Sunday, June 18, 2023

தயிர் தோய்க்கத் தெரியலையே

போன தடவை அம்மிணி ஊர் போயிருந்த போது தயிர் நல்லாத் தோய்ச்சிருந்தேன். அதே டெக்னிக்ல முந்தாநாள் ராத்திரியும் உரை குத்தினேன். தோயவேயில்லை.

நேற்று அம்மிணி கிட்ட என்ன பண்ணலாம்ன்னு கேட்டதுக்கு அவங்க சொன்ன ஐடியாவை ட்ரை பண்ணினேன். சரி வரலை.

கடையில போய் வாங்க சோம்பேறித்தனம். வாங்கலை. நேற்றும் இன்றும் தயிர் சாப்பிட முடியலை.

இன்று மதியம் அவங்க சொன்ன டெக்னிக்கை மறுபடியும் ட்ரை பண்ணினேன். இந்த தடவை ப்ரிட்ஜ்ல வைக்காம ovenல வெறும்ன மூடி வைச்சேன்.

எதுக்கும் தயிர் இருக்கட்டும்ன்னு இப்ப கடையில போய் தயிர் வாங்கி வந்தேன்.

திரும்பி வந்து ovenஐத் திறந்தா தயிர் கெட்டி தட்டி நிக்குது.

தேவைப்படும் போது குதிரை வண்டி கிடைக்காது. அப்புறம் நாலு வண்டி வந்து நிக்கும் கதை தான்.

இப்ப எதுக்கு இவ்வளவு தயிர்ன்னு வந்து இறங்கிறவங்களுக்கு நம்மைத் திட்ட ஒரு சாக்கு கிடைச்சுருச்சு வேற!

நம்மை மாட்டி விடறதுக்கு தயிர்/தஹி கூட முன் வரிசையில நிக்குதுப்பா!

தயிர் ட்ரை பண்ணினேன், அது தஹி ஆயிடுச்சுன்னு சொல்லித் தப்பிக்கனும்.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Arte de hacer cuajada!
ஏப்ரல் 3 2023

கோவம் ஒரு இயலாமை

நமது இயலாமை மற்றும் தோல்விகள் இப்பவெல்லாம் கோபமாகத்தான் வெளிப்படுது. சம்பவம் முடிஞ்ச பிறகு தான் தவறு புரிகிறது, ஆனால் நேரம் கடந்த ஞானோதயம் காரியத்திற்கு உதவாது.

ஆன்மீக வழிபாடு உண்மையான சாந்தத்தைக் கொடுக்க உதவும். அதுபடி காலையில் எல்லாம் சுகம்.

அம்மிணி வருவதற்குள் அம்மிணியின் காரை சுத்தம் பண்ணி வைக்கலாம்ன்னு நேரா கோவிலிருந்து கார்வாஷ் பண்ணப் போனேன். போனவுடனேயே இன்னர்டீடெயிலிங் பண்ணமாட்டோம், உள்ளே வெறும் வேக்யூம் மற்றும் கப்ஹோல்டர் மற்றும் டேஷ்போர்ட் மட்டும் தான் க்ளீன் செய்வோம்ன்னுட்டாங்க. எவ்வளவு கேட்டும் வேலைக்காவலை.

வெளியே மெஷின்வாஷ் பளபளக்க வச்சுட்டாங்க. உள்ளே வேக்யூம் பண்ணது எதுவுமே சரியில்லை. டேஷ்போர்ட் கார் ஸ்டியரிங் கூட க்ளீன் பண்ணலை. மேனேஜரைக் கூப்பிட்டு கேட்டா நாங்க இவ்வளவு தான் செய்வோம், முன்னவே சொன்னோமில்ல, நீ கொடுக்கிற காசுக்கு இவ்வளவு தான்கிறாங்கிறாங்க! 

நான் போனது குறைந்தது 150$வது செலவளிச்சு இன்னர் டீடெயிலிங் பண்ணனும்ன்னு. அவங்க செய்ய மாட்டேன்னுட்டாங்க. இப்ப கூட அவங்க சொன்ன கட்டணத்தைத் தான் கட்டியிருக்கேன். அதுக்கே இந்தப் பேச்சு.

செம கோவம் வந்துருச்சு. நான் 100$ தந்தாலும் நீ அந்த சர்வீஸிலும் இதே மாதிரி சொல்லப்பபோற, நீங்களே காருக்குள்ளப் பாருங்க, ஒன்னு கூட சரியா வேக்யூம் பண்ணலை, இது தான் சர்வீஸா, ஷேம் சார்ன்னு சொல்லிட்டு வந்தேன்.

பத்து பேரை அங்கு வேலைக்கு வச்சிருக்காங்க. எல்லோரும் அரைகுறை வேலை செய்து விட்டு பத்து பேரும் கூடி அரட்டை தான் அடிக்கிறாங்க, ஆனால் சர்வீஸ் இல்லை.

வந்த பிறகு தான் புத்தியில உரைக்குது, இன்னாத்துக்கு இவ்வளவு சண்டை, மறுபடியும் அந்த இடத்துக்குப் போக முடியாமப் போச்சு. டபுள் நஷ்டம். நம்ம இயலாமை நம்ம கோவம் நமக்கு நஷ்டம்.

அதே மாதிரி மாலையில் வெளியே போகும் போதும் ஒரு பெண் தன்னோட சின்னக்குழந்தையை கவனிப்பதைக் கண்டு பொறுக்கலை. எல்லோர் முன்னோடியும் பளிச்சுன்னு சொல்லிபுட்டேன், இது மாதிரி பண்ணினே புடிச்சுட்டுப் போயிடுவாங்கன்னு. 

அப்புறம் தான் உரைச்சது. ச்சே ஒரு தன்மையாக சொல்லியிருக்கனுமேன்னு. 

இயலாமை பொறுமையின்மை நாம் பெறும் பல தோல்விகள் ஆகியவை நமது இயல்பை மாற்றி செயல்பட வைக்குது.

எப்ப கோவத்தை அடக்கி எப்ப நம்ம நஷ்டத்தைக் குறைப்பது.

இறைவனது கருணை கிடைக்கட்டும்!

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡La ira es tu peor enemigo!
மார்ச் 31 2023

சமையல் கற்பதின் களிப்பு

இன்று வாழ்க்கையில் முதல் முறையாக பருப்பு ரசம் பண்ண ட்ரை பண்ணினேன். எல்லாம் செய்துவிட்டு போட்டா அனுப்பலாம்ன்னு நினைக்கறதுக்குள்ள அம்மிணிகிட்டேர்ந்து ஃபோன் வந்துருச்சு!

அடுப்புல பருப்பு வச்ச குக்கர் விசில் சத்தம் கேட்டுடுச்சு. சமைக்கிறேன்னு கண்டுபிடிச்சுட்டாப்புல.

சரி, ரசம் எப்படி பண்றதுன்னு ஒரு தடவை சொல்லிருன்னு கேட்டுகிட்டேன். சொன்னாங்க!

என்னாலேயே நம்ப முடியலை. அம்மிணி/அம்மா பண்ற டேஸ்ட் அப்படியே வந்துருச்சு! சொக்கிப் போயிட்டான் இந்த சொக்கன். காக்கைக்கும் தன் குஞ்சு கதை தான்.

இனி ஒரு பெண்ணை வருத்தி சமைக்க வச்சு சாப்பிடறோம்கிற குற்ற உணர்விலிருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளியே வந்துரலாம்.

வாழ்வினிது.
ओलै सिरिय ।
¡La autococina también sabe bien!
மார்ச் 29 2023

உழைத்து உண்பதில்

அஸ்ஸாமில் தனியாக இருந்த போது சமைக்க வேண்டிய கட்டாயம் இருந்துச்சு. நண்பன் நாசர் உதவியால் பகல் நேரத்தில் அவன் ஹாஸ்டலில் ஐந்து ரூபாய்க்கு அசாமிய சாப்பாடு கிடைத்தாலும் இரவு உணவுக்காக ராஜஸ்தானி மெஸ் தேடி ரொம்ப தூரம் போவேன்.

கொஞ்ச நாளில் உடுப்பி ஹோட்டல் வந்ததால் அங்கு சாப்பாடு 30 ரூபாய்க்கு வாங்கி சாப்பிடுவேன். அஸ்ஸாமிய நண்பன் நாசர் ரொம்பத் திட்டுவான். இப்படி சாப்பிட்டா மாச சம்பளத்துல பாதிக்கு மேலே செலவு பண்ணுவ, இப்படியெல்லாம் இருக்கக்கூடாது, நீயே சமைன்னு கம்பெல் பண்ணுவான்.

அப்ப ரேசன்கார்ட் அஸ்ஸாமியர்களுக்கு மட்டுமே. நமக்கு கிடையாது. மண்ணெண்ணெய் ரேஷன் கடையிலத் தான் கிடைக்கும். அந்த ஆளுக்கு எக்ஸ்ட்ரா கொடுத்து ஐந்து லிட்டர் வாங்கி வந்தா நமக்கு ஒரு மாசம் ஓடும்.

சமைக்கவே தெரியாத நான் அப்ப செய்த இன்ஸ்டண்ட் ரசத்தை நாசர் டேஸ்ட் பார்த்துட்டு, பாரு இது உடுப்பி ரசத்தை விட செம டேஸ்டாக இருக்கு. இனி அநாவசியமாக 30 செலவு பண்ணக்கூடாதும்பான்.

நாசர் பெரிய பணக்காரன். கால்நடை மருத்துவர். ஊர் downtownல ஃபேன்சி பஜார்ல இரண்டு பில்டிங் அவனுக்கு சொந்தம். அதில் வரும் வாடகையே போதும்.

யானைக்கு குதிரை மேல ஆசை. குதிரைக்கு எலி மேல ஆசை. அவன் படிச்சப்ப நான் அவனுக்குப் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் எழுதிக் கொடுத்தேன். அவனுக்கு நான் உட்கார்ந்த சீட்ல உட்கார ஆசை. அசாமை விட்டு நான் கிளம்பிய பிறகு அவனை பதினைந்து இருபது வருடம் கழிச்சு தான் தொடர்பு கொண்டேன். இப்ப சொல்றான், நீ காலி பண்ண அதே சீட்ல அதே கம்ப்யூட்டர் ரூம்ல நானும் போய் உட்கார்ந்தேன்டாங்கிறான். யானைக்கு குதிரை மேல ஆசை.

அங்கிருந்து வந்த பிறகு சமைக்க வாய்ப்பேயில்லை. அம்மா, அம்மிணி தயவில் காலம் ஓடிடுச்சு.

இப்ப அம்மிணி அவங்கம்மாவைப் பார்க்கப் போயிட்டாங்க. வெளியே போய் சாப்பிடலாம். எதிர்வீட்டு ஶ்ரீரங்கம் குடும்பம் அப்பப்ப ரொம்பவே கவனிக்கறாங்க. அண்ணன் வேற, ஏண்டா சமைக்கத் தெரியாம கஷ்டப்படற, இங்க வீக்எண்ட் வந்து ஒரு வாரத்துக்கு கட்டிண்டு போடாங்கிறான்.

ஆனால் மனசுல ஒரு வைராக்கியம் எப்படியாவது சமைக்கக் கத்துக்கனும்ன்னு. எல்லாத்தையும் தவிர்த்து விட்டு இப்ப ட்ரை பண்ணிகிட்டே இருக்கேன்.

அம்மா சொன்னது உரைச்சுகிட்டே இருக்கு. ஒரு பொண்ணு ஆபீஸ்லையும் நாள் பூரா வேலை செய்ஞ்சுட்டு வீட்டுலையும் வந்து உழைக்கறாள், நீ இப்படி உட்கார்ந்து சாப்பிடறயே! உன் அண்ணன்களாவது பரவாயில்லை சமைச்சு சாப்பிட்டுக்கிறாங்க. நீயும் உன் தம்பியும் ரொம்ப மோசம்டா. உங்களை சின்ன வயசுல அடுக்களையில விடாதது என் தப்பு, இப்ப இன்னொரு பெண்ணை இப்படி படுத்துறீங்களேடான்னாங்க! 

மனைவி சொல்லிக்காமிப்பதை விட அம்மா சொல்வது உரைச்சுகிட்டே இருக்கு.

இன்றும் முயற்சி பண்ணேன். அதுவும் போன வாரம் ட்ரை பண்ணியதும். வெறும் காய் மட்டும் தான் செய்தேன்.

எப்படியாவது ரசம், சாம்பார் கூட்டு செய்ய கத்துக்கிடனும். முயற்சிப்போம்.

உழைச்சு திங்கனும் என்று நினைப்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय !
¡Cocinar uno mismo!
மார்ச் 27 2023

அன்பைத் தேடி

அம்மிணி பாட்டுக்க அம்மா, குலதெய்வம்ன்னு கிளம்பிப் போயிட்டாங்க.

வார இறுதியில் சும்மா இருக்க முடியலை. சின்க்ளையும் பாத்திரம் இல்லை. வெட்டியாக இருக்கிறதை விட எடு மாட்டைப்பூட்டு வண்டியைக் கிளப்பு.

பையனைப் பார்க்க கிளம்பி வந்தாச்சு. பையன் அப்பாயிண்ட்மென்ட்டுக்கு வெயிட்டிங். 

பால்ய நண்பரின் மகள் கொலம்பஸ் டப்ளின் வந்துள்ளதைக் கேள்விப்பட்டு வழியில் அவர்களையும் சந்தித்து விட்டு வந்த திருப்தி.

பையனின் தரிசனத்திற்கு வைட்டிங். நாளை டெட்ராய்ட் நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் கூடுதல் மகிழ்ச்சி.

போன வாரம் தெற்கே பயணம். இந்த வாரம் வடக்கு நோக்கி வந்தாச்சு. போக வர கிட்டத்தட்ட 3000 மைல் பயணம்.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Viajar es tedioso, pero necesario!
மார்ச் 24 2023

ஆஸ்டின் டெக்ஸஸ் பயணம்

வாழ்க்கையில ஒரு நாள் எல்லாவிதமான கஷ்டங்கள் பட்டாலும் அடுத்த நாளே நம்ம நாளை இனிமையாக்கினா பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறந்து போயிடுது. பழகியும் போச்சு.

தம்பியுடையார் படைக்கு அஞ்சார். தம்பி பேச்சைக் கேட்கலைன்னா வனவாசம்.

பொண்டாட்டியுடையார் கஷ்டத்துக்கு அஞ்சார். மனைவி பேச்சைக் கேட்கலைன்னா எல்லா கஷ்டமும் தாராள மனசோட அள்ளிக்க நிறையவே கிடைக்கும்.

அத்தகைய பயணம் ஆஸ்டின் பயணம். முன்ன பின்ன போகாத இடம்.

காலையிலிருந்தே எல்லாப் பக்கமும் இடி விழுது. எதையும் தவிர்க்கமுடியலை. இரவும் அதே. அடி வாங்குவது பழகிப்போச்சு.

வேலை முடிஞ்சு கிளம்பியது இரவில். கனெக்டிங் ப்ளைட் டிலே. கார் ரென்டல் மூடிட்டான். ஹோட்டலில் ரூம் போச்சு பணம் போச்சு. இரவு தூக்கம் போச்சு. கசினைக் கூப்பிட்டா அவர்களும் தூங்கிட்டாங்க. ஏர்போர்ட்லேயே இரவு வாழ்க்கை. 

காலையில் கார் கிடைச்சு funeral முடிஞ்சு மதியம் வேற ஓட்டல். இரவு தூங்கும் போது நடுராத்திரியில் யாரோ ஹோட்டல் ரூம் கதவை ஓங்கி அடிச்சு அடிச்சு தட்ட, எழுந்து பார்த்தா யாருமில்லை. தூக்கம் பாதி போச்சு.

மனசு சந்தோஷமாக இருந்த நேரங்கள் துக்க நேரத்திலும் உறவினர்களின் சந்திப்பு, அளவலாவல்.

இவ்வளவு தூரம் இனி எங்க வரப்போறோம், போவது மத்யமானாலும் பரவாயில்லைன்னு ஆஸ்டின் கோவில் போனேன். பிரமாதம். மனம் சாந்தியுற்றது.

இன்று மார்ச் 18, கார் ரிடர்ன் பண்ணியப்ப அவங்களே கட்டணத்தை 260லிருந்து 180 ஆக்கிட்டாங்க. மொத்தம் ட்ரைவ் பண்ணதே 50 மைல் கூட இல்லை.

டெல்டா ப்ளைட் கேட்டில் வரலாறு காணாத வரவேற்பு அனைவருக்கும் இன்று. கேட் வாசலில் புதுசா காபி போட்டு ஃப்ரீயாக அனைவருக்கும் கொடுக்கிறாங்க. எல்லோருக்கும் அங்கயே பாப்கார்ன் freshஆக பண்ணிக் கொடுத்தனர். ப்ளைட்டில நான் கேட்ட சீட் கட்டணமில்லாமல் கேட்ட உடன் கொடுத்தனர். ஃப்ளைட் 20 நிமிஷம் முன்னாடியே வந்துடுச்சு.

போகும் போது பட்ட அத்தனை கஷ்டங்களையும் வரும் போது மறக்க வச்சு மனசை குளிர வச்சுட்டாங்க. 

போனதால் உறவினர்களின் பந்தமும் சிறப்படைந்தது. அவர்களும் அதை வெளிப்படையாகவே தெரிவித்தனர். நாள் பூரா என்னை எல்லோரும் அண்ணா அண்ணான்னு கூப்பிட்டதை கேட்டது இப்பவும் காதில் எதிரொலிக்கிறது.

அம்மிணி சொன்ன டைமுக்குள் வீடு திரும்பியதால் இங்கிட்டும் எந்தப் பிரச்சனையுமில்லை. அம்மிணி ரெஸ்டாரண்ட்க்கு கூட்டிப் போய் டின்னர் வாங்கிக் கொடுத்தாங்க.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡La vida está llena de subs y bajadas!
மார்ச் 18 2023

அன்பானவர்க்கு ஒரு அஞ்சலி

வாழ்க்கையில் எந்த உயரத்துக்குப் போனாலும் எனது சில உறவினர்களில் சிலர் என் அப்பா அம்மாக்கு கொடுக்கும் மரியாதையைப் பார்க்கும் போது மெய் சிலிர்க்கும். அவர்களுக்குள் எந்த அந்தஸ்து ஈகோ எதுவும் அவர்கள் நட்பு மற்றும் உறவுக்கு முன் நிற்காது.

எனது அம்மாவோ பள்ளிக்கூடமே போக வாய்ப்பு இழந்தவர்கள். அப்பா ஏழாவது படிக்கும் போதே எல்லா நிலங்களையும் இழந்து ஊரை விட்டு வந்தவர்.

அப்பாவோட கசின் விங் கமாண்டராக இருந்து ரிடையரானவர். இப்போ அவருக்கு 83 வயது. அவர் அவரது மனைவியெல்லாம் மெத்தப்படித்தவர்கள், ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் எல்லாம் சரளமாக எழுதப் பேசக்கூடியவர்கள். 

மூன்று வருடம் முன் அவர்கள் அம்மாவைப் பார்க்க வந்த போது கூட அம்மா காலில் நெடுஞ்சான்கிடையாக விழுந்து நமஸ்காரம் பண்ணினார்கள்.

நான் அப்பவே அவரைத் தடுத்தேன். சித்தப்பா உங்களுக்கே இப்ப 80 வயசு, இந்த வயசுல கீழ விழுந்து என்னத்துக்கு நமஸ்காரம் பண்றீங்க, அடிபட்டதுன்னா என்ன பண்றதுன்னேன்.

அதுக்கு அவர்கள் இரண்டு பேரும் சொன்ன பதில் ஆடிப்போச்சு, வயசு என்னடா, அவங்க 3 வயசு பெரியவங்க, மன்னி ஸ்தானம் பெருசு, அவங்க ஆசீர்வாதம் கிடைச்சா எனக்குத்தான்டா புண்ணியம்ன்னார்.

அசந்து போய் பார்த்தேன். அம்மா கூட அவங்க போன பிறகு சொன்னாங்க, எவ்வளவு பெரிய பதவி வகிச்சவர், அவர் கமாண்டிங்ல எவ்வளவு பேர் இருந்திருந்துக்காங்க, எவ்வளவு பணம் பதவி படிப்பு எல்லாம் அவருக்கு. என்னையும் அப்பாவையும் பார்க்க வாரம் இரண்டு தடவையாது வருவாங்க, ஒவ்வொரு தடவை வரும் போதும் யாரிருந்தாலும் பார்க்காம நமஸ்காரம் பண்ணாமப்  போக மாட்டாங்க! அப்படி நாம என்ன பண்ணிட்டோம் நாலு வார்த்தை அவங்களோட அன்பாப் பேசறதை விட என்றார்கள்.

அந்த சித்தி இங்கு மறைந்து விட்டார். சித்தப்பாவிற்கும் கொஞ்சம் மறதி ப்ராபளம் இப்ப புதுசா. சித்தியின் funeralக்கு நாளை இரவு ஆஸ்டின் பயணிக்கிறேன். முன் பின் போகாத இடம். 

இங்கிருந்து கிளம்புவதற்குள் இங்கு ஆயிரத்தெட்டு சமாளிக்க வேண்டியிருக்கு. இடி எல்லாப் பக்கத்திலுமிருந்து விழுது. ஆதலால் நாளை இரவு தான் பயணம்.

மரியாதைக்கு மொத்த உருவமாக வாழ்ந்தவர்கள். அவர்களில் ஒருவருக்கு அஞ்சலி செலுத்தவதே சிறந்தது என கிளம்பி விட்டேன். நினைத்ததை விட அதிக செலவு. அதை யோசிக்கக் கூடாத தருணம்.

நம் வாழ்விலிருந்து ஒருத்தர் மறையும் போது தான் அவர்கள் நம்முடன் பழகிய விதம், பேசிய விதம், அன்பு, உதவி மற்றும் மரியாதைகளெல்லாம் நிழல்களாக கூடவே வருகிறது.

மிகவும் அன்பானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப் பயணிப்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Una vida para apreciar!
மார்ச் 15 2023