எட்டு வருஷமிருக்கும். பெங்களூர்லேர்ந்து சென்னைக்கு சதாப்தியில் வந்து கொண்டு இருந்தேன்.
ஒரு ராஜ்ஜிய சபா எம் பி தனியாக எந்த பாதுகாப்புமில்லாம எனக்கு பின்னாடியிருந்த பெட்டிக்கும் பக்கத்துப் பெட்டிக்கும் இடையில் நடந்து போய்கிட்டு வந்து கொண்டிருந்தார், பிறகு இரண்டு தடவை என் ரயில் பெட்டியிலேயே நின்றார்.
நான் கல்லூரி மாணவனாக இருந்தப்ப அவரைப் பார்த்தது, பிறகு இப்ப தான் பார்க்கிறேன். பேச தயக்கமாகவும் பயமாகவுமிருந்தது.
எழுந்து வணக்கம் சொன்னேன். யார்ன்னு கேட்டார், எங்கயிருக்கன்னு கேட்டுவிட்டு கதவு ஓரமாக போய் நின்னுகிட்டார்.
துணிவேற்படுத்திகிட்டு அவர்ட்ட பேசலாம்ன்னு கதவுகிட்ட போய் பேசினேன். ஏன் இந்த பெட்டிக்கும் அந்த பெட்டிக்கும் நடுவில் நடமாடிகிட்டு இருக்கீங்க, எந்த பாதுகாப்பும் இல்லை; இப்படி தனியா போறீங்களேன்னேன்.
எப்போதும் சிரிக்கிற அதே புன்முறுவலோடு சொன்னார். மனைவியோட பயணிக்கிறேன், ஒரு கல்யாணத்துக்கு வந்துட்டு திரும்பிப் போறோம், அவங்களுக்கு இரண்டு பெட்டி தள்ளி அலாட் ஆகியிருக்கு, எனக்கு இந்த பக்கம் அடுத்த பெட்டி, நடந்து போய் வந்தா உடம்புக்கும் நல்லதுன்னார்.
அசந்து போனேன், கொஞ்சம் அதிர்ந்தும் போனேன். ஏங்க டிடியி கிட்ட நீங்க ஒரு வார்த்தை சொல்லியிருந்தீங்கன்னா, ஒன்னா உங்களை ஒன்னா உட்கார வச்சுருப்பார், இல்லாட்டி இதை விட ஹயர் கிளாஸ்க்கு அனுப்பியிருப்பாரே, இப்படி எந்த சேஃப்டியும் இல்லாம நடக்கறீங்க!
நான் டிடியிகிட்ட சொல்றேன்னேன்.
தடுத்துட்டார். நான் சொன்னது அவருக்குப் பிடிக்கலை.
என்னோட எம் பி பதவி மக்களுக்கு சேவை செய்ய, என் தனிப்பட்ட பலனுக்காக இல்லை. இதை தவறாக உபயோகிக்க விடமாட்டேன். மக்களோட மக்களா சேர்ந்து பயணிக்கிறதில் மக்கள் கிட்ட கிடைக்குற சேஃப்டி விட வேற என்ன பாதுகாப்பு எனக்கு வேணும். இங்க சாதாரணமாக நடமாடியதாலத் தான் உங்களைப் பார்க்க முடிந்தது. அடுத்த தடவை இந்தியா வரும் போது வந்து பாருங்க, சென்னையில வேலை முடிந்தவுடன் வந்து பாருங்கன்னு நம்பர் கொடுத்தார்.
அசந்து போயிட்டேன். பேச்சு எழலை எனக்கு.
1981-87 கால கட்டங்களில் திருச்சி ஜோசப் கல்லூரியில படிக்கும் போது, கல்லூரி வாசலிலும், சத்திரம் பஸ் ஸ்டாண்டிலும், மெயின்கார்ட்கேட் போஸ்ட் ஆபிஸ் பக்கத்துல அவர் பல தடவை உண்ணாவிரதம் இருந்து போராடியுள்ளதைப் பார்த்திருக்கேன்.
அப்ப எனக்கு வயது 18லிருந்து ஆரம்ப இருபதுகளில், அவருக்கு 45-52 வயதிலிருந்திருக்கலாம்; என் அப்பா வயதை விட சிறியவர் ஆனால் மிக கம்பீரமான ஆஜானுபாகுவான தோற்றம், முறுக்கிவிட்ட மீசையுடன், லைட் க்ரே கலர் பேண்ட் வெள்ளைக் கலர் அரைச்சட்டையில் மிக கம்பீரத் தோற்றத்தில் இருப்பார். Well built strong man. பார்க்கவே கொஞ்சம் பயமாக இருக்கும் தோற்றம்.
கிட்டத்தட்ட 25 வருடம் கழித்து அன்று தான் ரயிலில் அவரை நேரில் பார்க்கிறேன். மற்றபடி அவரைப்பற்றி மீடியா செய்திகளில் படிப்பது தான்.
அதே கம்பீரமான பேச்சு இந்த ரயில் பயணத்திலும் கேட்கும் போது, மனிதர் எப்போதும் போல் உயர்ந்து தான் நிற்கிறார்.
நாளை அவருக்கு 80 வயது துவங்கிறதாம். அவர் டி கே ரங்கராஜன் எம் பி அவர்கள்.
அவரை நீண்ட ஆயுளோடு வாழ்வாங்கு வாழ வாழ்த்துவதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
No comments:
Post a Comment