Saturday, November 4, 2017

நீதியின் தண்டனையில் கல்லறை

கல்லறையில் புதைத்தனர்
கல்லறை காய நேரமில்லை
ஒவ்வொரு கறையும் கல்லறை மீது!

மண்ணைத் தூவி மலர் தூவி கல்லறையை மூடினாலும்
செய்கொடுமை நின்
அடித்துரைத்தலில் மாறாது!

பொம்மை மந்திரிகளின் புலம்பல்கள்
புதிய பொம்மைகளின் அஞ்சலிகள்
கல்லறையில் உருளுகின்ற புழுக்கள்!
வஞ்சகர்களின் சூழ்ச்சிகளிலிலும்
கூடா நட்பிலும் புரண்டது கல்லறை!

நீதியின் தண்டனையில் கல்லறை!

குஞ்சிலா கூட்டில் தாய் ஏது

புறா தன் கூடு விட்டு பறந்து விட்டது.
கூட்டில் அடைகாத்தவை எதுவாயினும்
இஃது கூடு கண்ட தாயின் பிரயத்தனம்.

குஞ்சு கருப்பா வெளுப்பா அறியும் முன்
பறந்து விட்டாள் தாய்.
தாயில்லாக் கூட்டில் உயிரில்லை.

கூடு இன்னொரு தாய்க்கு ஏதுவானாலும்
மலர்ந்த குஞ்சுகளின் கூக்குரலின்றி பிஞ்சுகளின் தஞ்சமற்று விரிந்த பாய் அது.

குஞ்சிலா கூட்டில் தாய் ஏது!

மண்ணின் மனதிலொரு சுரபி

வைசாகத்தில் பிறந்தோம்
    விசாகன் என்று நாமம் பெறாமல்
விசாலமாய்ப் பிறந்தோம்
   முன்கோபம் முன்னின்று குறுக்கி விடும்!

குன்றிருக்கும் இடத்தில் குமரனிருப்பான்
     என குன்றேறி விடுவோம்
குமரனின் விசாரத்தில் ஆண்டியாய்
     மனதளவில் இருந்திடுவோம்!

வைகாசியின் விசாகத்தில்
    மணிமேகலைக்கு அமுதசுரபி
   புத்தனுக்கு ஞானம்
வைசாகனுக்கோ தொலைதூரத்தில்
   மானைத் தேடும் மயக்கம்!

மண்ணின் மனதிலொரு சுரபி.

கண்ணாடித் திரை உறவுகள்

கண்ணாடித் திரையில் தடவிப் பார்த்த தாத்தா
தன் முன் நின்று பேசிய போது
பிஞ்சுக்கையால் தடவி
முன்தலை வழுக்கலில் பதிந்த பட்டை விபூதியை
முகர்ந்துணரும் முழு சுவாசம்!

மாமனைக் கண்டுணர்ந்து கட்டித் தழுவி
உனையும் அறிவேன் என உரைத்த போது
கண்ணாடித் திரையை உடைத்துணர்ந்த உறவுகள்!

பாட்டி தாத்தா மாமா சித்தி என அழைத்தவை
நேரில் வந்து நிற்கும் போது
ஒவ்வொன்றும்
தன் பிஞ்சுக் கையால்
தொட்டுத் தடவி உணரும்

கண்ணாடித் திரை உறவுகள்.

துள்ளிப் பறந்த மான்கள்

விடியற்காலையில் பறி போகும் பூக்கள்
மலர் படையலக்கின்றி பறிக்கப் படுவதை
தெய்வமே ஏற்பதாக கும்பிடும் தாய்!

ஒன்று இரண்டு என ஏழு கண்டு
ஜன்னலில் பரவசமாய் கும்பிடும் தாய்!

முன்னறிவிப்பின்றி வந்து ஏற்கும் மலர்களின்
சுவை கூட்டி அருந்தும் பொழுதில்
களவு உணரும் தருவாயில்

துள்ளிப் பறந்த மான்கள்!

Saturday, December 24, 2016

தனயனால் தந்தையானாய்

தந்தைக்கு அழகு தனயனுக்கு முன்
உண்ணாதிருத்தல்!

தனயனை விழையாது உணவுண்டால்
தாயின் பார்வையில் எரிதழலாவாய்!

தனயனுக்கீன்றா  உணவுண்டால்
உணவின் ருசி நாக்கில் ஏறும்முன்
மனைவியின் வாயின் ருசிக்கு இரையாவாய்!

தனயன் முன் தனயானாய்த் தாழ்ந்தாய்
தனயனின்றி உண்ண முயல்கையில்!

தனயனால் தந்தையானாய்!

Sunday, December 11, 2016

வெற்றிலைப் புகை வண்டி

புகை வண்டிக்கு கொடி அசைக்கும் போதும்
தன் புகையிலையை மறந்ததில்லை!

புகைவண்டி நிற்க சிவப்புக்
கொடியைக் காட்டும் முன்
வாய் வெற்றிலையில் சிவந்திருக்கும்!

வண்டி நின்றது இவரது
கொடியிலா வாய் சிவப்பிலா!

கணீரென வெண்கலக் குரலில்
ஒலிக்கும் ஊதலில்வெளிவரும்
தானறிந்த ராகங்களின் பெயர்கள்!

கையிடுக்கில் ஹிந்துவுடன்
வெளிர்ந்த உடையில் கொடி பிடித்து
அந்த கூட்ஸ் வண்டியில் ஏறும் பாங்கு
இன்றும் மலர்ந்ததொரு நினைவு!

தஞ்சை ரயிலடியில் உங்கள் வண்டி
கண் மறையும் வரை காந்திருந்து
திரும்பிய நாட்கள் இன்று
உங்கள் மறைவில் மலர்கின்றன!

கண்ணை விட்டு மறைந்ததொரு
இன்னொரு வெற்றிலைப் புகை வண்டி!