Monday, December 31, 2018

வருடத்தின் கடைசியில

2018

வருடம் முழுவதும் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்தாலும் இந்த வருடத்தின் கடைசி மாதமும் கடைசி நாளும் நிறைவாக முடிவுற்றது. கழிந்த கடினங்களை கழட்டிவிட்டுச் செல்ல மனது இலகுவாகியது.

வீட்டில் இன்றைய வருடக்கடைசி நாள் சமையல் பிரமாதம். மனைவியிடம் மனம் திறந்து பாராட்டினேன். என்ன ஆச்சு இப்படி கலக்குது சமையல்ன்னா புது வருட ஈவ்விற்கான சிறப்புன்னு சிம்பிளா சொல்லிட்டாங்க! எந்த கொண்டாட்டமுமில்லாத ஒரு அமைதியான நாள் இன்று. கடைசி நாளில் செய்ய முடிந்த charityயும் செய்தாகி விட்டது. இரவின் அமைதியில் புலரும் புது வருடத்தை நோக்கி ஆனந்தமாய் எதிர்பார்த்து உறங்கப் போகலாம். 

போன வாரம் முழுவதும் Florida மாநிலத்தில் என்னுடன் படித்த திருச்சி ஜோசப் கல்லூரி நண்பர் ஒருவர் வீட்டில் விடுமுறை நாட்களைக் கழித்தோம். இன்னும் இரண்டு கல்லூரி நண்பர்கள் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டனர். அந்த இருவர் 34 வருடம் கழித்து இப்போது தான் தங்களுக்குள் சந்திக்கின்றனர். ஒரே வீட்டில் 4 குடும்பங்கள் ஒரு வாரம் தங்கி உண்டு களிப்புற்றோம். குழந்தைகளுக்கு அளவிலா மகிழ்ச்சி. ஒரு நாள் யுனிவர்சல், ஒரு நாள் டிஸ்னி கிறிஸ்மஸ் அன்று, ஒரு நாள் பீச். ஒரு நாள் வீட்டிலேயே அடைந்து கிடந்து 4 படங்கள் (3 தமிழ் 1 தெலுங்கு) பார்த்தனர். யாருக்கும் பிரிய மனமில்லாமல் பிரிந்து வந்தோம்.

ஃப்ளோரிடா போறேன்னு ஆபீஸ்ல லீவு போட்ட உடனேயே, மூனு மாதம் பிறகு முடிக்க வேண்டிய வேலையை இப்பவே செய்து கொடுன்னு நிர்பந்திக்க ஆரம்பிச்சாங்க! எப்படியோ தடுமாறி வேலையை முடிக்க வேண்டியதாகப் போயிட்டுது. அடுத்த வருடத்திற்கான ஒரு பெருமைப்படக் கூடிய வொர்க்காக இது இருக்கும் என்கிற நம்பிக்கை. விடுமுறை spoil ஆகாமல், நிறைவாக முடிவுற்றது.

போன வாரம் ராமராஜ்யத்தில் செலவளிந்த நாட்கள் வீட்டில் அனைவருக்கும் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்துள்ளது. பிரிந்து சென்ற நண்பர்கள் குடும்பத்திற்கும் குழந்தைகளுக்கும் அதே ஃபீலிங். போன டிசம்பர் விடுமுறையும் இவர்களுடனே கழிந்தது. இந்த வருடமும்.

எங்களைப் பிரிந்து தவிக்கும் ஜீவன் அவர்கள் வீட்டில் இப்போது துவண்டு படுத்துள்ளது. ஒரு வாரம் இது அத்தனை பேருடனும் ஆடிய ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல. டென்னிஸ் பந்தை கவ்வி வந்து நம் பக்கத்தில் போட்டு தன்னோடு விளையாடுன்னு கெஞ்சும். பாலை கால் பக்கத்தில் போட்டு விட்டு நாம் அதைத் தொடப்போகிற நேரம் வரை வைட் பண்ணும். பக்கத்துல நம்ம கை போகுற நேரத்துல கவ்வி கிட்டு ஓடி நமக்கு பெப்பே பெப்பே காட்டும் அழகு! அப்பா முடியல! அவ்வளவு ஸ்வீட்.

அனைவருக்கும் 2019ம் வருட இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

Tuesday, December 4, 2018

கோவில் மணி ஓசை

கோவில் மணி ஓசை

இது இந்தியாவிற்கான பிரத்யேக ஒலிபெருக்கின்னு நினைச்சு கிட்டு இருந்த காலம் உண்டு. ஆனால் இது ஒரு யுனிவர்சல் சக்தி ஒலின்னு புரிய ஆரம்பிக்கிறது.

சின்ன வயசுல எப்போதும் மார்கழி மாதம் காலையில 4.30 மணிக்கு எழுப்பி அப்பா பஜனைக்கு கூட்டிட்டுப் போவார். எழுந்திரிக்கலைன்னா விட்டுபுட்டு போயிடுவார்ன்னு அரைகுறை தூக்கத்துல குளிக்காம வெறும் பல்லைத் தேய்ச்சுபுட்டு அவரோட ஓடிய காலம் உண்டு. வசித்த காலனியைச் சுற்றி பஜனை பாடி வரும் போது வரும் ஜால்ரா சவுண்டில் உள்ளூர் மக்கள் எழுந்து வந்து வாசலில் நமஸ்கரித்துப் போவதைப் பார்த்து மார்கழி குளிரோடு ரசித்த காலம் ஒன்று உண்டு.

சில வருடங்களுக்குப் பிறகு டீக்கடையிலும் கோவில்களிலும் விடியற்காலையில் ஒலிபெருக்கி மூலம் பாடல்கள் பரவ ஆரம்பித்தது. உள்ளூர் தர்காவிலிருந்து விடியற்காலையில் எல்லா நாட்களில் வரும் அல்லாகு (உ) அக்பர் ஒலி கோவில் மணி ஓசை கேட்க ஆரம்பித்தது. ஜோசப் கல்லூரியில் படிக்க வந்த போது தான் சர்ச்பெல் நாதமும் குறிப்பிட்ட நேரத்தில் ஓங்கி ஒலிப்பதைக் கேட்க முடிந்தது.

ஆன்மீகத்துல ஈடுபாடு இருந்த காலகட்டத்தில் இவையெல்லாம் ஒரு பொதுப்பிரச்சனையாக கருதியதில்லை. மணி ஓசை ஒலிகளின் நாதம் சிலிர்க்க வைத்தது. சத்தங்களிடையே எழுந்திரிப்பதும் தூங்குவதுமானது பெரிய பிரச்சனையாகத் தோன்றியதில்லை!

ஆன்மீகத்தை விட்டு விலக ஆரம்பித்த பிறகு இது ஒரு பொதுப்பிரச்சனையாகத் தோன்ற ஆரம்பித்தது. சிலசமயங்களில் சத்தத்தில் உறக்கம் வரவில்லை. இவர்கள் noise pollution உருவாக்குகிறார்கள்; சட்ட ஒழுங்க நடவடிக்கை எடுக்கனும் என்று தோன்றிய காலமும் உண்டு.

இப்போது மனது ஆன்மீகத்தை நாடும் போது கோவில் மணியும், சர்ச் பெல்லும், தர்கா துவாவும் பிரச்சனையாகத் தோன்றவில்லை. 

இத்தனை நாட்களாக இது இந்தியாவிற்கான ஒரு பிரத்யேக நிகழ்ச்சின்னு நினைச்சு கிட்டு இருந்தேன். இது ஒரு யுனிவர்சல் பிரச்சனைன்னு இன்னிக்கு புரிந்தது.

இன்று ஆபீஸ்லேர்ந்து வரும் போது எப்போதும் கேட்கிற NPRல ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட் ஒலிபரப்புனாங்க. அதில் பாங்காக்கில் ஒரு பௌத்த மதகோவில் மணியோசை பிரச்சனை பற்றியது.

அந்த பௌத்தமதக் கோவிலில் காலை 3 1/2 மணிக்கு கோவில் மணி அடித்து மத்த புத்த பிக்சுக்களை பிரார்த்தனைக்கு அழைப்பார்களாம். இது Bangkokல் சாதாரண வழக்கமாம்.

இப்போது புதிதாக தாய்லாந்திலிருந்து குடியேறிய ஒரு தம்பதி அந்த பௌத்தவளாகத்திற்கு பக்கத்திலுள்ள ஒரு ப்ளாட்டில் வந்து சில நாட்களில் இந்த மணிச்சத்தம் அதிகமாக இருக்குன்னு கம்ப்ளைன்ட் பண்ண, உள்ளூர் நிர்வாகம் கோவிலுக்கு சத்தத்தைக் குறைக்கச் சொல்லி உத்தரவு போட்டிருக்கு. கோவிலும் சத்தத்தைக் குறைக்க, உள்ளூர் மக்கள் கடுப்பாகி கொதித்து எழுந்து விட்டனராம். சிலர் கோவிலுக்கு முன்பிருந்ததை விட ஒரு பெரிய மணி வாங்கிக் கொடுக்கப் போவதாக அறிவிக்க பிரச்சனை மேலும் பெரிசாயிடுச்சாம். உள்ளூர் மக்களோட பேட்டிகளையும் என்பிஆர்ல ஒலிபரப்பினாங்க.

பிரச்சனை அதிகமாவதை உணர்ந்த அந்த தாய்லாந்து மக்கள் எப்ப ப்ளாட்டை காலி பண்ணிட்டு எங்க போனாங்கன்னு தெரியலையாம்.

NPRன் ஒலிபரப்புகளை அவங்க எப்போதும் ஆர்க்கைவ் பண்ணி அவங்க வெப்சைட்ல வைப்பாங்க. இன்னொரு தடவை கேட்கனும்.


கோவில் மணி ஓசையின் நாதம் ஆன்மீகத்தின் ஈடுபாட்டிற்கும் வெறுப்பிற்குமான இடைவெளியை அளவுகோலில் measure செய்யக்கூடிய மாதிரி உலகளவில் பரந்து விரிந்திருக்குறது.

Sunday, December 2, 2018

ஆவணி அவிட்டம்

ஆவணி அவிட்டம்

இது ஆகஸ்ட் மாதம் வரக்கூடிய ஒரு பண்டிகை. அன்றைய தினம் போட்டிருக்கிற பூணலை மாற்றிக் கொண்டு அடுத்த நாள் காயத்ரி ஜபத்திலிருந்து தொடர்ந்து 80-90 நாட்கள் வேதம் கற்றுக் கொண்டு தினமும் வேத பாராயணம் பண்ணனும்ன்னு இந்த ஆவணி அவிட்டப் பண்டிகைக்கு அர்த்தம்.

இப்ப பூணல் போட்டிருக்கிறவர்களில் 90% பிராமின்ஸ் பூணலை மட்டும் மாத்திப்பாங்க. வேதபாராயணம் பண்ணமாட்டாங்க. அதனால வேதத்தில என்ன எழுதியிருக்குன்னு அவர்களுக்கு பெரும்பாலும் தெரியாது.

வீட்டுக்கு வர்ற பெரியவர்கள் காலில் விழுந்து அபிவாதயே சொல்லச் சொல்லுவாங்க. அதில் சொல்லும் போது ஆபஸ்தம்ப சூத்ரஹ யஜுசாஹ அத்யாதி ன்னு தொடர்ந்து வரும். ஆனால் ஆபஸ்தம்ப சூத்ரத்துல என்ன எழுதியிருக்குன்னு தெரியாது!

வீட்டுல பெரியவங்க திட்டுவாங்க! பூணல் போட்டுகிட்டதற்காக அன்னிக்காவது ஒழுங்கா வேதம் கத்துக்க; இல்லாட்டி கஷ்டப்படுவ; பகவானே வந்து உனக்கு கத்துக் கொடுத்து காப்பாத்துவாங்கம்பாங்க! இப்ப வேதம் கத்துக்காதவங்களுக்கு மத்தவங்க வேதம் கத்துக் கொடுக்கிறாங்க!

முப்பது வருடத்திற்கு பிறகு இப்போது தான் திருப்பி பூணலை எடுத்து போட்டுகிட்டு வேதத்துல என்ன எழுதியிருக்குன்னு படிக்க வரும் போது இணைய ஆசான்களில் ஒருவர் தைத்ரீய உபநிஷத் எடுத்து படின்னார். படிக்க ஆரம்பிச்சேன்.

வேதம் என்பது கல்வி, ஞானம், அறிவு. இந்த உபநிஷத்தில் கற்றுத் தரப்படுவது கணிதம், விஞ்ஞானம், வாழ்வின் ஆதாரத்திற்குத் தேவையான நீர் நிலம் காற்று நெருப்பை போற்றி வழிபட்டு காப்பது மட்டுமின்றி மாணாக்கர்களுக்கு வேண்டிய முக்கிய அறிவுரைகள் சொல்லப்படுகிறது.

வேதம் கல்வி ஞானம் அறிவு என்று சொல்லும் போது அன்றைய காலகட்டத்திலிருந்த வாழ்வியல் முறைகள், எதிர்ப்புகள், எதிரிகளை எதிர் கொள்ளுதல் என்பதுவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருக்கலாம். எவற்றை படித்துப் புரிந்து கொள்ள வேண்டும்; எவற்றை நித்யகர்மங்களாகச் செய்ய வேண்டும், எத்தகைய வழிபாட்டு முறைகள் என்று கூட பல வேத குறிப்புகளில் உண்டு. சிலவற்றை புரட்டிப் பார்த்ததில் இருப்பதாகத் தெரிகிறது.

முழுவதும் படித்து அறிந்தவர்கள் குறைவு. இருக்கிற பிராமணர்களில் ஒரு சதவீத மக்களுக்கு கூடத்தெரியாது. ஏனென்றால் வேதம் படிப்பதில்லை. சமஸ்கிரதம் புரியாத காரணமும் கூட.

வேதத்தில் சிலவற்றை மட்டுமே நித்ய கர்மாக்களாகவும், சிலவற்றை படித்து அறிந்து கொள்ள வேண்டியவை என மட்டுமே என்றிருக்கிறது! அன்றைய சூழ்நிலையில் இருந்தவற்றை எழுதி வைத்ததை வாசிக்க மட்டுமே வேண்டும்.

பொதுவாக வேதம் கற்றுக் கொள்ள விடியற்காலையில் எழுந்து குளித்து விட்டு நித்ய கர்மா சந்தியாவந்தனம் செய்த பிறகு வேத பாராயணம் ஆரம்பிக்கனும்பாங்க! பிராமணர்கள் செய்வதில்லை. ஆனால் இப்ப பிராமணர் அல்லாதவர்கள் தான் விடியற்காலை பல் விலக்குவதற்கு முன்னரே எழுத்தவுடன் இன்னிக்கு வேதத்தில் என்ன இருக்கு, 80-90 வருடம் முன் எந்த கோவில்ல யாரை எந்த பார்ப்பான் விடலை, எந்த பார்ப்பான் உள்ள விட்டான், என ஒரே பார்ப்பன புராணமவே இவர்கள் தினம் விடிகிறது.

பார்ப்பான் வேதம் படிக்கிறானோ இல்லையோ
இவர்கள் படிக்க வைத்து விடுவார்கள். அந்த காலத்து பிராமணன் தன்னோட எதிரிகளைத் தன்னோட வேத புத்தகங்களில் எழுதி வைத்து விட்டுப் போனார்கள். இந்த காலத்து பிராமணன் என்ன எழுதி வச்சுட்டுப் போகப் போறானோ! வருந்தக் கூடிய விஷயங்கள்.


Stop preaching hatred.

Friday, November 23, 2018

இடம் பொருள் ஏவல் உடையில்

காலேஜ் மூன்றாவது வருடம் போகுற போது, வெள்ளிகிழமை திறந்த காலேஜ்க்கு, அடுத்த இரண்டு நாள் தள்ளி திங்கள்கிழமை விடியற்காலை கிளம்பி காலேஜ் போனேன். நேரா காலேஜ் போயிட்டு சாயந்திரம் ஹாஸ்டல் அட்மிஷனுக்கு புதுசா வந்த வார்டனைப் பார்க்கப் போனா அவரில்லை.

அங்கயே தங்கிட்டு காலையில எழுந்த கையோட வேகமா அவரைப் பார்க்க ஓடினேன். ஹாஸ்டல் கிடைக்கலைன்னா படிப்பு காலி.

என்னைப் பார்த்த ஃபாதர் வார்டன் செம காண்டாயிட்டார். எவ்வளவு தைரியமிருந்தா ஒரு jesuit சாமியாரை, காலேஜ் புரொபசரை பெரிய மனிதரை சந்திக்க லுங்கியில வருவ! உனக்கு ஹாஸ்டல் கிடையாது வெளிய போன்னு துரத்திட்டார். ஆடிப் போச்சு எனக்கு. எவ்வளவு கெஞ்சியும் விடலை. வெளிய துரத்திட்டார்.

அன்று இரவு காலேஜ் ஆடிட்டோரியத்துல தங்கிட்டு மறுபடியும் போய் கெஞ்சினேன். இரண்டு நாள் கெஞ்சினதுல கழிச்சு விட்டு 25 ரூபாய் பைன் கட்டச் சொன்னார். மெஸ் பீஸ் போக வீட்டுல மாசம் பத்து ரூபாய் தான் கொடுப்பாங்க. கடன் வாங்கி கட்டினேன். உனக்கு அலாட் ஆன தனி ரூம் கிடையாதுன்னுட்டார்.

இனி பெரிய மனிதர்களைப் பார்க்கப் போகும் போது ஒழுங்க ட்ரஸ் பண்ணுன்னார். இனி என்னை லுங்கியில வந்து பார்ப்பன்னேர்.

அது தவறுன்னு அதுவரை தெரியாம சுற்றிய காலம். அது ஒருத்தரை அவமதிக்கும்ன்னு அன்று புரிந்தது.

பாடம் நம்பர் ஒன்னு இது. 

கல்லூரி முடிந்து இரண்டு மூனு படிப்புகள் முடிந்து டிசிஎஸ்ல வேலை கிடைச்சு பாம்பே போனேன். அப்ப கழுத்துல tie கட்டுவது மேற்கத்திய கலாசாரம்ன்னு கட்ட மாட்டேன். வேலை ஒழுங்கா பண்ணதுல ஒன்னரை வருசத்துல job confirmation பண்ணுவதற்கு பதிலா, எட்டு மாதத்துலேயே early confirmationக்கு recommend ஆகி அப்பர் மேனேஜ்மெண்ட் முன்ன ஆஜர் ஆகச் சொன்னாங்க. கழுத்துல tie கட்டாம ஏர் இந்தியா பில்டிங் போய் பெரிய மனிதர்களை சந்தித்தேன்.

செம காண்டாயிட்டாங்க. ஒரு புரபசனல் கம்பனியில டை கட்டாம வர்ற, எழுந்து நின்னு பேச மாட்டேங்குற, உனக்கு இப்ப கன்பர்மேஷன் கிடையாது போன்னு அனுப்பிட்டாங்க.

எங்களை அவமதிக்க இப்படி வர்றயான்னு திட்டி அனுப்பிட்டாங்க. கிடைக்க வேண்டிய பணம் போச்சு.

இடத்துக்கு தகுந்த மாதிரி நாம உடுத்தும் உடை பிறரது கவனத்தை ஈர்க்கும், அதை வைத்து நம்மை எடை போடுவார்கள்ன்னு முழுமையாக உணர்ந்த தருணம்.

பாடம் நம்பர் இரண்டு இது.

அதிலிருந்து எந்த பெரிய மனிதரை சந்திக்கும் போதும் கோட் சூட் டையோட போவது நான்.

இங்க கடந்த மூன்று வருடமா கவர்னர் மாளிகை டிசம்பர் கிறிஸ்துமஸ் டெகரேஷன் பார்க்க ஆபீஸ் மூலமா அழைப்பு வரும். குடும்பத்தோட போவோம். Formal dress compulsory. போன வருசம் போனப்ப வளர்ந்து விட்ட என் பையன் என்னோட கோட் மாட்டி கிட்டான். இன்னொன்னு பொருத்தமாயில்லை. நான் நல்லா டிரஸ் பண்ணியிருந்தாலும் (tie கட்டி) கோட்டுக்கு பதில் வின்டர் jacket மேல போட்டு கிட்டு போனேன். பையனே திட்டினான். அங்க கவர்னர் மாளிகையில வித்தியாசமாக பார்க்க ஆரம்பிச்சாங்க. சங்கடமாயிருச்சு.

பாடம் நம்பர் மூனு இது.

அலுவலகத்துக்கு நாம லுங்கி கட்டி கிட்டு போனா காற்றாட வசதியாத் தானிருக்கும். வெள்ளிக்கிழமை shortsல ஆபீஸ் வந்து கிட்டு இருந்தாங்க இங்க. அதையும் இப்ப மாத்திட்டாங்க.


தமிழில் அழகாய் சொல்லக் கூடிய 'இடம், பொருள், ஏவல்' வார்த்தைகளுக்கு தகுந்த மாதிரி நமது உடை அமையலைன்னா அதற்கான நஷ்டம் நமக்கு தான்னு அநுபவரீதியாக உணர வேண்டி வரும். உணர்த்துவாங்க!

Thursday, November 22, 2018

Happy thanksgiving to everyone

Happy thanksgiving to everyone.
ஓலை


Dr அய்யநாதன்

இங்க நாளைக்கு Thanksgiving Day. என் வாழ்வில் நான் நன்றி சொல்ல வேண்டிய ஒருத்தன் அய்யநாதன். 

BSc படிக்கும் போது ஹாஸ்டல்ல பழகியிருந்தாலும் பேசியிருந்தாலும் நல்ல நண்பனா மாறியது நாங்க ஒன்னா pgdca ஈவனிங் காலேஜ் பண்ணியபோது.

Pgdca பண்ணியபோது வார்டன் ஃபாதர் சேவியர் அல்போன்ஸ்கிட்ட போய் ஹாஸ்டல்ல இடம் கொடுங்கன்னு நிறைய தடவை கேட்டுப்பார்த்தேன். முடியாதுன்னுட்டார். அவர் சொன்ன ஒரு மெயின் காரணம், நீங்க மாலை நேரம் காலேஜ் போவீங்க, உங்களுக்கு தனியா சாப்பாடு வைக்கனும், காலையில எல்லாம் இங்கயே சுத்துவீங்க, மத்த பசங்க இருக்க மாட்டாங்க, செக்யூரிட்டி issue; முடியாதுன்னு கறாரா சொல்லிட்டார்.

அப்பா ரிடையர் ஆயிட்டார். பணம் அதிகம் செலவு பண்ண வாய்ப்பில்லை. Pgdca முடிச்சுட்டா வேலை சுலபமாக கிடைக்கும்ன்னு எப்படியாவது பண்ணிட வேண்டும்ன்னு இருந்த நேரம்.

மேலச்சிந்தாமணியில காவிரிக்கரை ஓரம் ஒரு ரூம் 100 ரூபாய்க்கு கிடைச்சது. 8 x 10 ரூம்ல 5 பேர். படுக்க இடமில்லை. உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவில் தெருக்கு எதிர்புறம் ஒரு முஸ்லீம் அம்மா நடத்திய லாட்ஜ்ல 125க்கு ரூம் பிடிச்சு வந்தேன். அவங்க கொடுக்குற இட்லி சாப்பிட்டு 4-5 மாசம் ஓட்டிட்டேன். இரண்டாவது செமஸ்டர் தொடக்கத்துல அந்த லாட்ஜ்ல ஒரு ப்ளஸ் டூ படிக்கிற பையன் மருந்து குடிச்சு தற்கொலை பண்ணிகிட்டான். அவன் சாவறதைப் பார்த்த எனக்கு அங்க இருக்க முடியல. மத்த ரூம் ஆளுங்களும் காலி பண்ண, நானும் காலி பண்ணிட்டேன்.

எங்க போறதுன்னு முழிக்கிற போது, ஆபத்பாந்தவனாக அய்யநாதன் காப்பாத்தினான். அவன் ரூம்ல தில்லைநகர்ல அடைக்கலம் கொடுத்தான். அவன் ரூம்ல சாமான் போட்டுபுட்டு, ரூம் வாசல்ல மொட்ட மாடியில தினமும் படுப்போம்.

ரூம் பக்கத்துல ஹோட்டல்ல கீழ இருந்த 14ரூபாய் அளவு சாப்பாடை இரண்டு பேரும் சாப்பிட்டு காலேஜ் போயிட்டு வந்துகிட்டிருந்தோம்.

Cobol program புதுசா கத்து கொடுத்தாங்க காலேஜ்ல. அவன் தான் எல்லா புக்கும் காசு கொடுத்து வாங்குவான். அதுல தான் நானும் படிப்பேன். ஒன்னா கோபால் கத்துகிட்டோம்.

அவனுக்கு நான் கொடுத்த சிரமத்தை மீதி இருந்த 4-5 மாதமும் பல்லை கடிச்சுகிட்டு பொறுத்துகிட்டான். ரூமுக்கு வாடகை 275-290ல நான் ஒரு பைசா நான் அவனுக்கு கொடுத்ததில்லை. ரூம் ஓனர் கேட்டதிற்கு கூட அவனே பதில் சொல்லி நான் இருக்க ஏற்பாடும் பண்ணிட்டான். 

இரண்டாவது செமஸ்டர் முடிஞ்சு அவன் ரூமையும் காலி பண்ணிட்டுப் போயிட்டான். அதற்கப்புறமும் நான் 15-20 நாள் அங்க தங்கியிருந்தேன். அதற்கும் சேர்த்து பணம் கட்டிட்டுப் போயிருக்கான்.

நான் அந்த ரூம்ல விட்டுவிட்டுப் போன ஒரு புக் மூட்டையைக் கூட அவன் ரூம்மேட் நினைவு படுத்தியதால, எனக்கு அப்புறமா அஸ்ஸாமுக்கு லட்டர்போட்டு நினைவு படுத்தினான்.

அய்யநாதன் செய்த உதவியாலத் தான் pgdca முடிக்க முடிந்தது. July 6ந்தேதி pgdca completion certificate கல்லூரியில கொடுத்தாங்க. 7ந்தேதி நானும் அப்பா அம்மாவும் வீட்டைக்காலி பண்ணிட்டு அஸ்ஸாமுக்கு கொச்சின்-கௌஹாத்தி எக்ப்ரஸ்ல சேலத்துல ரயிலேறினோம்.

அங்க போன ஒரு மாசத்துக்குள்ள கம்ப்யூட்டர் டீச்சிங் உத்யோகம் ஒரு அரசு நிதியில நடக்குற இன்ஸ்டிட்யூட்ல கிடைச்சது. 200 பேருக்கும் மேலோருக்கு கம்ப்யூட்டர் ட்ரைனிங் கொடுத்தேன். தினமும் ஒரு மணி நேரம் கிளாஸ் எடுப்பேன். ப்ரோகிராம் எழுதி கொடுத்து மதியம் இரண்டு மூனு மணி நேரம் கம்ப்யூட்டர்ல அவங்களுக்கு ட்ரைனிங்க் கொடுப்பேன். நிறைய veterinary college professors ஸ்டூடண்ட் ஆக வந்து கத்துகிட்டாங்க. அவங்களுக்கு இலவசமாக ப்ராஜக்ட் பண்ணி கொடுத்தேன். Statistical calculationsக்கு ப்ரோக்ராம் எழுதிக் கொடுத்தேன். இப்போதைய காலேஜ் டீன் என் முன்னாள் மாணவர். நல்ல நண்பர்.

இது எல்லாம் சாத்தியமானது அய்யநாதன் செய்த அந்த 4-5 மாத உதவி தான்.

இந்த தேங்க்ஸ்கிவிங் நாளில் உனக்கு நன்றி சொல்லிக்கிறேன்டா மாப்ளை!


நன்றி

Sunday, August 12, 2018

பிறந்த தினம் ஓர் சீரமைப்பு தினம்

சிலர் தனது பிறந்த நாளை மிக விமரிசையாக கொண்டாட விரும்புவர். அதும் 50, 60, 70, 75, 80 எல்லாம் வாழ்வின் மைல்கற்கள் என்று கொண்டாடுபவர்கள் உண்டு.

75 வது பிறந்த நாளுக்கு ஒன்றும் செய்யவில்லை. பேரன் வீட்டில் இல்லாததால் கோவிலுக்கு கூட வரவில்லை. இரண்டு மூன்று தடவை கேட்டும் கோவில் வரவில்லை. மகள் பேரன் வந்தா போய்க்கலாம்ன்னுட்டாங்க. நேற்று பையனைக் கூட்டி வந்த போது கூட ஒரு கேக் வாங்கி வந்தேன். கட் பண்ணாமல் ப்ரிட்ஜில் உறங்குகிறது!

பிறந்த நாள் பரிசாக shoulder massager வாங்கிக் கொடுக்கலாம் என்று கடைகள் ஏறி இறங்கினேன். அவர்கள் என்னுடையதை உபயோகிக்கிறார்கள். அது தான் நன்றாக இருக்கு என்கிறார்கள். அது மாதிரி தேடி கிடைக்கவில்லை.

சரி 501$ கேஷ் வைத்து ஒரு க்ரீட்டிங் கார்டை பையன் மூலம் கொடுத்தேன். பேரன் கட்டிப்பானான்னு எதிர்பார்ப்பு. அவனை செய்யுடான்னு சொன்னவுடனே அவனை நெருங்க கட்டிகிட்டதோட சரி. இப்போது 1$ மட்டும் எடுத்துக் கொண்டு 500 திரும்பி விட்டது!

ஊரிலிருந்து வந்த நாளிலிருந்து கடுமையாக உழைக்கிறார்கள். மகள் பேரன் நான் - இங்க இருக்கும் அருகாமையைத் தவிர வேற எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அடுத்த மாதம் ஊர் திரும்பி விடுவார்கள். அதற்குள் இங்க வீட்டை சீரமைப்பதில் மட்டுமே கவனம். 


பிறந்த தினத்தை விட பிறந்த தினத்தில் வீட்டை சீரமைப்பது மட்டுமே பிரதானமாக இருக்கு!

முன் கோவம் மிதிபட்டுப் போனது

இன்னிக்கு காலையில ஒரு தடியன் நாலு தடவை காலிங் பெல் அடிச்சதுமில்லாம, வாசற்கதவை படபடவென தட்டவும் தட்டினான். உட்கார்ந்திருக்கிற சோபாவிலிருந்து எழுந்து போய் கதவைத் திறக்க பத்து நொடி கூட ஆகாது! அதற்குள் அவனுக்குப் பொறுமையில்லை! 

இந்த ஊர் மக்கள் கதவைப் படார் படாரென தட்டுவது இயற்கையானாலும் பொறுமையற்ற தட்டல்கள் அயர்ச்சியையும் எரிச்சலையும் உருவாக்கும்.

வீட்டிலிருப்பவர்களுக்கோ இப்படி கதவை தடதடன்னு தட்டியதுல செம கிலி வேற! கால நடப்பும் அப்படி! கதவைத் திறக்க பயம்!

திறந்து பார்த்தா பத்து வீடு தள்ளியிருக்கும் தடியன். கேட்டதைக் கொடுத்து அனுப்பியாச்சு! அவன் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையுடன் பதில் சொல்ல கடினமாய்ப் போனது. கேள்விகளும் அப்படி. இன்றைய கால கட்டத்தில் சகிப்புத் தன்மையே அதிகம் தேவைப்படுகிறது! கூடி வாழவேண்டிய சுயநலம்!

இதே நிகழ்வு சாயங்காலமும்! ஐந்தாறு தடவை இடைவிடாது காலிங்பெல் மற்றும் தடதடவென கதவைத் தட்டும் சத்தம்.

எரிச்சலின் உச்சத்தில் கதவைத் திறந்தால்  பக்கத்து வீட்டு அல்பேனியக் குழந்தை எம்மா கதவிடுக்கில் நம் வீட்டிற்குள் ஓடுகிறது! மூன்று நாள் முன் அல்பேனியாவிலிருந்து வந்த அதன் பாட்டி கையில் பணியாரத்துடன் மலர்ந்த முகத்தோடு நிற்கிறார்கள். எனது முன் கோவத்தில் திறந்ததில் ஒரு கணம் தடுமாறிப் போய்விட்டேன். 

ஆங்கிலம் ஒரு வார்த்தை கூட அவர்களுக்குப் புரியாது! மொழியிருந்தும் மொழியற்ற மலர்ந்த முகத்தின் பரிபாஷையிலேயே நன்றிகளைப் பகிர்ந்து கொண்டோம்!

கோவத்தின் உச்சம் சடாரென பனிக்கட்டி போல் உருகி தரைமட்டமாகிப் போன நிகழ்வு!


முன் கோவம் குழந்தையின் காலில் மிதிபட்டுப் போனது!

முன் கோவம் மிதியடியில்

இடைவிடாது அழைக்கும் 
வாசல் மணி அழைப்பில்
பொறுமையற்றுப் போய் 
வெடுக்கென வரும் கோவத்தில் 
திறக்கும் கதவின்
இடுக்கடியில் புகுந்தோடும் 
குழந்தை கண்டு
பஞ்சாய்ப் பறந்து போனது கோவம்!

சுருக்கென கேட்க வேண்டி 
கதவு திறந்தால்
மலர்ந்த முகத்துடன் 
தட்டில் பணியாரத்துடன்
பேத்தியும் தாத்தியும்
சிரிக்கும் சிரிப்பில்
என் முன்கோவம் 
சிலிர்த்து விட்டது!

அவர் பேசும் மொழி நாமறியோம்
நாம் பேசும் பொது மொழி அவரறியார்
அன்பெனும் பெருங்கடலுக்கு மொழி எதற்கு!

முன்கோவத்தில் முழுமையிழந்தேன்
முன் கதவு திறக்கையிலே
முட்டி மோதிய குழந்தையின் காலடியில்
பட்டுத்தெறித்த கோவம் பதமாய்ப் போனது!


குழந்தையின் மிதியடியில் முன் கோவம்!

பறவையின் பிறந்த தினம்

கடந்த பதினைந்து வருடத்துல இன்று ஆகஸ்ட் 10 தான் பையன் தனது பிறந்த தினத்துல வீட்டுல இல்லை. தனது ஃபுட்பால் டீமோடு பள்ளியிலேயே நேற்றிலிருந்து உணவு உறக்கம் இருப்பிடமெல்லாம். நாளை இரவு தான் வீடு திரும்புவான்.

மாலை வரை காத்திருந்து நேரில் பிறந்த தின வாழ்த்துகளைச் சொல்லி விட்டு இப்போது தான் இரண்டு பேரும் வீடு திரும்பினோம்.

உடன் பணிபுரிபவர்கள் பிறந்த தினம் திருமண தினத்தன்று எப்போதும் லீவு எடுத்துச் சென்றுவிடுவார்கள். நாங்கள் இதுவரை அதற்காக என்றுமே லீவு எடுத்ததில்லை. 
எனக்கு எல்லா தினமுமே it's another day என்றே காலத்தை ஓட்டியாச்சு! ஆனால் இன்று வீட்டிலிருந்தாலும் நேற்றிலிருந்து இன்று மாலை வரையான காத்திருப்பு ஏதோ ஒரு வெறுமையை உருவாக்கி விட்டது. 

மனைவியின் தாயாருக்கும் இன்றே பிறந்த நாள். 75 வயது. வீட்டில் பேரன் இல்லாததால் எதிலும் விருப்பமில்லாமல் இருந்து விட்டார்கள். கோவிலிற்கும் வரவிரும்பவில்லை.

நான் மட்டும் போய் கோவிலில் இருவருக்கும் அர்ச்சனை பண்ணிவிட்டு வந்தேன். அங்கே கோவிலில் இன்னொரு 2 வயது திருச்சி/நெல்லை குழந்தை தன் தாத்தா பாட்டி அப்பா அம்மாவுடன் தனது பிறந்த தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. கையிலிருந்த கோவில் ஆப்பிளை அதனிடம் கொடுத்து ஆசி வழங்கி விட்டு வந்தேன். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தது மனதுக்கு நிறைவாக இருந்தது.

ஆனால் மாலைப்பொழுது மற்ற பெற்றோர்களுடன் பள்ளியில் கலந்து உரையாடியதில் மிக மகழ்ச்சியாக இருந்தது. அதிலும் சில ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் சிரிப்பலையில் அனைத்தையும் மறக்க வைத்து விடுவார்கள்.


பறக்கத் துடிக்கிற பறவைகளின் பிறந்த தினமாய்ப் போனது!

நீண்டதோர் வாழ்விற்கு அஞ்சலி

ஒரு சகாப்தம் நிறைவுற்றது!

வாழ்வில் ஏற்ற இறக்கங்கள்
என்றும் நிலையற்றது
என்று வாழ்ந்து காட்டி
வேந்தனாகவே வாழ்ந்து மறைந்தார்!

கொள்கையும் கோட்பாடும்
வாழ்வின் உச்சத்திற்கு ஏறும்
படிகளாக்கி கொள்ள உணர்த்தியவர்!

பகுத்தறிவும் நாளை கடவுளாகலாம்
சமாதியும் கோபுரமாகலாம்
சிலைகளும் வழிபாடு ஸ்தலமாகலாம்!

தமிழகத்தின் 60 ஆண்டு கால
திராவிட ஆளுமைகள் விடைபெறுகின்றன
கொற்றவன் ஏற்றிய கொள்கைகளை
கொடி பிடித்து ஏற்பவர் எவரோ!

மனித வாழ்வில் சகாப்தங்கள்
தோன்றி மறைகின்றன
நிலைத்து நிற்பவை
கொள்கையும் கோட்பாடும் மட்டுமே!

ஏற்பவர்கள் எவரோ வீழ்த்துபவர்கள் எவரோ!


அஞ்சலிகள்!

Wednesday, May 30, 2018

கழனிமேடு கட்டாஞ்சோறு

காலை நீட்டி அசை போடும் போது
கழனி கட்டுல வேலை இல்லைன்னா
சமையக்கட்டுல அடுப்பைத் துடை சுப்பிரமணி!

ஏறுகட்டி உழவு செய்ய
பொழுதில்லை உனக்கிப்ப
குண்டு சட்டி குதிரை ஓட்டி
என் மனசைக் கொல்லுர நீ!

பாத்தி கட்டி நீர்ப்பாய்ச்ச
பனங்காடு போகலை நீ
பரிசல் துறையில் பந்தல் கட்டி
பல்லிளிக்கும் பரமனா நீ!

வேட்டி சட்டை மடிச்சுக் கட்டி
வேர்க்க விறுக்க ஏறு பூட்டலை நீ
மல்லு வேட்டி கட்டி
மைனராக நிக்குற நீ!

மாந்தோப்பு கிளியெல்லாம் மையலிட்டு பறக்குதய்யா
பறிச்சு வைக்குற மாங்கனியை எட்டிப் பறிக்க
வணங்கலையே மனசுனக்கு!

கூடு கட்டி வாழுற குருவி
குனிஞ்சு நிமிந்து நிக்குதப்பா!
மாடி வீடு கட்டுற கனவு
மாராய்ப் போகுதய்யா!

பாட்டி சொல்லைத் தட்டுற நீ
பானை வயிறு நிறையனுமப்பா!
ஏறுநடை போடனுமய்யா
ஏப்பமாய் ஆகிவிடாதே!

கழனிமேடு கட்டாஞ்சோறு!

வைகாசி விசாகம்

வைகாசி விசாகத்தில் பிறந்தோம்
விசால மனதோடு உறவுகளைப் பெற்றோம்!

பழனி முருகனுக்கோர் உற்சவ தினம்
சுப்ரமணிக்கோர் அர்ச்சனை தினம்!

வைகையும் காவிரியும் சிலிர்க்கும் வைகாசி
விசையும் சாகசமும் திறமை கொண்ட விசாகம்!

கோவத்தில் குன்றின் மீது நிற்கும் குமரனாவோம்
குரல் கொடுப்போர்க்கு மயிலிறங்கி தோள் நிற்போம்
அஞ்சாநெஞ்சுடன் எதையும் எதிர்கொள்வோம்!

துன்பங்களை தினமும் தோளில் சுமந்தாலும்
துவளுகின்ற மனதில்லை பிறப்பிலிருந்தே
அஞ்சி நடுங்கி ஒதுங்கும் மனதில்லை என்றும்
உயிர் கொண்டெழுந்து எதிர்பபோம் எதையும்!

தோழமையாய்ப் பிறந்த சக வைகாசி விசாகங்களே!
போற்றிப் பாடிடுவீர் உங்கள் பிறந்த தினத்தை
உற்றார் உறவினர் உள்ளத்தாரோடு
ஒன்றாய் குழுமி கொண்டாடிடுவீரே!

இனிய பிறந்த தின வாழ்த்துகள்!

நல்லதொரு விடியல் விடியட்டும்

உயிர் நட்டம்
உலை நட்டம்
உணர்வு நட்டம்
காலம் நட்டம்.
கனவுகள் நட்டம்.
கஞ்சிக்கு நட்டம்

ஆலையைத் திறந்தவன் மூடச் சொல்கிறான்
காலம் கடந்த செயல்களில்
இழந்த உயிர்களின் சேதம் சுமையாய் நிற்கிறது!

தினமொரு ஒப்பாரியில் ஊரை வசை பாடுகிறான்
வேலையிழந்தவன் பிழைப்பிற்கு
வழி சொல்லத் தெரியாதவன்!

இழந்த உயிர்கள் மீண்டு வரப்போவதில்லை
இழந்தவன் வேலைக்கு இழப்பீடுமில்லை
புகைச் சூழலில் துன்புற்றவர்களுக்கு ஏதுமில்லை!

இனி
ஊருக்கு வழி பிறக்க உதவுபவன் எவனோ!

நல்லதொரு விடியல் விடியட்டும்!

காற்றில் கரைந்த கோட்டைகள்

உண்மைகள் ஒளிமிளர உத்தமர் வேதம் ஓத
சாத்திரங்கள் அரணாய் நிற்க
சாதி மத பேதமின்றி சமர்பிப்போம் ஒருமைப்பாடு!

அட்டுக்கட்டிய பொய்கள்
அரைஞான் கயிறாய் அறுந்த போது
இட்டுக்கட்டிய இடிந்துரைகள்
தூசாய்ப் பறந்தனவே!

நாட்டில் எட்டுத் திசையிலும்
அசையும் கொடிகள் ஒன்றாய் பறந்தாலும்
கொடியின் நிறத்தில் கலக்கும் கலவை
கசங்கிய துணியில் ஒட்டவில்லை!

மிட்டு மிளர எதிரில் கண்ணாடியில் மிதப்பவை
மஞ்சள் துணிப் போர்த்தி மருந்தடித்தாலும்
கட்டுகிற கோட்டையை எட்டிப் பிடிக்காது!

ஒட்டுகிற உளியைத் தேடிப் பிடித்தால்
கட்டுகிற கோட்டைக்குத் தூண் கிடைக்கும்!

காற்றில் கரைந்த கோட்டைகள்!

இழப்பிற்கு மரியாதை

நேரில் வந்து துக்கம் கேட்டால்
எள்ளி நகையாடும் கூட்டம்
வரவில்லை என்றாலும்
அதையே பொலி போடும் கூட்டம்!

போராடியவனும் ஆதாயம் தேடிப் போனான்
மூடியவனும் ஆதாயம் தேடிப்போனான்
துக்கம் விசாரிக்கப் போனவனும்
அதையே தேடிப்போனான்!

எள்ளி நகையாடுபவர்களுக்கு எவருமில்லை
விருப்பங்கள் நிறைவேறுவதில்லை
எவரும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை!
டெபாசிட் கூட கிடைப்பதில்லை!

இழப்பிற்கு மரியாதையில்லை!
இழப்பில் எள்ளி நகையாடும்
ஏசும் கூட்டத்திற்கு
ஏசுவதைத் தவிர ஏதுமில்லை!

Saturday, May 12, 2018

உனது அரவணைப்பே எனது வலிமை

அடி எடுத்து வைக்கும் பாதையில்
ஆடிக் காற்றில் அசையும்
தடைகற்களாய் நிற்கின்றன!

பாதை தடுமாறாமல் வழி காட்டி
செல்ல வைக்கின்ற மைல்கல் யாரோ!

நித்தம் ஒரு துன்பம் தொடர்ந்து
மலைபோல் நிற்கின்ற போது
மலையருவியாய் இறங்கி வந்து
பாரம் இறங்கச் செய்யும்
அந்த துணைக்கல் யாரோ!

உலகமே இடிந்து விழுகின்ற நிலைபோலிருந்தாலும்
சிரித்து தோள் கொடுத்து
சுமக்கின்ற அந்த தோள் யாரோ!

கூவாமல் குரல் கொடுக்காத மனிதர்கள்
மண்ணில் விடைபெற்று செல்லும்
வலி உணரவைக்கும்
அந்த வலிமை யாரோ!

எந்த ஒரு இடரிலும் அருகிலேயே
தடம் காட்டி நின்று எளிதாய்
சுமை இறக்கும் அந்த சுமைதாங்கி யாரோ!

எங்கோ அழைத்துச் செல்கிறாய்
உன் அழைப்பிலோ ஏற்ற இறங்கங்களை உணர்ததுகிறாய்!
மானுடம் நீண்டு வாழ அழைக்கிறாய்
உனை அறிந்தும் அறியாமலும் தொடர்கிறேன்!

உனது அரவணைப்பே எனது வலிமை!

வியாபர வெற்றியிலோர் மரகதம்

மரகதமே மரகதமாய் நிற்கையில்
பச்சை நிறத்திற்கோர் மனரதம் மனோகரம்!

மரகதச் சிரிப்பிலோர் பழனி முருகன்
கையிலோர் பெருஞ்சுவரை மீட்டெடுத்த புன்னகை!

வியாபாரச் சுற்றுலாவில் மிளிரும் மரகதம்
கழுத்தில் தொங்குமோர் அடையாளம்
புன்னகைக்கோர் மரகத மாலையாக!

வியாபர வெற்றியிலோர் மரகதம்!

செத்தமையா நிக்காதடே வாங்கடே

மேட்டூர் சந்தையில மேகம் கறுக்கையில
ஊரு சனம் கூவுதடி கோடை குளிருதடி!

கொட்டுதடி கொட்டுது மழை செமத்தையா கொட்டுதடி
அடிநாக்கு வழுக்குதடி செத்தமையா நிக்குதடி!

காவிரியில தண்ணி கரை புரண்டோடுமென
மேச்சேரி ரோட்டுல ஊறு தண்ணி ஒதுங்குதடி!

காட்டு மேட்டுல வளர்ந்தோமடி
மழைத்தண்ணியில குதிச்சோமடி
எங்க மேட்டூர் கோடை மழையில
நனையாத மாடு  இல்லடி நாங்க!

அடேய் சளிபுடிக்குமென சொன்னாரு கவுண்டரு
கேட்குற ஆளுக நாங்கயில்லை மன்னாரு
ஊரு சனம் ஏங்கி நிக்குற மழையில
டயரு சறுக்காத சிறுசில்ல கோனாரு நாங்க!

வாங்கடே தண்ணியடிப்போம்
அண்ணாந்து வாயத்திறந்து
கொட்டுற மழையை அள்ளிப் பிடிப்போம்!

செத்தமையா நிக்காதடே வாங்கடே!

Sunday, April 22, 2018

குரங்கின் கையிலோர் மடிசார்

புரட்டி அடித்தால் புரோட்டா என்றார்கள்
புரட்டி அடித்தேன் துவைக்கும் துணியை
துணியைப் புரட்டியதில் கிழிந்தது புரோட்டா!

காணும் கண்டதைச் செய்வதறிந்து செய்தேன்
அதைப் புரட்டி எடுத்து கழுவியதுடன் நின்றது அறிவு
கற்றது மண்ணளவு கல்லாதது உலகளவு
கற்றது ஏட்டுச் சுரைக்காய் எனினும்
என்னறிவில் அதுவோர் இமயமலை!

புரட்டி எடுத்து மடிக்கும் மடிப்பை அறியேன்
மாமியின் மடிசாரில் மடிப்பை அறியேன்
அடித்துத் துவைக்கும் துணியின் மடிப்பில்
தானாய் மடித்து நிற்கும் மடிசார்!

குரங்கின் கையிலோர் மடிசார்!

கரைந்துண்ணும் போராட்டம்

வாழ்க்கை எனும் ஜீவ மரணப் போராட்டம்
விரட்டியடிக்கும் காக்கைக் கூட்டம்
தன் பிறவா குஞ்சினை
வாழவைக்கப் போராடும் கூட்டம்!

பருந்தின் கையிலோ மலரத்துடிக்கும் ஜீவன்
பிறந்தும் உலகம் காணமுடியா குருவிக்குஞ்சு!

இரையாடத் துடிக்கும் பருந்தை
அஞ்ச விரட்டும் காக்கை கூட்டம்
ஒன்றோ இரண்டோ அல்ல
தனியாய் எதிர்கொள்ளும் பருந்து!

இரைத்தேடலில் ஜீவமரணப் போராட்டங்கள்
பிறரது இழப்பில் தோன்றும் கடினங்கள்
கூடி வாழ எண்ணும் காக்கைகள்!

காக்கை கரைந்துண்ணும் உணவல்ல
காக்கை விரட்டலில் உண்ணும் உணவு
எளியவனை வலியவன் அழிக்கும் தேடல்!

காக்கையை கரைந்துண்ணும் போராட்டம்!

Tuesday, March 6, 2018

இருவாரம் தொலைதூரம்

இளவேனிற்காலம் நோக்கி
சிறகு விரிக்க காத்திருக்கும் பறவைகள்
இன்னும் இருவாரம் பனிக்காலமென
இயற்கை அழைத்துச் சொல்கையில்
குளிர்ந்த இறகுகள் சுருங்கி மடிந்தன!

உடலின் குளிர் உஷ்ணத்தை உலர்த்த நினைக்கையில்
இயற்கை சொல்லும் இருவாரம்
பலநாள் காத்திருப்பாய் குளிர்ந்து சுருங்கியது!

வட்டமிடும் பறவைகளை அண்ணாந்து பார்த்து
குஞ்சு பொரித்து காத்திருக்கும் கூடுகளிலிருந்து
விடுதலை பெறலாம் என நினைக்கையில்
இயற்கை சொல்கிறது இரு வாரம்!

காத்திருந்த பனிக்காலம் விரைவாய் கடந்தாலும்
இருவாரம் தொலைதூரமாய் நிற்கையில்
பறவை மனதின் எதிர்பார்ப்புடன்
கைநீட்டிப் பிடிக்க நினைக்கும் வசந்தகாலம்.

இருவாரம் தொலைதூரம்!

Saturday, March 3, 2018

கேப்போமா இனி

கேட்கக் கேட்க ஞானம் வரும்பாங்க
எனக்கு தூக்கம் வரும்ன்னா
கேப்போமா இனி!

கேட்டு கேட்டு எவனும் வந்துராதீக
கூண்டோட தூக்கிடுவோம்ன்னா
கேப்போமா இனி!

கேள்விகளே பறிக்கப்படும் இலையெனில்
இனி துளிர் விடும் இலைகளைக் களைவேனென்றால்
கேப்போமா இனி!

கேள்விகளே உலர்ந்த சருகானால்
மட்கிப் போன சருகுகள் உரமாகாதோ
கேப்போமா இனி!

கேள்வியில் வளரும் குட்டிப் பிஞ்சுகளை
வளர விடாத கேள்விகளாக்குமெனில்
கேப்போமா இனி!

மரத்திலுள்ள கேள்விகளாய் இலைகள்
அதில் மலர்ந்த பூக்கள் காய்களாகினவா என
கேப்போமா இனி!

Friday, March 2, 2018

வாழ்ந்து மறைந்தாள் மக்களின் மனசோடு

மனைவியின் மனதில் நிறைந்தவள்
மீளா தூக்கத்தில் மிதந்து விட்டாள்
மனைவியின் துக்கம் மாமியாரிடமும்
மாமியாரின் துக்கம் தனக்கு கொடுப்பினையில்லையென்று!

நண்பனின் துக்கம் மனதைத் தெளிக்கிறது
இளம் வயது மரணங்கள் மனதின் நெருடலில்
அவன் மனதிலோ எத்தனை பெண்கள்!

எல்லோர் மனதிலும் நிறைந்தவள்
விட்டுச் சென்ற கதாபாத்திரங்கள்
அசைபோடும் மனதில் ஓவியங்கள்!

எளிமையான பாத்திரங்களில் எளிமையாய் நின்றாள்
விட்டு சென்ற மனத்திவிலைகள்
எளிமையாய் கடக்க முடியாமல் நிற்கிறது!

வாழ்ந்து மறைந்தாள் மக்களின் மனசோடு!

மலர் வணக்கம்!

தஞ்சம் அடையா மான்

வில்லை வளைக்கலாம் முதுகு வளையாது
விடுபடும் அம்புக்கு இலக்கு தவறினாலும்
பாயுமிடம் தவறாது துளைக்குமிடம் ஒன்றே!

வேடனிடம் வேண்டி நிற்காது மான்
வலைவீசுபவனின் இலக்கு ஒன்றே என்றறியும்!
வில் அம்பு வேடன் வலைபற்றி யோசிக்காமல்
சுற்றியிருக்கும் அழகு சமவெளியில்
புல்லை தின்பதில் தன் வசீகரம் இழக்காது!

அவரவர் வேடத்தில் அனைவரும் கதாபாத்திரங்களே
அது வில் அம்பு வேடன் வலை மான் என தோன்றினாலும்!

தஞ்சம் அடையா மான்!

Friday, February 23, 2018

அயலவன் கொடுத்த மய்யம்

தன்னை விட எளியவன் அயலவன்
களத்தில் இறங்கி ஆடி வீசும் பந்து 
சுழன்று தன்னை வீழ்த்துவதை விட 
தாம் எளிதாய் களத்திலிறங்கி
அவுட் ஆகும் கோட்பாட்டில்
களத்தில் இறங்கி விட்டேன்!

எந்த இசத்தைச் சொன்னாலும்
மக்கள் தலை இசையாது!
இடமிருந்து வலம் நோக்கில்
எவரும் என்னை ஏற்காது!

காலியாக உள்ள மைதானத்தில்
எவரும் இறங்கி ஆடலாம்
வீசும் திசையில் பந்து இறங்கும்!
அது காகிதப் பூ பந்தா
கருங்கல்லில் வரைந்த பூவாவென 
மக்கள் முன் வீச பயமென்ன!

இறங்கி விட்டது

அயலவன் கொடுத்த மய்யம்!

Saturday, January 27, 2018

காற்றில் கரையும் கீறல்கள்

கீறல்கோடுகள் காட்டும் கீறல்களில்
உண்மை தெறிகிறது கீறலின் தாக்கம்!

கீறலை வைத்து அது நேர்க்கீறலா
கோணலாவென்பதெல்லாம் 
கீறலின் துவக்கம் முதல் தொடர்கிறது!

கீறலின் வடுக்கள் ஆறினாலும்
கீறலும் கற்க உதவுகிறது!

கீறல்கள் திசை மாறிப் போனாலும்
கீறலின் தொடர்ச்சிகள் நீண்டாலும்
காலத்தின் ஓட்டத்தில் வடுக்கள் மறைந்தாலும்
கீறல் சொல்லும் பாடம்
நிந்தனையிலும் நிதானம் இழக்காதே!

காற்றில் கரையும் கீறல்கள்!


Saturday, January 20, 2018

சறுக்கும் சிறுக்கு

கெட்ட வார்த்தைகளில் ஒருவரை
நிந்திப்பதில் ஏற்படும் அல்ப சந்தோசம்
உனது நல்வார்த்தைகளை நீயே
ஏறி மிதித்துச் செல்லும் 
ஏணிப்படியாக்கிக் கொண்டது!

கெட்டவார்த்தைகள் எவரையும் 
ஏற்றி இறக்கப் போவதில்லை
உன்னைத் தவிர!

ஒருவரது கெட்டவார்த்தை
எவற்றையும் நல்லதாக்குமானால்
அவை நல்ல வார்த்தைகளன்றோ
உன் வீட்டிலேயே உபயோகப்படுத்த!

எவரை வெல்லும் வார்த்தைகள்
இப்புவியிலுண்டோ அவை
நல்லவை கெட்டவையென
வேறுபடுத்தத் தேவையன்று!

உனது வார்த்தைகள் அவனை வெல்லப்போவதில்லை!
அது வெல்லப்போவது உனது சறுக்கலில்!


சறுக்கும் சிறுக்கு!

Saturday, January 13, 2018

சாலைத்திட்டத்தில் தேடியது

கிரீன் சில்க் ரோடு

இந்த சாலைத் திட்டம் பற்றிய அறிவுப்பு போன வருடம் வந்தது. இது பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளைத் திரட்டப் போகிறது என்று அப்ப எனக்குத் தோன்றியது. வியாபாரம் எளிமையாக நடக்க உதவப்போகிறது. வியாபர நோக்கின்  பின்னனி அரசியல் காழ்ப்புணர்ச்சி பற்றிய காரணங்களை நான் அறிய முற்படவில்லை. ஆனால் இதில் என்ன இன்வெஸ்ட்மெண்ட் opportunity இருக்கும் என்று தேடினேன்.

இந்த சாலைத் திட்டம் பற்றி பேச்சு வந்ததை வைத்து அதே வாரம் நான் வாங்கிய ஸ்டாக்குகள் CAT(கேட்டர்பில்லர்), DE(ஜான் டியர்). அப்போது 100$ பக்கம் இருந்தது. சில சில்லறை ஸ்டாக்குகளை விற்று, கொஞ்சம் ம்யூச்சுவல் ஃபண்டிலிருந்து எடுத்து இதை இரண்டும் வாங்கினேன். இப்போது நன்கு போகிறது.

இதை இப்ப சொல்லக்காரணம், ஒபாமா காலத்தில் ஒபாமாகேர் வரப்போகுதுன்னு படிச்சப்ப ஹெல்த்கேர் ஸ்டாக் மற்றும் ம்யூச்சுவல் ஃபண்ட் வாங்கிப்போட்டேன். 200-300% ரிடர்ன். இப்ப ட்ரம்ப் ஒரு பெரிய infrastructure திட்டம் கொண்டுவரப்போவதாகத் தெரிகிறது. அதில் ஒன்று சுவரெழுப்பவது. ஆனால் அதை விட வேற infrastructure projects கூட வரப்போவுதுன்னு நினைக்கிறேன். அதற்காக இனி அதை ஒட்டிய ஸ்டாக்குகள் தேட வேண்டும்.

I am not a certified financial planner and i am not recommending any kind of investments to anyone.


எனது மன ஓட்டங்கள் மட்டுமே!

Friday, January 12, 2018

நிந்தனை

மற்றவர்களை நீ நிந்திப்பதால்
நீயும் அதற்காக நிந்திக்கப்படுகிறாய்!

நீ ஒருவனை அவன் சாதிப்பெயரைச் சொல்லி வசைபாட ஆரம்பிக்கும் போது,
அவன் உன் சாதியின் கோலத்தை உணர்ந்து கொள்கிறான்!

ஏற்றத்தையும் இறக்கத்தையும் ஏற்பது
உனது நிந்தனை!

பிறரை நிந்திப்பதால் நீ உயரப்போவதில்லை!
உனது நிந்தனையே உன்னை கீழே தள்ளிவிடும்!

நிந்தனையத் தள்ளி விட்டு
சிந்தனையை உயர்த்து!

பங்குச் சந்தை

இன்றைய ஸ்டாக் மார்க்கெட் போகக் கூடிய வேகம் பார்த்தா மிக பயமாக இருக்கிறது. இவ்வளவு உயரம் அதுவும் ஒரு வருடத்தில் ஏறியதை விவரம் தெரிந்து பார்த்ததில்லை.

1997ல் இங்கு முதல் முதலாக 401கே சேமிப்பு கணக்கை துவங்கினேன். மாதம் 200 போட சிரமப்பட்டு போட்ட காலம். 2003 மற்றும் 2008களில் போட்ட பணம் 40% சதவீதம் கீழ போன போது தான் விழித்துக்கொள்ள ஆரம்பித்தேன். இழந்தவற்றை மீட்டெடுக்க உதவியாக யாஹு பைனான்ஸ் புரட்ட ஆரம்பித்தேன். ஜிம் க்ரேமர், வாரன் பஃபட் அறிய ஆரம்பித்தேன். அவர்களது பால பாடங்களே திரும்பி எழ உதவியது. 

முதல் பாடம் கற்றது எதுவும் தெரியவில்லை என்றால் dow jones indexல் இருக்கும் 30 கம்பெனிகளில் உனக்கு பிடித்தது வாங்கு என்று. எனது பட்ஜெட்டுக்குள் தேடி சிலவற்றை வாங்கினேன். அங்கிருந்து துவங்கியது.

கம்பெனிகள் நடத்தும் ரிடையர்மண்ட் கணக்குல நமக்க பிடித்த மாதிரி மாத்த முடியாது. 10 fundகளிலிருந்து செலக்ட் பண்ணனும். இழந்த பணங்களை முழுவதும் மீட்ட முடியவில்லை. கம்பெனி மாறிய போது 401கேயிலிருந்து எடுத்து ஒரு தனி IRA கணக்கில் போட்டு சுயமாக நிர்ணியிக்க ஆரம்பித்தேன்.

நிறைய அமெரிக்கர்களிடம் ஒரு பொது விதி உண்டு. ஒன்றும் தெரியவில்லை என்றால் வாரன் பஃப்ட்டின் கம்பெனி பேரில் போடு அல்லது ம்யூச்சுவல் ஃபண்டில் போடு என்று. 

வாரன் பஃபட்டின் b share ஒன்னு 2300$ அப்ப. அமைதியா 2 வாங்கிப்போட்டேன். சில நாள் கழித்து அது சிறு பங்குகளாக பிரித்துக் கொடுத்தார்கள். அன்றைய 50$ சிறு பங்கு இன்று 200$. இதிலிருந்து வந்த ப்ராபிட் எடுத்து அடுத்த நல்ல கம்பெனிகள் தேடி பிடித்து வாங்கினேன்.

பஃப்பட்டின் முக்கியமான அறிவுரை வாங்கக் கூடிய பங்குகளின் கம்பெனியை அறிந்து கொள்; மக்களுடைய போக்கு ஆசைகள் எதை நோக்கிப் போகிறது என்று பார்த்து வை; நன்கு கடுமையாக கீழ விழக்கூடிய நல்ல கம்பெனிகளின் பங்குகளை அடிமட்ட விலையில் இருக்கும் போது வாங்கு என்பார்.

Lehman brothers வீழ்ந்த காலங்களில் எல்லா வங்கிகளும் மிக அடிமட்ட விலையில் இருந்து. பஃபட்டின் கண்களோ wells fargo வங்கி நோக்கி இருந்தது. அதன் விலை அப்ப அதிகமாய் பட்டது(30$). Bank of America 5$ன்னு பார்த்தேன். சிட்டி வங்கி bankruptcy file  பண்ணுவாங்க இல்லாட்டி பப்ளிக் ஷேர் காலி பண்ணிருவாங்கன்னு தோணிச்சு BoA வாங்கினேன்.

Philips petroleum 18லிருந்து 2க்கு போன போது வாங்கனும்ன்னு பார்த்தேன். வாங்கலை. பஃபட் வாங்கினார். கடகடன்னு ஏற ஆரம்பிச்சுது. சரி அவர்களில் காலே அரைக்கால் சதவீதம் கூட தேற மாட்டோம்ன்னு, அவரது கம்பெனி ஸ்டாக்கே 80-100ல் இருக்கும் போதும் கொஞ்சம் வாங்கினேன்.

அவர்கள் மேலும் சொன்னது அமெரிக்காவுல பிஸ்ஸா கோக் பெப்ஸி பீர் சிகெரெட் பழக்கங்கள் என்றும் மாறாது அதில் போட்டால் எதுவும் மாறாது என்றார்கள். அந்த கம்பெனிகளை தேடி கொஞ்சம் கொஞ்சமாய் வாங்கினேன். வந்த பொழுது இங்க நிறைய பேர் கேஷ்ல தான் நிறைய வாங்குவார்கள். அப்புறம் கிரெடிட் கார்ட் அதிகம் வர ஆரம்பித்தவுடன் விசா மாஸ்டர்கார்ட் வாங்கினேன்.

இப்படி கீழ விழுவதைப் பிடிப்பதும், நிரந்தரமானதை தேடுவதும் தேடி ஓடி ஓடி இழப்புகளை மீட்டு எடுத்தேன். ஆனால் இத்தனை வருட உழைப்பை மிஞ்சக் கூடிய வகையில் ட்ரம்ப் வந்த ஒரு வருடத்தில் 40 சதவீதம் வரை போட்டவை ஏறும் போது என்ன நடக்குதுன்னு புரியமாட்டேங்குது. எதை நம்பி இவ்வளவு ஏறுது? இன்னும் 5-10% ஏறி இறங்கலாம். 

புதிதாக மார்க்கெட்டில் இறங்கக்கூடியவர்களுக்கான காலமல்ல இது. நான் வாங்கி வைத்துள்ள அத்தனை ஸ்டாக் மற்றும் ம்யூச்சுவல் ஃபண்ட் எல்லாம் இங்கு குறிப்பிடவில்லை. எதையும் வாங்கவோ விற்கவோ பரிந்துரைக்கவில்லை.