Sunday, February 27, 2022

இனியவை நம் குழந்தைகளால்

காலையிலேயே போனில் காதினிக்கும் செய்தி கிடைக்கும்ன்னு எங்கிட்டோப் பார்த்தேன். என்னயா விஷயம்ன்னு யோசிச்சு கிட்டு இருந்தேன்.

காலையில ஏழரை மணிக்கே பையனிடமிருந்து ஃபோன் கால். அப்பா நான் இப்ப எங்கே போறேன்னு சொல்லுன்னான். ஏண்டா காலையிலேயே இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்டேன்னேன். நானெல்லாம் காலேஜ்ல படிக்கிறப்ப மதியம் வரை தூங்கிய ஆள்.

பையன் சந்தோஷமாகச் சொல்றான்: பக்கத்து டவுன்ல இருக்கிற fire station ல இன்னிக்கு paramedics டூட்டி. காலையில எட்டு மணியிலிருந்து இரவு பதினோரு வரை. என்னோட இன்னொரு விருப்பமும் இன்னிக்கு நிறைவேறப் போறதுன்னான். அவனுக்கு fire station ல வேலை செய்ய ஆசை உண்டு கூட. ஒரு ஆம்புலன்ஸ் கம்பெனி பேரைச் சொல்லி இன்னிக்கு அந்த ஆம்புலன்ஸை அங்கிருந்து ஓட்டப் போறேன்னான்.

அவன் குரலில் அவ்வளவு சந்தோஷம். அம்மிணி, உங்க பையன் உங்க கிட்ட மட்டும் தவறாம ஃபோன் பண்ணிச் சொல்றான்னு நடுவுல வந்து சேர்ந்துகிட்டாங்க!

நேற்றும் அவன் ERலிருந்து டெக்ஸ்ட் பண்ணான். அப்பா 650 பவுண்ட் இருக்கிற ஒரு பெண்மணிக்கு IV போட இருபது வருட எக்ஸ்பீரியன்ஸ் உள்ள paramedics மற்றும் ஒரு நர்ஸ் சேர்ந்து நரம்பு தேட கிடைக்காம நான் கரெக்டா போட்டேன்பான்னு சந்தோஷமாக டெக்ஸ்ட் பண்ணான். நான் அவன்ட்ட, ஏண்டா இவ்வளவு பேர் சேர்ந்து அவங்க கையைப் பதம் பார்க்கறீங்கன்னு கிண்டல் பண்ணேன், அதற்கு அவன்: என்ன பண்றது அவங்க உயிரைக் காப்பாத்தியாவனுமே! நான் போடலைன்னா அவங்க வாழ்க்கை அங்கயே முடிஞ்சுருக்குமேன்னேன்.

நானெல்லாம் காலேஜ் படிக்கிற காலத்தில் தான் பரவலாக computerization நடந்து கிட்டு இருந்துச்சு. அது வேலை வாய்ப்பைப் பறிக்கும்ன்னு சொல்லி கிட்டு திரிஞ்சுகிட்ட இருந்த நேரம்.

இங்க பையன் காலேஜ் முதல் வருடத்திலேயே தான் தேர்ந்தெடுத்த பாதையில் பயணிக்கிறான். இவ்வளவு இளம் வயதிலேயே இவ்வளவு கஷ்டப்படனுமான்னு நமக்கு கவலையாக இருக்கு. அவன் பார்க்கும் வேலையில் தன்னால் எவ்வளவு பேரைக் காப்பாற்ற முடியும்கிற பாதையில் அவனே தேர்ந்தெடுத்து பயணிக்கிறான். 

இத்தனைக்கும் அங்க கடுமையான வெதர் வேற. இப்ப என்னடா டெம்பரேச்சர்ன்னேன். 24 டிகிரிப்பா, வார்ம் ஆக இருக்குன்னு கிண்டல் பண்றான். அடேய் நான் அதுல உறைஞ்சு போயிடுவேன்டா, இங்க பாருன்னு ஜன்னல் வழியா என் செடிகளைக் காண்பிச்சேன். அது நம்ம ஊருப்பா, இங்க இதுவே சுகம்கிறான்.

இன்றைய காதினிக்கும் செய்தியோடு நாள் துவங்கியது.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Los niños son nuestra felicidad!

Thursday, February 24, 2022

கல்வி தரும் பட்டம் காற்றாடியல்ல

கல்வி என்பது வாங்கி சேர்க்கிற பட்டத்தில் இல்லை என்பது பரவலாக உணர வேண்டிய ஒன்று. கற்பதற்கு வயதுமில்லை, கடைசி வரை கற்க முடியும். ஏளனங்கள் என்றுமே ஏணிகளின் படிகள்.

கற்பதற்கு பொதுவான தடைகள் பெரும்பாலும் குடும்பப் பொருளாதார சூழ்நிலை மற்றும் சுயசார்பு தயக்கங்களே! அதை சமூகத்தின் மேல் போடுவது இயல்பானதாய்ப் பார்க்கிறோம். 

ஐஐடி வளாகத்திற்குள் நுழையாதவர்கள் ஐஐடியில் படித்தவர்களை அடிக்கடி இளக்காரமாக எழுதுவதைப் பார்க்கிறோம். கல்லூரியில் வாங்கும் பட்டங்கள் ஏணிப்படிகள் மட்டும் தான். அவை ஒரு நீண்ட ஒரு வளமான வாழ்க்கைக்கு ஆரம்பப் படிக்கட்டு மட்டுமே. அவை என்றுமே வாழ்க்கையின் உச்சத்தைத் தொட்டுவிடக் கொடுக்கும் வாய்ப்பு இல்லை.

பெரும் வாய்ப்புகளை உபயோகிக்க, மற்றும் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி மேன்மேலும் கற்று உயர்ந்தவர்களால் மட்டுமே ஒரு சுந்தர்பிச்சையாகவோ அல்லது ஒரு விஞ்ஞானியாகவோ பொருளாதார நிபுணராகவோ முடியும். சேர்க்கும் பட்டங்கள் ஒரு வரையறைக்குப் பிறகு பட்டம் விட மட்டுமே உதவும். என் சொந்த மகனே என்னைக் கேட்டிருக்கான். அம்மா வளர்ந்த அளவு நீ வளரவில்லையென.

கல்லூரியில் உடன் படித்த நண்பன் வாங்கியுள்ள பட்டங்களை வரிசைப்படுத்தினால் ஒரு விசிட்டிங்கார்ட் பத்தாது. மிகப்பெரிய கல்லூரியில் அதன் நிர்வாகத்தில் மட்டுமல்ல, கேம்பஸ் ரெக்ரூட்மண்ட் ரிஜிஸ்ட்ரார் கூட. இவரிடம் இரண்டு டாக்டர் பட்டம் கூட உண்டு. ஆனால் இன்று வரை ஆங்கில இலக்கணம் பேசுவதிலும் எழுதுவதிலும் தடுமாற்றம் தான். ஆனால் அவரால் எப்படி இந்த அளவை எட்ட முடிந்தது. தொடர் கல்வி, அயராது உழைப்பு, எல்லாவற்றிற்கும் மேல் சிறந்த குணம் படைத்தவர். பிறரைக் குறை சொல்வதால் நம் வாழ்வு உயராது என்று உணர்ந்தவன். அவரால் பயன் அடைந்தவர்கள் பல மாணவர்கள்.

பிஎம்பி படிக்கும் போது எல்லா requirementsம் பூர்த்தி செய்து எல்லாம் படித்து முடித்து விட்டு, கடைசியாக அப்ளிகேஷனில் மேனேஜரின் கையெழுத்து தேவைப்பட்ட போது அவர்கள் என்னிடம் நேரிடையாகக் கூறியது: நீயெல்லாம் இங்கு மேனேஜர் ஆக முடியாது, எதற்கு இதுன்னு சொல்லிவிட்டு கையெழுத்து போட்டுக் கொடுத்தார்கள். அந்த மேனேஜருக்கு டிகிரி கூட கிடையாது. அவர்களால் இந்த எக்ஸாம் எழுதக்கூட முடியாது. என்ன சொல்வது. கையெழுத்து வாங்கின அந்த பேப்பரை எங்கோ தூக்கி எறிந்து விட்டேன். கற்ற அந்த கல்வி, ஞானம் இன்றும் உதவுகிறது. திறமையாக செயல்பட உதவுகிறது. பட்டம் உதவுவதில்லை.

சமீபத்தில் ஸ்பானிஷ் கற்றுக்க ஆரம்பித்த போது வந்த சிலுசிலுப்புகள் எல்லாம் ஹிந்தி கத்துகிட்டு என்ன பண்ணப்போறோம், பான் பராக் பானிபூரி விற்கவா என்கிற தொனியில் தான். கற்பது நம் புரிதலை விரிவுபடுத்த. நாம் வளர. 

நியாயமாக கிடைக்க வேண்டியவர்களின் வாய்ப்பைத் தடுத்து/தட்டிப் பறித்துப் பெற்ற கல்வியை மறைத்து, சிலர் மேல் பழிபோட்டு சமூகத்தைச் சாடி, தன் மேல் ஏற்றிக்கொள்ளும் அத்தனை பட்டங்களும், சமூகத்தை குறை சொல்லும் மனப்போக்கு எல்லாம் பெற்ற கல்வியை இழிவு படுத்தும் செயல்.

இன்றைய சூழ்நிலையில் கல்வி கற்கும் வாய்ப்பு அனைவருக்கும் இருக்கு. ரிசர்வேஷன் முறையைத் தாண்டியும் வளரக்கூடிய வாய்ப்பு அனைவருக்கும் இருக்கு. ஆனால் அதை உபயோகப்படுத்தி பயனடைந்தவர்களால் மட்டுமே மேலெழ முடியும். சமூகத்தையோ மற்றவர்களையோ குறை சொல்வதால் அல்ல. பொய்யான கட்டமைப்பு அமைப்பது சீட்டுக்கட்டு சரிந்து விழுவது போல் ஒரு நாள் சரிந்து விழும். இந்நாடக உலகத்தில் அனைவரும் நடிகர்களே!

கற்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Escalera!

Saturday, February 19, 2022

சாந்தியுறுக நின் பாதம்

தூணாய் நின்றாய் துணையாய் வந்தாய்
  அன்பெனும் பாதையில் அரணாய் நின்றாய்

உன் முன் பாதம் ஓடிய திசையில்
 பின் தொடர்ந்து ஓடினோம்
நீ சொல்லாமல் செய்த செய்கையால்
  கை கட்டித் தொடர்ந்தோம்!

வாழ்க்கையெனும் நீரோட்டத்தில்
  உன் பாதை நின்று போனாலும்
பின் தொடர்ந்து ஓடும் நினைவுகள்
  என்றும் அன்பாய் தொடர்ந்திடும்!

சாந்தியுறுக நின் பாதம்! 🙏


சின்ன வயசுலேர்ந்தே நாயைக் கண்டா பயம். ஊர்ல தெருவுல ஏதாவது நாயைக் கண்டா ஊர்ப்பசங்க கல்லெடுத்து எறிவாங்க! 

பெங்களூரில் அம்மா எல்லா தெருநாய்களுக்கும் சாப்பாடு அல்லது பிஸ்கட் போட்டு பழக்கி அங்க தெருவோர நாய்கள் அம்மாவைப் பார்த்து குலைக்காது. மற்றவர்களைத் துரத்தி எடுக்கும்.

ஊரில் நண்பர்கள் நாய்களை வீட்டில் வளர்த்த போது கூட அதை அவர்கள் கட்டிப்போடும் வரை அல்லது அதை அவர்கள் வேறோரு இடத்தில் அடைக்கும் வரை  அவர்கள் வீட்டினுள் நுழைய மாட்டேன். அவ்வளவு பயம். ரோட்டுல நிப்பேன்.

கடந்த ஏழெட்டு வருடமாக அந்த பயம் போச்சு. அதற்குக் காரணம் நண்பனோட இந்த ஜெர்மன் ஷெப்பர்ட். என் குடும்பத்துல எல்லோர்க்கும் மிகப் பிடித்தமான நாய். தைரியமாக பக்கத்தில் போவோம். அதுவும் வரும்.

நான்கு வருடம் முன் நண்பன் வீட்டில் தங்கியிருந்த போது உறக்கத்தில் செம குறட்டை விட்டிருக்கேன் போலிருக்கு. இது தூங்க முடியாம தவிச்சிருக்குப் போல. பக்கத்தில் வந்து என் கன்னத்தில் மோதி வாயை முடுறா வெண்ணைன்னு இடிச்சுட்டுப் போனது இன்றும் நினைவில் ஆடுகிறது. இதனுடன் பழகியதில் நாய் பயம் போச்சு.

நேற்று கூட மாலை நேர வாக்கிங்கில் கூட பணி செய்த ஒருவர் ஒரு ஜெர்மன் ஷெப்பர்டை பக்கத்திலுள்ள ஷெல்டரிலிருந்து எடுத்து வந்து வளர்க்கிற நாயைக் கூட்டி வந்தார். அது யாரைப்பார்த்தாலும் குலைப்பதாலும் ஷெல்டரில் வளர்ந்ததால் வித்தியாசமாக இருக்கு என்பார். அது என்னை ஓரிரு தடவை பார்த்துள்ளதால் நேற்று கூட என்னைப் பார்த்துக் குலைக்காமல் பக்கத்தில் வந்து முகர்ந்து பார்த்து விட்டு அருகில் நின்றது.

அந்த அளவுக்கு நாய்கள் மீதான பயம் ஓரளவுக்குப் போனதிற்குக் காரணம் நண்பனின் நாய். இருப்பினும் இப்போதும் பிட்புல் கண்டால் பத்தடி தள்ளித் தான் நிற்பேன். அது வேற வகை!

இன்று நண்பனின் நாய் இங்கு தென்கிழக்குக்கோடி மாநிலத்தில் நீண்ட ஆயுளுக்குப் பிறகு தன் மூச்சை தன் வீட்டில் நிறுத்திக்கொண்டது. நண்பனின் அழுகை மனதை இறுக்கினாலும்

அது கொடுத்துச் சென்றுள்ள தைரியத்தை நினைத்துப்பார்க்கையில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Muchas gracias!
¡Descansa en paz!

Friday, February 11, 2022

இஸ்பானியோல் கற்கும் ஆரம்பம்

அஸ்ஸாமில் போய் இறங்கிய ஆரம்ப காலத்தில் அவங்க என்ன பேசறாங்கன்னே புரியாம இருந்தது. அவங்க முகச்சிரிப்புலேர்ந்து ஏதோ குசலம் விசாரிக்கிறாங்கன்னு புரியும். போகப்போக அவங்க பாஷை கொஞ்சம் புரிய ஆரம்பிச்சது.

இந்த வாரம் இஸ்பானியோல் ஸ்பானிஷ் முதல் கிளாஸ் முடிஞ்சது. கிளாஸ் துவங்குவதற்கு இரண்டு நாள் முன் ஆர்டர் பண்ணியிருந்த புக் வந்துச்சு. சனி ஞாயிறு எங்கயும் நகராம படிக்க ஆரம்பிச்சேன். படிப்பதில் pronunciation அவ்வளவா கத்துக்க முடியாது.

வகுப்புல போனா வந்த ஆசிரியையே இப்பத்தான் கொஞ்ச வருஷம் முன் ஸ்பெயின்லேர்ந்து வந்து இப்ப ஆங்கிலம் கத்துகிட்ட டீச்சர் நமக்கு.

அஸ்ஸாமில நம்மளை சந்திக்கும் போது ‘கீ யோல், பால்?’ அப்படின்னு விசாரிப்பாங்க.
இவங்க அதே மாதிரி, கிட்டத்தட்ட அப்படியே ‘ஹோலா! கீ தல்’ ன்னாங்க பாருங்க, அட அட நம்மப் பக்கம் நெருங்கிட்டாங்களேன்னு இருந்துச்சு.

முதல் கிளாஸ்லேயே நிறைய வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்து, ஒருத்தருக்கொருத்தரையும் பேச வேற வைக்கிறாங்க! யாரும் டபாய்க்க முடியாது.

பேசனும், எழுதனும், quiz, audio கேட்டு சரியா தப்பான்னு சொல்லனும். இதைத் தவிர செம ஹோம்வொர்க் வேற.

முதல் சாப்டர்ல இருக்கிற 84 வாக்கியங்கள் (sentences) படிக்கனும், எழுதனும், பேசனும், கேள்வி பதிலுக்கு சரியாச் சொல்லனும், இலக்கணத்தோட.

செம போடு போடுது!

வயதாகி கற்பதில்
வாழ்வினிது
¡Muchas gracias!
ओलै सिरिय ।