Sunday, December 19, 2021

நினைவுகளில் புரண்டாடும் வயதில் - 12


காலனியில் நடக்குற நம்ம வீட்டு விசேஷங்களில் எல்லாம் மற்றவர்கள் வந்து எல்லா உதவிகளும் சர்வசாதாரணமாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாம தானாகவே முன் வந்து நிறையவே உதவி செய்வாங்க. 


அதுமாதிரி நான் நிறையவே பார்த்திருக்கேன். மலைப்பிள்ளையார் கோவில் அருகிலிருந்த வீடுகளில் அம்மாஅடிக்கடி போய் கைமுறுக்கு சுத்திக் கொடுத்து விட்டு வருவார்கள். கல்யாண சீர் முறுக்கு 5 சுத்து, மத்தபடிதின்பதற்கு இரண்டு சுத்து என நிறைய முறுக்கு சுத்துவார்கள். அம்மாவோடு நான் அடிக்கடி போவேன், ஆதலால்அந்த வீட்டிலிருப்பவர்களை நன்கு அறிவேன்.


அதே மாதிரி ஆர்சி பிளாண்ட் கல்யாணசுந்திரத்தின் மனைவி எங்க ராஜீக்கா வருவாங்க. சிவில் பாலு மாமாவீட்டிலும் எங்க வீட்டிலும் எப்ப கூப்பிட்டாலும் வந்து விசேஷ நாட்களில் வந்து ரொம்ப உதவுவாங்க!


எங்க பூணல் எல்லாம் ஸ்டாஃப் அசோசியேஷன்ல தான் கூட்டாக நடந்தது, 5 பேருக்கு சேர்த்து வச்சு பூணல். ஸ்டாப் அசோசியேஷன் வாசல்லையே கொட்டகை போட்டு கிச்சன். கல்கண்டு கோபாலய்யர் மாமாட்டசொன்னா போதும் ரொம்ப நல்லாவே சமைச்சு கொடுத்திடுவார். அதே மாதிரி வேறொருத்தரும் நன்குசமைப்பார். 


பரிமாறுவதற்கு நம்ம காலனி மக்கள் யாருக்கும் விட்டுக்கொடுக்காம தானாகவே எல்லோரும் செய்வாங்க! கல்கண்டு கோபாலய்யர் மாமா பையன் வைத்தி, சுந்தரராமன் அண்ணா, ஜெயராமன் அண்ணா, ரிக்கார்ட்ஸ்ராமநாதன் அண்ணா, கேண்டீன் நாராயணன் மாமா, வெங்கட்ராமன் அண்ணா என ஒரு பெரிய க்ரூப்பே வந்துசெமையாக பக்கெட் எடுத்து பரிமாறுவாங்க. இன்னும் நிறைய பேர். கோல்டன் டேஸ்.


எனக்கும் ப்ளஸ் 2 படிக்கும் போது அத்தகைய வாய்ப்பு கிடைத்தது. விக்டர் அண்ணன் கல்யாண ரிசப்ஷன்1978-79 வாக்கில் நம்ம ஸ்டாப் அசோசியேஷனில் நடந்தது. முதல் நாள் ஸ்டாப் அசோசியேஷன் வாசல்லபந்தல் போட்டு வாழைமரம் கட்டி சீரியல் லைட்ஸ் போடற வேலை நடந்து கிட்டு இருந்துச்சு. அப்ப மனோவைப்பார்க்கனுமே! தன் சொந்த வீட்டுக்கல்யாணம் மாதிரி தோரணம் கட்டுவதும், உள்ளே ஹாலை அலங்கரிப்பதும், அவனுக்கு மோகன் எலக்ட்ரிக்கல்ஸ் மோகனும் சேகரும் ரொம்ப பழக்கம், அவங்களோடு சேர்ந்து சீரியல் லைட்போடுவதிலும் எல்லாவற்றிலும் செல்வன் சகாய் சார்லஸோட முன்னணியில் வேலை செய்துகிட்டு இருந்தான். அவன் முகத்தில் அவ்வளவு ஒரு மகிழ்ச்சி.


விக்டர் அண்ணன் திருமணம் அன்னிக்கு நான் காலையில எட்டு மணி வாக்கில், நான் ஸ்டாஃப் அசோசியேஷன்போனா அங்கு யாருமேயில்லை. அப்ப தான் தெரிஞ்சது அவங்க கல்யாணம் சேலம்கேம்ப் சர்ச்லேன்னு. பெண்ணும் சேலம்கேம்ப் தான். 


சரி நாம போய் டிபன் சாப்பிடலாம்ன்னு போனேன். நம்ம வைதீஸ்வரா ப்ரைமரி ஸ்கூல் ஹெட்மாஸ்டர் ரூம்வாசல்ல கிச்சன். குக் சமைச்சு கிட்டு இருந்தார். இலையெடுக்க பெண்மணிகள் இருவர் இருந்தனர். என்னபண்ணலாம்ன்னு யோசிக்கும் போது துவாரக்நாத் வந்தான். அப்ப துவாரக்நாத் எம்பிபிஎஸ் படிச்சுகிட்டு இருந்தநேரம். அவன் தம்பி ரவீந்தரநாத்தே என்னை விட இரண்டு வயது பெரியவன்.


நானும் துவாரக்நாத்தும் இருந்த டிபனை எடுத்துப் போட்டு சாப்பிட்டோம். சரி கிளம்பலாம்ன்னு நினைச்சா, செல்வம்/சகாயோட உறவினர்கள் ஒவ்வொருத்தரா வெளியூரிலிருந்த வர ஆரம்பிச்சார்கள். துவாரக் சொன்னான்வா நாமளே சர்வ பண்ணுவோம்ன்னு. நாங்க இரண்டு பேர் தான். கட கடன்னு வர்றவங்களுக்கு டிபன்இலையைப் போட்டு தண்ணி வச்சு டிபன் வச்சு கிட்டத்தட்ட 25-30 பேருக்கும் மேல வந்தவங்களுக்கு சர்வ்பண்ணியிருப்போம். பத்தரை மணி ஆகுற நேரத்துல, சேலம்கேம்ப் சர்ச் கல்யாணம் முடிஞ்சு, பெண்வீட்டுக்காரங்களில் 4 பேர் வந்து, இது எங்க வீட்டு முறை, பெண் சைடு தான் பண்ணனும், நீங்க யாருன்னுகேட்க, நானும் துவாரக்கும் சிரிச்சுகிட்டே வா போலாம்ன்னு வந்துட்டோம். செம நிறைவாக இருந்தது. அருமையான நாட்கள் அவை.


ஏதோ எழுத வந்து ஏதோ நினைவுகள் வர பலவற்றை எழுதி விட்டேன். மன்னிக்கவும். பழைய நினைவுகளில்புரளும் போது ஏதேதோ நினைவுக்கு வருகிறது.


இன்று இங்க கடையில் இலந்தவடை கிடைத்தது. அதோடு கைமுறுக்கும். கைமுறுக்கில் ஆரம்பிச்சு என்கையை முறுக்கி கிட்டேன் (நிறைய எழுதியதைச் சொல்கிறேன்).


இன்று கிடைத்த இலந்தை வடை ரொம்ப சுமார். நல்லாவேயில்லை. இத்தனைக்கும் freshஆகத்தானிருக்கு. வைதீஸ்வரா ஸ்கூல்ல படிக்கும் போது வெளிய அரசமரத்தடியில் இலந்தைவடையும்/எளந்த வடையும், கம்மர்கட்டும், மாங்கா மற்றும் நெல்லிக்காய் விற்பாங்க! அதை வாங்கிச் சுவைத்த அநுபவமே தனி. அந்தஇலந்தவடைக்கு ஈடுஇணையே இல்லை.


பிறகு தொடர்கிறேன்.


பின் குறிப்பு: நான் எழுதியது ஏதாவது யாருக்காவது பிடிக்கவில்லையென்றால் சொல்லுங்கள். எடுத்துவிடுகிறேன்.

நினைவுகளில் புரண்டாடும் வயதில் - 11


காலனியில பஜனைமடம் ரெகுலாரகப் போகிறவர்களுக்கு இந்த மார்கழி தனுர் மாசம் சிறப்பான மாசம். பஜனைமட வாழ்வை பின்னாளில் எழுதலாம்ன்னு நினைச்சேன். ஆனால் இன்று மார்கழி 1. 


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளில் கார்மேனிச் செங்கண் மதி நிறைய நாராயணனை ஆண்டாள்வழிபட்ட இந்தாள் சீக்கிரமே வந்ததால் இன்றே துவங்குகிறேன்.


நான் 5 வயதிலிருந்து 13-14 வயது வரை மிகுந்த ஆர்வத்தோடு கலந்துகிட்டது இந்த மார்கழி மாத பஜனை. பஜனை ஊர்வலமாக காலை 5.15-5.30க்கு பஜனை மடத்தில் கிளம்பி, மேல் லைன் மற்றும் பிள்ளையார்கோவில் வழியாக வந்து நேராக b line மேட்டு இறக்கத்தில் இறங்கி b line - c line வழியாக வந்து காலனி சுற்றிமெயின்ரோடு வழியாக பஜனை மடத்துக்கு காலை 6.30க்குள் வந்தடைஞ்சுரும்.


மார்கழி மாச குளிரில் காலையில் எழுந்திரிக்கறதே கஷ்டம், இருந்தாலும் குளிச்சுட்டு அந்த குளிரில் நடந்துவரும்போது சில சமயம் பல்கூட நடுங்க ஆரம்பிச்சுரும்.


அப்பா காலையில் 4.30 க்கே எழுந்து அம்மா போட்டுத்தர்ற வெந்நீரில் குளிச்சுட்டு 5.30க்குள்ள பஜனைகிளம்பறதுக்குள்ள அங்க ஓடிடனும்ன்னு பார்ப்பார். அவர் என்னை விட்டுட்டுப் போயிடுவாரோன்னு குளிக்காமகூட அவரோட ஓடுவேன். அப்பவும் சில நாள் எழுந்திரிக்க முடியாம மிஸ்ஸாயிடும் எனக்கு.


அப்பாக்கு லேட்டாகி பஜனை ஆரம்பத்துல கலந்துக்காம பிள்ளையார் கோவிலிலோ அல்லது அஷ்டகிரகம்வரைக்கும் போய் அங்க கலந்து கிட்டா கூட சிவராமன் மாமா ஏதோ சொல்லிடுவாரோன்னு பயம். அவரைக்கண்டா அப்பாக்கு நடுக்கம் தான்.


ராஜா பாகவதர் மாமா, தெலுங்கு சீதாராமன் மாமாவெல்லாம் அப்பாக்கு ரொம்ப தோஸ்த் மாதிரி, ஆனால்சிவராமன் மாமாவைக் கண்டா பயம். பஜனை ஊர்வலத்துல வரும் போது சிவராமன் மாமா எப்ப தன்னைப் பாடச்சொல்லுவார்ன்னு வைட் பண்ணிக் காத்திருப்பார். எப்படியும் ஒரு நாமாவளி பாட சான்ஸ் கிடைக்கும். சிலசமயம் இரண்டு கிடைக்கும். 


சில நாள் கிடைக்கலைன்னா எனக்கு செம ஏமாற்றமாக இருக்கும். என்னப்பா இப்படின்னு அவர்ட்ட சண்டைபிடிப்பேன். அவரோ, ஏண்டா நான் பாடறதோ சில வரி நாமாவளி, அவாயெல்லாம் முழுப்பாட்டு பாடி வர நேரம்வேண்டாமா என்பார். எதையும் ஏமாற்றமாகவே எடுத்துக் கொள்ள மாட்டார். அவர்கள் மாதிரி பாட முடியலை, பாட்டு முறையாக கத்துக்கலைன்னு வருத்தத்தை மறைச்சு வேற மாதிரி சொல்லி சமாதானப்படுத்திடுவார்.


பஜனைல வர்ற மத்தவங்கெல்லாம் அப்பாவை ஜெய் அநுமான் பாட்டைத் தான் பாடச்சொல்வாங்க, ஆனால் அதுகடைசியாகத் தான் பாடனும்பார். அதற்காக வேறு சில நாமாவளிகளையும் முதல் நாள் இரவு டின்னர் முடிஞ்சுதன்னோட ஈசிசேரில் வாசலில் சாய்ந்து படுத்திருக்கும் போது பாடிப்பார்த்துக் கொள்வார்.


அவர் காலடியிலேயே எப்போதும் சுத்திகிட்டிருந்த நான், அவர் தனக்குள் முனுமுனுத்துக் கொள்கிற சிலபாட்டைப் பாடச் சொல்வேன். அது நிந்தாஸ்துதி, அதை பஜனை ஊர்வலத்துலப்பாடக்கூடாதும்பார். எங்கள்வற்புறுத்தலில் வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் பாடிக்காண்பிப்பார். அது முருகப்பெருமானை நிந்திப்பதுபோல் துதித்துப் பாடுவது.  அந்தப்பாடல் நினைவிருக்கிறது, ஆனால் அவரே வெளியே பாட விருப்பப்படாததால்அதை இங்கே குறிப்பிடவில்லை.


சிவில் பாலு மாமா காலை 4.30-4.45க்கே கிளம்பி ஊர்வலம் புறப்படுவதற்கு முன்பே பஜனை மடத்தைத் திறக்கஓடிடுவார். சூறாவளி ராமன் மாமாவும் அங்கு இருப்பார். அவர் மற்றும் அவர் தம்பி பிச்சுமணி எல்லாம் பஜனைமடத்தில் ரெகுலர்.


பாடல்கள் பாடுவதற்கு எவ்வளவு லெஜண்ட்ஸ் இருந்தனர். வாவ். அது எனக்கொரு பொன்னான காலம் அது. ராஜா பாகவதர், சிவராமன் மாமா, தெலுங்கு சீதாரமன், ஆர்கே சுந்தரம், ஜே பி சாரதி, சந்திரசேகரன்(சுலோச்சனா மாமி), ஆர் சி பிளாண்ட் கல்யாணசுந்தரம் (அவர் அங்கிருந்து இங்க வருவார். அவ்வளவுdedication, involvement), பகவதி, என ஒரு பெரிய பஜனை கோஷ்டியே பாடுவார்கள். இன்னும் நிறைய பேர்பாட இருப்பார்கள், சான்ஸ் கிடைக்க வைட் பண்ணுவார்கள். கூட வர்றவங்க பேரை அடுத்த போஸ்டில்போடுகிறேன். ஹாஸ்டல் ஶ்ரீசைலமே ரொம்ப நல்லாப்பாடுவார், ஆனால் அவரால் ஹாஸ்டல் விட்டு வர முடியாது. 


எழுத வேண்டிய பெயர்கள் நிறைய உண்டு. எவ்வளவு முடியுமோ ஞாபகம் வருதோ அவற்றை எழுதுகிறேன்.


இது எல்லாத்தை விட நான் அங்க போவதற்கு முக்கிய காரணம் அந்த சுவையான பொங்கல் அவ்வளவு பெரியதொன்னையில வாங்குவதற்கு.


போஸ்ட் பெருசாயிடுச்சு. மார்கழி மாச போஸ்டை பொங்கல் இல்லாம முடிக்கக் கூடாதுன்னு இன்னிக்குசுருக்கமாக சொல்லி முடிச்சுக்குறேன். நிறைய சுவைபட அநுபவங்கள் உண்டு. எல்லாவற்றையும் எழுதமுடியுமாதெரியலை. பலருக்கு போரடிக்கலாம். குறைத்துக்கொள்கிறேன்.


அடுத்து வரும் போஸ்ட்களில் தொடர்வோம்.