Sunday, June 14, 2020

சுமைகளை இறக்க ஒரு தொந்தி சுமைதாங்கி

வாட்சப் போனா எல்லா க்ரூப்லையும் அந்த நடிகரின் தற்கொலைக்கு இரங்கல் செய்திகளாகவே இருக்கு! இங்க முகநூலிலும் அதுவே! ஆனால் அவங்க மேனேஜர் இறந்தப்ப கூட இவ்வளவு இரங்கல்பா வரவில்லை! அது இனி தடம் மாறிப் போகலாம்.

பொதுவான காரணம் சொல்லப்படுவது ‘மன அழுத்தம்’ தற்கொலைக்கு இட்டுச் செல்கிறது என.

அம்மா தான் மனதில் வருகிறார்கள். பிறந்த சிறிது நாட்களிலேயே வறுமையை பார்த்துப் பழகிய ஏழ்மை நிலை. திருமணம் ஆன பின்னும் தொடரும் கவலைகள் குடும்ப கஷ்டங்கள். 20-21 வயதில் திருமணம் ஆகி வந்த பின்னும் வந்த இடத்திலும் இரண்டு நாத்தனார்களுக்கு திருமணம் செய்து வைத்து அவர்கள் பிரசவங்களையும் தன் வீட்டில் வைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயம். தொடரும் குடும்பச் சுமைகள் ஏழ்மை இல்லாத நாட்களே கிடையாது!

சுமைகளை இறக்க ஒரு சுலபமான வழி வைத்திருந்தார். அருகிலுள்ள பிள்ளையார் கோவிலுக்குப் போய் அர்ச்சனைத் தட்டில் 5 பைசா போட்டு தன் சுமையை அந்த தொந்திப் பிள்ளையாரிடம் இறக்கிவிட்டு வந்து விடுவார்.

அடிக்கடி என்னிடம் சொல்லும் ஒரு வார்த்தை! வாழ்க்கையில கஷ்டம்ங்கிற வார்த்தை விலக ஆரம்பிச்சதே நீ பிறந்ததலிருந்து தாண்டான்னு கடைசி வரை சொல்லி கிட்டு இருந்தாங்க!

எந்தவொரு மனக்கலக்கம் ஏற்பட்டாலும் அம்மா ஓடுவது அருகிலுள்ள பிள்ளையார் கோவிலுக்கு. அர்ச்சனைத் தட்டில் போடற அந்த ஒரு ரூபாய் இரண்டு ரூபாயில் தன் மன அழுத்தங்களை கவலைகளை வருத்தங்களை இறக்கி விட்டு வந்து விடுவார்கள்.

கடந்த டிசம்பரில் அம்மா படுக்கையில் விழுந்த பின்னும் சொன்னது: டேய் இன்னிக்கு அமாவாசை. வீட்டு பக்கத்திலுள்ள அந்த பிள்ளையார் கோவிலில் 4 கன்னட அர்ச்சகர்கள் இருப்பார்கள். ஆளுக்கு 20 ரூபாய் கொடுத்துர்றா. அதில் ஒருத்தர் வெளியே உட்கார்ந்து பிரசாதம் கொடுப்பார், அவருக்கு கொடுக்காம விட்டுராதே!

இங்க ஒரு டாக்டர் anti-depressionக்கு மாத்திரை எழுதித் தரலாமான்னு கேட்டார். சில சமயம் தேவைப்படுபவர்கள் எடுக்கலாம். சிலருக்கு தேவை கூட. எடுத்தால் செம தூக்கம் வரும். தூக்கத்தில் கவலைகளை மறக்கலாம். ஆனால் ஒட்டு மொத்தக் குடும்பத்தில் அனைவரும் தன் கவலைகளிலிருந்து வெளிவர மாத்திரை எடுத்தால் தூக்கத்தில் குடும்பம் நடத்த முடியுமா!

என் அம்மிணியின் stress busters அவரது வீணை வாசிப்பு தான். அதீத கவலைகள், சிரிப்பு, அழுகை, வருத்தம், சண்டைகள் எல்லாம் மறந்து தன்னோட வீணை வாசிப்பில் இறக்கிவிட்டு வந்து விடுவார். ஆட்டம், ஆர்ப்பரிப்பு, ஆரவாரம், கவலை, அழுகை, சண்டைகள் கொடுக்கும் வலிகள் தன் வீணையின் தொந்தியில் இறக்கிவிடும் ஒரு அபரீதமான anti-depression மருந்து அம்மிணியிடம்.

சுமைகளை இறக்க ஒரு தொந்தி சுமைதாங்கி!

No comments: