இன்று மதியம் போஸ்ட்ல மறக்காம குறிப்பிடனும்ன்னு நினைச்சேன். ஆனால் நினைச்ச மாதிரியே மறந்துட்டேன்.
அது:
இன்னிக்கு பெருமாள் கோவில் குருக்கள் பழம் பிரசாதம் கொடுக்கும் போது ஒரு பெரிய பச்சைக்கற்பூரக்கட்டி ஒன்னும் கொடுத்தார்.
இது இன்னிக்கு காலையில பெருமாள் நெத்தியிலிருந்து அபிஷேகத்திற்கு முன்ன அவர் நெத்தியிலேர்ந்து எடுத்தது. இதை எப்போதும் முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே கொடுப்போம், சீக்கிரம் வாங்கிண்டு போயிடுவாங்க, இதை இன்னிக்கு உனக்கு கொடுக்கிறேன்னு கொடுத்தார்.
கொஞ்சம் புல்லரிச்சு போச்சு. ஆனால் இதை வச்சு என்ன செய்யறதுன்னு தெரியலை. அவரிடமே கேட்டுவிட்டேன்.
நிறைய சொன்னார்.
நீ அங்க சிவன் கோவில் விபூதி நெற்றியில வச்சுக்கிற மாதிரி, நெற்றியில வச்சுக்கலாம். அய்யங்கார் இதை ரொம்ப விசேஷமாகப் பயன்படுத்துவாங்க. வீட்டுக்குப் போய் பெருமாள் கிட்ட வச்சுட்டு தினமும் படுக்கிறதுக்கு முன்ன நெற்றியில வச்சுக்கன்னார். (அம்மா இருந்தப்ப இரவு நேரத்தில் குளிக்காம சாமி பக்கம் போக விடமாட்டாங்க. அது வேற. இவரிடம் நான் சொல்லலை).
மேலும் சொன்னார்.
ஒரு சின்ன துளியூண்டு துண்டு எடுத்து வாயில போட்டுக்கலாம், சர்க்கரைப் பொங்கல்ல போடலாம். இங்க கோவில்ல நாங்க கொடுக்கிற தீர்த்தத்தில் போடுவோம்ன்னார்.
கடைசியாக வெளிய போகுறதுக்கு முன்பு சொன்னார். வெளிய வெயில் ரொம்ப ஜாஸ்தியாக இருக்கு. காருக்குள் காத்து படற மாதிரி வெயில் படற மாதிரி வச்சுராதேன்னார். ஆபத்து புரிஞ்சுது.
கோவில் உள்ள நான் மாஸ்க் போட்டிருந்ததால் உள்ளேயே ஒரு சின்ன துண்டு எடுத்து வாயில் போடலை. வெளிய வந்து கையில் ஒட்டியிருந்த துகள்களை மட்டும் டேஸ்ட் பார்த்தேன். முன்பு சின்ன வயசுல அறிந்த பச்சைகற்பூரத்தின் டேஸ்ட் வாசனை புரிஞ்சுருச்சு. அதான் ரசாயனக்கலவையின் ஆபத்தும் புரிஞ்சுது. ஜாக்கிரதையாகக் கையாளனும்.
இந்த கோவிலுக்கு கடந்த 18-19 வருடமாகப் போய் வருகிறேன். பெருமாள் சந்நிதி எழுந்து ஒரு பத்து-12 வருடமிருக்கலாம். அம்மிணி ஏகாந்த சேவைக்கு பல வருடமாக வீணை வாசிப்பதால், அம்மிணிக்கு எடுபுடியாகத் தான் ஒவ்வொரு தடவையும் போவேன்.
அப்போது நாத்திக எண்ணங்களோடு இருந்த காலத்தில் சந்திதி உள்ளே போக மாட்டேன். குருக்கள்கள், இவ்வளவு தூரம் வந்துட்டு சந்நிதி உள்ள வராம போறானேன்னு பார்ப்பாங்க, ஆனால் ஒன்னும் சொல்ல மாட்டாங்க.
கடந்த ஐந்தாறு வருடங்களாகத் தான் சந்நிதி (கர்ப்பகிரகம்) உள்ளே போய் அவர்கள் கையில் தீர்த்தம் வாங்கிப்பேன். ஆனால் இப்போதெல்லாம் கிடைக்கின்ற அந்த, நம்மைப் பார்த்தவுடன் அவர்கள் செய்யும் அந்த ஸ்பெஷல் தீபாராதானை, தீர்த்தம், பழம், பூ வெற்றிலை பிரசாதங்கள் தரும் நிறைவு, வெளியவே உட்கார்ந்து வெறுமனே திரும்பி வந்த காலத்திலிருந்ததில்லை. இப்போது ஒவ்வொரு தடவையும் கை நிறைய வெளியே வருகிறேன். அதற்கு தகுந்த பணத்தை நான் அவ்வளவாக போட்டதில்லை. தேவையறிந்து நம் கையில் நிறைய வருகிறதுபோலுள்ளது.
சில சமயம் பிரசாதமாக ஒரு சின்ன பூவும், அவர்கள் நமக்காக செய்யும் அந்த ஸ்பெஷல் தீபாரதனை மட்டுமே தானிருக்கும். அப்போதும் கூட நல்ல நிறைவோடு வந்துள்ளேன்.
சின்ன வயதில், அம்மாவும் அப்பாவும் கோவில் விட்டு வெளியே வரும் போது அவர்கள் முகத்தில் தெரியும் அந்த மலர்ச்சி, இப்போது அதை உணரமுடிகிறது.
அவர்கள் எப்போதும் போல் தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். மாறிவரும் நம் பார்வைகளில் நம்முடைய வெறுமையும் நிறைவும் தெரிகிறது. அவரவர் சுயமாகப் பெறும் அநுபவங்கள் இவை. தேவையிருப்பின் போது நிறைவுகள் தெரிகிறது. நிம்மதி தெரிகிறது.
சுய அநுபவங்களில்
வாழ்வினிது
ओलै सिरिय !