Monday, May 31, 2021

ஒரு அஞ்சலி பழைய நினைவுகளுடன்

1984-85 முதுகலை முதல் வருடம் சென்னையில் படிச்சுகிட்டு இருந்த நேரம். 20 வயது எனக்கு. ஆங்கிலம் ஓரளவே.

ஒரு சனிக்கிழமையோ ஞாயிறு அன்றோ தெரியலை, காலை பத்து மணிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக சென்னை எல்ஐசி பில்டிங்கில் இலங்கைத் தமிழர் பிரச்சனை சம்பந்தமாக, ‘மாநில சுயாட்சியா? தனி ஈழமா?’ங்கிற தலைப்புல பேசப்போறாங்கன்னு முன்னாடியே போயிட்டேன்.

முன்னாடியே போய் நின்றாலும், மேடையில் உட்கார்ந்திருக்கிற ஆளுமைகளைப் பார்த்து பயந்து போய் முன் வரிசையில் உட்காராமல், ஆறாவது ஏழாவது வரிசைக்கு வந்து, மேடை நோக்கிப் போகும் வழி பாதை ஒட்டி இருக்கிற சேர்ல உட்கார்ந்துகிட்டேன். கூட்டத்துல வந்தது மொத்தம் 100க்கும் மிக குறைவு.

அன்று தலைப்பு பற்றி பேச வந்தவர்கள், டியூஎல்எஃப் தலைவர்கள் சிவசிதம்பரம் மற்றும் அமிர்தலிங்கம் ஐயா அவர்கள்.

கூட்டத்திற்கு தலைமை மைதிலி சிவராமன், அவர் அருகில் என் ராம் அவர்கள். 

ஆங்கிலத்தில் ஆரம்பித்த கூட்டம் படிப்படியாக தமிழிற்கும் மாறியது. நான்கு சிறந்த ஆளுமைகளின் பேச்சைக் கேட்பதே சிறுவனான எனக்குப் பெருமையாக இருந்தது.

பாதி கூட்டத்திற்கு நடுவிலேயே, சிவ சிதம்பரம் ஐயா பேசிகிட்டு இருக்கும் போதே, என் ராம் அவர்கள் எழுந்து கடைசி வரிசையில் திடீரென வந்து சேர்ந்து கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி வீ ஆர் கிருஷ்ணய்யரை மேடைக்கு அழைத்தார். அவர் சொல்லி தான் அது வி ஆர் கிருஷ்ணய்யர் என்று தெரிந்தது. அதுவரை அவரை யாரோ கடைசி வரிசையில் லேட்டாக வந்து உட்கார்ந்தவர்ன்னு நினைச்சேன். கொச்சியிலிருந்து விமானத்தில் வரும் போது கொடுத்த ஹிந்து பேப்பரில் இன்றைய நிகிழ்ச்சியில் இந்த நிகழ்ச்சியைப் பார்த்து நேராக ஏர்போர்ட்டிலிருந்து வருவதால் தாமதமாகியதாலும், தான் வெறும் பார்வையாளறாக பேச்சைக் கேட்கவே வந்தேன்னு சொன்னவரை விடாமல் மேடையில் உட்கார வைத்துவிட்டார் என் ராம்.

எனக்கு பக்கத்தில் எம்ஐடிஎஸ்ஸில் பிஎச்டி பண்ணிக்கொண்டிருந்த கண்பார்வையற்ற மாணவர் திலீப் உட்கார்ந்திருந்தார். பிற்காலத்தில் அவர் ஐஐடி புரபசர், இப்போது மறைந்து விட்டார். கூட்டம் முடிந்து வெளியே வந்த போது அவரோடு ஒரு புது அநுபவம். அது இன்னொரு நாளில்.

மேடையில் உட்கார்ந்திருந்த மைதிலி சிவராமனின் பேச்சு கம்பீரமாக இருந்தது மட்டுமல்ல, தலைப்பு பற்றி பேசுவதன் முக்கியத்தையும் அது பற்றி பேசும் இலங்கைத் தலைவர்களையும் introduce பண்ணி மிக அழகாகப் பேசினார். இந்த கூட்டம் துவங்கும் முன் மைதிலி அவர்கள் என் ராம் மற்றும் வெங்கடேஷ் ஆத்ரேயா போன்றவர்களுடன் ஒரு அயல்நாட்டு கல்லூரி நண்பர்கள் கலந்துரையாடுவது போன்று ஒரு உடன் 
பிறந்தவர்களோடு கொண்டாடும் நட்பு போல் பழகியது பிரமிப்பாக இருந்தது.

மேடையிலிருந்த ஆளுமைகளில் என் ராம் அவர்கள் தவிர மற்றவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்து விட்டனர்.

சென்னை மற்றும் திருச்சியில் கல்லூரிகளில் படிக்கும் போது மைதிலி சிவராமன் அவர்களின் பேச்சை ஒரு பத்து தடவைக்கும் மேல் என்னோட மாணவர் பருவத்தில் கேட்டிருப்பேன். பக்கத்திலும் நின்று பார்த்திருக்கேன். ஒரு தடவை கூட அவரோடு பேசியதில்லை. அந்த கம்பீரத் தோற்றத்தைக்கண்டு ஒருவித மரியாதை கலந்த தயக்கம். தள்ளியே நின்றிருக்கிறேன். மாணவர் பருவத்திற்குப் பிறகு அவரைச் சந்தித்ததில்லை.

இன்று அவர் மறைந்து விட்டதாகக் கேள்விப்பட்டேன். ஆழ்ந்த அஞ்சலிகள்.

ஒரு ஆளுமையின் நீண்டதொரு உறக்கம் அது! 

பெரிய ஆளுமைகளுக்கு அஞ்சலி சொல்வதில்
வாழ்வினிது
ओलै सिरिय !

Saturday, May 29, 2021

பிள்ளை தானாக வளர்கிறான்

பையன் மிடில் ஸ்கூல் முடிச்சு ஹைஸ்கூல்ல 9வது சேர்த்துவதற்கு முன் இங்க பள்ளிகளில் ஒரு நாள் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து பள்ளியில் உள்ள பல்வேறு அமைப்புகள், activities, courses, curriculum  எல்லாம் விளக்கமாக ஒரு்நாள் கோடை விடுமுறையில் செய்வாங்க. 

மிடில் ஸ்கூல்ல பள்ளி விட்டுப் போறவங்களுக்கு, ஹைஸகூல்ல என்ன பண்ண முடியும்ன்னு சொல்வாங்க! ஏதாவது ஒரு ஹைஸ்கூல் அட்மிஷன் கிடைச்ச பிறகு அந்த ஸ்கூல் இதையே பெற்றோர்க்கு நடத்தும்.

4 வருடம் முன் நான் மட்டும் அந்த ப்ரோகிராமுக்குப் போய் வந்தேன். அதில் core subjects தவிர மற்ற வகுப்புகளுக்கு நிறைய வாய்ப்பு இருந்தது. IB, MBSA, Music, Aeronautics என பல்வேறு விதமான கோர்ஸ் அந்த பள்ளியிலிருந்தது. இந்த தனி ப்ரோகிராம்களுக்குத் தனிதனியா அப்ளை பண்ணனும்.

9வது படிக்கிற பசங்க பெற்றோர் பேச்சைக் கேட்பது குறைய ஆரம்பிக்குற நேரம்.

பையன்ட்ட சொல்லாம மெடிகல் பயோசயன்ஸ் அகெடமி (MBSA)ல சேர்த்துவுட்டுபுட்டேன். ரொம்ப டிமாண்ட் உள்ள கோர்ஸ், ஆனால் பல குழுந்தைகள் இது வேண்டாம்ன்னு ஒதுங்கிடுவாங்க. முதல்ல கிடைக்கலை. பின்னாடி யாரவது ட்ராப்அவுட் இருக்கான்னு பார்த்து சேர்த்து விட்டேன்.

பையன் சேருவதற்கு முன்னும் சேர்ந்த பிறகும் ஒரு வருசமாக திட்டிகிட்டு இருந்தான். எனக்கு பைலட் ஆவனும் நீ இப்படி பண்றேன்னு ஒன்னரை வருஷம் திட்டிகிட்டு இருந்தான். நண்பனாகவே பழகி எதையாவது சொல்லி பேச்சை மாத்திருவேன்.

10/11த்து ஆரம்பத்துல இந்த ப்ரோகிராம்ல ஒரு மெடிகல் காலேஜ் field trip கூட்டிப்போனாங்க இவனை. அங்கு ஒரு டெமோ ஆபரேஷன் பண்ணச்சொல்ல, இவன் அதை ரொம்ப சரியாகப் பண்ணியிருக்கான். அந்த ட்ரிப்ல 10,11,12 வதுல இருக்கிற அத்தனை mbsa மாணவர்களும் இருந்த ட்ரிப். இவனோட செயலைப்பார்த்த அந்த மெடிக்கல் காலேஜ் புரபசர், இவனை அவர்ட்டயே வந்து சேர்ந்துக்கச் சொன்னார். இவன் நான் ஹைஸ்கூல் சீனியர் இல்லைன்னு சொல்ல அவர் அசந்து போயிருக்கார்.

இவனுக்கு அப்பத் தான் நான் சேர்த்திவிட்ட கோர்ஸோட பிடிப்பு இவன்ட்ட வர ஆரம்பிச்சு. திட்டறதை நிறுத்திக்கிட்டான்.

அந்த வருடம் சம்மர் ஹாலிடேஸ்ல இவனை அதே மெடிக்கல் காலேஜ்ல 3500-4000$ கட்டி ஒரு வாரம் இரண்டு வீக்கெண்ட் சேர்த்து அங்க dormலேயே தங்கி படிக்கிற மாதிரி ஒரு கோர்ஸ் சேர்த்து விட்டேன். நாடு பூராவிலிருந்தும் ஒரு 300-400 ஹைஸ்கூல் ஸ்டண்ட்ஸ் சேர்ந்து ஒன்னா தங்கிப்படிக்கிற ப்ரோகிராம் அது. அந்த ப்ரோகிராம் முடிச்சதிலிருந்து பையன் என்னை எதுவும் அண்ட விடுறதில்லை. தனக்கே பிடிப்பு வந்து, என்னை நெருங்க விடாமல் கடந்த இரண்டு வருடமாக இந்த ப்ரோகிராமில் ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்து விட்டான்.

போன வருட சம்மர் ஹாலிடேஸ் பூரா காலையில ஆறு மணிக்கு தானே எழுந்து, ஏழுமணிக்கு வீட்டை விட்டு கிளம்பி ஒரு orthopedic surgeon கிட்ட shadowing பண்ணினான். 135 மணி நேரம் வாலண்டியரிங் செய்ய வேண்டிய இடத்துல 430 அவர்ஸ் பண்ணினான். சம்பளம் கிடையாது. பெட்ரோல் செலவு போக தினமும் நமக்கு 45-50$ செலவு ஆகும். மாலை 5 மணிக்கு முடிஞ்சவுடனே நேரா ஜிம்ல 2 மணிநேரம் செலவு பண்ணிட்டு இரவு 9 மணிக்கு மேல வீட்டுக்கு வருவான். 

நமக்கு தான் அடிச்சுக்கும். கோவிட் ப்ரியட். தடுப்பூசி கூட வராத நேரம்.

அது முடிஞ்சு ஸ்கூல் ஆரம்பிச்சு இரண்டு மாதம் கூட ஆவலை. அப்பா என்னோட வான்னு கூட்டிப்போனான்.

பக்கத்திலுள்ள (20 மைல்) கம்யூனிட்டி காலேஜில் போய், ஒரு பெரிய ஹாஸ்பிடலுக்கு அடுத்த பில்டிங், இங்க ECG technician கோர்ஸ் பண்ணப் போறேன், பணத்தைக் கட்டுன்னான். பேசாம கட்டிட்டு அதற்கு புக் வாங்க ஒரு தனி கதை நடந்தது. கோர்ஸ் முடிஞ்சு இரண்டே வாரத்துல நேஷனல் certification exam எழுதி certified ஆகிட்டான். 

Certified ஆனதிலிருந்து தினமும் தொல்லை. இந்த ஹாஸ்பிடல்ல கோவிட் யூனிட்ல வேலை இருக்கு, அந்த ஹாஸ்பிடல்ல வேலை இருக்கு. ஸ்கூல் முடிஞ்சு வீக் எண்ட் போறேன், ஒரு மணி நேரத்துக்கு 35$ தர்றாங்க நான் போறேன்னு ஒரே அடம். நாங்க முடியாதுன்னு சொல்ல வேண்டியதாகிட்டது. நீ கோவிட் யூனிட் போய் வந்தா நாங்க ஆபீஸ் போக முடியாது, உன் வேலையோட அம்மா வேலை பெருசு, தடுப்பூசி வேற வரலை, பேசாம இருன்னு அடக்கறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடும். கடைசியில அவங்களே உனக்கு 18 வயசு ஆவலை, உன்னை எடுக்க முடியாதுன்னுட்டாங்க! அப்ப தான் அடங்கினான்.

இரண்டு மாசம் முன்ன தடுப்பூசி எங்க கிடைக்குதுன்னு தேடி கண்டுபுடிச்சு பக்கத்திலுள்ள கிராமம் பெயர்களைச் சொன்னதும் அவன் தான். அப்பவும் தினமும் குறைபட்டுப்பான், என்னை அந்த கோவிட் யூனிட்ல வேலை செய்ய விட்டிருந்தா எனக்கு ஜனவரி கடைசியலேயே தடுப்பூசி கிடைச்சுருக்கும், கெடுத்தீங்கம்பான்.

மறுபடியும் சும்மாயில்லை இவன். நான் சேர்த்து விட்ட MBSA programல ஒரு pharmacy கோர்ஸ் கூட இரண்டு செமஸ்டர் உண்டு. கடந்த இரண்டு மூனு மாசமாக walgreen, cvs pharmacy களுக்கு அப்ளை பண்ணி அங்க வீக்எண்ட் வேலை தேட அவங்களும் உனக்கு 18 வயசு ஆவலைன்னு சொன்ன பிறகு தான் அடங்கினான்.

நேற்று மாலை 7 மணிக்கு திடீர்ன்னு பக்கத்திலுள்ள டெஸ்டிங் சென்டருக்கு கூட்டிப் போகச் சொன்னான். இரவு குளிச்சுகிட்டு இருக்கும் போது சொல்ல வேகமாக ஓடினேன். கூட்டிப் போய் வெளிய ஒன்னரை மணி நேரம் காவல் காத்துகிட்டு இருந்தேன். 

டெஸ்ட் முடிச்சு வெளிய வந்தவன் காண்பிக்கிறான், pharmacy technician certification exam பாஸ்ன்னு பேப்பரைக் காண்பிக்கிறான். இவன் ஸ்கூலில் இந்த நேஷனல் எக்ஸாம் பாஸ் பர்சண்டேஜே 40 சதவீதம் தான். இப்ப எந்த pharmacy ல கூ ட வேலை செய்ய முடியும்.

அடுத்து சும்மா இருந்தா பரவாயில்லைன்னு இருக்கு. இருப்பானா இவன்.

பக்கத்து ஊர் county community college ல EMS EMT ட்ரைனிங்கிற்கு அடுத்த வாரத்துலேர்ந்து கிளம்பிட்டான். கோர்ஸ்க்கு 200$, fire ambulance dress, boots க்கு 175$ கட்டியாச்சு. 

இதில்லாம அந்த orthopedic surgeon clinic லிருந்து போன். அடுத்த இரண்டு மாசம் இங்க வந்து வேலை செய், ஃப்ரீயா செய்யறயான்னு கேட்க சரின்னு சொல்லியிருக்கான். வாரத்தில இரண்டு நாள் இங்க வேற 45மைல் ஓட்டிக்கிட்டுப் போய் வரனும். செவ்வாய் கிழமையிலிருந்து போவனும். செவ்வாய் புதன் இரண்டு மூனு சர்ஜரி அங்க. Shadowingகிற்கு ஆள் வேணும். ஓடறான்.

இப்பவாவது என்னைப் பத்தி புரிஞ்சுக்கங்கிறான். உன் வாழ்க்கையில் நீ பண்ணிய ஒரேயொரு நல்ல காரியம் நீ என்னை அந்த கோர்ஸ்ல போட்டதுங்கிறான்.

18 வயசு ஆவலை இன்னும். கல்லூரியில் வேற சேர்த்தாச்சு. கல்லூரி படிப்பை முடிப்பானாங்கிற கவலை வந்துருச்சு இப்ப!

இன்னும் ஸ்கூல் முடியலை. ஜூன் 2வது வாரம் தான் graduation. ஆகஸ்டுல கல்லூரி சேரனும். ரொம்ப தூரம் தள்ளி. அவனைப் பார்க்கனும்ன்னு நினைச்சா பத்து பதினோரு மணி நேரம் பயணிக்கனும் வேற.

பீத்தல் போஸ்ட் இல்லை இது. நான் பள்ளியில் படிக்கும் போது இவ்வளவு opportunities கிடையாது. என் பெற்றோருக்கும் தெரியாது. பள்ளி தாண்டாதவர்கள். 

பசங்க வளரும் போது பெற்றோர்கள் செய்ய வேண்டியது இந்த போஸ்ட்ல இருக்கு. பல்வேறு கம்யூனிட்டி காலேஜ்களின் வாய்ப்புகள் வயது வித்தியாசமில்லாம இங்கு உதவுகிறது. இங்க படிக்கிற பசங்களுக்குத் தெரியுது. அதற்காக எழுதியது.

இதுவரை
வாழ்வினிது
ओलै सिरिय !

Friday, May 28, 2021

மே மாதம்


மே மாதம்


மாதம் முழுவதும் வித விதமான அநுபவங்கள்ஒவ்வொன்னுலையும் ஏற்படற துயரங்களுக்குஅருகிலேயேஅழகான பாதை வழியையும் காண்பிக்குதுஇந்த ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டுல வாழ்வதால்வரும்துயரங்கள் இங்கு வாழ்வதினால் இருந்தாலும் கூடஇங்குள்ள கட்டமைப்பு எந்த மனுசனையும் கீழவிழுந்துடாம அரவணைச்சுகிட்டுப் போவுது.


மாதம் முதல் வாரத்துலேயே பையன் ஸ்கூலுக்கு எடுத்துப் போன காரைஎவனோ ஒரு பாறாங்கல்லால்கண்ணாடியை உடைச்சுபணம்ட்ரைவர்ஸ் லைசன்ஸ்டெபிட் கார்ட் எல்லாம் போச்சு.


பையனோட நண்பனாகப் பழகுவதால் உடனே என்னைக் கூப்பிட்டு என்ன பண்ணனும்ன்னு கேட்டான்நல்லவேளைமத்த பசங்களைக் கூப்பிட்டு ஏதும் தவறாகப் போகாமல்அமைதியாக சொன்னபடி செய்தான்இந்த நேரத்துல எப்படி செயல்படனும்ன்னு அவனுக்கு ஒரு வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொடுக்க முடிந்தது.


இழந்ததை ஒவ்வொன்றிற்கும் மாற்று ஒன்று பெற மூன்று வாரம் ஆகிவிட்டதுஇன்சூரன்ஸ் இருந்ததால் ரென்டல்கார் வச்சு பத்து நாள் தள்ளியாச்சுகார் ரிப்பேர் இலவசமாக இன்சூரன்ஸ் மூலம் முடிந்ததுஇனி ப்ரீமியம் ஏறும்என்ன செய்யஇங்கு நிம்மதியாக வாழ ஒரு சிறு இழப்பு ஒகேய் தான்.


நடுவுல கோவிட் இழப்புகள் கவலைகள்.


சரி இந்த கடைசி வாரம் துவங்குதே நல்லதாக இருக்கட்டும்ன்னு நினைச்சேன்ராசிபடியே சுவையாதுவங்கிற்று.


விடியற்காலை 3 1/2 மணிக்கு நோட்டிபிகேஷன் வருதுஉன்னோட கிரெடிட் கார்டல அமேசான்லவாங்கியிருக்குன்னுகாலையில எழுந்து வீட்டுல விசாரிக்கலாம்ன்னு பார்த்தாகாலை எட்டு ஒன்பது மணிக்குசொய் சொய்ன்னு மறுபடியும் பேங்க் நோடிபிகேஷன் வருதுகோ ஃபண்ட் மீல இரண்டு மூனு டொனேஷன்ஒவ்வொன்னும் 530$க்கு மேல எடுக்கறாங்கன்னு தொடர்ந்து நோடிபிகேஷன் வருது


இந்த நாட்டுல வாழறதோட அட்வான்டேஜ்பேங்க் உடனே என்னோட கிரெடிட் கார்ட்பேங்க் அக்கௌண்ட்இரண்டையும் லாக் பண்ணிட்டாங்கஅவங்களே பிராடு ட்ரான்ஸ்க்ஸனை தூக்கிட்டாங்கஅடுத்து இருக்கிறtransaction எது கரெக்ட்ன்னு நோடிபிகேஷன் கொடுத்து கேட்டுமற்றவற்றை ரிஃபண்ட் பண்ணிட்டுபுது கார்டுகொடுத்து தைரியமாக இருநாங்க உதவுறோம்ன்னுட்டாங்க!


சரின்னு நிமிர்ந்தாநேற்று அமேசான்லேர்ந்து நான் ஆர்டர் பண்ணாதது வேற ஒருத்தர் பேர்லஎன் அட்ரஸ்போட்டு வருதுபக்குன்னுச்சு.


மறுபடியும் பேங்க்கிற்கு போன் பண்ணினேன்அவங்க நீ கவலைப்படாதேஅந்த பேக்கேஜை அமேசானைக்கூப்பிட்டுக் கொடுத்துடுஉன் பணம் உனக்கு வந்துரும்ன்னுட்டாங்க.


அமேசானைக் கூப்பிட்டாசாரி அது அட்ரஸ் மாறி வந்துருச்சுநாங்க வந்து வாங்கிக்கிறோம்ன்னுட்டாங்கசிரிச்சுகிட்டே கவலைப்படாதீங்கநாங்க உதவறோம்கிறாங்க!


மாதம் பூரா ஒவ்வொன்னா பார்த்து பார்த்து வருதுபக்கத்திலேயே ஒரு அழகான பாதையும் தெரியுதுஇந்தநாட்டுல வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் யோசித்து யோசித்து பார்த்து செய்து வருவதால்ஒவ்வொன்றின் போதும் ஒரு பாதுகாப்பு வளையம் நம்மைச் சுற்றி அரணாக நிற்கிறது.


நாளையிலிருந்து நல்லது துவங்கும்ன்னு ஹரிகேசாய நம: ன்னு நண்பர் ஒருத்தருக்குச் சொன்னார்நம்ம நிலைமை நாளைக்குப்பிறகு என்னஆகுமோ தெரியலை!


இருந்தாலும் சொல்லி வைப்போம்ஹரிகேசாய நம:


வாழ்வினிது

ओलै सिरिय !

Thursday, May 27, 2021

தமிழ்வழி பொறியியல் படிப்பு

தமிழ் மொழியில் பொறியியல் படிப்பு பற்றி ஒரு பெரிய அலசல் ஓடிகிட்டு இருக்கு.

ஹிந்தி படிச்சா பான் பராக் விற்கத் தான் முடியும்ன்னு தவறாக சொல்ற மாதிரி இதன் (தமிழ்வழி பொறியியல் படிப்பு) எள்ளி நகையாடல் கூட ஓடுது.

நாடு முழுதும் கிட்டத்தட்ட 70 கோடி மக்களுக்கு ஹிந்தி தெரியும். தமிழ் மாதிரி ஹிந்தியிலும் இஞ்சினியரிங் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டால் இது அந்த 70 கோடி மக்களுக்குப் பெரிதும் உதவும்.

ரஷ்யா, ஃப்ரான்ஸ், ஜெர்மனி போய் படிக்கிற மக்கள் முதலில் அந்த நாட்டு உள்ளூர் மொழியைக் கத்துக்க வேண்டி பலருக்கு வருது, ஆங்கிலம் பரவலாக இருந்தாலும் கூட.

வரக்கூடிய நாட்களில் ஹிந்தி மேலும் பரவ வாய்ப்பு இருக்கு.

மொழி வெறியில் மூழ்காமல் அனைத்து மொழிகளையும் கற்றுக்கொண்டால்

வாழ்வினிது
ओलै सिरिय !

Tuesday, May 25, 2021

வைகாசி விசாகம் நாளில்

வைகாசி விசாகம்.

என்னப்பன் முருகனுக்கு அரோகரா!

அம்மாக்கு இந்த நாள் ஒரு மறக்க முடியாத நாள். கோவில்ல போய் என் பெயர்ல அர்ச்சனை பண்ணாம இருந்திருந்தா அது ஒன்னு இரண்டுக்குள்ளத் தானிருக்கும்.

அம்மா விடைபெறும் சமயத்திலும், கடைசியாக பேச்சை நிறுத்திக் கொள்வதற்கு முன் கூட, பெங்களூரில் அம்மா காலடியில் உட்கார்ந்து நான் சாப்பிட்டுகிட்டு இருந்த போது கூட, அம்மா பேசிய அதே சின்ன வயசுலேர்ந்து கேட்ட அதே வசனம்: நீ பொறந்த பிறகு தான்ட்டா குடும்பத்துல கஷ்டம்ன்னு ஒன்னு விலக ஆரம்பிச்சதேடான்னாங்க!

அம்மா கொண்டாடுற அந்த ஒரு கோவில் அர்ச்சனையைத் தவிர இதுவரை என் பிறந்தநாளைக் கொண்டாடியதில்லை. யதார்த்த வாழ்வில் இன்னொரு நாள் அவ்வளவே.

அம்மா தன்னோட பால்யத்திலேர்ந்தே வறுமையை அதிகம் பார்த்தவங்க, இத்தனைக்கும் ஒரு பெரிய மூதாதையர் வம்சத்துல வந்தவங்க.

என்னோட மத்த பிரதர்ஸ் அவர்களுக்கு செய்த அளவுக்கு கூட நான் அம்மா அப்பாக்கு எதுவும் அதிகம் பண்ணியதாக நினைவுயில்லை. ஆனால் அப்பா ரிடையர் ஆன 1986லிருந்து 2020 வரை அவங்க பண்ண எல்லா நல்லது கெட்டதுகளுக்கும் உடனிருந்திருக்கிறேன் கடைசி வரை.

அம்மா அப்பா எனக்கு நாமகரணம் சூட்ட உட்கார்ந்த நேரத்துல சித்தி சாமி ஆடி ஸ்வாமிமலையான் பேரை வைக்க வச்சுட்டாங்க. ஒன்னும் புரியாம பயந்து போய் அதே பெயரை வைத்து விட்டு, தாங்கள் வீட்டில் கூப்பிடுவதற்கு மட்டும் ஒரு பெயரை அந்த கணமே செலக்ட் பண்ணி கூப்பிட ஆரம்பிச்சாங்க.

இன்று அந்த புனித நாளில், அம்மா இல்லாத குறையை மற்றவர்கள் போக்கி வருகின்றனர். இன்று புதிதாக முதல் தடவையாக, 84 வயது ஆகியுள்ள அத்தையிடமிருந்து வாழ்த்து. 91 வயது அத்திம்பேரை தெளிவாக வாழ்த்து சொல்ல வைச்சாங்க. இவர் ஐஎன்டியுசி தொழிற்சங்கத் தலைவர் சேலம் கல்யாணசுந்திரத்தின் உடன்பிறப்பு. நல்லதைத் தவிர ஒரு வார்த்தை வேற எதுவும் இவரிடமிருந்து வராது. அம்மா போன சில நாட்களில் இவர் சொன்னது: ‘இத்தனை வருடம் அம்மா அப்பாக்கு செய்திருக்கீங்க. இனி உன் மனைவி மற்றும் குழுந்தைகளை நன்கு கவனிங்க. கடமை முடிஞ்சது. அடுத்து அது தான் உங்க கடமை’ன்னார்.

உங்கம்மா சொல்லிகிட்டே இருப்பாங்கடா, அதை இன்னிக்கு நாங்க செய்யறோம்டா, இது கிடைக்காதுன்னாங்க அத்தை. எங்களைச் செய்யச் சொல்லிருக்குன்னாங்க. உனக்கு கிடைக்காது இதுன்னு இரண்டு மூனு தடவை சொல்லிட்டாங்க!

அதே மாதிரி இன்னொரு 80 வயது மேல் நிறைந்த உறவினர் வாழ்த்தை ரிக்கார்ட் பண்ணி அனுப்பிட்டாங்க!

இங்கு இணையத்திலும் உங்கள் வாழ்த்தைப் பெற்றதில்

வாழ்வினிது
நன்றியுடன் 🙏
ओलै सिरिय !

Tuesday, May 18, 2021

நரைச்ச மீசையை மறைச்சுப்பார்

பொதுவாக நம் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரது செயலை, ப்ராடக்ட்டை வெளியுலகில் பிறர் அறிமுகம் பண்ணும் போது அல்லது பாராட்டப்படும் போது, அதை நேரில் பார்த்தவர்கள் குடும்பமாக கண்டு களிப்பர், சந்தோஷப்படுவர்.

இன்று எனது தயாரிப்பு/எனது உழைப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அது என் பெயரைச் சொல்லாமலேயே செய்யப்பட்டது. அது தான் வழக்கம் கூட.

ஆனால் இந்த அறிமுக விழாவில் கலந்து கொண்ட என்ர அம்மிணிக்கு அது என்னோட தயாரிப்புன்னு தெரியும். முன்பே காட்டியிருந்தேன், இம்பரஸ் ஆவலை. விழாவிற்குப் போவதைக்கூட அம்மிணி சொல்லவில்லை.

இன்று விழாவில் அவர்கள் இதற்காகவே 3 ஸ்லைடு போட்டு அறிமுகப்படுத்தினர்.

எல்லாம் முடிஞ்சு திரும்பி வந்த அம்மிணி கிட்ட, அந்த விழாவில என்னோட ப்ராடக்ட் காண்பிச்சாங்க பார்த்தயான்னு ஆவலாக் கேட்டேன்.

ஆமாம் இருந்துச்சுன்னு போயிட்டாப்புல. (So what ன்னு கேட்கலை, முகம் சொல்லிருச்சு).

பொசுக்குன்னு போனாலும்
நரைச்ச மீசையை மறைச்சுக்கிற
வாழ்வினிது
ओलै सिरिय !

Sunday, May 16, 2021

இரைச்சலாய் ஓர் நடைபயணம்

இடைஞ்சலாய் ஓரு நடைபயணம் 

மாலையில் இரை தேடி வந்தவரை 

மேலெழுந்து கிளையிலமர்ந்து 

எனை நோக்கும் அக்கணப்பொழுதில்


தப்பிய அணிலும் முயலும் 

பார்த்த பார்வையை நன்றியென ஏற்பதா!


அது

தேடும் படலத்தில் இடைஞ்சலானதால்

பசியால் வாடும் பாபமே

இவரது பார்வையா!


எதுவாயினும் இரைச்சலாய் ஓர் நடைபயணம்!


——


இரை தேடி வந்தவரை எனது மாலை நேர நடைபயணம் அவரை இடைஞ்சல் செய்ததால் மேலெழுந்து கிளையிலமர்ந்து என்னை நோக்கும் ஒரு கணப்பொழுதில்!


இவரிடமிருந்து அப்போது தப்பிய அணிலும் முயலும் என்னைப் பார்த்த பார்வை நன்றியுடனா, அல்லது இவரது உணவைத் தேடும் படலத்தில் இடைஞ்சல் செய்த இவரது பார்வையா!


எதுவாயினும்

வாழ்வினிது



Friday, May 7, 2021

கடைசிப்பெயர்

First name, Last Name

என்னோட பெயரில் எல்லா ஆவணங்களிலும் குழந்தையிலிருந்து இன்று வரை முதலில் அப்பா பெயரும் அடுத்து என் பெயரும் வரும். 

1992ல் முதன் முதலாக பாஸ்போர்ட் அப்ளை பண்ணி, பிறகு இங்கு வர விசா வாங்கி, பிறகு பச்சை அட்டை, குடிமகன் உரிமை என எல்லாவற்றிலும் பெயரை துளிகூட மாற்றம் செய்யாமல் இன்று வரை அதே பெயரில் இயங்கி வருகிறேன்.

இதுவரை எல்லோரும் எனது பெயரின் சுருக்கத்தைத் தான் அழைப்பர்(லாஸ்ட் நேம்). பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி, பணி செய்த அத்தனை இடங்களிலும் சரி, அதே பெயர் தான் அனைவரும் அழைப்பதும் கூட. அதுவே நான் விரும்புவதும் கூட.

அமெரிக்காவில் எல்லோரையும் நேரில் அழைக்கும் போது first name சொல்லிக் கூப்பிடுவது மட்டுமே வழக்கம். ஒருத்தர் பெரிய பதவி வகிக்கும் போது மட்டுமே அவரது பதவி பெயரைச் சொல்லி பிறகு கடைசி பெயரைச் சொல்வார்கள். உதாரணம்: பராக் ஓபாமா, பிரசிடண்ட் ஒபாமா.

ஆதலால் அவர்களுக்கு என் பெயரைக் கூப்பிடும் போது, கடைசி பெயரின் சுருக்கத்தை வைத்து கூப்பிடும் போது, எப்போதும் அவர்களுக்கு அலர்ஜியாகவே இருக்கு. ஏன் இவன் பேர் மட்டும் கடைசி பெயர்லேர்ந்து கூப்பிடச் சொல்றான்னு. நீங்க எப்படி வேணா கூப்பிட்டுங்கன்னு கூட சொல்லியாச்சு.

கடந்த ஆறேழு வருடமாக அலுவலகத்தில் இது ஒரு பெரிய பிரச்சனையாகவே நிற்கிறது. கல்லூரிகளில் பெற்ற இளநிலை, முதுகலைப்பட்டம், ஒரிஜினல் இந்திய பாஸ்போர்ட், அமெரிக்க விசா, பச்சையட்டை, குடியுரிமை எல்லா ஆவணங்களையும் கொடுத்தாகி விட்டது. எதிலும் பெயர் மாற்றமே கிடையாது. அப்போதும் என் மேல் நம்பிக்கையில்லை. என்ன செய்ய.

போன வருடம், புதிதாக ஒரு இந்திய மேனேஜர் ஜாயின் பண்ண, அவரிடமும் இதே கேள்வியைக் கேட்டுள்ளனர். தேவையின்றி எனது ஆவணங்களை அவருக்கும் அனுப்ப வேண்டியதாகி விட்டது.

என்ன செய்வது! தலைவிதி தலைவலியாக தொடர்கிறது. ஆனால் எனக்கோ நான் மிகவும் விரும்பும் என் அப்பா பெயரில் என் முதற்பெயராக இருப்பதால் மகிழ்ச்சியாகவேயிருக்கிறேன். பொய் சொல்லிப்பழக்கமில்லை, தேவையுமில்லை. ஆவணங்களும் அதையேச் சொல்கிறது. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் கவலையில்லை. பழகிவிட்டது.

ஓகே ஓகே ரொம்ப டீடையில் சுகத்துக்கு கேடு.

இப்ப இது எதுக்குன்னு கேட்கறீங்களா?

இருக்கு!

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாகிய நான்னு இன்று பதவியேற்றிருக்கார்.

அவரும் என்னைப்போல முதற்பெயர் கடைசிப்பெயர் பிரச்சனையில இவனுங்க/இவன்களைப் போல ஆளுங்ககிட்ட, வேணும்ன்னே வம்பு தேடற ஆளுங்க கிட்ட மாட்டாமயிருந்தால்

வாழ்வினிது
ओलै सिरिय !

Saturday, May 1, 2021

மனிதநேய மருத்துவ சர்வீஸ்

நியூயார்க் நகரத்துல போன வருடம் கோவிட்ல நிறைய பேர் பாதிக்கப்பட்ட போது, அம்மாநில அரசு, மேயர் மற்றும் மருத்துவமனைகள் பல, ஒரு கட்டத்துல ரொம்ப முடியாம போக, மருத்துவர்கள் நர்ஸ்களின் பற்றாக்குறையைப் போக்க, கோவிட் பாதிக்கப்படாத பிற மாநிலங்களில் உள்ள மருத்துவர்கள், பிஏ மற்றும் நர்ஸ்களுக்கு இரண்டு மடங்கு மூன்று மடங்கு சம்பளம் கொடுத்து விமானங்களில் அழைத்துச் சென்றது.

விமான சர்வீஸ் தடை செய்யப்பட்ட காலத்தில் கூட இவர்களுக்கு தனி அநுமதி வழங்கப்பட்டது. விமான நிலையங்களில் சக பயணிகள் இவர்களை கை தட்டிப் பாராட்டுவார்கள். பணத்திற்காக சென்றார்களென்று யாரும் இழிவாகப் பேசவில்லை. இவர்களின் மனிதநேயத்திற்காகப் பாராட்டினர்.

சில மாநில அரசுகள் தங்கள் மருத்துவ குழுக்களில் விருப்பமுள்ளவர்களை ஓரிரு வாரங்களுங்கு ரொடேஷன் பேசிஸில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பியது. 

இது மனித நேயம். 

இது மாதிரி இன்று இந்திய மண்ணில் துவங்கனும். பாதிப்பு இல்லாத இடங்களிலுள்ள மருத்துவர்கள் நர்ஸ்கள் அவர்கள் விரும்பினால் சென்று உதவி வர அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு சலுகைகளோடு சென்று வர ஏற்பாடு செய்யனும்.

ஒவ்வொரு மாநில அரசுகளின் உதவிகள் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்றடையும் போது

மனித நேயம் தழைக்கும் போது
வாழ்வினிது
ओलै सिरिय !