Monday, May 31, 2021

ஒரு அஞ்சலி பழைய நினைவுகளுடன்

1984-85 முதுகலை முதல் வருடம் சென்னையில் படிச்சுகிட்டு இருந்த நேரம். 20 வயது எனக்கு. ஆங்கிலம் ஓரளவே.

ஒரு சனிக்கிழமையோ ஞாயிறு அன்றோ தெரியலை, காலை பத்து மணிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக சென்னை எல்ஐசி பில்டிங்கில் இலங்கைத் தமிழர் பிரச்சனை சம்பந்தமாக, ‘மாநில சுயாட்சியா? தனி ஈழமா?’ங்கிற தலைப்புல பேசப்போறாங்கன்னு முன்னாடியே போயிட்டேன்.

முன்னாடியே போய் நின்றாலும், மேடையில் உட்கார்ந்திருக்கிற ஆளுமைகளைப் பார்த்து பயந்து போய் முன் வரிசையில் உட்காராமல், ஆறாவது ஏழாவது வரிசைக்கு வந்து, மேடை நோக்கிப் போகும் வழி பாதை ஒட்டி இருக்கிற சேர்ல உட்கார்ந்துகிட்டேன். கூட்டத்துல வந்தது மொத்தம் 100க்கும் மிக குறைவு.

அன்று தலைப்பு பற்றி பேச வந்தவர்கள், டியூஎல்எஃப் தலைவர்கள் சிவசிதம்பரம் மற்றும் அமிர்தலிங்கம் ஐயா அவர்கள்.

கூட்டத்திற்கு தலைமை மைதிலி சிவராமன், அவர் அருகில் என் ராம் அவர்கள். 

ஆங்கிலத்தில் ஆரம்பித்த கூட்டம் படிப்படியாக தமிழிற்கும் மாறியது. நான்கு சிறந்த ஆளுமைகளின் பேச்சைக் கேட்பதே சிறுவனான எனக்குப் பெருமையாக இருந்தது.

பாதி கூட்டத்திற்கு நடுவிலேயே, சிவ சிதம்பரம் ஐயா பேசிகிட்டு இருக்கும் போதே, என் ராம் அவர்கள் எழுந்து கடைசி வரிசையில் திடீரென வந்து சேர்ந்து கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி வீ ஆர் கிருஷ்ணய்யரை மேடைக்கு அழைத்தார். அவர் சொல்லி தான் அது வி ஆர் கிருஷ்ணய்யர் என்று தெரிந்தது. அதுவரை அவரை யாரோ கடைசி வரிசையில் லேட்டாக வந்து உட்கார்ந்தவர்ன்னு நினைச்சேன். கொச்சியிலிருந்து விமானத்தில் வரும் போது கொடுத்த ஹிந்து பேப்பரில் இன்றைய நிகிழ்ச்சியில் இந்த நிகழ்ச்சியைப் பார்த்து நேராக ஏர்போர்ட்டிலிருந்து வருவதால் தாமதமாகியதாலும், தான் வெறும் பார்வையாளறாக பேச்சைக் கேட்கவே வந்தேன்னு சொன்னவரை விடாமல் மேடையில் உட்கார வைத்துவிட்டார் என் ராம்.

எனக்கு பக்கத்தில் எம்ஐடிஎஸ்ஸில் பிஎச்டி பண்ணிக்கொண்டிருந்த கண்பார்வையற்ற மாணவர் திலீப் உட்கார்ந்திருந்தார். பிற்காலத்தில் அவர் ஐஐடி புரபசர், இப்போது மறைந்து விட்டார். கூட்டம் முடிந்து வெளியே வந்த போது அவரோடு ஒரு புது அநுபவம். அது இன்னொரு நாளில்.

மேடையில் உட்கார்ந்திருந்த மைதிலி சிவராமனின் பேச்சு கம்பீரமாக இருந்தது மட்டுமல்ல, தலைப்பு பற்றி பேசுவதன் முக்கியத்தையும் அது பற்றி பேசும் இலங்கைத் தலைவர்களையும் introduce பண்ணி மிக அழகாகப் பேசினார். இந்த கூட்டம் துவங்கும் முன் மைதிலி அவர்கள் என் ராம் மற்றும் வெங்கடேஷ் ஆத்ரேயா போன்றவர்களுடன் ஒரு அயல்நாட்டு கல்லூரி நண்பர்கள் கலந்துரையாடுவது போன்று ஒரு உடன் 
பிறந்தவர்களோடு கொண்டாடும் நட்பு போல் பழகியது பிரமிப்பாக இருந்தது.

மேடையிலிருந்த ஆளுமைகளில் என் ராம் அவர்கள் தவிர மற்றவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்து விட்டனர்.

சென்னை மற்றும் திருச்சியில் கல்லூரிகளில் படிக்கும் போது மைதிலி சிவராமன் அவர்களின் பேச்சை ஒரு பத்து தடவைக்கும் மேல் என்னோட மாணவர் பருவத்தில் கேட்டிருப்பேன். பக்கத்திலும் நின்று பார்த்திருக்கேன். ஒரு தடவை கூட அவரோடு பேசியதில்லை. அந்த கம்பீரத் தோற்றத்தைக்கண்டு ஒருவித மரியாதை கலந்த தயக்கம். தள்ளியே நின்றிருக்கிறேன். மாணவர் பருவத்திற்குப் பிறகு அவரைச் சந்தித்ததில்லை.

இன்று அவர் மறைந்து விட்டதாகக் கேள்விப்பட்டேன். ஆழ்ந்த அஞ்சலிகள்.

ஒரு ஆளுமையின் நீண்டதொரு உறக்கம் அது! 

பெரிய ஆளுமைகளுக்கு அஞ்சலி சொல்வதில்
வாழ்வினிது
ओलै सिरिय !

No comments: