இந்த வாரம் உழைத்த உழைப்பினால் ஏற்பட்ட உடல் வலி இன்னும் போக மாட்டேங்குது.
இந்த வாரம் எங்க ஊர் ப்ரைமரி எலக்ஷன்ல வழக்கம் போல தேர்தல் பணி செய்ய ஆவலாக இருந்தேன். கடைசி நேரத்தில் தொகுதி தலைமை அதிகாரி வரமுடியாகப் போக, கடைசி நிமிடத்தில் தேர்தல் ஆணையம் என்னைக் கூப்பிட்டு முழுப்பொறுப்பு எடுத்துக்கிறயான்னு கேட்டாங்க. ஆச்சரியமாகவும் மிக நல்ல வாய்ப்பாகவும் இருந்துச்சு. ஆனால் வெளியே சொல்ல முடியாத சில சிக்கல்களினால் இந்த தடவை வேண்டாம், அடுத்த தடவை பார்க்கலாம் என்று சொல்லி விட்டேன்.
தலைமை அதிகாரி என்னை ரெகமண்ட் பண்ணியிருப்பதால் இந்த வாய்ப்பு வந்தது. நான் தவிர்த்தது ஆணையத்திற்கு மேலும் சிக்கலானது புரிந்தது. எல்லா சப்ளைஸும் நீ வாங்கி வச்சுக்க, நாங்க இன்னொருவரை ஏற்பாடு பண்றோம்ன்னாங்க. சரின்னேன். கடைசியிலே அவர்களே எல்லா ஏற்பாடும் பண்ணிவிட்டார்கள்.
செவ்வாயன்று தேர்தல், திங்களன்று மாலை சாயந்திரம் வாக்குச்சாவடியில் எல்லா ஏற்பாடும் இரண்டு மணி நேரத்தில் பண்ணனும். அன்று எனக்கு 6.30டு9.30 ஸ்பானிஷ் வகுப்பு வேற, ஊர் போயிருந்த அம்மிணி அன்று தான் இரவு 11 மணிக்குத் திரும்பி வர்றாங்க. மறுநாள் காலை 6 மணிக்குள் வாக்குச்சாவடியில் தேர்தல் பணி துவங்கனும். இரவு 7.30க்கு முடிந்தவுடன் ஒன்பது மணிக்குள் தேர்தல் சாவடியில் வேலை முடித்து அனைத்தையும் சரி பார்த்து வைக்கனும்.
அம்மிணி கிட்டே பல தடவை சொன்னேன், அந்த திங்கள் கிழமை மட்டும் திரும்பி வராதே, எனக்கு ரொம்ப சிரமம்ன்னேன், கரெக்டா அன்னிக்குத் தான் வாராக.
திங்கள் மாலை சாவடிக்குப் போனால், அந்த சர்ச்சுக்குள் எப்போதும் கொடுக்கும் ஒரு பெரிய ஹாலைக் கொடுக்காமல் இந்த தடவை அதன் பக்கத்து கட்டிடத்தில் ஒரு சின்ன ப்ரேக் ரூமைக் கொடுக்கிறார்கள்.
வந்த தேர்தல் அதிகாரிகள்(போல் வொர்க்கர்ஸ்) பெரும்பாலோர்க்கு இதான் முதல் தடவை, அவர்கள் நேராக என்னிடம் வந்து, தலைமை அதிகாரி உன்னை தொடர்பு கொள்ளச் சொன்னார்கள், என்ன பணி செய்ய வேண்டுமென்று நீ உதவுவாய் என்று சொல்கின்றனர்.
அன்னிக்கு எல்லா பொறுப்பும், தலைமை ஏற்கவில்லையென்றாலும், தலைமையாய் செயல்பட வேண்டியதாகி விட்டது. சாவடி எப்படி அமைக்கனும், அந்த குறுகிய அறையில் எது எதை எங்க வைக்கனும் என்பதிலிருந்து, ஒவ்வொரு அதிகாரிக்கும் அவர்கள் வேலையைச் சொல்லித் தருவது வரை செய்ய வேண்டியதாக இருந்தது. ஒருத்தர் அங்கயே ஒரு வாக்காளர் நடந்து வர்ற மாதிரி நடிச்சுக் காண்பிச்சு இந்த வாக்காளருக்கு எப்படி உதவுவதுன்னு கேள்வி. அங்ஙனவே அவங்களுக்கு ட்ரைனிங் கொடுத்தேன்.
எல்லாம் செட்டப் பண்ணி வச்சுட்டு டைம் பார்த்தா இரவு எட்டு மணி. ஸ்பானிஷ் கிளாஸ் எப்படியும் இரவு ஒன்பதரை வரை அட்டெண்ட் பண்ணிட வேண்டும்ன்னு ஓடி அந்த கிளாஸும் அட்டெண்ட் பண்ணினேன். கூடப்படிக்கும் அத்தனை தாத்தா பாட்டிகளும் என்னோட சிவிக் ட்டூட்டி கடமையைத் கைத்தட்டிப் பாராட்டியதில், இருந்த களைப்பு போச்சு.
கிளாஸ் முடிஞ்சு அம்மிணியைப் பிக்கப் பண்ண ஏர்போர்ட் போய் கூட்டி வந்து இரவு உறங்கும் போது ஒரு மணி. காலை நாலரைக்கு எழுந்து குளிச்சு ஐந்தரைக்கு வாக்குச் சாவடிக்கு ஓடினேன்.
போனவுடனேயே காலையில் செய்ய வேண்டிய செட்டப் செய்து முடிக்க முடிக்க சரியா ஆறரை மணிக்கு தேர்தல் ஆரம்பிக்க வாக்காளர்கள் ரெடியாக உள்ளே வர ஆரம்பித்து விட்டனர்.
நான் பணி செய்வதைப் பார்த்தே பக்கத்திலிருக்கும் அதிகாரிக்கு சொல்லிக் கொடுக்க அவர்கள் வேலையை துரிதமாக செய்ய ஆரம்பிக்க மடமடவென்று வாக்காளர்கள் ஓட்டளிக்கத் துவங்கினர். ஒவ்வொரு டேபுளிலும் ஒவ்வொரு அதிகாரிக்கும் அவர்கள் செய்ய வேண்டியதைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே என் பணியும் செய்ய முடிந்தது.
கோவிட் கால கட்டத்தில் எல்லாம் ஆன்லைன் ட்ரைனிங் ஆகிப்போனதாலும், இப்பவெல்லாம் தேர்தல் பணி செய்ய ஆட்கள் வராததாலும், கடைசி நேரத்தில் புதிதாக வரும் சிலருக்கு என்னைப் போல் எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவர்கள் அவர்களுக்கு தேர்தல் நேரத்தில் சொல்லிக் கொடுக்க வேண்டியுள்ளது.
என்னைத் தவிர எல்லோரும் இங்கயே பிறந்து வளர்ந்தவர்கள். ஒரு அம்மிணி சொல்றாக, நான் அவ்வளவு பெரிய ஃபார்மா கம்பெனியில ப்ராஜக்ட் மேனேஜர், நான் எதுக்கு இந்த மாதிரி வேலை செய்யனும்ன்னு கேட்கிறாங்க. இது வாலிண்டியர் வேலையானாலும் நாம் செய்யும் சிவிக் ட்யூட்டியில் ஏற்றதாழ்வு பார்க்காமலிருக்க எப்படி சொல்லித் தருவது.
தேர்தலைப் பற்றி கேள்விகள்இப்போது அதிகம் எழுவதாலும் இப்போதெல்லாம் அதிக வாக்காளர்கள் தேர்தல் சாவடிக்கு வருவது அதிகமாகி விட்டது. இரு மடங்கு வேலை இப்பவெல்லாம்.
எப்படியோ! நாள் முழுதும் வெளியே போக முடியாம கொண்டு போனதை உண்டு, எல்லா வேலையும் முடித்து இரவு ஒன்பது மணிக்கு மூட்டை கட்டும் போது உடம்பில் ஒவ்வொரு பாகமும் நோக ஆரம்பிச்சுருச்சு. குனிஞ்ச முதுகை நிமுத்த சிரமப்படவேண்டியதாச்சு.
நாலு நாளாகியும் உடம்பு வலி போகலை. மற்ற அதிகாரிகளின் கடைசி நேர எதிரொலிப்புகளினால் ஏற்படும் மனக்கவலைகளும் அப்பப்ப துரத்துகிறது.
எதுவாயினும் எனக்குக் கொடுத்த பணியை தேவைக்கு மேலவே செய்த திருப்தி ஒன்னு இருக்கு.
ஒரு அடி முன் வைக்கும் போது இரண்டடி பின் வைக்க வேண்டியதும் நல்லதே!
உழைப்பில் வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Trabaja duro!
No comments:
Post a Comment