2007-2008ல என்னோட அப்பா அம்மா இங்க வந்துவிட்டு இந்தியா திரும்பும் போது அவர்களுக்கு ஐரோப்பாவில் ஒரே ஒரு ஃப்ளைட் மட்டும் மாறினாப் போதும், சுலபமாக சென்னை போய் இறங்கிறாலாம்ன்னு சார்லட் நகரம் வரைக்கும் போய் அவர்களை ஃப்ளைட் ஏத்தி விட்டேன்.
ஃப்ளைட் செக் இன் முடித்து அவர்களை உள்ளே ப்ளைட் வரைக்கும் கொண்டு போய் விட்டுவிட்டு வர்றேன்னேனு கவுன்டரில் சொன்னேன். என்னோட அப்பா அம்மாவாயிருந்தாலும் நான் அதைத் தான் செய்வேன், கேட்கவே வேணாம், கூட போய்கிட்டே இருன்னு போர்டிங் பாஸ் கொடுத்தவங்க சொன்னாங்க.
கேட் கிட்ட போய் போர்டிங் பண்ற இடத்துல விட்டேன். கேட்ல நின்ன லேடி அவங்களைக் கொண்டு போய் உட்காரவச்சுட்டு வந்தாங்க. போர்டிங் கேட் வெளிய நின்னுகிட்டிருந்த என்னைப்பார்த்து, எதுக்கு இங்க சும்மா நிற்கிற, பேமிலி விட்டு பிரிஞ்சு இருக்கப் போற, எனக்கெல்லாம் ஃபேமிலி முக்கியம், போய் உள்ள அவங்க எப்படி comfortableஆக இருக்காங்களான்னு போய்ப்பாருன்னாங்க கேட்டிலிருந்த அந்த ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி.
உள்ள போய் அம்மா அப்பாவோட பேசிட்டு மத்தவங்களுக்கு இடைஞ்சலாக இருக்க வேண்டாம்ன்னு ஐந்து நிமிசத்துல வெளிய வந்துட்டேன். ஏன் அதுக்குள்ள வந்துட்டேன்னு அவங்க வெளிய வந்த என்னைக் கேட்டாங்க. மறுபடியும் அவங்க என்னிடம், போ போய் அப்பா அம்மாகிட்ட பேசிகிட்டு இரு, நீ எப்ப திரும்ப இந்தியா போய் அவங்களைப் பார்க்கப் போற, போய்ப் பேசு, கேட் மூடும் போது உன்னை வெளிய வரக்கூப்பிடறேன் போன்னு அனுப்பி வச்சாங்க.
இந்த ஒரு ஏர்போர்ட் மட்டுமல்ல. மற்ற ஏர்போர்ட்களிலும் இது மாதிரி அநுபவம் எனக்குண்டு. பலரை ஏற்றிவிடும் போதும் வந்தவர்களை வரவேற்கும் போதும் கேட் பக்கத்துல போய்த் தான் கூட்டி வருவேன்.
அந்தளவுக்கு சுதந்திரமாக இருந்த நாட்டை இப்போது ஒவ்வொரு ஏர்போர்ட்டையும் கோட்டைச்சுவராக மாற்ற வேண்டிய கட்டாயமாகிவிட்டது. இன்றைய தலைமுறைக்கு இந்நாடு இப்படி கூட இருந்ததுன்னு இனி புத்தகங்கள் வழியாகத் தெரிந்து கொண்டால் தான்.
இந்த வாரம் கேபிடல் ஹில்லில் நடந்து முடிந்துள்ள நிகழ்வு முந்தய இரட்டை கோபுர நிகழ்வு போல் ஒரு மிக சீரியசான நிகழ்வு.
வரப்போகிற மாற்றங்கள் இனி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு ஊரிலும் பிரதிபலிக்கப் போகிறது.
வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க அதிபர் ஒருவர் பதவி முடிந்தவுடன் சிறை தண்டனை பெறுவதை பார்க்க வேண்டி வந்தாலும் வரும்.
ஜனநாயக உரிமைகளை அத்துமீறி உபயோகப்படுத்தி ஒரு தீவிரவாதப்பாதையில் நோக்கி நடந்தால் இருக்கும் உரிமைகளையும் இழந்து ஜனநாயக நாட்டை சர்வாதிகாரப்பாதையில் செல்ல வைப்பதைப் போன்ற முட்டாள்தனத்தை நேரடியாக கண்டு அநுபவிக்கப் போகும் சந்ததியாக நாம் உள்ளோம்.
ஜனநாயகக் கவலைகள்!
ஜனநாயக உரிமைகளை அத்துமீறாமலிருந்தால்
வாழ்வினிது
ओलै सिरिय !
No comments:
Post a Comment