Sunday, March 1, 2015

அன்பென்ற வாழ்வில்

இறக்கம் தளர்ந்து செல்லும் உறவில்
இறுக்கிப் பிடிக்க நினைப்பது
கர்வமா இழப்பா கன்றா!

இழப்பென்றால் கர்வம் தளர்ந்து செல்
கர்வமென்றால் புது சுகந்தம் தேடு
கன்றென்றால் ஆறப்போடு 
கர்வத்தையும் இழப்பையும்!

வாழ்வே போராட்டம்!
இதில் போராட அகந்தையின்றி வேறெதுவே!
வீதியில் வாளெடுத்துப் போராட சமுதாயப் பிரச்சனையல்ல!
சமுதாயம் பரிகசிக்கும் குடும்பப் பிரச்சனை!

வெற்றியும் தோல்வியும் உன்னிடமே!
வெல்லப் போவது அகந்தையா வாழ்வா!
கன்றை நீர் சுரக்க வைக்க கள்மனது தேவையன்று!

அன்பென்ற வாழ்வில் இருவர் பங்கே செல்வமண்டோ!
அன்பாய் செல்வீர் கன்று துள்ளி ஆட!

அகந்தையை வென்றிடுவீர் அன்பின் வலிமையால்!

Friday, February 27, 2015

ஸ்டாக்

ஸ்டாக் மார்க்கெட்ல பணத்தைப் போடுவதும் பந்தயத்துல பணம் கட்டுவதும் ஒன்னு தான். ஆனால் சிலர் தான் மட்டும் கில்லாடி ன்னு சம்பாதிச்சிட்டுப் போகாம சிலருக்கும் போகிற போக்கில சொல்லிட்டு போகுறாங்க.

MSN Money யில அப்பப்ப 10$க்கு குறைவான விலையில நல்ல ஸ்டாக் ன்னு போடுவாங்க. எல்லாத்தையும் வாங்க முடியாது. வாங்கினாலும் நஷ்டமாவலாம்.

போன வாரம் ஒரு ஸ்டாக் போட்டிருந்தாங்க. 4$ தான் இருந்துச்சு.நான் வாங்குவதற்க்குள்ள 4.25 டு 4.50 போயிருச்சு. ரொம்ப யோசிச்சுட்டேன். இந்த ஒரு வாரத்தில் 6க்கு மேலப் போவுது. 50% லாபம்.

இதுக்கும் முன்ன ஆபீஸ் depot ஸ்டாக் 4$ இருக்கும் போதும் இதே மாதிரி சொன்னாங்க. வாங்கினேன். லாபம் தான். Rite Aid ஸ்டாக் சொன்னாங்க, 1 லிருந்து 8 போயிருச்சு. வாங்கி முன்னவே தள்ளிட்டேன்.  லாபம் போச்சு. SIRI பத்தி வரும்.ஏறுது நிக்குது.

எப்பிடி இவிங்களுக்கு முன்னவே தெரியுது.

ஆப்பிள் முதல் முதல்ல ipod ரிலீஸ் பண்ணுவதற்கு தயாராகும் போது, 2006-2007 ன்னு நினைக்கிறேன், இந்தியாவிலிருக்கும் என் அண்ணன் இந்த ஸ்டாக் 26$ ன்னு ஹிந்து வில்  article வந்திருக்கு, 100$ சீக்கிரம் போயிரும்ன்னான். அவன் சொன்ன அன்னிக்கே வாங்கினேன், ஆனால் அன்னிக்கே விலை 60$. 80$ - 90$ டாலர் விலையில மேலையும் கீழயும் போய் வந்ததால 88க்கு தள்ளிட்டேன். இன்னிக்கு அதன் மதிப்பு 1820$. இப்ப ஸ்டாக் ஸ்ப்ளிட் ஆகி 130$ ல நிக்குது. அப்ப விக்காம வைத்திருந்தால் அள்ளிருக்கலாம். அதற்கு பின் அதிக விலை கொடுத்து வாங்கிய போதும் இன்னும் ஏறிகிட்டு இருக்கு. நேற்று ஆப்பிள் மேல் 9 patent கேஸ் வந்திருக்கு. விலை குறையலாம். இன்னும் iwatch வைச்சு கிட்டு ஆட்டோ industry ல புகப் பார்க்கிறார்கள் . மேலையும் கீழயும் போகும்.

பங்கு சந்தை அபாயகரமானதுன்னாலும் எங்க retirement saving இதை ஒட்டியே இருப்பதால் ஆண்டியாகாம இருக்க இதில் நடப்பவற்றைப் பற்றி பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியுள்ளது.

இதில் குறிப்பிட பட்டுள்ள எந்த ஸ்டாக்கும் நான் யாருக்கும் இதன் மூலம் பரிந்துரைக்க வில்லை.

Saturday, February 21, 2015

நினைவலைகள் மறையும் முன்

ஆறுதல் அடைய முடிவதில்லை எளிதில் !
இழக்கக் கூடாதவர்கள் தொலைதூரம்
மறைந்து விடுகிறார்கள் நிழல் போல்
நினைவுகளை நிறுத்தி விட்டு!

தோளில் சுமந்த கைகளைப் பற்றிக்  கொண்டு
செல்லும் நினைவலைகள் மறையும் முன்னே
நம்மை விட்டு தொலைதூரம் கடந்து விடுகிறது
விட்டுச் செல்கின்ற வண்ண நினைவுகள்!

விடைபெறும் நேரத்தில் அருகில் இல்லை
எதை விடைகூறி சென்றாரென்று தெரியவில்லை
மார்ச்சுவரியிலிருந்து மயானம் வரை சென்று
கேட்டுப் பார்த்தும் தெரியவில்லை!

இன்றோர் தந்தை மறையும் முன் தனையனிடம்
விட்டுச் சென்ற வார்த்தைகளை உடனிருந்து
கைப்பற்றி அறிய முடியா தூரத்திலிருந்து கொண்டு
வழிதடம் அனுப்பி வைக்கும் சோகம் மறைவதில்லை!

ஆறுதல்கள் தேவையில்லை ! ஆதரவு உண்டு!
விட்டுச் சென்றவர்கள் கொடுத்த வழித்தடம்
திறம்பட அறியும் மனத்திடம் உண்டு!
கரைந்தாலும் நன்கு கரையேறுவோம்!

Tuesday, December 16, 2014

வெட்கித் தலைகுனியும் மானுடம்

 தலைகுனியும் மானுடம்
பிஞ்சுடலைப் பறித்து 
பசியாற நினைக்கும் வெறியர் கூட்டம் 
வெல்வது மதமும் அல்ல மானிடமும் அல்ல 
மதவெறியைத் தூண்டுபவனுக்கு 
மாலையிடும்  கயமைத்தனம்!

பிஞ்சுடலைப் பறிப்பதால் 
யாரை வெல்ல நினைக்கிறாய் 
இவ்வுலகில் எவரும் நிலையான 
நண்பனுமல்ல எதிரியுமல்ல! 
பறித்தவை மண்ணுள் மறையும் முன் 
உன் மேல் எழும் வெறுப்பு கனலாய் மாறிடும் !

எரியும் கனலில் வெந்து போவப் போவது 
உன் மதவெறிக் கூட்டம்!நீ பிஞ்சைப் பறிக்கவில்லை 
மனித குல கழிவிரக்கத்தைப் பறிக்கிறாய்!
மரித்துப் போகிறது மானிடம்
வெட்கப்படு உன் செயலைக் கண்டு !

மதவெறியால் மானிடம் அழிகிறது 
மனிதகுலம் அழுகிறது
இவ்வுலகில் வெல்லப் போவது 
நீ வெல்ல நினைக்கும் மதமன்று 
அன்பும் பாசமும் கொண்ட மானிடம் மட்டுமே!

Thursday, December 4, 2014

மேனேஜர்

தினமொரு கடுப்பு மேனேஜர் மேல்
செயலை கண்காணிப்பதால்
சொல்பவை பிடிக்காததால்!

மேனேஜரின் நண்பனானால் மேல் செல்கிறார்கள்!
பகை கொண்டாலும் மேலிடம் செல்கிறார்கள்!
இருப்பினும் தினமும் நிந்திப்பவனிடம்
மேற்கொண்டு செல்ல முடியாது
சொல்லவும் முடியாது!

ஆபீசில் பகை கொள்பவன் வீட்டிலும் நிம்மதி இழக்கிறான்.
பகை தாண்டி அன்பாய் மெல்லவும் முடியாமல் தவிக்கிறான்.
வருமானமின்றி வாழ்வு கொள்ளாது.
மானமின்றி வாழ்தலும் நிலை கொள்ளாது!

பகை தாண்டி செல்ல வழியுண்டோ
மேனேஜர் எனும் தடைக்கல்லை தாண்ட வழியுண்டோ!
மனதின்றி மார்க்கமில்லை.
உன் பணியே மார்க்கமென்று பணி புரிந்தால்
தடைக்கல் உன் முன் நிற்க வழியில்லை
தடைக்கல்லும் தவிடாகும்!

தினமொரு நிந்தனை தேவையின்றி
நின்பணி கடிந்து செயல்பட்டு
செய்யும் பணி சிறக்கச் செய்திட்டால்
அகம்பாவம் வென்றதோர் காரியமது
பெற்ற ஊழியத்திற்கு சிறுமையின்றி ஆகிடும்
பகைவனும் நண்பனாவான்
வாழ்வும் நிலைகொள்ளும்!

Friday, November 28, 2014

கரிய இரவில்

கரிய இரவில் தனியாய்
கசிந்துருகி நோக்கில்
கரை தொடும் கால்களில்
கசிந்துருகும் கண்ணீர்த்துளிகள்!

கரிய நிழல்களில் படரும் கனவில்
உறவுகளின் மறைந்திருக்கும் பகைமை !
ஒருவரின் கூற்றில் மற்றவரின் திரித்தல்
இருவரின் மீது நட்பாடும் நெஞ்சில் ஓர் களக்கம் !

கரியவிடாமல் களமிறங்கி
கனிவாய் நகர்திடும் காய்கள்
கண்டோர் காணிடும் களப்பரப்பில்
களமிடும் விதைக்குவியல்!

கரிய இரவில்
கரியும் தகனமேடை
கரையும் மனதுடன்
கரையில் ஒருவன்!

Tuesday, November 25, 2014

விண்மீனை தொடும் முன்

உயரப்பறக்கும் விண்மீனை 
கயிற்றில் கட்டி இழுக்கும் மணவாழ்வு!
ஒன்றாய்ப் பறந்திடும் பறவைகளுக்கு 
கடல் காடு மணல் அனைத்தும் சுகமே !

விண்ணில் மின்னும் ஒளிநட்சத்திரங்கள் 
மணவாழ்வின் விரிசலில் ஒளியிழக்கின்றன!
பரந்த வெளிப்பரப்பில் பறவைகளின் கூட்டுக்களவுகள் 
திணை சாய்ந்து விழும் கழனியின் சுக ஆரவாரங்கள்!

எவ்வெளிப் பறந்தாலும் கூடு வந்து சேரும் பொழுதில் 
சுகமாய் சோர்வு நீங்க நல் இல்லறமே கூடு!
ஆத்மார்த்த நட்பின் அணைப்பில் 
பறந்திடும் தூரம் 
விண்ணையும் கையால் பிடிக்க உதவும்!

பிடிப்பற்ற உறவில் கைபிடித்து பறந்தாலும் 
காலில் கட்டிய கயிறு வழுக்கி இழுக்கும்!
பிரிந்த கூட்டிற்கு பாதுகாப்பு அளித்தாலும் 
துணையற்ற கூட்டில் பாதுகாப்பு யேது !

எந்தோ தூரம் பறந்திடுவோம்!
கூடு சிறக்க செய்திடுவோம்
விண்மீனை தொடும் முன் !