Wednesday, September 15, 2021

வெறுமை மறத்தல்

பையன் காலேஜ்க்குப் போய் 3 வாரமாச்சு. 18 வருஷமா அவன் பின்னாடியே சுத்தி, புரண்டு, வளைஞ்சு வாழ்ந்து பழகிப் போன நேரத்துல, இந்த வெறுமை புதிதாக இருந்தது.

முதல் ஒரு வாரம் அவன் மாடியில தூங்குவதாகவே பிரமை. பிரமை விலக சில பிரயத்தனங்களை முன்பே யோசித்து வேற வச்சிருந்தேன்.

நண்பர்களோட நாய்கள் ரொம்ப பழகிட்டதால, பையன் வேற அடிக்கடி கேட்க ஆரம்பிச்சான், என்ன! நான் போன பிறகு எந்த நாய் வாங்கப் போற; நீ கண்டிப்பா வாங்குவ, எனக்குத் தெரியும்; அந்தளவுக்கு உன் நண்பர்களோட நாயோடப் பழகிட்டன்னான். நான் இருக்கும் போதே வாங்கியிருந்தா நானும் கொஞ்சியிருப்பேனல்லன்னான்.

உண்மையிலேயே நாய்கள் மீதிருந்த 50 வருட பயம் இப்ப சுத்தமாக விலகிடுச்சு, பாசம் அதிகமாயிடுச்சு. ஆனால் இங்க தினமும் அதோட யார் ஓடறது, பீ அள்ளறது. அதைத் தள்ளிப் போட்டாச்சு.

பையன் நாலைந்து மீன் தொட்டிகள் வாங்கி வந்து சராசரியாக பராமரிக்காம சீரழிஞ்சு கிடந்தது. ஒரே ஒரு தொட்டியில மட்டும் கொஞ்சம் மீன் உசுரோட இருந்துச்சு.

நாயை வளர்த்து தான் பையன் இல்லாத வெறுமையைப் போக்கனுமா, இந்த மீன்களை பராமரிப்போம்ன்னு துவங்கினேன்.

அழுக்கு படிஞ்சு மாசு படிஞ்சு கிடந்த அவன் ரூமிலிருந்த மீன் தொட்டியை சுத்தமாகக் கழுவி, கிச்சன் மேடைகள் மீது வைச்சு, இன்னொரு அழுக்குத் தொட்டியிலிருந்த மீன்களை இதில் எடுத்துப் போட்டு அலங்கரிச்சு வச்சேன்.

அடுத்து அந்த பழைய தொட்டியைக் க்ளீன் பண்ணி, அதில் கொஞ்சம் பெருசுகளை மாத்தி விட்டேன். பெருசுகளுக்கு எம்மேல அம்புட்டு கோவம் வருது, சர்சர்ருன்னு அங்கயும் இங்கயும் ஓடி கண்ணாடியில மோதி தன் கோவத்தை வேற காண்பிக்குதுக! அதுக குட்டிகள் கிட்டேர்ந்து பிரிச்சுட்டேன்னு கோவம்.

பையன் வாங்கி வச்ச அதோட சாப்பாடு குப்பியை நான் திறக்கும் போதெல்லாம் எல்லா குட்டிகளும் பெருசும் ஆவலோட கண் கொட்ட பக்கத்துல வந்து சலசலக்கும். சாப்பாடு போட்ட அடுத்த நிமிசம் அத்தனைப் பரவசம் அதுகளுக்கு!

சாயந்தரம் அம்மிணி வந்த பிறகு அதுகளுக்கும் தேவையானதையெல்லாம் வாங்கி வந்தோம்.

போன வாரம் பையன் கேட்டான்: எப்படி இதெல்லாம் கத்துகிட்ட, எப்படி க்ளீன் பண்ணி, தண்ணி மாத்தி அதுக்குத் தேவையான அத்தனையும் பண்ணின, எப்படி தெரியும்ன்னான்.

அடேய் உனக்கு 40 வருசம் முன்னப் பொறந்தவன்டா, உன்னயை வளர்த்த மாதிரி தான் இதுகளையும், உனக்கு டயப்பர் மாட்டியதிலிருந்து செய்த வேலைகள் தானே, இன்னா பெருசு இதுன்னேன்!

பையன் முகம் சிரிக்கத் துவங்கியதைப் பார்ப்பது அழகு!

வாழ்வினிது
ओलै सिरिय !

No comments: