Thursday, April 21, 2022

நம் பிள்ளைகள் வளர்கிறார்கள்

பையனுக்கு அவன் 10வது படிக்கும் போதலிருந்தே பைலட் ஆவனும்ன்னு ரொம்ப ஆசை. அதை அவன் 12வது படிக்கும் போது வரை கூட ரொம்ப சொல்லி சொல்லிப்பார்த்தான். முதலில் படிச்சு ஒரு டிகிரி வாங்கிக்கோ, அப்புறம் பைலட் ஆவறதைப் பார்க்கலாம்ன்னே தள்ளிப்போட்டு வந்தேன், அவன் காலேஜ் படிப்புக்கு சேர்த்த பணம் இப்படி செலவாயிட்டா என்ன பண்றதுங்கிற கவலை.

10வது படிக்கும் போது அவன் aeronautical எடுப்பான், அப்ப அவனுக்கு கூடவே பைலட் ட்ரைனிங்கு அனுப்பலாம்ன்னு இருந்தேன். ஆனால் அவன் 12வதுல அவனது வாழ்க்கைப் பயணத்தை வேற பாதையில துவங்க ஆரம்பிச்சுட்டான். பார்மசி டெக்னிஷியன், எமெர்ஜென்சி டெக்னீஷியன் சர்டிபிகேட் எல்லாம் வாங்கிட்டான். இப்ப யங்கஸ்ட் paramedic ஆகப்போறான் பதினெட்டு வயசுல. இப்ப ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும் எத்தனை பேருக்கு intubation பண்றேன் எத்தனை சிபிஆர், இன்னிக்கு இவ்வளவு பேரை ரிவைவ் பண்ணியிருக்கேன்னு அவனே பெருமையாக சொல்லும் போது, என் கடமையை நான் செய்து முடித்து விட்டதாகத் தோன்றுகிறது. இனி அவன் பார்த்துப்பான்.

அவனை பைலட் கோர்ஸ்ல சேர்க்காத போது அதை அவன் நண்பர்கள் பலபேர் கிட்ட சொல்லி குறைபட்டுக்குவான். அப்ப வீட்டுப் பக்கத்தில் குடியிருக்கிற ஒரு பெண், அவன் வயது அவன் கிளாஸ்மேட், ஒரு கர்நாடிக் கச்சேரி வளாகத்தில் என்னைப் பார்த்து சரமாரியாக கேள்வி கேட்டாள்.

உங்கப் பையனைப் பாருங்க, எவ்வளவு உயரம், அவன் கண் பார்வை 20/20, கண்ணாடியே தேவையில்லை, அவன் பைலட் ஆவறதுக்கு எல்லாம் அவனுக்கு பர்பெஃக்டாக இருக்கு. நீங்க அவன் ஆசையைக் கெடுக்கறீங்க, இப்ப என்னால் நினைச்சா கூடப் போக முடியாது, நான் ஹை பவர் சோடாபுட்டி, அவங்க என்னையெல்லாம் எடுக்க மாட்டாங்க, நீங்க இப்படி பண்றீங்களேன்னு கச்சேரியில எனக்கு செமையாக கச்சேரி பாடிட்டாள் அந்த குட்டிப்பெண்.

அப்ப மனசு சங்கடமாக இருந்துச்சு, பையன் ஆசையை நிறைவேத்தலைன்னு. அவள் சொன்னதுகப்புறம் கில்டி ஃபீலிங் ரொம்பவே ஜாஸ்தியாகவே ஆயிடுச்சு. அந்தப் பெண் வீட்டுக்கு வரும் போதெல்லாம், அது எனக்கு பாடிய கச்சேரி தான் ஞாபகத்துக்கு வரும்.

அந்தப் பெண் செமையாகப் படிக்கும். ஓடியாடி விளையாடாது, ஆனால் செம படிப்பு. அது வாங்கியிருக்கிற SAT ACT ஸ்கோரெல்லாம் பார்த்தா அவ்வளவு ஸ்வீட் ஸ்கோர். அவங்கப்பா அடிக்கடி ரொம்ப பெருமையாச் சொல்வார். நமக்கு நம்ம பையனைக் கம்பேர் பண்ணினா, இந்த ஆளு வேணும்ட்டே நம்மளை வறுக்கறாரான்னு இருக்கும்.

அந்தப் பெண் காலேஜ் அப்ளை பண்ணும் போது ஐவி லீக்ஸ் மட்டும் அப்ளை பண்ணி, லோக்கலாக மூனு பெரிய யுனிவர்சிட்டிக்கு அப்ளை பண்ணினாள். அவ்வளவு கான்ஃபிடன்ஸ் அந்த குட்டிக்கு. அதே மாதிரி அந்தப் பெண்ணுக்கு போன வருடம் கார்னல் கிடைச்சது, ஆனால் லோக்கல் யுனிவர்சிட்டியில் தனக்குப் பிடிச்ச கோர்ஸ் ஜாயின் பண்ணிட்டாள்.

போன வருடம் ஒரு நாள் நான் மாலையில் வாங்கிங் போகும் ஒரு மைல் தள்ளி நடக்கும் போது, எதிரில் வந்த அந்தப் பெண்ணோட அப்பா அம்மா வந்தப்ப அவங்க சொன்னாங்க இதை. செம கடுப்பாயிட்டேன். என்னங்க ஐவி லீக் கிடைச்சும் வேணாங்கறீங்க, இவ்வளவு முட்டாளாவா இருப்பீங்கன்னே கேட்டுவிட்டேன். அவர், அது இல்லைங்க, அவளுக்கு பிடிச்ச கோர்ஸ் கிடைக்கலை, மேலும் அவ்வளவு பணத்துக்கு எங்க போறதுன்னார். அன்னிக்கு அந்த பெண்ணு எனக்கு கச்சேரி பாடியதை நான் அவங்கப்பா அம்மாக்குப் பாடிட்டேன்.

நானெல்லாம் என் பையனுக்கு ஐவி லீக் கிடைச்சிருந்தா வீட்டை வித்து பணம் கட்டியிருப்பேன், நீங்க கிடைச்சதை வேணாங்கறீங்க, வாழ்க்கையில பணத்தை சம்பாதிச்சுடலாம், அங்கப்படிக்கிறது அவ்வளவு சுலபமில்லைங்கன்னேன். அவங்கப்பாம்மா என்னை அன்னிக்கு மனசுகுள்ள திட்டிகிட்டேப் போயிட்டாங்க.

ஒரு வருஷம் ஓடிப் போச்சு. என் பையன் ரொம்ப தூரத்துல, இந்தக் குட்டிப் பெண் லோக்கல் காலேஜ்ல செம சூப்பர் கோர்ஸ் படிக்கிறாள். ஆனால் இந்த லோக்கல் யுனிவர்சிட்டிகளும் உலகத்தரம் வாய்ந்தது, குறைவானதல்ல. அப்பப்ப என் கிட்ட வந்து என்னோட ஃபோன் சார்ஜர் வாங்கிட்டுப் போவாள். 

இன்னிக்கு காலையில வெளியூர் போயிருக்கிற அவங்கப்பா டெக்ஸ்ட் பண்றார். என் பெண்ணை மறுபடியும் அவங்க கார்னல்லேர்ந்து  கூப்பிடறாங்க, அவ கேட்ட கோர்ஸையே கொடுக்கிறாங்க, அவளோட இரண்டாவது வருட கோர்ஸ்க்கு இப்ப அவ கார்னல் போகப்போறான்னு சந்தோஷமாகச் சொல்றார். நீ போன வருஷம் எனக்கு கச்சேரி பாடியதால் நான் இதை இப்ப உனக்குச் சொல்றேன்னார்.

மனுசன், இப்ப உன் வீட்டை வித்து என் பொண்ணு காலேஜ்க்கு கட்டுவியான்னு கேட்கலை. தப்பிச்சேன். அந்தப் பெண்ணுக்கும் வாழ்த்து சொல்லச் சொன்னேன். அவ நேரா வந்து எனக்கு கச்சேரி பாடாம இருக்கனும், உன் பையனை நீ பைலட் ஆக்கலை, என்னோட படிப்புக்கு அட்வைஸான்னு தாலாட்டு பாடாம இருக்கனுமேன்னு இருக்கு.

நம் பிள்ளைகள் வளர்கிறார்கள்.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Habla con valentía!

No comments: