வைகாசி விசாகம்.
என்னப்பன் முருகனுக்கு அரோகரா!
அம்மாக்கு இந்த நாள் ஒரு மறக்க முடியாத நாள். கோவில்ல போய் என் பெயர்ல அர்ச்சனை பண்ணாம இருந்திருந்தா அது ஒன்னு இரண்டுக்குள்ளத் தானிருக்கும்.
அம்மா விடைபெறும் சமயத்திலும், கடைசியாக பேச்சை நிறுத்திக் கொள்வதற்கு முன் கூட, பெங்களூரில் அம்மா காலடியில் உட்கார்ந்து நான் சாப்பிட்டுகிட்டு இருந்த போது கூட, அம்மா பேசிய அதே சின்ன வயசுலேர்ந்து கேட்ட அதே வசனம்: நீ பொறந்த பிறகு தான்ட்டா குடும்பத்துல கஷ்டம்ன்னு ஒன்னு விலக ஆரம்பிச்சதேடான்னாங்க!
அம்மா கொண்டாடுற அந்த ஒரு கோவில் அர்ச்சனையைத் தவிர இதுவரை என் பிறந்தநாளைக் கொண்டாடியதில்லை. யதார்த்த வாழ்வில் இன்னொரு நாள் அவ்வளவே.
அம்மா தன்னோட பால்யத்திலேர்ந்தே வறுமையை அதிகம் பார்த்தவங்க, இத்தனைக்கும் ஒரு பெரிய மூதாதையர் வம்சத்துல வந்தவங்க.
என்னோட மத்த பிரதர்ஸ் அவர்களுக்கு செய்த அளவுக்கு கூட நான் அம்மா அப்பாக்கு எதுவும் அதிகம் பண்ணியதாக நினைவுயில்லை. ஆனால் அப்பா ரிடையர் ஆன 1986லிருந்து 2020 வரை அவங்க பண்ண எல்லா நல்லது கெட்டதுகளுக்கும் உடனிருந்திருக்கிறேன் கடைசி வரை.
அம்மா அப்பா எனக்கு நாமகரணம் சூட்ட உட்கார்ந்த நேரத்துல சித்தி சாமி ஆடி ஸ்வாமிமலையான் பேரை வைக்க வச்சுட்டாங்க. ஒன்னும் புரியாம பயந்து போய் அதே பெயரை வைத்து விட்டு, தாங்கள் வீட்டில் கூப்பிடுவதற்கு மட்டும் ஒரு பெயரை அந்த கணமே செலக்ட் பண்ணி கூப்பிட ஆரம்பிச்சாங்க.
இன்று அந்த புனித நாளில், அம்மா இல்லாத குறையை மற்றவர்கள் போக்கி வருகின்றனர். இன்று புதிதாக முதல் தடவையாக, 84 வயது ஆகியுள்ள அத்தையிடமிருந்து வாழ்த்து. 91 வயது அத்திம்பேரை தெளிவாக வாழ்த்து சொல்ல வைச்சாங்க. இவர் ஐஎன்டியுசி தொழிற்சங்கத் தலைவர் சேலம் கல்யாணசுந்திரத்தின் உடன்பிறப்பு. நல்லதைத் தவிர ஒரு வார்த்தை வேற எதுவும் இவரிடமிருந்து வராது. அம்மா போன சில நாட்களில் இவர் சொன்னது: ‘இத்தனை வருடம் அம்மா அப்பாக்கு செய்திருக்கீங்க. இனி உன் மனைவி மற்றும் குழுந்தைகளை நன்கு கவனிங்க. கடமை முடிஞ்சது. அடுத்து அது தான் உங்க கடமை’ன்னார்.
உங்கம்மா சொல்லிகிட்டே இருப்பாங்கடா, அதை இன்னிக்கு நாங்க செய்யறோம்டா, இது கிடைக்காதுன்னாங்க அத்தை. எங்களைச் செய்யச் சொல்லிருக்குன்னாங்க. உனக்கு கிடைக்காது இதுன்னு இரண்டு மூனு தடவை சொல்லிட்டாங்க!
அதே மாதிரி இன்னொரு 80 வயது மேல் நிறைந்த உறவினர் வாழ்த்தை ரிக்கார்ட் பண்ணி அனுப்பிட்டாங்க!
இங்கு இணையத்திலும் உங்கள் வாழ்த்தைப் பெற்றதில்
வாழ்வினிது
நன்றியுடன் 🙏
ओलै सिरिय !
No comments:
Post a Comment