Sunday, March 11, 2012

வலையூர் பட்டி கணக்கு

செல்வம் மாமன் தோள் மேல கை போட்டு ஒரு வாஞ்சையோட இழுத்து கிட்டுப் போனாலும், தன் மேல் விழுந்த கையின் வலுமை கொஞ்சம் குப்பண்ணன் மனசை இறுக்கி பிடிச்ச மாதிரியே இருந்தது.

ஊரை பார்க்க வந்தேன் மாமான்னு  சொன்னாலும், அது இருக்கட்டும் மாப்பிள்ள, நீங்க வாங்கன்னு வீட்டுக்கே இழுத்துக் கிட்டுப் போயிருச்சு.

அப்பன் கிட்ட சொல்லாம வந்ததுக்கு வசவு வேறு இருக்குன்னு நினைக்கும் போது குப்பண்ணனுக்கு ஒரு பேச்சும் வரமாட்டீங்குது.

குப்பண்ணன் மெதுவா செல்வம் மாமன் கைய நவுத்துனதும், 'பயப்படாத மாப்ள , அப்பன் கிட்ட சொல்லலைன்னு' மாமன் மெதுவா சொல்ல, மாமன் இப்பிடி மனசைப் படிக்குதேன்னு குப்பண்ணனுக்கு இன்னும் பயம் சேர்ந்து ஒட்டிகிச்சு.

விட்டா ஓடுவதர்க்கே இருந்த குப்பண்ணனுக்கு, அல்லியாம்மா மொவத்தைப்  பார்க்க தைரியம் இல்லாம, மாமன் கிட்ட சொல்லி கிட்டு வயல்வெளி  நோக்கி  நட கட்டிச்சு.

குப்பண்ணனுக்கு மனசு சரியில்லைன்னாலும் சந்தோசமாயிருந்தாலும் ஒத்தையடி வயல் பாதையிலோ ஆத்தங்கரை வோரமா நடக்கத்தான் விரும்பும்.

நடவுக்கு வந்த புள்ளைங்க தன்னைப் பார்த்து சிரிப்பதாகவே தோன்றியதால், எங்கயும் நிக்காம மனசு ஊரை பார்க்கக்  கிளம்பிடுச்சு.

இத்தனையும் மத்தவங்க மூலமே கேள்விப் பட்ட அல்லியம்மா, மாமன் தன்னை ஒன்னும் பார்க்காமலேயே ஊர் திரும்பரதைப் பார்த்து ஒரு அழுகாச்சியா அழுவ, வந்ததே கோவம் அதுக்கு.

'எந்த சிறுக்கி மவன் என் மாமனை கல்லெடுத்து அடிச்சுதுன்னு' ஒரு கத்து கத்திகிட்டே வயல் பக்கம் ஓடிச்சு. எதிர கர்ணம் வீட்டு கணக்கின் மவன் சுந்தரவதனம் வர, மாமன் எங்கேன்னு கேப்போம்ன்னு அவனை நிறுத்திச்சு.

அரண்டு போன சின்ன கணக்கு மொவமே  மாறிருச்சு. அல்லியம்மா கோவம் அம்புட்டும் சுந்தரவதனம் மேல சந்தேகத்தோட திரும்பிருச்சு.

'எலேய்! வலையூர் பட்டி கணக்கு! வாரா இங்கே'ன்னு இழுக்க, பயந்து போன சுந்தரவதனம், 'யக்காவ், தெரியாம கல்லை இட்டுபுட்டேன்'னு சொல்லிட்டு ஓட ஆரம்பிச்சவனை துரத்திகிட்டே ஓட ஓட, சுத்து வட்டம் அலப்பறை பண்ணுவதை கூட கண்டுக்காம அல்லியம்மா ஓடிச்சு.

நடவுக்கு வந்த புள்ளைங்க சத்தமா கூவி சிரிக்க, சிரிக்க, எதிர வந்த ஆளை மோதுறது கூட தெரியாம ஓடிச்சு. திடீர்ன்னு நின்ன சுந்தரவதனம், 'யக்காவ், அதான் உன்ர மாமன் 'ன்னு சொல்லிட்டு ஓடிட்டான்.

எலேய்! வலையூர் பட்டி கணக்கு! வைச்சுகறேண்டா உனக்கு ஒரு நாளுன்னு, சொல்லிப்புட்டு, தன் மாமன் நினவு வர கோவமா  மாமனை நோக்கி திரும்பிச்சு.

குப்பண்ணன்க்கு தான் கட்டிக்கிரப் புள்ளையைப் பார்த்து  ஒரு துளி  என்ன சொல்லன்னு திகிலோட கலந்த ஆச்சரியம்.

 'என்னைப் பார்க்கத்தானே வந்தே நீ'ன்னு கேட்கும் அல்லியம்மாக்கு, மறுபடியும் ஊரைப் பார்க்கத்தான்னு சொன்னா  இங்கயே கொன்னுபுடப்  போவுதுன்னு நினைப்பு வர, எதையோ சொல்லிப் புட்டு நடையை கட்டிருச்சு.

அல்லியம்மா மனசு நோவ ஆரம்பிக்க, அழுகாச்சிய அடக்கிகிட்டே இத்தனைக்கும் காரணம் அந்த சிறுக்கி மவன் வலையூர் பட்டி கணக்கை வைச்சுக்கிறேன் ஒரு நாளுன்னு கருவிச்சு.

நடவு புள்ளைங்களைப் பார்த்து ஒரு முறை முறைச்சுக்கிட்டே போங்கடி போக்கத்தவகன்னு  வைஞ்சுகிட்டே வூட்ட நோக்கி நடக்க ஆரம்பிச்சுது.

1, 2.

Monday, March 5, 2012

இதயம் பேசுகிறது

கருப்பு வெள்ளை டிவி யும் தூர்தர்ஷன் மட்டுமே கொடிகட்டிட்டிருந்த காலம். எத்தனை நாள் தான் வயலும் வாழ்வும் பார்க்கிறது. அதனால எப்போதும் வீட்டு வெளியே விளையாட்டும், வீட்டுக்குள்ள சிறுகதைகளும், குறுநாவல்களும் படிச்சு அலசிக்கிட்டிருந்த காலம்.

பத்தாவது படிக்கும் முன்னே யவன ராணி, கடல் புறா, பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் முடிச்சிட்டு, எவன் முதல்ல எந்த பாகத்தை படிச்சு முடிச்சான்னு அலட்டுவதும் ஒரு த்ரில்லு. கொஞ்சம் மாறுதலாப் படிக்கணும்னு இந்துமதி, சிவசங்கரி, வாஸந்தி, ரமணி சந்திரன், ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் எல்லாம் படிச்சிருவோம். எவன் அதிகமா படிச்சான்னு ஒரு போட்டி இருக்கும்.

என் நண்பன் கொஞ்சம் அறிவு பூர்வமாவே எதையும் செய்வான். அப்ப சுஜாதா படிப்பதெல்லாம் மாடர்ன் trend . என் நண்பன் முதல்ல இருப்பான். இதயம் பேசுகிறது மணியன். லேனா தமிழ்வாணன் பற்றியெல்லாம் பேசக் கூடியவன்.

எப்போதும் பள்ளி மதிய இடைவேளையில ஸ்கூல் ஒட்டி கடை வீதி பஸ் ஸ்டான்ட் எல்லாம் சுற்றி வருவோம். ஒரு நாள் ஒரு ஹோட்டல் வாசலில் ஒரு டூர் பஸ் 'இதயம் பேசுகிறது சுற்றுலா பேருந்து' என்ற banner உடன் நின்று கொண்டிருந்தது. இருவரும் ஆவலுடன் அதை நோக்கி நடந்தோம்.

பஸ்சின் பின் ஒரு பதினைஞ்சு அடி தூரத்தில் நாங்க நெருங்க வரும் போது ஒரு பெண்மணி பஸ்சிலிருந்து தலையை நீட்ட, என் நண்பன் 'டேய்! இந்துமதி' டான்னான். அவங்க எப்பிடிரா இதயம் பேசுகிறது பஸ்ல, கண்டிப்பா இருக்காதுன்னு நான் மறுக்க, என்ன பெட் என்றான். கையில பத்து பைசா மேல வைச்சிருக்காத எனக்கு கம்முனு இருக்கத் தோணாம, பத்து ரூவாடான்னேன். ரொம்பப் பெரிய அமௌன்ட் எனக்கு.

உறுதி செய்ய அவங்க உட்கார்ந்திருந்த ஜன்னலருகில் போனோம். என் அம்மா வயது இருக்கும் அவங்களுக்கு. என்னை மட்டும் பக்கத்தில கூப்பிட்டாங்க. ஒரே தயக்கம். எவ்வளவு பெட் கட்டின என்றாங்க. ஒன்னும் சொல்லலை நான். ஜோப்புல எவ்வளவு இருக்கு. அதை உன் friend கிட்ட கொடுன்னாங்க. எனக்கு ஆடிப் போயிருச்சு. வீடு திரும்ப பஸ்க்கு என்ன பண்ணுவது. ஏழு கிலோ மீட்டர் நடக்கணும். கால் தானாவே பின்ன போக ஆரம்பிருச்சு. பேச்சு சுத்தமா போயிடுச்சு எனக்கு.

உனக்கு மட்டும் ஆட்டோகிராப் தரேன்னு என் friend கிட்ட அவங்க சொல்ல, டேய் சீக்கிரம் ஒரு பேப்பர் பென்சில் கொடுறாங்கிறான், எங்கப் போவது. எனக்கோ அவமானத்திலும் பயத்திலும் கண்ணில நீர் கோர்க்குது. கடைக்காரன் கிட்ட கேட்டா திட்டுவான். தரையில கிடந்த பேப்பரை கொடுத்தேன் அவனிடம். மிக அழகான கையெழுத்திட்டு அவனுக்கு கொடுத்தாங்க.

என் காதில மணியன், தமிழ்வாணன் எல்லாம் கூட வந்திருக்கலாண்டான்னான். எப்பிடிரா அவ்வளவு பெரிய ஆளெல்லாம் இந்த மாதிரி டூர் வருவாரு. MS உதயமூர்த்தி வேணா இருக்கலாண்டான்னேன். எப்பிடி தான் அந்த அம்மா காதில விழுந்துதோ தெரியல, என் friend a மறுபடியும் கூப்பிட்டு, ஹோட்டல் உள்ள சாப்பிடராங்கப், போய்ப் பாருன்னாங்க. கூடவே சிவசங்கரியும் வந்திருக்காங்க என்று சொன்னாங்க.

என்னைப் பார்த்து, முதல்ல அந்தப் பத்து ரூவாயை அவனுக்கு கொடுக்கிரதப் பாருன்னாங்க. இனியும் நான் அங்கு நிப்பேன்னு நினைக்கிறீங்க. அவனுக்கும் அவர்களைப் பார்க்கிற சான்ஸ் போச்சு. பிடிறா மவனே ஓட்டம். நகர்ந்திட்டேன்.

இருபந்தைந்து வருஷம் கழிச்சு இந்த விஷயத்தை நான் நினைவு படுத்த, ரொம்ப நல்லா ஞாபகம் இருக்குடா. அந்த ஆட்டோகிராப் தானில்லைன்னான்.

பல பிரபலங்களை ஒருங்கப் பார்க்கிற சான்ஸ் என்னாலப் போயிடுச்சு. சின்ன வயசு சொலவடையினால, வடை போச்சு.

என்னோட இதயம் தான் இன்னும் பேசுகிறது.

Sunday, March 4, 2012

நிறத்தின் மாற்றம்

சமீபத்தில இது மாதிரி இரண்டு தடவ ஆயிட்டுது. பையனை வயலின் கிளாஸ்ல் விட்டுவிட்டு வரும் போது நல்ல காபி வாங்கிட்டு திரும்பலாம்னு காபி கடை போனேன். நான் வசிக்கும் ஊரில் எந்த கடைக்குப் போனாலும் ஒரு வரவேற்பு அல்லது ஒரு புன்முறுவலுடன் how கேன் i ஹெல்ப் யு என்பார்கள்.

இன்று வழிபாடு முடிஞ்சு திரும்பும் மக்கள் அதே கடையில் படையெடுத்து நின்றிருந்தனர். என் முறை வந்து காபி வாங்கி வெளிய வரும் போது கதவை அடைத்து நின்றிருந்த பெண்மணி உடம்பை அசைத்து வழி விட்டனர். பக்கத்தில் நின்றிருந்த அவள் கணவன், என்னை கடைக்கண்ணில் பார்த்துக் கொண்டே நக்கலாக, 'popular ஷாப், இஸ் இட் நாட்?' என்று அவளிடம் கூறினான். நான் ஒன்றும் பதில் சொல்லாமல் வழி விட்டதற்கு நன்றி சொல்லி விட்டு வந்து விட்டேன்.

சில மாதம் முன் இதே மாதிரி பையனை வகுப்பில் விட்டுவிட்டு காபி கடைக்குப் போய் நின்றேன். பணம் வாங்கும் பெண்ணோ அல்லது கலந்து கொடுக்கும் பெண்ணோ துளி கூட ஏறுடுத்துப் பார்க்கல, ஏதும் வரவேற்பு இல்லை, மற்றவர்களை மட்டும் கவனிப்பதில் ரொம்ப மும்முரமாக இருந்தனர். ஒன்றும் பேசாமல் வெளியேறி விட்டேன்.

அங்கு நிற்கும் போது மதியாதோர் வாசல் மிதிக்க வேண்டாம்னு மிகவும் தோன்றியதால், அருகில் கடை இருந்தாலும் போவதைத் தவிர்த்து வருகிறேன். ஆனால் உங்களிடம் பொல்லாங்கு சொல்லாமல் இருக்க முடியவில்லை.

பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கவும் நற்குணங்களையும் பெற மனமுவந்து சென்று வழிபடுகிறோம். முடிந்து வெளி வரும் போது நிறத்தின் மாற்றம் நம்மை பழையபடி செய்யத் தூண்டுகிறதா?

Friday, March 2, 2012

மாற்றம்

 மாற்றம்
 
நம்ம அன்றாட வாழ்க்கையில திடீர்ன்னு ஒரு மாற்றம் வருதுன்னு வைச்சுக்குங்க. அதற்கு நாம முன்கூட்டியே தயாராயிட்டோம் என்றால் அது நமக்குப் பெரிய அதிர்ச்சியைக் கொடுக்காது. மாற்றம் சொல்லிக்கிட்டா வரும்.
 
ஆறு மாசத்துக்கு ஒரு முறை வந்தா ஒரு பல்லைக் கடிச்சிகிட்டே அதற்கு ஏற்ப தேவைகளை ஏற்பாடு செய்து கொள்ளலாம். ஆனால் வரும் மாற்றம் நமக்கு அதிர்ச்சி அளிக்ககூடிய வகையில் இருந்தால், எப்பிடி மீண்டு வருவது. சிலருக்கு depression வரும். சிலருக்கு அலுவலகத்தில் பகை வரும். வீட்டுல அமைதியின்மை வரும்.
 
உதாராணமா, அலுவலகத்தில நல்ல பதவியிலிருந்து அல்லது நல்ல காசு பார்க்கக் கூடிய இடத்திலிருந்து வெகு சுமாரான இடத்துக்கு மாத்திட்டாங்கன்னா என்ன பண்ணுவது. எத்தனை பேருக்கு இதை சமாளிக்க மன தைரியம் இருக்கு.
 
வழி இல்லையா? இருக்கு. கொஞ்சம் உட்கார்ந்து யோசிங்க. :-)
 
எங்கிருந்து உங்களை மாற்றியிருக்காங்க. என்ன தகராறு ஆயிருக்கு? இதை மேலும் பிரச்சனை பண்ணினா என்ன நடக்கும். அந்த தகராறில உங்க பக்கம் நியாயம் இருந்து நீங்க வெற்றி அடைஞ்சிட்டா, என்ன நடக்கும். திருப்பி அதே மக்களோட சேர்ந்து வேலை செய்யணும். பழையப் பகையை வைச்சு மறுபடியும் குடைச்சல் தரலாம். நிலைமை இன்னும் மோசமாகலாம்.
 
விடுங்க. இப்ப புதுசா வந்திருக்கிற இடத்தைப் பாருங்க.
 
இங்க நீங்க அதிக experience உள்ள ஆளா இருக்கலாம். அல்லது ஒரு பெரிய பாப்புலரான பதவியிலிருந்தோ அல்லது அதிக தொழில்நுட்பம் தெரிஞ்ச இடத்திலிருந்து வந்திருப்பதால புதிய இடத்தில் மதிப்பும் மரியாதையும் தர வாய்ப்பு உள்ளது. இங்கு பெரிய பதவி கிடைக்க அதிகம்  வாய்ப்பு உள்ளது.
 
அங்கு நீங்கள் பத்தில ஒருத்தர். இங்க நீங்க பத்தில முதல்வர். உங்களை மதித்து நடக்க புதிய இடத்தில் வாய்ப்பு அதிகம்.
 
பழைய இடத்துப் பகைமையை நினைத்து வருந்துவதினால், நமக்கு மன உளைச்சலும், அதனால் குடும்பத்தில் மாறுபட்டு நடக்க வாய்ப்பு உள்ளது.
 
பழைய ஆளுங்களோட மறுபடியும் மல்லுக்கு நின்னா புது  இடத்திலும் உங்களை கண்டு பயப்பட வாய்ப்பு உள்ளது. புது இடத்திலும் பெரிய பதவிக்கு  உங்கள எடுப்பதற்கோ அல்லது கூட வேலை செய்பவர்கள் உங்களோடு அணுகுவதற்கு, பேசுவதற்கோ பயப்பட மாட்டாங்களா? 
 
விட்டுத் தள்ளுங்க மக்கா. toilet பேப்பர் தொடைச்சி தூக்கி விட்டேறிஞ்சிட்டு வருவதில்லையா? திருப்பி அது நம்ம மேல ஒட்டாமப் பார்த்துக்கணும். இல்லையா  மக்கா.
 
மாற்றம் நம்ம வீழ்த்திடாம, நம்ம முன்னேற்றத்திற்கு உதவுவதற்கு மாற்றத்தை சாதகமாக மாற்றிக் கொள்ளுங்க. நம்மால முடியும். நம்ம கையிலத் தானிருக்கு.