு பதிலா, எட்டு மாதத்துலேயே early confirmationக்கு recommend ஆகி அப்பர் மேனேஜ்மெண்ட் முன்ன ஆஜர் ஆகச் சொன்னாங்க. கழுத்துல tie கட்டாம ஏர் இந்தியா பில்டிங் போய் பெரிய மனிதர்களை சந்தித்தேன்.

செம காண்டாயிட்டாங்க. ஒரு புரபசனல் கம்பனியில டை கட்டாம வர்ற, எழுந்து நின்னு பேச மாட்டேங்குற, உனக்கு இப்ப கன்பர்மேஷன் கிடையாது போன்னு அனுப்பிட்டாங்க.

எங்களை அவமதிக்க இப்படி வர்றயான்னு திட்டி அனுப்பிட்டாங்க. கிடைக்க வேண்டிய பணம் போச்சு.

இடத்துக்கு தகுந்த மாதிரி நாம உடுத்தும் உடை பிறரது கவனத்தை ஈர்க்கும், அதை வைத்து நம்மை எடை போடுவார்கள்ன்னு முழுமையாக உணர்ந்த தருணம்.

பாடம் நம்பர் இரண்டு இது.

அதிலிருந்து எந்த பெரிய மனிதரை சந்திக்கும் போதும் கோட் சூட் டையோட போவது நான்.

இங்க கடந்த மூன்று வருடமா கவர்னர் மாளிகை டிசம்பர் கிறிஸ்துமஸ் டெகரேஷன் பார்க்க ஆபீஸ் மூலமா அழைப்பு வரும். குடும்பத்தோட போவோம். Formal dress compulsory. போன வருசம் போனப்ப வளர்ந்து விட்ட என் பையன் என்னோட கோட் மாட்டி கிட்டான். இன்னொன்னு பொருத்தமாயில்லை. நான் நல்லா டிரஸ் பண்ணியிருந்தாலும் (tie கட்டி) கோட்டுக்கு பதில் வின்டர் jacket மேல போட்டு கிட்டு போனேன். பையனே திட்டினான். அங்க கவர்னர் மாளிகையில வித்தியாசமாக பார்க்க ஆரம்பிச்சாங்க. சங்கடமாயிருச்சு.

பாடம் நம்பர் மூனு இது.

அலுவலகத்துக்கு நாம லுங்கி கட்டி கிட்டு போனா காற்றாட வசதியாத் தானிருக்கும். வெள்ளிக்கிழமை shortsல ஆபீஸ் வந்து கிட்டு இருந்தாங்க இங்க. அதையும் இப்ப மாத்திட்டாங்க.


தமிழில் அழகாய் சொல்லக் கூடிய 'இடம், பொருள், ஏவல்' வார்த்தைகளுக்கு தகுந்த மாதிரி நமது உடை அமையலைன்னா அதற்கான நஷ்டம் நமக்கு தான்னு அநுபவரீதியாக உணர வேண்டி வரும். உணர்த்துவாங்க!

Thursday, November 22, 2018

Happy thanksgiving to everyone

Happy thanksgiving to everyone.
ஓலை


Dr அய்யநாதன்

இங்க நாளைக்கு Thanksgiving Day. என் வாழ்வில் நான் நன்றி சொல்ல வேண்டிய ஒருத்தன் அய்யநாதன். 

BSc படிக்கும் போது ஹாஸ்டல்ல பழகியிருந்தாலும் பேசியிருந்தாலும் நல்ல நண்பனா மாறியது நாங்க ஒன்னா pgdca ஈவனிங் காலேஜ் பண்ணியபோது.

Pgdca பண்ணியபோது வார்டன் ஃபாதர் சேவியர் அல்போன்ஸ்கிட்ட போய் ஹாஸ்டல்ல இடம் கொடுங்கன்னு நிறைய தடவை கேட்டுப்பார்த்தேன். முடியாதுன்னுட்டார். அவர் சொன்ன ஒரு மெயின் காரணம், நீங்க மாலை நேரம் காலேஜ் போவீங்க, உங்களுக்கு தனியா சாப்பாடு வைக்கனும், காலையில எல்லாம் இங்கயே சுத்துவீங்க, மத்த பசங்க இருக்க மாட்டாங்க, செக்யூரிட்டி issue; முடியாதுன்னு கறாரா சொல்லிட்டார்.

அப்பா ரிடையர் ஆயிட்டார். பணம் அதிகம் செலவு பண்ண வாய்ப்பில்லை. Pgdca முடிச்சுட்டா வேலை சுலபமாக கிடைக்கும்ன்னு எப்படியாவது பண்ணிட வேண்டும்ன்னு இருந்த நேரம்.

மேலச்சிந்தாமணியில காவிரிக்கரை ஓரம் ஒரு ரூம் 100 ரூபாய்க்கு கிடைச்சது. 8 x 10 ரூம்ல 5 பேர். படுக்க இடமில்லை. உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவில் தெருக்கு எதிர்புறம் ஒரு முஸ்லீம் அம்மா நடத்திய லாட்ஜ்ல 125க்கு ரூம் பிடிச்சு வந்தேன். அவங்க கொடுக்குற இட்லி சாப்பிட்டு 4-5 மாசம் ஓட்டிட்டேன். இரண்டாவது செமஸ்டர் தொடக்கத்துல அந்த லாட்ஜ்ல ஒரு ப்ளஸ் டூ படிக்கிற பையன் மருந்து குடிச்சு தற்கொலை பண்ணிகிட்டான். அவன் சாவறதைப் பார்த்த எனக்கு அங்க இருக்க முடியல. மத்த ரூம் ஆளுங்களும் காலி பண்ண, நானும் காலி பண்ணிட்டேன்.

எங்க போறதுன்னு முழிக்கிற போது, ஆபத்பாந்தவனாக அய்யநாதன் காப்பாத்தினான். அவன் ரூம்ல தில்லைநகர்ல அடைக்கலம் கொடுத்தான். அவன் ரூம்ல சாமான் போட்டுபுட்டு, ரூம் வாசல்ல மொட்ட மாடியில தினமும் படுப்போம்.

ரூம் பக்கத்துல ஹோட்டல்ல கீழ இருந்த 14ரூபாய் அளவு சாப்பாடை இரண்டு பேரும் சாப்பிட்டு காலேஜ் போயிட்டு வந்துகிட்டிருந்தோம்.

Cobol program புதுசா கத்து கொடுத்தாங்க காலேஜ்ல. அவன் தான் எல்லா புக்கும் காசு கொடுத்து வாங்குவான். அதுல தான் நானும் படிப்பேன். ஒன்னா கோபால் கத்துகிட்டோம்.

அவனுக்கு நான் கொடுத்த சிரமத்தை மீதி இருந்த 4-5 மாதமும் பல்லை கடிச்சுகிட்டு பொறுத்துகிட்டான். ரூமுக்கு வாடகை 275-290ல நான் ஒரு பைசா நான் அவனுக்கு கொடுத்ததில்லை. ரூம் ஓனர் கேட்டதிற்கு கூட அவனே பதில் சொல்லி நான் இருக்க ஏற்பாடும் பண்ணிட்டான். 

இரண்டாவது செமஸ்டர் முடிஞ்சு அவன் ரூமையும் காலி பண்ணிட்டுப் போயிட்டான். அதற்கப்புறமும் நான் 15-20 நாள் அங்க தங்கியிருந்தேன். அதற்கும் சேர்த்து பணம் கட்டிட்டுப் போயிருக்கான்.

நான் அந்த ரூம்ல விட்டுவிட்டுப் போன ஒரு புக் மூட்டையைக் கூட அவன் ரூம்மேட் நினைவு படுத்தியதால, எனக்கு அப்புறமா அஸ்ஸாமுக்கு லட்டர்போட்டு நினைவு படுத்தினான்.

அய்யநாதன் செய்த உதவியாலத் தான் pgdca முடிக்க முடிந்தது. July 6ந்தேதி pgdca completion certificate கல்லூரியில கொடுத்தாங்க. 7ந்தேதி நானும் அப்பா அம்மாவும் வீட்டைக்காலி பண்ணிட்டு அஸ்ஸாமுக்கு கொச்சின்-கௌஹாத்தி எக்ப்ரஸ்ல சேலத்துல ரயிலேறினோம்.

அங்க போன ஒரு மாசத்துக்குள்ள கம்ப்யூட்டர் டீச்சிங் உத்யோகம் ஒரு அரசு நிதியில நடக்குற இன்ஸ்டிட்யூட்ல கிடைச்சது. 200 பேருக்கும் மேலோருக்கு கம்ப்யூட்டர் ட்ரைனிங் கொடுத்தேன். தினமும் ஒரு மணி நேரம் கிளாஸ் எடுப்பேன். ப்ரோகிராம் எழுதி கொடுத்து மதியம் இரண்டு மூனு மணி நேரம் கம்ப்யூட்டர்ல அவங்களுக்கு ட்ரைனிங்க் கொடுப்பேன். நிறைய veterinary college professors ஸ்டூடண்ட் ஆக வந்து கத்துகிட்டாங்க. அவங்களுக்கு இலவசமாக ப்ராஜக்ட் பண்ணி கொடுத்தேன். Statistical calculationsக்கு ப்ரோக்ராம் எழுதிக் கொடுத்தேன். இப்போதைய காலேஜ் டீன் என் முன்னாள் மாணவர். நல்ல நண்பர்.

இது எல்லாம் சாத்தியமானது அய்யநாதன் செய்த அந்த 4-5 மாத உதவி தான்.

இந்த தேங்க்ஸ்கிவிங் நாளில் உனக்கு நன்றி சொல்லிக்கிறேன்டா மாப்ளை!


நன்றி