Saturday, November 4, 2017

மண்ணின் மனதிலொரு சுரபி

வைசாகத்தில் பிறந்தோம்
    விசாகன் என்று நாமம் பெறாமல்
விசாலமாய்ப் பிறந்தோம்
   முன்கோபம் முன்னின்று குறுக்கி விடும்!

குன்றிருக்கும் இடத்தில் குமரனிருப்பான்
     என குன்றேறி விடுவோம்
குமரனின் விசாரத்தில் ஆண்டியாய்
     மனதளவில் இருந்திடுவோம்!

வைகாசியின் விசாகத்தில்
    மணிமேகலைக்கு அமுதசுரபி
   புத்தனுக்கு ஞானம்
வைசாகனுக்கோ தொலைதூரத்தில்
   மானைத் தேடும் மயக்கம்!

மண்ணின் மனதிலொரு சுரபி.

கண்ணாடித் திரை உறவுகள்

கண்ணாடித் திரையில் தடவிப் பார்த்த தாத்தா
தன் முன் நின்று பேசிய போது
பிஞ்சுக்கையால் தடவி
முன்தலை வழுக்கலில் பதிந்த பட்டை விபூதியை
முகர்ந்துணரும் முழு சுவாசம்!

மாமனைக் கண்டுணர்ந்து கட்டித் தழுவி
உனையும் அறிவேன் என உரைத்த போது
கண்ணாடித் திரையை உடைத்துணர்ந்த உறவுகள்!

பாட்டி தாத்தா மாமா சித்தி என அழைத்தவை
நேரில் வந்து நிற்கும் போது
ஒவ்வொன்றும்
தன் பிஞ்சுக் கையால்
தொட்டுத் தடவி உணரும்

கண்ணாடித் திரை உறவுகள்.

துள்ளிப் பறந்த மான்கள்

விடியற்காலையில் பறி போகும் பூக்கள்
மலர் படையலக்கின்றி பறிக்கப் படுவதை
தெய்வமே ஏற்பதாக கும்பிடும் தாய்!

ஒன்று இரண்டு என ஏழு கண்டு
ஜன்னலில் பரவசமாய் கும்பிடும் தாய்!

முன்னறிவிப்பின்றி வந்து ஏற்கும் மலர்களின்
சுவை கூட்டி அருந்தும் பொழுதில்
களவு உணரும் தருவாயில்

துள்ளிப் பறந்த மான்கள்!

Saturday, December 24, 2016

தனயனால் தந்தையானாய்

தந்தைக்கு அழகு தனயனுக்கு முன்
உண்ணாதிருத்தல்!

தனயனை விழையாது உணவுண்டால்
தாயின் பார்வையில் எரிதழலாவாய்!

தனயனுக்கீன்றா  உணவுண்டால்
உணவின் ருசி நாக்கில் ஏறும்முன்
மனைவியின் வாயின் ருசிக்கு இரையாவாய்!

தனயன் முன் தனயானாய்த் தாழ்ந்தாய்
தனயனின்றி உண்ண முயல்கையில்!

தனயனால் தந்தையானாய்!

Sunday, December 11, 2016

வெற்றிலைப் புகை வண்டி

புகை வண்டிக்கு கொடி அசைக்கும் போதும்
தன் புகையிலையை மறந்ததில்லை!

புகைவண்டி நிற்க சிவப்புக்
கொடியைக் காட்டும் முன்
வாய் வெற்றிலையில் சிவந்திருக்கும்!

வண்டி நின்றது இவரது
கொடியிலா வாய் சிவப்பிலா!

கணீரென வெண்கலக் குரலில்
ஒலிக்கும் ஊதலில்வெளிவரும்
தானறிந்த ராகங்களின் பெயர்கள்!

கையிடுக்கில் ஹிந்துவுடன்
வெளிர்ந்த உடையில் கொடி பிடித்து
அந்த கூட்ஸ் வண்டியில் ஏறும் பாங்கு
இன்றும் மலர்ந்ததொரு நினைவு!

தஞ்சை ரயிலடியில் உங்கள் வண்டி
கண் மறையும் வரை காந்திருந்து
திரும்பிய நாட்கள் இன்று
உங்கள் மறைவில் மலர்கின்றன!

கண்ணை விட்டு மறைந்ததொரு
இன்னொரு வெற்றிலைப் புகை வண்டி!

Saturday, June 13, 2015

இசையை பொருளாக்கியதில்

இசை பொருளாக்கப்பட்டு விட்டது. இசை சத்தமாக மாறி விட்டது.  NRIகள் சென்னை டிசம்பர் சீசனில் இப்ப அதிகம் பங்கேற்பதால் ம்யூசிக் தரம் குறைஞ்சு போச்சு அதனால் TM Krishna இந்த சீசன் பாடப் போவதில்லைன்னு படிச்சேன். அது அவர் விருப்பம். சிலவற்றில் உண்மை இருக்கலாம்.

இங்கு  தியாகராஜ ஆராதனையில் கூட கலந்து கொண்ட சிலர் அங்கு நடக்கும் போட்டிகளில் பரிசு வழங்குவதில் பாரபட்சம் நடப்பதாக சொல்வதை கேள்விப்பட்டேன்.

ஆனால் இது எல்லாவற்றிலும் ஒன்றைப் பார்த்தால் எல்லாம் கமர்ஷியலாகி விட்டது. வித்வான்கள் nri குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் கட்டணம் கூட. அரை மணி நேரத்துக்கு 25$. ஒரு மணிநேர கிளாஸ்க்கு 50$. வித்வான்கள் இங்கு வரும் போது ஒரு வார கேம்ப் நடத்துகிறார்கள். கட்டணம் 300$. எவ்வளவு கட்டணம் வைத்தாலும் குழந்தைகள் போக வேண்டியுள்ளது.

ஒரே காரணம் பெரிய வித்வானிடம் கற்றுக் கொள்கிறோம் என்று NRI பெற்றோர்களின் நப்பாசை. கற்றுக்கொள்ளும் குழந்தைக்கு பெற்றோர் செலவு செய்யும் பணத்தின் அளவும் தெரியாது கற்றுக் கொடுக்கும் வித்வான்களின் அருமையும் தெரியாது. ஆனால் பெற்றோர்களின் விருப்பம் மட்டுமே வித்வான்களின் பசிக்கு இரையாகுது.

இதையே இந்தியாவில் இருக்கும் குழந்தைகளுக்கு ஒரு மாத கட்டணம்  2000 மட்டுமே என்று கேள்விப் பட்டேன்.

இதே வித்வான்கள் அமெரிக்கா வரும் போது இவர்கள் தங்க, பயணிக்க, entertain பண்ண இவர்கள் வாங்கும் கட்டணத்திற்கும் மேலாக பல மடங்கு NRI கள் செலவு செய்கிறார்கள்.  எல்லாம் இசையின் மீதுள்ள அலாதி பிரியம், வித்வான்களுக்கு செலவாகும் பணம், மணித்துளிகள் துச்சமாக கருதி, அது இசைக்கு செய்யும் மரியாதையாக பார்க்கப் படுகிறது.

இவ்வளவும் செய்யும் nri பெற்றோர்கள் எந்த வித்வான்களை உருவாக்கிய அதே சென்னை மார்கழி சீசனில் பாட ஆசைப்படுவதில் அதற்கான செலவுகள் செய்வதில் வித்யாசம் பார்க்க மாட்டார்கள் தானே.

எனக்கு தெரிந்து சில பெற்றோர்கள் டிசம்பர் சீசன் முடியும் வரை இங்கு சம்பளம் போனாலும் லீவை போட்டு, அங்கு ஒட்டல் அறையில் அதிக கட்டணம் செலுத்தி பெரிய வித்வான்கள் பாடும் அதே மேடையில் தன் பிள்ளைகளும் பாட பாடுபடுகிறார்கள்.

இசையின் தரம் குறைந்தால் வித்வான்களும் பொறுப்பு தானே! நீங்கள் சொல்லிக் கொடுத்தவை தானே! 

நீங்கள் இங்கு வந்து போக உங்களுக்கு மட்டும் தான் nri செலவு செய்ய வேண்டுமா. அவர்கள் பிள்ளைகளுக்கும் ஒரு காலத்தில் இதுவெல்லாம் உதவக்கூடும் என்று தானே எல்லாம் செய்தார்கள்.

கமெர்ஷியல் ஆக்கியதில் உங்கள் பங்கும் உண்டல்லவா?

இசையை பொருளுக்காக உடைமையாக்கியத்தில் நம் எல்லோருடைய பங்கும் இருக்கு.  மீள முடியுமான்னு பார்ப்போம். கிருஷ்ணாவின் பகிஷ்கரிப்பை விட வேறு விதமாய் நல்லபடியாக மாற்ற ஒரு வேண்டுகோள்.

# சும்மா ஒரு NRI புலம்பல்

Sunday, March 1, 2015

அன்பென்ற வாழ்வில்

இறக்கம் தளர்ந்து செல்லும் உறவில்
இறுக்கிப் பிடிக்க நினைப்பது
கர்வமா இழப்பா கன்றா!

இழப்பென்றால் கர்வம் தளர்ந்து செல்
கர்வமென்றால் புது சுகந்தம் தேடு
கன்றென்றால் ஆறப்போடு 
கர்வத்தையும் இழப்பையும்!

வாழ்வே போராட்டம்!
இதில் போராட அகந்தையின்றி வேறெதுவே!
வீதியில் வாளெடுத்துப் போராட சமுதாயப் பிரச்சனையல்ல!
சமுதாயம் பரிகசிக்கும் குடும்பப் பிரச்சனை!

வெற்றியும் தோல்வியும் உன்னிடமே!
வெல்லப் போவது அகந்தையா வாழ்வா!
கன்றை நீர் சுரக்க வைக்க கள்மனது தேவையன்று!

அன்பென்ற வாழ்வில் இருவர் பங்கே செல்வமண்டோ!
அன்பாய் செல்வீர் கன்று துள்ளி ஆட!

அகந்தையை வென்றிடுவீர் அன்பின் வலிமையால்!