Wednesday, February 10, 2021

நினைவு நாள் ஒன்றில் இது

 

நினைவலைகளாய் மாறிப்போயினர்

  நீண்டதொரு பயணம் முடிந்து

இடைப்பட்ட ஊர்களில் 

  கொடிமரமாய் நின்றெழுந்தனர்!


வழிதடங்கள் தந்த சுமைகள் எதையும்

  ஐந்து பைசா கடவுள் தட்டில் இறக்கிடுவர்

சுமையிறங்கிய தோள்களில் சுமப்பர்

   தன் விழுதுகளின் சுமைதனை!


கொடி அசைத்து செல்லும் பாதையில்

  வழி நெடுக மரம் நட்டனர்!

கிளைகள் இன்று செழிப்பாய் வளர

  உரமாய் நின்றனர் வாழ்நாள் முழுதும்!


ஆசைதனை அளவிட்டு அகப்படாத போதும்

   இருப்பவையை அளவிடாமல் கொடுத்து

வயிற்றையும் உறவையும் போற்றி 

    ஒரு சேர்ந்து வாழ உரமிட்டனர்!


காலம் கழிந்து கடமைகள் முடிந்து

    வந்த பணி நிறைவுற்று

 உடல் விட்டு சென்றாலும்

    நீங்கா நினைவாய்ப் போயினர்!


விட்டுச்சென்ற நினைவலைகள்

   சுமையை விட கனமாய் நிற்க

நினைவு சின்னமாய்

    அவர் தந்த அழகிய தருணங்கள்!


நினைவு நாள் ஒன்றில் இது!

No comments: