Tuesday, March 19, 2013

உறுதுணை

வணக்கம் தோழனே,

தோல்வியென நினைக்கையில்
நம்பிக்கை துளிர்க்க விடும்
நண்பனிருக்கையில்
துவளவிடாமல் உயர்த்திப் பிடிக்கும் தோழனே!

நீ என் நண்பன் என்பதை
உணர வைக்க முடியாமல்
நம்பிக்கைத் தளர்ந்திடும் நேரத்தில்
என்னுளிருக்கும் திறமையத்
தெரிய வைப்பதில்
நீ கை தேர்ந்தவனாய்
அவதரிக்கிறாய் தோழனே !

ஆரம்பத்தில் துவண்டு கொண்டிருந்த
உனக்கு உறுதுணையாய்
நின்றதன் பலன்
இன்று நீ  கைமாறு வழங்கிடும் 
வேளையில் நன்றியுடன் உனை நோக்கின் 
என் நட்புணர்வின் சிறுமையை 
எழ வைக்கும் தோழனே !

உன் பாதையில் நான் வந்த 
அதிசயத்திற்கு வணக்கம் கூறி 
நம் நட்பு தொடர வேண்டி 
வழி மொழிகிறேன் தோழனே!

உறுதுணை எனது!

Thursday, February 21, 2013

சகோதரத்துவம்

சகோதரத்துவம் 

ஒரு தலை துண்டிப்புக்கு
ஒரு மரண தண்டனை
ஒரு குண்டு வெடிப்புக்கு
ஒரு கொலை வெறியாட்டம்
ஆடத் துடிக்கும் கூட்டம்

இன்னொரு துர்மரணத்தையும்
எதிர் நோக்கையில்

ஒன்றாய் இருந்தாய்
பிரிவினையால் பிரிந்தாய்
பிரித்தவன் பிரிந்து சென்றான்
பிரிந்தவர்கள் 
பிரிந்து கொண்டே செல்கின்றனர்!

எல்லாம் தொடங்கியது
எங்கிருந்து என்றுணர்ந்து 
பிரிந்தவர் ஒன்றுனரும் 
காலம் வரை 
இன்னொரு கொலை
பாதகச் செயல் நடவாமல் 
காக்க வேண்டியது
நம் சகோதரத்துவம்!

ஒன்றினைவாய் ஒருங்கினைப்பாய்
ஒற்றுமையை விட
இனிமைஎதுவும் இல்லை
என உணர்ந்திடுவாய் 
ஒரே நாட்டில் 
சகோதரர்களே!

Wednesday, February 20, 2013

வெறுப்பு


வெறுப்பையே உமிழ்ந்து கொண்டிருப்பவனை
இயல்பாய் கவனியாமல் இருப்பது போல்
நடிக்க முடிவதில்லை. 

கவனித்தால் அந்த நெருப்பு நம்மை
நோக்கி உமிழப் படுகிறது.

தளும்பும் குடத்தில் சிதறும்
நீர் போல் உலர்ந்து போவட்டும்
உன் வெறுப்பு.

நான் குடம் சுமக்கும் பெண்! 

Saturday, January 12, 2013

காக்கா குளியல்


காக்கா குளியல்

நீண்ட நாட்களுக்குப் பிறகு வெயில் கொஞ்சம் சூடா வந்துது. லேக் சுத்தி இரண்டு மைல் நடந்து வரலாம்ன்னு போனோம். அருமையா இருந்தது.

ஒரு 70 வயது லேடியின் மற்றும் தாத்தாவின் ஸ்பீட் துளி கூட பிடிக்க முடியவில்லை. என்னப்பா நத்தை மாதிரி ஊர்ரேன்னு திட்டி கிட்டே வேற வரான். டபுள் இன்சல்ட். 

இயற்கையையாவது ரசிப்போம்ன்னு ரசிச்சுகிட்டே வந்தேன். ஒரு காகம் அழகா மரத்திலிருந்து தரைக்கு வந்து தத்தி தத்தி கரையோர நீரில் செம குளியல் போட்டது. ஐந்து ஆறு தடவை முக்கி எழுந்து இறக்கையை உதறி விட்டு மறுபடியும் கிளை மேல தாவி, இன்னும் கொஞ்சம் இறக்கையை உதறி சத்தமா கரைய ஆரம்பிச்சுது. மற்ற காகங்களுக்கு தனது சுகக் குளியலை அறிவிப்பது மாதிரி இருந்தது.

இன்னும் அரை மைல் நடந்த பிறகு ஒரு வினோதமான பறவை ஒலி . கிறீச் க்றீச்ன்னு தலை மேல கேட்குது. தலையைத் தூக்கிப் பார்த்தா ஒரு அழகான ஹக். பக்கத்திலுள்ள ஆளிடம் தெரிஞ்ச ரெண்டு பேரைச் சொல்லி அப்புறம் அது ஹாக் ன்னு தெரிஞ்சுகிட்டேன். பறவையின் உள்புறம் உள்ள ப்ரௌன் நிறம் வைத்து தெளிவாச் சொல்றாராம். கேட்டுகிட்டாச்சு. 

மூன்று மைல் நடந்தோம்.

Thursday, January 3, 2013

இடமறியா மணப்பெண்


இடமறியா மணப்பெண்!

தேவையற்ற இடத்தில் காலை வைத்து 
பொருந்தாத விடயத்தில் மாலை போட்டு 
விருப்பமில்லா மணப்பெண் ஆனேன்!

மண்ணில் வேரூன்றியவை 
விஷமாய்ப் போனதால்
வைக்கும் இடமெல்லாம் 
முள்செடி ஆனதடா !

முள்ளின் மீது நடக்கும் போது  
காலில் குத்தும் முட்கள் 
அகட்டி விடும் காலம் வரும் வரை 
விளையாத மண்ணில் விதைக்கும் 
பருத்தியானேன் !

முள் அகற்றத் தெரியாத 
சமூகத்தின் வேர்களைத் 
தவறித் தூக்கிப் பிடிக்கும்
கருவேல மரமானேன்!

பருத்தி முள்செடி கருவேலத்தை 
ஒன்றாய் நோக்கியதில் 
பஞ்சும் தெரியவில்லை 
எரிக்க விறகும் கிடைக்க வில்லை!  

Monday, December 31, 2012

வருடத்தின் கடைசி நாளில்

வருடத்தின் கடைசி நாளில் புதிதாக ஒரு restaurant போக முடிவெடுத்து நானும் என் மகனும் ஒரு pizza inn கடைக்குள் மதியம் buffet உண்டு என்றறிந்து சென்றோம்.

நுழையும் போதே மிக மலர்ந்த முகத்துடன் சீன கொரியா பெண்கள் வரவேற்றனர். கடையில் முழுவதும்  வேலை செய்வது சீன கொரியா பெண்கள் என்று தெரிந்தது. முப்பதுக்கும் மேல் ஆட்கள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

நானும் பையனும் உள்ள நுழையும் முன்னரே அதிகம் vegetarian கிடைக்காது என்று தெரிந்தும் கிடைத்த வேகிடரியன் மட்டும் உண்டு விட்டு மேலும் பசியிருந்தால் வேறு இடம் பார்க்கலாம் என்று முடிவோடு தான் போனோம்.

ஏழெட்டு pizza tray முழுவதும் non-vegetarian pizza மட்டும் இருந்தது அதிர்ச்சியாக இருந்தது. எப்போதும் cheese pizza இருக்கும். அதுவும் காணோம். பையனும் நானும் கொஞ்சம் அதிர்ந்து விட்டோம்.

ஒரே ஒரு பணியாளரிடம் vegetarian pizza ஏதாவது இருக்கா என்று கேட்டேன். சிறிது கூட முகம் கறுக்காமல் சிரித்துக் கொண்டே அமருங்கள் வரும் என்றனர்.

அடுத்த பத்து பதினைந்து நிமிடங்களில் நடந்தது கனவா என்று தெரியவில்லை.

வரிசையாக ஐந்து விதமான vegetarian pizza எட்டு எட்டு துண்டுகளாக நறுக்கி ஐந்து tray இல் buffet டேபிளில் கொண்டு வந்து நிரப்பி விட்டனர்.

ஒவ்வொரு  தட்டும்  கொண்டு வந்த பின்னர் ஒருவர் வந்து முகமலர்ச்சியுடன், இப்போது spinnach pizza , இப்ப ப்ரோக்கொலி வித் lettuce, அடுத்து vegetarian pizza டேபிளில் வைத்திருக்கிறோம் என்று சொல்லி கொண்டு வந்து அசத்தி விட்டனர். ஒவ்வொன்றும் செம ருசி. கடைசி வரை நின்று கவனித்தனர்.

ஒரே கட்டணம். அதிகம் ஒன்றும் சொல்ல வில்லை, முகம் சுளிக்க வில்லை. மலர்ந்த முகத்துடன் செய்தனர்.

கடைசியில் விடை பெறும் போது இன்று நீங்கள் மட்டும் தான் vegetarian இங்கே என்று சிரித்துக் கொண்டே சொன்னார்கள்.

ஒரு பெரிய வாழ்த்துடன் விடை பெற்றோம்.

வருடத்தின் கடைசி நாளை நல்ல சுவையுடன் உணவளித்து ஒரு மலர்ந்த நினைவலைகளை உருவாக்கிய நம்மைப் போன்ற அந்த தென் ஆசிய மக்களை புத்தாண்டு நினைவோடு வாழ்த்துகிறேன்.

வரும் புத்தாண்டு உங்களையும் இவ்வாறு சிறக்க வைக்க வேண்டுதலுடன் உங்கள் அனைவருக்கும் ஒரு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்.

Wednesday, December 26, 2012

சோற்றுக்கணக்கு

ராசக்கா காலையில நேரத்தில எழுந்திரும். எழும் முன்னவே நாள் முழுக்க என்ன செய்யனும்ன்னு எதையோ யோசிச்சிட்டே இருக்கும். ராசக்காவின் மாமனோட உறவு சனம் தினம் பத்து பதினைந்து பேரோ அவங்க வீட்டுல சாப்பிடும். அக்கா  எல்லோரையும்  மிரட்டி எதோ வேலை வாங்கி கிட்டே இருக்கும். ஒருத்தரும் சம்பாதிச்சு கொடுக்க இல்லை. மாமன் கொண்டு வருவது தான். இத்தினி பேர் சாப்பிடுதுங்கலேன்னு ஒரு தடவையும் சொல்லிக் காமிக்காது. ஆனால் ராசக்காவின் பேச்சுத் தொனியே அவிங்களை விலக்கி வைச்சிரும். தன்னோட தடித்த உருவத்தையும் தடித்த குரலையுமே தனது பலமாக வைத்தே வாழும் உசிரு அது.

நான் அது வீட்டுக்குள்ள நுழையும் போது அதன் முகத்தில ஒரு தனி மலர்ச்சி தெரியும். இத்தனிக்கும் மாமன் தான் என்னை தூக்கி வைச்சு விளையாடும். அக்கா வேலையா இருந்தாலும் கண்ணு மட்டும் என்னோட விளையாட்டையும் குறும்பையும் தனியாப் பார்த்து ரசிக்கும். பிறவு தனியா என்ர  ஆத்தா கிட்ட சொல்லும் போது தான் இத்தினியும் கவனிச்சிருக்குன்னு தெரியும். ஒரு வெள்ளி கிண்ணத்துல சோறு பிசைஞ்சு ஊட்டும். மாமனோட வெள்ளித் தட்ட வையுன்னு அடம் பிடிச்சாலும் எதையோ சொல்லி வெளியத் தூக்கி கிட்டு வந்திரும். மாமனோட அக்கா அந்த தட்டை மாமனுக்குத் தவிர யாருக்கும் கொடுக்காது. ரொம்ப கேட்டா போய் உன்ர வீட்டுல துன்னுன்னு விரட்டும். ராசக்கா  வெளிய கூட்டி வந்திரும்.

தினம் பத்து பேரு திங்கிற வீட்டுல ராசக்கா ஏதொ சொல்லிச்சுன்னாத் தான் சண்டை வரும். மாமனோட மச்சான் உள்ள வராம வெளிய நின்னு பேசிட்டுப் போயிரும். யாரும் சாப்பிடுவதற்கு ஒன்னும் சொல்லாது. ஆனால் ஏதொ ஒன்னு சொல்லி சண்டை வர வழவைச்சிரும். எதுவும் புரியாம அங்கேயே விளையாடிகிட்டு இருப்பேன். யாராவது கண்ணு கசங்கிச்சுன்னா ஓடியாந்துருவேன்.

ஊராம் புள்ளைய எடுத்து வளர்த்தா தன்  புள்ளை தானே வளரும்ங்கும். ஆனால் அக்கா வீட்டுல புள்ளைகுட்டி கிடையாது. என்னைத் தவிர அது வளர்த்து விட்டது மாமனோட உறவு சனத்துல மட்டும் தான். அந்த புள்ளைங்களோட விளையாடுவேன். அங்கிருக்கிற வாலிபப் பசங்க பொண்ணு பிள்ளைகளோடு விளையாடுவேன். வீட்டுக்கு சாப்பிட தூங்க மட்டும் வருவேன்.

நான் வளர வளர அந்த வீட்டுல வளர்ந்த மற்ற புள்ளைங்களுக்கும் கல்யாணம் சேர்த்தி எல்லாம் செய்து வைச்சது. அந்த வீட்டு கல்யாணம் பண்டிகை சேர்த்தி எல்லாத்திலும் என்னை பக்கத்தில வைச்சுக்கும்.

ஜெயமோகனின் சோற்றுக்கணக்கு  படிக்கும் போதெல்லாம் அதில் வர்ற கேத்தேல் சாஹிப் என்ர ராசக்கவாத்தான் இருக்கும். ராசக்காவின் சோத்துக் கணக்கை யாராலயும் அடைக்க முடியாது.