Monday, January 30, 2012

வெற்றிப் பாதை

நமது நண்பர்கள் பிரபலமாவதை, வெற்றியடைவதைப் பார்த்து, நான் பிரபலமாவதை விட பெருமிதம்  கொள்கிறேன். ஒருவரது வெற்றியின் பின் ஒரு அயராத முயற்சி உள்ளது. அதில் எத்தனை சதவீதம் நாம் முயன்றுள்ளோம்  என்று பார்க்கும் போது நமது  நண்பனின் வெற்றியின் ரகசியம் புலப்படுகிறது.

பல தடவை ஏதோ ஒன்றில் வெற்றி அடைய வேண்டும் என்று முயற்சித்துள்ளேன். அனால் வெற்றி கிடைக்கும் முன்னரே தடங்கலோ தவற விட்டவையோ தான் முன் வந்து நிற்கிறது. ஆகவே, வெற்றி அடைந்த நண்பனின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு பெருமை கொள்கிறேன்.

வெற்றி அடையாததால் அல்லது பிரபலமாகாததால் நமது வாழ்க்கையில் ஏதேனும் மாறுகிறதா? இல்லை! அடுத்த முயற்சியை நோக்கி நமது நடை பாதை அமைகிறது. வெற்றி பெற்ற நண்பனின் வாழ்விலோ பெற்ற வெற்றியைத் தக்க வைக்கப் போராட்டம் நடைபெறுகிறது. இருப்பினும் அவன் வாழ்க்கையிலும் ஏற்படும் போராட்டத்திலும் வெற்றியைக் காணும் போது பெருமை கொள்கிறேன்.

வாழ்வின் இறுதி நாள் வரை இத்தகைய வாழ்வை நோக்கிச் செல்லும் நம் பாதையும் ஒரு வெற்றிப்பாதையே !

Saturday, January 28, 2012

Midnight in Paris

ஆபீஸ் ல எல்லோரும் எதோ ஒரு படத்தப் பத்தி பேசறாங்க. சும்மா என்னத்த வேடிக்கை பார்க்கிறதுன்னு இந்த படத்தை கொண்டு வந்தாங்க! தமாஷா இருக்கும் அது இதுன்னு சொன்னதால எடுத்துப் பார்த்தேன். சிரிப்பு வரல.

ஆனால், இயல்பான வாழ்க்கையில் நமக்குப் பிடிக்காது நடக்கையில் நமக்குப் பிடித்தவைகளை அசை போடுவது தவிர்க்க இயலாது. அதுவும் பழங்காலம் சிறந்ததுன்னு வாழும் போது, நிகழ்காலத்தில் சிறந்தவைகளை சுகர்ந்து வாழ வேண்டியதை நாமாக உணரவேண்டும் என்பதைச் சொல்வது போல இருக்கிறது.

கனவு கண்டாலும் எல்லோரும் கனவில் பிரபலங்களை வெற்றியாளர்களை தொடர்பு கொள்வதும் பரிச்சயம் கொள்வதாக மட்டுமேகொள்கிறோம். யார் தோல்வி அடைஞ்சவர்களின் அல்லது பிரபலமில்லாதவ்ர்களின் நட்பு அல்லது அறிமுகத்தை பெரிது கொள்வோம்?

என்ன இருந்தாலும் பெரும் புகழ் அடைந்தவர்களிடம் நட்பு கொள்வதாக நினைவு கூர்வது கனவென்றாலும் அது ஒரு சுகமே! கடந்த கால நினைவுகளில் வாழ்ந்தாலும் அல்லது கடந்த காலமே சிறந்தது என்று சொல்வதை விட நிகழ்காலத்தில் வாழக்கையை இழந்து விடாமல் வாழ்வது சிறந்தது என்று சொல்லுவதாக நினைக்கிறன்.

ரொம்ப கவரவில்லை என்னை! படத்தை படைத்தவனின் கோணத்தில் புரிந்து கொள்ளாத நிலைமையாக கூட இருக்கலாம்.

Monday, January 16, 2012

பாவனைகள்

போன பதிவில் குறிப்பிட்ட படி முதல் நாள் மாலை நேரமாகி விட்டதால் புலிகள் சரணாலயமும் பாணதீர்த்தமும் பார்க்கமுடியாமல் பாபனாசத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தோம். நண்பர் வழியில் தான் பத்தமடை என்றார். எழுத்தாளர் தமிழ்செல்வன் அவர்களைப் பார்க்கமுடியுமா என்றேன். நண்பர் உடன் தொடர்பு கொண்டதில் அதிர்ஷ்டவசமாக அன்று வீட்டில் இருந்தார். எங்களை வீட்டிற்கு வருமாறு அழைத்தார். வீட்டில் அருமையான டீ உபசரிப்புடன் ஒரு அருமையான கதைப் புத்தகத்தை பரிசாக அளித்தார்.

இன்று கையில் எடுத்து முதல் கதையைப் படித்தவுடன் உங்களிடம் பகிரத் தோன்றியது. அது அவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பின் முதல் கதை 'பாவனைகள்'. புத்தகம் 'மிதமான காற்றும் இசைவான கடலலையும்' - தமிழினி பதிப்பகம்.

புத்தகத்தின் அட்டையைப் பார்த்த வுடனேயே ' இது உன் நண்பர் உனக்குப் பரிசளித்ததல்லவா' என்று எனது மகன் நினைவு கூறும் அளவிற்கு அதன் அட்டைப் படம் அந்த சிறுவனின் மனதில் கவரக் கூடிய அளவில் வெளிவந்துள்ளது.

எங்கள் சிறு வயதில் தொழிலாளர் குடியிருப்பில் வரும் கைவண்டி பண்டகங்களை சுற்றி நாங்கள் வலம் வந்து செய்த செயல்களைப் ஒரு படைப்பாக இக்கதையில் பார்க்க முடிகிறது. கைவண்டியை தெரு முழுக்க முன்னரும் பின்னரும் சுற்றி, சில நாள் பொருட்களை வாங்கியும், வாங்காத நாட்களில் ஒரு ஏக்கத்துடன் ஒரு பாவனையோடு வெளிப்படுத்தும் சின்ன சிறார்களின் வெளிப்பாடுகள் அழகோவியமாக இந்தக் கதையில் வந்துள்ளது.

புத்தகத்தின் முன்னுரையில் சொல்லும் வாதம், 'வறுமை இல்லை தான் என்றாலும் வாழ்வு பற்றிய அச்சமே வாழ்வை பிழைப்பாக்கி ...', மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.

முதல் கதையைப் படிக்கும் வரை இதை பதிவில் உங்கள் முன் கொண்டு வருவேன் என்று நினைக்கக் கூட இல்லை. எனக்குப் பழக்கமில்லாத ஒன்று.
நீங்களும் படித்துப் பாருங்கள்.

Sunday, January 15, 2012

பாணதீர்த்தம் அருவி

தென் தமிழ்நாட்டின் எழில் மிகு பகுதிகளில் மிகவும் பிரமிக்க வைக்கும் ஒரு அருவி பாணதீர்த்தம். தாமிரபரணி ஆற்றின் பிரவாகமாய் காரையார் அணையை ஒட்டி ஒரு ரம்மியமான சூழ்நிலையில் அமைந்துள்ள ஒரு அற்புத எழிலோவியம். அருவியை அடைய தாமிரபரணி ஆற்றில் கட்டப்பட்டுள்ள அணையின் மீதான ஒரு விசைப் படகு சவாரி, கூடவே நம்மை சுற்றியுள்ள இயற்கையின் அழகைப்பார்த்து பிரமிக்க வைக்கிறது.

குற்றாலம் பார்க்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆவலை நண்பரிடம் சொன்ன போது, 'அதுக்கென்ன! இரண்டு நாள் சேர்ந்தார்ப் போலிருந்தால் எல்லாம் பார்த்துவிடலாம்' என்றார். சேலத்திலிருந்து குற்றலாம் நோக்கிய எங்கள் பயணம், திடீர் திருப்பமாய் முண்டந்துறை புலிகள் சரணலாயம் மற்றும் பாணதீர்த்தம் அருவி நோக்கி நகரும் பயணமாக மாறிவிட்டது.

பாபநாசம் நெருங்கும் போது மாலை 5 மணிக்கு மேலாகிவிட்டதால், வனக்காவலர்கள் அனுமதிக்காததினால் வருத்தத்துடன் திருநெல்வேலி திரும்ப வேண்டியதாகி விட்டாலும், வழி நெடுக இருந்த வயல்களில் இயல்பாய்த் திரியும் ஆண் பெண் மயில்களின் அலங்கார நடையும், பல்வேறு விதமான பறவைகளின் வாசம் கணக்கிலடங்கா எண்ணிக்கையில் புழங்கும் அச்சூழல் அத்தனையும் மறக்கச் செய்தது. பாபநாசம் சிவன் கோவில் வாசலில் பிரவாகமாய் விரிந்தாடும் தாமிரபரணியின் ஆற்றுக் கரையில் காலை வைத்து அந்த குளிர்ந்த நீரில் மிதக்கும் துள்ளி விளையாடும் மீன்களைப் பார்க்கும் மாலைப் பொழுது, நமது சின்ன சின்ன ஆசைகளை அசை போட வைக்கிறது.

இங்கிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் கட்டப்பட்டுள்ள புழக்கமில்லாத புது அரசினர் விடுதிக்கு முன் உள்ள மரத்தில் கொஞ்சும் கிளிகளின் ஆரவாரம் சூழ்நிலையை மெருகூட்டுகிறது. இயற்கை மட்டுமா! அதன் எதிரில் உள்ள டீ கடையில் கண்முன் செய்து கொடுக்கப்படும் சூடான இட்லி, வடை, பூரி எல்லாம் சுவை மட்டுமல்ல, அதன் விலையும் எளிதான மக்களின் சுயநலமற்ற வாழ்வு கைகூப்ப வைக்கிறது. இட்லி 2 ரூபாய் மட்டுமே.

மறுநாள் காலையே முண்டந்துறை சரணாலயத்தில் மதிய உணவுக்குப் பணம் கட்டி விட்டு, பாணதீர்த்தம் நோக்கிப் பயணமானோம். வனம் முழுக்கப் பார்த்து பரவசமடைய வைக்கிறது. கீரி தனது இரையான பாம்பை இழுத்து செல்வதும், கொம்பேறி மூக்கன் பாம்பு என்று அழைக்கப் பட்ட அந்த நீளமான ஊர்வனம் சிறு துளி நிமடங்களில் தரையிலிருந்து மரம் ஏறி எங்களை நோக்கியதும், வழி நெடுக மயில் மற்றும் காடைகளின் தரிசனங்களோடு செல்லக்கூடிய பயணம் அது.

முழுதும் நிரம்பி வழிகின்ற அணையை சீக்கிரமே அடைந்து ஒரு தனி விசைப் படகில் பாணதீர்த்தம் நோக்கிப் பயணமானோம். சுற்றிலும் மலைப் பிரதேசம், நடுவில் மிகப் பெரிய நீர்த் தேக்கம், அதன் நடுவில் செல்லும் எங்கள் விசைப் படகின் அசைவு, ஒரு தாலாட்டு பாடி அழைத்துச் செல்வதாகவே உணர்ந்தேன். அருவியின் தரிசனம் படகிலிருந்து கிடைக்கும் போது ஏற்பட்ட உணர்வு மலைப்பாக இருந்தது. அருவியில் குளிக்கும் போது தலையில் விழும் சட சடவென்ற சத்தம் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அருவியி தூய நீரை யாரும் சோப்பு போட்டு மாசு படுத்தாமல் இருந்தது மிகவும் வரவேற்கத் தக்கது. தண்ணீரின் சுத்தம் நேரடியாக அருந்தும் போது மட்டுமல்ல, நமது தலை முடி அந்த நீர் பட்டு மிகவும் soft ஆக மாறியதை நன்கு உணர முடிந்தது.

பாணதீர்த்தம் அருவி நோக்கிய எங்கள் பயணம் மிக சிறந்ததாக இருந்தது.

குற்றாலத்தில் எல்லோரும் தேவைக்கு அதிகமாக சோப்பு உபயோகிப்பது மட்டுமில்லாமல், அருகிலுள்ள குப்பைத் தொட்டியில் மீதியை வீசாமல், அந்த நீரிலேயே வீசுவது நீரின் நிறம் சுவை, நீரினத்தின் வாழ்வு அனைத்தையும் வீழ்த்துவது  உணராமல் செய்யும் செயல் எதுவும் பாண தீர்த்தத்தில் இல்லாதிருப்பது மேலும் மனதிற்கு நிறைவாக இருந்தது.

நீங்களும் ஒரு முறை சென்று வாருங்கள்.

முதல் விருப்பம்

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

இது ப்ளாக் ல் எனது முதல் பதிவு . buzz ல் சிறிது காலம் கிறுக்கிக் கொண்டு இருந்தேன். நண்பர்கள் பதிவு போடச் சொல்லி முன்பே அறிவுறுத்தினார்கள். என்னமோ ஒரு தயக்கம். புதிதாக பதிவு ஆரம்பிக்க இத்தனை நாள் ஆனது.

இன்று உழவர் திருநாள், உழைப்பாளி மக்களின் ஒரு நல்ல நாள் அன்றிலிருந்து தொடரலாம்னு திடீர்னு தோன்றியதால் ஆரம்பித்துள்ளேன்.

உங்கள் ஒத்துழைப்பு ஆதரவு தந்திட வேண்டிக் கொள்கிறேன்.

சிறிய அளவில் பகிர விருப்பம்.

ஓலை