Wednesday, July 17, 2013

வாழ்க்கையின் வெற்றி

அடியால் கொடுக்கப்படும் நீதி 
அடிமனதின் வியாதி

கை நீளும் போது 
உன் இயலாமை 
வெளி வருகிறது !

கை நீட்டுவதால் 
உன் வாழ்க்கையில் 
தோல்வி நீள்கிறது!

அணைக்கும் கரங்களே 
வாழ்க்கையின் வெற்றி.

Monday, July 15, 2013

Auto

2009 - சென்ட்ரல் டு திருவான்மியூர் - ராத்திரி பத்து மணிக்கு ஆட்டோ புடிச்சேன். 200 கேட்டார். 150க்கு பேரம் பேசி போயிட்டிருக்கும் போது எப்பிடியும் ஊர் சுத்தி ஏமாத்திருவார் ங்கிற மாதிரி நினைச்சுகிட்டிருந்தேன். 

ராயப்பேட்டை வழியா போகும் போது ஏதோ ஊர் தெரிஞ்சா மாதிரி அவர்கிட்ட ஏன் இப்பிடி போறீங்கன்னேன் . பயப்படாம வாங்க சார் ன்னார். நம்ம கால் ஆடறது தெரிஞ்சிடுத்தா என்று நினைச்சேன்.

மந்தைவெளி தாண்டும் போது எல்லா ஆட்டோ காரங்களும் ஏமாத்தரவங்க இல்லைன்னார். என்ர வாய் சும்மா இருக்காம எப்பிடி சார் அதை முகத்தைப் பார்த்து தெரிஞ்சிக்கிறதுன்னு கேட்டு வைச்சுட்டேன். வண்டியை அங்கேயே நிப்பாட்டி இறக்கி விட்டுருவாரோன்னு கொஞ்சம் பயம் கூட.

பிறகு மெதுவா சொன்னார். நான் AGS ஆபீஸ் ல வொர்க் பண்றேன். பையங்க இன்ஜினியரிங் படிக்கிறாங்க. தேவைக்காக மாலையிலிருந்து இரவு ஒரு மணி வரை ஆட்டோ ஓட்டுவேன் என்றார். ஏமாற்றி பிழைக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

அதுக்கப்புறம் வீடு போறவரை நான் தான் அவரை சார் போட்டு அழைச்சேன்.
இறங்கும் போதும் அவரை என் பெட்டி எடுத்துக் கொடுக்க விடவில்லை. நானே!

சார் உங்க போன் நம்பர் கொடுங்க. சென்னையில் இருக்கிறவரை உங்களைக் கூப்பிடறேன் என்றேன். அவர் சொன்ன பதில் கேட்டு அமைதியாயிட்டேன்.

அவர்  'நான் கொடுத்தாலும்  உங்களுக்கு use இல்லை. நான் வசிப்பது தண்டையார்பேட் பக்கம். அங்கிருந்து இவ்வளவு தூரம் வந்து போவது சாத்தியமில்லை' என்று விட்டார்.

எக்ஸ்ட்ரா கொடுத்த பணம் மட்டும் வாங்கிக்கிட்டார்.

பாட்சா படம் பார்த்து வந்தா மாதிரி இருந்தது.

Sunday, June 30, 2013

யாரும் தோற்பதில்லை

அப்பா உனக்கு ஏதாவது உதவி செய்யணும்ன்னா சொல்லு நானிருக்கேன்னு  சொல்ற தங்கத்துக்கு என்ன வேணும் உனக்கு ன்னு கேட்கலைன்னா நீங்க இன்னும் கொஞ்சம் ட்ரைனிங் எடுக்கணும்.

எங்கிருந்து புடிக்கிரானோ தெரியலை, ஒரு படத்தப் பேரைச் சொல்லி கூட்டிட்டுப் போன்னு செம அடம், Google search பண்ணி theatre , பட நேரம் எல்லாம் பார்த்து தயாரா நிக்கறான் புள்ளை.

மேலும் எனக்கு ஒரு deal வேற. 2D படமா இருந்தா பாப் கார்ன் கண்டிப்பா வாங்கணும். 3D ன்னா நான் கொஞ்சம் மனசு வைச்சு வாங்கிக் கொடுக்கலாம். என் விருப்பத்துக்கு விட்டாச்சு.

3.15 க்கு theatre வாசல்ல ஐயா சொல்றாரு, இப்ப 3D movie . 2D பார்க்கனும்ன்னா இன்னும் அரை மணி வைட் பண்ணனும். மறுபடியும் என் விருப்பத்துக்கு ஐயா விட்டுவிட்டார்

நிறைய பாப் கார்ன், lemonade கையோட உள்ள 3D கிளாஸ் போட்டு உட்கார்ந்தா ஒரு கண்ணு நொல்லையாத் தெரிது. என்னை disturb பண்ணாத தொடைச்சுப் போடுன்னு எனக்கு அட்வைஸ் வந்து கிட்டு இருக்கு.வேற கிளாஸ் மாத்தி வாங்கியாச்சு.

படம் முழுக்க நான் சின்னப் புள்ளையாட்டும் குதுகூலமா இருக்க, பய புள்ள பெரியவராட்டும் செம behavior. வசனம் புரியுதா, அந்த கேரக்டர் என்ன சொல்றது தெரியுதா ன்னு சின்னப் புள்ளையான எனக்கு சொல்லிக்கிட்டு வர்றான்.

(என் பேர்ல கடைசி பகுதி வித்தியாசமா இருக்குறது பலருக்கு கொஞ்சம் டவுட். சரியாயிடும் சீக்கிரம்).

குழைந்தைகளுக்கு தன்னம்பிக்கை உருவாக்க அருமையாக டிஸ்னி Pixar எடுத்த படம்.

பையன்ட்ட எப்போதும் சொல்வேன். நெவெர் கிவ் up .

வீட்டுக்கு வந்த பிறகு பையன் சொல்றான், தோல்வியிலும் ஒரு தன்னம்பிக்கையோடு வெளியேறும் கதை சூப்பர்.

நீங்களும் பார்க்கலாம்.

Monster University.

Thursday, May 30, 2013

காரத்தொழுவு

காரத்தொழுவு - இது என் அம்மா பிறந்த ஊர். ஒரு தடவை தான் போயிருக்கிறேன். ஆனால் சிறுவயதிலிருந்து இன்று வரை இந்த ஊர் பெயரை வீட்டில் கேட்காத நாட்கள் குறைவு.

அம்மா தன் சகோதரன் சகோதரிகளோடு சிறுவயதிலேயே இந்த ஊரை விட்டு வந்தாலும், ஊரையும் ஊர் மக்களையும் பற்றி பேசாத நாட்கள் இல்லை. அம்மா பாட்டி அனைவரது அடிமனதிலும் காரத்தொழுவு பற்றி ஒரு ஆழ்ந்த நினைவலைகள் இருந்து கொண்டே இருந்ததை சிறு வயதிலிருந்தே அறிவேன்.

என் மாமா, பாட்டி மற்றும் அம்மா அடிக்கடி உரையாடலில் மிகவும் அதிகமாக குறிப்பிட்ட ஒரு குடும்பம், என் மனதிலும் அந்த குடும்பத்தின் மீதான ஒரு மரியாதை மிகவும் உயர்ந்து இருப்பதாக நினைப்பது, தியாகராஜ  தீக்ஷிதர் - குஞ்சம்மா தம்பதியரின் குடும்பம்.

தீக்ஷிதரும் அவர் மனைவியும் நான் பிறக்கும் முன்னரே இவ்வுலகில் இல்லை. ஆனால் அவர்கள் பெயரில் உள்ள ஆளுமை எங்கள் வீட்டில் இன்றும் உணரலாம்.

என் அம்மா குடும்பத்தைப் போல, தீக்ஷிதர் குடும்பத்திலும் நிறைய குழந்தைகள் உண்டு. எல்லோரும் இன்று முதியோராய் தளர்ந்து கொண்டிருந்தாலும், எங்கள் குடும்பத்தின் மீதுள்ள அன்பில் இன்றும் உயர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

தீட்சிதர் மகன்களில் ஜெயராமன் அவர்களை மட்டும் சில தடவை பார்த்திருக்கிறேன். இந்த தடவை எங்களது அடுத்த தலைமுறை கல்யாணத்திற்குப் போயிருந்த போது, தீக்ஷிதரின்இன்னும் இரு மகன்களையும் அவர்கள் குடும்பத்துடன் அங்கு ஒரு சேரப் பார்த்த போது  ஆச்சரியமும் மரியாதையும்  கலந்தோடியது.

இளையவர் விசு அவர்களிடம் போய் கொஞ்சம் உளறி கொட்டினாலும், அவரது எளிமையும், எப்போதும் அமைதியாகவே இருக்கும் அவரது அண்ணன் நாகு வையும் பார்த்து மனதில் இவர்களை ஒரு போட்டோ எடுத்து பத்திரப் படுத்திக் கொள்ளத் தோன்றியது. நாகு அங்கிளின் மனைவி தான் பழைய விஷயங்கள் சிலவற்றை சொல்லி பரவசப் பட்டுக் கொண்டார். ஆனால் பரவசத்திலிருந்தது  நான் தான்.

இவர்கள் என் அண்ணனுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே ஓரிரு போட்டோக்கள் எடுத்து வைத்துக் கொண்டேன். விவரங்களை என் அம்மாவிடம் பகிர்ந்து கொண்ட போது அவர்கள் முகத்தில் ஒரு பரவசம் தெரிய வந்தது.

போன வாரம் தீக்ஷிதரின்  மகளும் என் அம்மா தன் நெருங்கியத் தோழியாக இன்று வரை நினைத்து வரும் அவரது மகள் இந்திராவை போய்  பார்த்து வந்திருக்கிறார்.

நாங்கள் அறியாமலேயே எங்கள் குடும்பத்தில் ஒன்றியிருக்கும் தீக்ஷிதர் குஞ்சம்மா தம்பதியருக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.

Saturday, April 6, 2013

ரூள்ஸ் இராமசாமி


ரூள்ஸ் இராமசாமி 

இது யாருன்னு கேட்கரீங்களா, தெரியாது. ஆனால் பத்து நிமிஷம் உங்க காரை ஒரு ஹான்டிக்கப் பார்க்கிங் பக்கம் நிறுத்திட்டு பார்த்திங்கன்னா நீங்களும் ரூல்ஸ் இராமசாமி ஆகி விடலாம். உடல் ஊனமுற்றவர்கள் வசதிக்காக வைத்துள்ள பார்க்கிங் space ய் தவறுதலாக உபயோகப் படுத்துவது இந்தியாவிலிருந்து இங்கு வந்துள்ள மக்கள் மட்டுமே.

 உள்ளூர் மக்கள் மட்டும் ஒருவர் கூட இதை செய்யவே மாட்டங்க. இடமில்லை என்றால் கூட கொஞ்சம் தள்ளி ஒதுக்குப் புறமாக மற்ற கார்களுக்கு வழி விட்டு செய்கிறார்கள். அங்கு தற்காலிகமாக கூட செய்ய மாட்டார்கள்.

நம்மக்கள், அவ்விடத்தில் தம் காரை நிறுத்தி இறக்கி விடுவதும் ஏற்றிக்கொள்வதும் சில சமயம் காத்திருப்பதும் தவறாமல் செய்பவர்கள். ஓரிருவர் என்றால் பேசாமல் இருந்து விடலாம். ஆனால் பத்தில் 8 கார் இதை செய்யும் மக்கள் இந்திய வம்சாவளியினர் என்று பார்க்கும் போது மனதுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் ரூல்ஸ் இராமசாமி முழித்துக் கொண்டு விடுவார்.

மீதி இரண்டு கார் யாரென்று தவறாமல் கேப்பீர்கள். தெரியும். அதுவும் நீங்கள் ரூல்ஸ் ராமசாமியாவதற்க்கு தகுதியான கேள்வியே. அந்த இரண்டு கார்கள் கூட நம் இநதிய மக்களை இறக்கி விட வந்த கார். அவர்களை  அவ்வாறு விட்டுச் செல்லுமாறு சொல்வதும் நம் மக்களே!.

ரூல்ஸ் இராசாமியான நீ பார்த்து கிட்டு என்ன செய்தன்னு கேட்கலாம். உங்களுக்கு முழு தகுதியும் வந்து கொண்டிருக்கிறது. முன்பேற்பட்ட அனுபவத்தின் காரணமாக நான் ஹான்டிகாப்  போர்டை பார்ப்பதும் இவர்களையும் மாறி மாறி பார்த்தே ஒரு வழி பண்ணிவிட்டேன். ரூல்ஸ் ரூல்ஸ்சாதானிருக்கனும். மாறக்கூடாது இல்லையா?

இவர்கள் வண்டியிலிருந்து இறங்கும் நாளைய சமுதாயம் இது தவறு என்று உணராமலே வளர்கிறது. நாளை இவர்கள் தவறாமல் கடை பிடிப்பார்கள். இல்லையா?

பார்த்து விட்டு சும்மா வந்து இங்க வந்து பொங்கல் வைக்கிற நீயெல்லாம் ன்னு நீங்கள் கேட்கலாம். உங்களுக்கும் முழு தகுதி வந்து கொண்டேயிருக்கிறது.

ரூல்ஸ் இராமசாமியாகிய நான் லெப்ட்ல ஓடிச்சு ரைட்டுல போயிக்கிட்டே ரூல்ஸ் கடை பிடிப்பேன். ரூல்ஸ் ருல்சாத் தானிருக்கணும்.

ஓகே. ஓகே, இது ரொம்ப ஓவர்ன்னு நீங்க சொல்றது புரியுது. யு ஆர் புல்லி QUALIFIED நொவ்.

Thursday, April 4, 2013

தினபலன்



தினபலன் 


மாலை ஆபீஸ் லர்ந்து கிளம்பும் முன்ன தினபலன் பார்த்தா வீடு தேடி நல்ல செய்தி வரும்ன்னு போட்டிருந்தது. சந்தோசமா வீட்டுக்குள்ள  நுழைஞ்ச அரைமணி நேரத்தில வீட்டு முன்ன ஒரு போலீஸ் கார் வருது. போலீஸ் பெண்மணி கிட்ட என்ன விஷயம் ன்னு கேட்டா, ஒண்ணுமில்லை உன் வீட்டு பின்ன ஒரு மரத்தடி கீழ ஒரு கார் நிக்குது. பேக்கப் போலீஸ் வரட்டும் என்றாங்க. யு ஆர் சேப் ன்னாங்க. இது தான் வீடு தேடி வர நல்ல சேதியா?

இன்னொரு போலீஸ் வந்தவுடன் இந்த அம்மிணி நேரா ரோடுல நடந்து அந்த கார் நோக்கிப் போவாமா மரத்தோரமா ஒதுங்கி ஒதுங்கி போறதப் பார்த்தா எதோ என்கௌன்டர் நடக்கப் போவுதுன்னு பார்த்தா, காருக்குள்ள மொட்டைமாடி மொட்டைமாடி ஒரு லவ் ஜோடி உள்ள உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கு.

இந்தம்மா விடலை.

இரண்ட பேரையும் இறங்கச் சொல்லி, அவன புரட்டிப் போட்டு  கையோட udambu பூரா தட்டி தடவி துளாவி வாயை ஊதச் சொல்லி, avaளையும் விட்டு வைக்காம சகல டெஸ்ட் உம் பண்ணி அனுப்பி விட்டாக. 

இருபது வயசு கூட ஆகாத அந்த இளஞ்ஜோடியோட முகத்தைப் பார்க்கும் போது பாவமா இருந்துச்சு. 

கடைசியில எங்கிட்ட ஒன்னும் சொல்லாம கையை காட்டி விட்டு போலீஸ் போயிடுச்சு.

எவன் போலீஸ் கூப்பிட்டானோத் தெரியலை. அந்த சோடிங்க நாளைக்கு எனக்கு நல்ல சேதியா வீடு வரைக்கும் வந்து கொடுக்கும். உன்ர தினபலன் சூப்பரப்பு.

Tuesday, March 19, 2013

உறுதுணை

வணக்கம் தோழனே,

தோல்வியென நினைக்கையில்
நம்பிக்கை துளிர்க்க விடும்
நண்பனிருக்கையில்
துவளவிடாமல் உயர்த்திப் பிடிக்கும் தோழனே!

நீ என் நண்பன் என்பதை
உணர வைக்க முடியாமல்
நம்பிக்கைத் தளர்ந்திடும் நேரத்தில்
என்னுளிருக்கும் திறமையத்
தெரிய வைப்பதில்
நீ கை தேர்ந்தவனாய்
அவதரிக்கிறாய் தோழனே !

ஆரம்பத்தில் துவண்டு கொண்டிருந்த
உனக்கு உறுதுணையாய்
நின்றதன் பலன்
இன்று நீ  கைமாறு வழங்கிடும் 
வேளையில் நன்றியுடன் உனை நோக்கின் 
என் நட்புணர்வின் சிறுமையை 
எழ வைக்கும் தோழனே !

உன் பாதையில் நான் வந்த 
அதிசயத்திற்கு வணக்கம் கூறி 
நம் நட்பு தொடர வேண்டி 
வழி மொழிகிறேன் தோழனே!

உறுதுணை எனது!