Thursday, November 2, 2023

வந்து விட்டு போன பின்

ஜெமோ எங்க ஊர் வந்தால் அவரோட நெருங்கிய நண்பர் வீட்டில் தான் தங்குவார். இதுவரை ஜெமோவை இரண்டு தடவை எங்க ஊரில் பார்த்திருக்கேன்.

இந்த தடவை பவா அவர்கள் கூட்டத்தில் அந்த நண்பரைப் பார்த்தேன். அவரும் அவர் வீட்டில் தான் போல. அந்த கூட்டத்தில் ஜெமோ வரும் போது சொல்லுங்கன்னேன்.

இங்க போனவாரமே வந்து விட்டுப் போய்விட்டாராம்.

நம்ம கல்லூரி வகுப்புகள் நடக்கும் காலத்தில் தான் அவரும் இங்கு வருகிறார். 

அவரது வாசகர் வட்டத்திற்கு மட்டும் தான் அவரது வருகை தெரிகிறது.

அதனாலென்ன! நமக்கு ஒரு பிரபலத்தை நேரில் பார்க்கும் அல்ப சந்தோஷத்திற்குத் தானே!

நம்ம நேரத்தை நமக்கு தெரிந்த வகையில் செலவிடுவதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
10/29/23
¡Vió y se fue!

பெரியோர்களின் ஆலோசனை

இன்றைய ராசிபலன்ல பெரியோர்களின் ஆலோசனை உதவிகரமாக இருக்கும்ன்னு போட்டிருந்துச்சு.

அப்படி என்ன ஆயிரப்போவுதுன்னு நினைச்சேன். வந்துருச்சே!

அம்மிணியோட அம்மா இந்தெந்த கோவில் போவனும், இதுக்கு நானும் வர்றேன், உன் கசின் எனக்கு ரொம்ப க்ளோஸ், இந்த கசின்கிட்ட சொல்லி பிளான் போடனும்ன்னு ஒரு பெரிய லிஸ்டே வருது.

நாளைக்கு மதியம் தான் சந்திராஷ்டமம் ஆரம்பம்ன்னு போட்டிருந்துச்சு! அது இந்திய நேரப்படியே ஆரம்பிக்குதே!

அமைதியாக சொன்ன பேச்சு கேட்பதில்
வாழ்வினிது!
ओलै सिरिय ।
10/30/23
¡Mis planes de viaje en la mano de alguien!

சுற்றிலும் சுடரும் அறிவே

கட்டாந்தரையில் கால் நீட்டிப் படுத்திருந்தாலும்
ஆழ்ந்த சிந்தனையிலும் அறிவே வெல்லும்
அவனது உலகில் நாம் ஒரு மிதிவண்டிப் பயணம்!

தன்னைச் சுற்றிலும் படிப்பில் போட்டியாளர்கள்
கூட்டத்தில் மிளர்வது அறிவின் அழகே
அவனது பம்பரத்தில் சுழல்வது அறிவின் சுழற்சி!

வளர்ச்சி என்பது தனது மட்டுமல்ல
சுற்றம் வளர்தலில் சுழலும் அறிவே
அவனது வளர்ப்பில் வளர்வது அறிவாய் நிற்கும்!

பிறப்பின் வளர்ப்பின் நிலமை பின்தங்கிவிடாமல்
ஏற்றம் அதனைத் தேடி அலைவதும் அறிவே
அவனது கைப்பிடியில் நாம் ஒரு சிறு மணல்!

சுற்றிலும் சுடரும் அறிவே!

வாழ்வினிது
ओलै सिरिय ।
11/2/2023
¡Brilla en todas partes!

நினைவுகள் அழிவதில்லை

நமது வாழ்க்கையில் காலங்கள் உருண்டோடினாலும் நினைவுகள் அழிவதில்லை.

திருச்சியில் கல்லூரியில் முதல் வருடம் படித்தப்ப ஹாஸ்டலில் ஒரு குட்டி ரூம்ல நாலு பேர் நாங்க. இப்ப நாப்பது வருடங்கள் ஆகப்போவுது. ஆளுக்கு ஒரு டெஸ்க் மற்றும் சேர். அந்த ரூம்ல நாலு பேர் தரையில ஒன்னாப்படுக்க இடமில்லை.

இரவு ஒரு மணி வரை லைட் போட்டு படிக்கும் படிப்பாளிகள் இருவர். எப்படா வெளியே வராண்டாவில் ஜமக்காளத்தை விரிச்சு படுக்கலாம்ன்னு நானும் இன்னொருத்தனும். இரவு எட்டரை ஒன்பது மணிக்கு ரூம் வெளியே கட்டாந்தரை தான் எங்கள் இரவுகள்.

உள்ளே ரூமுக்குள்ள லைட் போட்டு இரவு படிச்சவனுங்களுக்கு கிடைச்சது அட்வான்ஸ்டு இங்கிலீஷ் செக்‌ஷன். எங்க இரண்டு பேருக்கும் ஜெனரல் இங்க்லீஷ் தான். உள்ளே ரூம்ல படிச்சவன் காலேஜ் ஃபைனல் செமஸ்டர் ஃபிசிக்ஸ் பிராஜக்ட்டுக்கு எழுத்தாளர் சுஜாதாக்கு லட்டர் எழுதி இந்த எலக்ட்ரானிக்ஸ் ப்ராஜகட் பண்ணலாமான்னு கேட்டவன். அவர் சின்னதாக ஒன்னு பண்ணுன்னு அவனுக்கு ரிப்ளை லட்டர் போட்ட காலம் அது.

இன்றும் நாங்க நாலு பேரும் அப்படியேத்தானிருக்கோம்.

கட்டாந்தரையில அந்த வெயில் குளிரில் உருண்டாலும் அவன் படிப்பில் செம கெட்டி. எங்க கையில் ஒரு ஐந்து ரூபாய் அப்ப இருந்தால் நாங்க பெரிய பணக்காரங்க அப்ப. அது எங்கள் கையில் எப்போதும் தங்காது. அவனது பணக்கார செல்வமே மதிப்பே அவனது கல்வியறிவு தான். எனக்கு அது சுத்தம், இரண்டாம் பட்சம் தான். பொது சமூக வாழ்க்கை உறவுகள் பற்றிய படிப்பு தான் நான் தேடி அலைந்த காலம்.

அப்ப கல்லூரியில் செமஸ்டர் எக்ஸாம் முடிஞ்சா, பாஸ் ஆனவங்க பெயர் மட்டும் கல்லூரி நோட்டிஸ் போர்டில் போடுவார்கள். அது போடற அன்னிக்கு எல்லோரும் அந்த லாலே ஹால் வாசலில் சுத்திகிட்டு இருப்பாங்க.

ஹாஸ்டல் நண்பன் ஃபிசிக்ஸ் இயற்பியல், நான் வேற சப்ஜக்ட். நான் கூட என் பேர் நோட்டிஸ் போர்ட்ல இருக்கான்னு தேடமாட்டேன். இவன் போய் எங்க டிபார்ட்மண்ட் லிஸ்ட்ல என் பேர் இருக்கான்னு பார்த்து விட்டு வந்து சொல்வான்.

ரூம்ல வந்து பரவாயில்லைடா உன் பேரும் இருக்குடாம்பான். 

செமஸ்டர் மார்க்‌ஷீட் வந்தவுடன் அமைதியாக உள்ளே வச்சுருவோம்ன்னு நினைப்பேன். எங்கப்பா அம்மா அண்ணன் தம்பிகள் யாரும் இதுவரை என் மார்க்‌ஷீட் கேட்டதில்லை பார்த்ததில்லை. இவன் ரூமுக்கு வந்தவுடனே எங்க மார்க்‌ஷீட் காமிம்பான்.

ரூம்ல மத்த மூனு பேரும் போட்டி போட்டு படிச்சு 85-90க்கு மேலே வாங்குறவங்க. நாம சுமார் தான். என் மார்க்‌ஷீட் கறாராக வாங்கிப் பார்த்துருவான்.

அன்னிக்கு நைட் ரூம் வெளியே வராண்டாவில் கட்டாந்தரையில் உருளும்போது நைஸா சுருக் சுருக்ன்னு இவன்டேர்ந்து திட்டு விழும்.

ஏண்டா படிக்காம போய் எழுபது வாங்கிட்டு வர்ற. அந்தப் புத்தகத்தை திறந்து பார்த்தேனா என்பதுக்கு மேலேயாவது வாங்கலாமில்லடாம்பான். நியாயம்தான் ஆனால் நம்மால் முடியலையே.

திருச்சி கல்லூரி படிப்பு முடிந்து சென்னைக்கு மேல் படிப்புக்கு வந்தோம். அவனுக்கு இஞ்சினியரிங் கிடைச்சது. நமக்கு அது சரி வராது. லயோலா தான்.

இஞ்சினியரிங் போனவன் பத்தே நாளில் இங்க லயோலா ரூமுக்கு வந்துவிட்டான். அங்க ஹாஸ்டல்ல செம ராக்கிங். சம்மர்கட் அடிச்சுவுட்டு காலேஜ் கிரவுண்ட் சுத்த வைக்கறாங்களாம் சீனியர்ஸ். 

இங்கிருந்து ஒரு வாரம் அங்க இஞ்சினியரிங் போயிட்டு வந்தான். அப்பவெல்லாம் ஒரு லயோலா சாப்பாடு 4.50 - 5.50 ரூபாய் வேற. இதெல்லாம் எங்களுக்குப் பெரிய அமௌண்ட் அப்ப. நல்லவேளைஅந்த வருடம் காலேஜ் மெஸ் ரெப் நான் தப்பிச்சேன். ஹாஸ்டல் ஓசி சாப்பாட்டுல தப்பிச்சோம். ஹாஸ்டல் வார்டன் வந்து என்கிட்ட என்ன வெளி காலேஜ் பையனை உன் ரூம்ல விட்டுருக்கன்னார். ஏதோ சொல்லி சமாளிச்சேன். ஒரு வாரம் கழிச்சு அவனைத் தைரியமாப் போடான்னு சொன்னதுக்கப்புறம் அவன் இஞ்சினியரிங் ஹாஸ்டலுக்குப் போனான்.

இப்ப அவன் ஒரு சயன்டிஸ்ட். எலக்ட்ரானிக்ஸ் கம்பெனி முதலாளி. பலருக்கு வேலை போட்டுக் கொடுக்கிறான். அவர்கள் கூடவே வளர்கிறான்.

நண்பனுக்கு போன வாரம் அறுபது வயது பூர்த்தியாகிச்சு. அவன் பொண்ணு அவனுக்கு ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்து கலக்கிட்டாள்.

திறமையான நண்பனுக்கு நல்லத் திறமை வாய்ந்த மகன் மற்றும் மகள் அதே அவனது கம்பெனியில் அவனுக்கு உதவுகிறார்கள். அடுத்த கட்டத்திற்கு அதை நகர்த்தப் போறோம்ன்னு சொல்றாங்க! மனமார்ந்த வாழ்த்துகள்.

காலங்கள் ஓடினாலும் நினைவுகள் அழிவதில்லை.
வாழ்வினிது
ओलै सिरिय ।
11/2/2023
¡La amistad es para siempre!

Saturday, July 8, 2023

சுக துக்கே சமே க்ருத்வா

யாருடைய நல்வாழ்விற்காக நாம் இங்கு போரிட வந்தோமோ, அவர்கள் தன் உயிரையே கொடுக்க இங்கு வந்துள்ளார்கள்!

இந்த போர் யார்க்கு இனி!

ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம்!
கொல்லப்படினோ வானுலகு எய்துவாய்!
வென்றால் பூமியாள்வாய்!
துணிந்து எழுந்து நில்!

இப்படி ஒரு சூழ்நிலை நமக்கு வந்தா என்ன செய்ய!

கதி கலங்குது!

சுக துக்கே சமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ!

இன்ப துன்பம் இழப்பு பேறு வெற்றி தோல்வி அனைத்தும் சமமே!

பழகியதால்
வாழ்வினிது
ओलै सिरिय ।
!La vida no es fácil para nadie!
ஜூன் 5 2023

தலைமையிடம் கேள்வி கேட்காதே

தலைமைப் பதவியில இருக்கிறவங்க கிட்ட நாம அவங்களை சேலஞ்ச் பண்ற மாதிரி ஏதோ ஒரு கேள்வி கேட்டுபுட்டோம்ன்னு வச்சுக்குங்க அம்புட்டு தான். ஒவ்வொரு சந்தர்ப்பம் வரும் போதும் நம்மளைப் பழி வாங்க தயங்கமாட்டாங்க! தங்களோட பவரை அங்க காண்பிப்பதாக காட்டிக்குவாங்க!

இது குறிப்பாக நம் மக்களிடம் அதிகம் பார்க்கலாம். சாதாரண ஒரு கமிட்டியில இருக்கிறவங்க கூட நேரம் பார்த்து தாக்குவதைப் பார்க்கிறேன்.

இத்தனைக்கும் இவர்களெல்லாம் 20 வருடமாகத் தெரிந்தவர்கள், நண்பர்கள், பரஸ்பர உதவி செய்து கொள்பவர்கள். இருப்பினும் பதவின்னு வரும் போது, கேள்விகளை சில சமயம் ஏன் கேட்கிறோம்ன்னு ஆயிரும்!

என்ன அடி பலமான்னு கேட்கலாம்!

பழகிடுச்சு இப்ப!

சமீபத்தில் ஒரு இடத்தில் அம்மிணி முன் கூட்டியே அரங்கில் போய் உட்கார்ந்த போது ஏற்கனவே உள்ளே இருபது பேர் இருந்தனர். அம்மிணிக்கு  காலில் பிரச்சனை, ஆதலால் நிற்க முடியாமல் உள்ளே போனாங்க! வேலைக்காவல. எல்லோரையும் வெளியே அனுப்பிட்டாங்க!  கூப்பிடும் போது உள்ளே வா! அனுப்பியது ரொம்பத் தெரிஞ்சவங்க!

இதற்கு முன் ஒரு ப்ரோக்ராம் ஒன்றில் உள்ளூர் பெரிய மனிதர் ஒருவர் போர்ட் மெம்பர்களிடம் ஒரு கேள்வி கேட்டார், அவ்வளவு தான். அதை புறக்கணிக்கிற நிலமை தான்!

போனோமா கேட்டோமா அங்ஙன கலந்துகிட்டோமா அவ்வளவு தான், பேசாம வந்துரனும்!

கேள்வி மட்டும் கேட்டுரக் கூடாது!

உனக்கெல்லாம் எதுக்குயா இந்த ஓட்ட வாய்ன்னு கேப்பீங்க! அது நம்ம வாய்க்குத் தெரிய மாட்டேங்குதே!

அமைதியாய் இருப்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡La democracia está en papel!
ஜூன் 5 2023

கிராம வாழ்க்கையை இழந்த பொழுதில்

எனது சித்தப்பா என் மேல் அதிகம் பாசம் காட்டியவர். சின்ன வயதில் எனக்கு ஜுரம்
 மற்றும் எந்த வியாதி வந்தாலும் வந்து பக்கத்தில் உட்கார்ந்து ஆறுதல் சொல்வார். தடவிக் கொடுப்பார். கால் பிடித்து விடுவார்.

தனது அறுபது வயதிலேயே மறைந்து விட்டார். அப்பாவை விட நான்கைந்து வயது இளையவர். அப்பாவின் கடைசிக் காலம் 86 வயது, அப்போது கூட சித்தி, சித்தப்பா இப்படி சீக்கிரமே போயிட்டாரேன்னு வருத்தமாகச் சொன்னாங்க!

சித்தப்பா தனது மறைவுக்கு ஆறு மாதம் முன் அவரது வீட்டு முற்றத்தில் என்னிடம் சொன்னது இவை. அவர் அப்பாவை பாப்பான்னு தான் கூப்பிடுவார்.

‘பாப்பா ஊரை விட்டு யாருக்கும் சொல்லாம வந்தப்ப எனக்கு பத்து வயசு. விவரம் தெரியலை. அவ்வளவு நிலம் தோப்பு பரிசல் எல்லாம் போய், கடைசியாக இருந்த அந்த ஒன்றரை ஏக்கர் நிலத்தை மட்டும் அவன் கையெழுத்து போடாம ஓடி வந்துருந்தான்னா, இன்று நம்மோட நிலமையே வேற மாதிரி இருந்துருக்கும். நாங்க நிறைய வளத்தோட பிறந்தோம், ஆனால் எங்க யாருக்கும் அநுபவிக்க கொடுத்து வைக்கலை.  கொஞ்சம் தெரிஞ்சுருந்தா கூட கையெழுத்து போடாதேன்னு சொல்லியிருப்பேன். அந்த ஒன்னரை ஏக்கர் போதும். நம்ம நிலமையே வேற மாதிரி இருந்திருக்கும். இப்படி கஷ்டப்பட வேணாம். எதுவுமே பேசாம கையெழுத்து போட்டு விட்டு யார்ட்டையும் சொல்லாமப்போயிட்டான்’ன்னார்.

சித்தப்பா சிறந்த டெக்னீசியன். ஃபோட்டோகிராஃபர், Fitter, electrician மற்றும் plumbing எல்லாம் சர்வசாதாரணமாக செய்வார். சித்திக்கு உதவ அவங்க ஆபீஸ் வேலையை வீட்டில் டைப் அடித்துக் கொடுத்து உதவுவார். தாத்தா இறந்தவுடன் பாட்டி, சித்தப்பா மற்றும் அத்தைகளை அப்பாதன்னோடு கூட்டி வைத்துக் கொண்டார்.

சித்தப்பாக்கு தன்னோட நிலபுலன்களை அநுபவிக்க முடியலைன்னு வருத்தம். நாங்கெல்லாம் ஊருக்கு குலதெய்வம் கோவிலுக்கும் மலையாள கருப்பண்ணசாமிக்கும் கும்பிடப் போகும் போது அந்த கடைசி ஒன்னரை ஏக்கர் விவசாய நிலத்தைக் காண்பிப்பார்.

அப்பா ஒன்னுமே அதைப் பற்றி பேசமாட்டார். அவருக்கு எவரையும் குறை சொல்வது பிடிக்காது. அந்த நிலத்தை தாண்டும் போது தலை குனிஞ்சுருவார். மலையாளக்கருப்பண்ண சாமியைப் பார்க்கும் போது தான் முகம் ஒளிரும்!

அத்தைகள் இவர்கள் இருவரையும் விட இளையவர்கள். முந்தா நாள் அத்தை பேசும் போது கூட தன்னோட கிராம வாழ்க்கையும், அந்த இளம் வயதில் அவங்க பட்ட கஷ்டங்களையும் நினைவு கூர்ந்தாங்க.

கடைசியாக இருந்தது தாத்தா வீடு மட்டுமே! வீட்டு பின்னாடி 10-15 தென்னை மரம் வரிசையாக. நாங்க பத்தாவது படிக்கும் போது அத்தை கேட்டாங்கன்னு தன் பேர்ல இருந்த அந்த வீட்டை அப்பா அத்தைக்கு எழுதிக் கொடுத்து விட்டார். அம்மா சித்தப்பாக்கெல்லாம் ரொம்ப வருத்தம். வெளிப்படையாகவே அப்பாவைச் சொன்னார்கள். 

நமக்கு இருக்கிற அந்த உரிமை அந்த வீட்டில் அவளுக்கும் உண்டுன்னு கூலாக சொல்லிட்டார்!

சித்தப்பா மற்றும அத்தைகளுக்கு எங்கப்பா அம்மா மீது அளவு கடந்த மரியாதை. அவங்க தான் தன்னை வளர்த்து கல்யாணம் பண்ணி வைத்ததால்!  அப்பா எது சொன்னாலும் கடைசி வரை மீற மாட்டாங்க. பிடிக்கலைன்னா ‘என்ன பாப்பா இது’ன்னு ஒரு சிணுங்கல், மற்றபடி அம்மாவோட பேசி குறைபட்டுப்பதோடு சரி.

அத்தை அந்த வீட்டில் ஓரிரு வருடங்கள் இருந்தார். அவரது குடும்பச்சுமை, பசங்க படிக்கனும், அந்த வீட்டை விற்று விட்டார்!

முந்தா நாள் அத்தை பேசும் போது ரொம்ப பாசத்தோடப் பேசினாங்க! உங்கிட்ட சொல்லனும்டா! அந்த வீட்டை வித்து தப்பு பண்ணிட்டேனாடா, நாம வச்சுருந்திருக்கலாம்ன்னாங்க! மெயின்டைண் பண்ண முடியல, பணத்தேவை வச்சுக்க முடியலடான்னாங்க! அம்மனை நேரில் பார்க்கனும். நான் பிறந்த இடம்டான்னாங்க. 

வாசத்திண்ணையில நானும்(அத்தை) இன்னொரு அத்தையும் அம்மாவை (என் பாட்டி) கட்டிகிட்டு பயத்துல படுப்போம். உன்கிட்ட சொல்லனும் போல இருக்குடான்னாங்க! ஊர்ல கிராமத்துல சின்ன வயசுல எனக்கு நிறைய கஷ்டம்டா, உன் அப்பாவோட வந்த பிறகு தான் நல்ல வாழ்க்கை அமைஞ்சது. இந்த வாழ்க்கை கிடைக்க கொடுத்து வைத்திருக்கனும்டான்னாங்க!

எந்த குறையுமில்லை அத்தை, நீங்க செய்தது எல்லாம் சரி தான். விடுங்க! இப்ப அங்க போய் யார் இருக்கப் போறோம். ஊர் இருக்கு கிராமம் இருக்கு நம்ம குலதெய்வம் இருக்கு. ஒருத்தர் ஒருத்தர் விட்டு விட்டு குலதெய்வத்தை போய்ப் பார்க்கிறோம், இப்ப தான் நாலு மாசம் முன்ன என் மனைவி போய் வந்தாள். இப்ப அம்மன் நமக்கு தானாகவே தரிசனம் கொடுக்குது. நிறைவாக இருப்போம்ன்னேன்!

சித்தப்பாவின் வார்த்தைகள் மனதில் ஒலித்தாலும், இப்போது அனைவரும் நிம்மதியாக வளமாக இருக்கும் தருணத்தில் வெறும் நினைவுகளோடு வாழ்வதில்

வாழ்வினிது
ओलै सिरिय ।
ओलै उवाच । ¡Cualquier cosa que perdemos es irrelevante ahora! ¡El amor es suficiente!
ஜூன் 4 2023