இது வரை மக்கள் சமூகம் கண்டுள்ள பலவகையான ஆட்சி அமைப்புகளில் மிகவும் வலுவற்ற அமைப்பு ஒரு ஜனநாயக அரசு ஆட்சி அமைப்பு. ஆனால் இந்த அமைப்பில் தான் மக்கள் தங்களுக்கு வேண்டியவர்களை தேர்ந்தெடுக்க முடியும், வெளயேற்றமுடியும், சாதாரணமான மனிதன் மற்றும் அரசியல் அறிவு அற்றவரையும், எவரையும் கூட ஆட்சியில் அமர்த்த முடியும், ஏதாவது ஒரு பதவிக்கு தேர்ந்தெடுக்க முடியும்.
பிறகு ஏன் இதை வலுவற்ற அமைப்பு என்கிறேன்?
தேர்ந்தெடுக்கும் ஜனநாயகப் பாதையை, தேர்தல் பாதையை தனக்கு ஏற்றவாறு எவ்வாறு வேண்டுமானாலும் வளைக்கக் கூடிய ஒரு நம்பர் கேம் ஆடக்கூடிய வலுவற்ற அமைப்பு. தேர்தெடுக்கப்பட்டவர்களோ அல்லது சபையோ அல்லது நீதிமன்றமோ அல்லது ஜனநாயக அமைப்பின் ஏதோ ஒரு தூண் கூட மக்கள் தேர்ந்தெடுத்தவற்றைப் புரட்டிப்போட முடியும். அத்தகைய வலுவற்றது இது.
இத்தகைய ஒரு வலுவற்ற அமைப்பு தேவையா?
கண்டிப்பாகத் தேவை. ஒரு தனி மனிதன் சுயமாக முன்னேற, தன் சுயத்தை வெளிப்படுத்த, தனது உரிமைகளைப் பேசக்கூட, ஏன் அதிகாரத்தை எதிர்த்து நிற்கக் கூடியதற்குக் கூட இந்த அமைப்பில் மட்டுமே சாத்தியம்.
மற்ற மன்னராட்சி, சர்வாதிகார ஆட்சி, மத அரசியில் ஆட்சி, இப்போது சில நாடுகளில் இருக்கும் மக்கள் ஜனநாயக சோஷலிச ஆட்சியில் கூட, அதை எதிர்ப்பவர்களைக் காலி பண்ணிவிடுவார்கள், உள்ளே தள்ளிவிடுவார்கள். எதிர்ப்புகளை எளிதாய்க் கிள்ளி எறிந்து விடுவார்கள்.
இப்போது அதற்கென்ன?
இருக்கு. அமெரிக்க ஜனநாயக தேர்தலமைப்பைப் புரட்டிப்போட அவ்வளவு தகுடுதத்தங்களும் கண் முன்னே நடந்து வருகிறது. ஒவ்வொரு தூணையும் அசைத்து அசைத்து கடைசியாக இந்த வாரம் இன்னொரு தூணின் செயல் எவ்வாறு இருக்கப்போகிறது என்பது கண் முன்னே தெரிகிறது.
ஜனநாயகத் தேர்தல் முறையை அசைக்கும் எந்த ஒரு நிகழ்வையும் கவலையோடு பார்க்க வேண்டிய ஒன்று. தவறான செயல்களால் ஜனநாயக அமைப்பு கேலிக்குறியானால் தனிமனித சுதந்திரம் கழன்று ஓடி விடும்.
இழப்பு வெறும் அமெரிக்க ஜனநாயகத்திற்கு மட்டுமன்று. உலகிற்கேப் பாடமாய் நின்று விடும்.
ஜனநாயக மரபைக் காப்பாற்றினால்
வாழ்வினிது
ओलै सिरिय !
No comments:
Post a Comment