Thursday, June 7, 2012

புழக்கடை



'எலேய்! புழநியில என்னத்தலே துலவுர'ன்னு கேட்கிற சத்தைக் கேட்டு வெடக்குனு திரும்பின என்னப் பார்த்து சிரிச்சுக் கிட்டே நெருங்கிய ராசக்கா, சத்தம் கேட்டு அஞ்சுர மொவனுக்கு புழநியில என்ன சோளின்னுச்சு.

ராசக்கா குரலும் நடைச் சத்தமும் கண் மூடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும் தெரிஞ்சுபுடும் எனக்கு. ஆனால் ஒரு நீண்ட லயிப்புல பார்த்து கிட்டுருந்த அந்த பறவையோட செயல் என்ன முடக்கிப் போட்டுருச்சு.

யக்காவ்! சத்தம் போடாம அங்கிட்டுப் பாரு, ஓடிரப் போவுதுன்னு மெதுவா கூவையில, நறுக்குன்னு தலையுல கொட்டிகிட்டே, மரத்தடியில ஒதுங்குரவனை பார்க்கவா புழநியில ஒதுங்கின பொறுக்கிப்பயலே ன்னு வசவு கொடுக்கிற ராசக்காவப் பார்த்து, குட்டு வாங்கின தலையை சொறிஞ்சிக்கிட்டே, மரத்து மேலப் பாருன்னு சொல்றது புரியாம எங்கிட்டோப் பார்த்து பொறணி பேசின, விலசிப் புடுவேன் சாக்கிரதைன்னு கத்துனப் பிறகு தான், அசட்டு சிரிப்பு சிரிச்சுது.

அப்புடி என்னத்தலே அங்கப் பார்த்து கிட்டு இத்தினி நேரமாக் கிடக்கிரன்னு ஒரு கமுட்டுச் சிரிப்போடு கேட்கும் ராசக்காவைப் பார்க்கும் போது அதன் மொவம் மார்ற அழகு பார்த்து ரசிப்போடு, அந்த பட்டுப்போன மரத்தைப் பாருக்கான்னேன்.

அது தலைத் தூக்கிப் பார்க்கையில, அந்த பறவையும் மரத்த ஒரு இடைவிடாம சட சடன்னு கொத்துற சத்தத்தப் பார்த்து, எலேய் மரங் கொத்திப் பறவைலே! என்னமா போடு போடுதுரா ன்னுச்சு.

இப்ப உன் மரமண்டையில சவட்டச் சொல்லட்டுமான்னு நான் சிரிக்கையில, அட வரட்டிப் பயலே, நெனப்பப் பாருன்னுச்சு.

அந்த செத்துப் போன மரத்துல என்னாலே பண்ணுதுன்னு அப்பாவியாக் கேட்கும் ராசக்காவப் பார்த்து, நீ இத்தினி பெருசானாலும் உன்மண்டையில களிமண்ணுன்னு சொல்ல முடியாது. சவட்டி தட்டிரும்.

யக்காவ், அந்த மரம் செத்துப் போச்சு. அதக் கரையான் தான் சாப்பிடுது. மரங்கொத்திப் பறவைக்கு கரையான் பூச்சி துன்னா மாதிரியும் ஆச்சு, அது அரைமணி நேரமா போடற துளையில கூடு கட்டிக்கிட்டா மாதிரியும் ஆயிறும் சொல்ற என்னை ராசக்கா பார்க்கிற பார்வை ஒரு மாதிரி இருந்துச்சு.

ஒன்னும் பேசாம அது நவுரையில, என்னா! ஒன்னும் சொல்லாமப் போறேன்னு கேட்டேன்.

எலேய்! அப்பப்ப ஒரு பெரிய படிப்பு படிச்ச புள்ளையாட்டம் பேசுற நீ! நான் இந்த மாமனோடு புழக்கடையில புழங்க வந்ததிலிருந்து எல்லாம் அத்துப் போச்சுன்னு சொல்லிட்டு போகிற ராசக்காவப் பார்த்து, அது திரும்பிப் போவுற பாதையைத் தான் ஒரு கனத்த மொகத்தொடு பார்க்க முடிஞ்சதே தவிர, அந்த மரங்கொத்தியை திரும்பிப் பார்த்துகிட்டு இருக்க முடியல!

Tuesday, June 5, 2012

ரத்தம்

ரத்தம்

சக அலுவலருடன் காரில போகும் போது, நான் என் மனைவியைப் பற்றி சொன்னா நம்ப மாட்டேன்னாரு. தலையை தூக்கிப் பார்த்தேன்.

என் மனைவிக்கு ரத்தத்தை கண்டா பயம்ன்னாரு. யாருக்குதானில்லை ன்னு நினைக்குறதுக்குள்ள, என் மனைவி நர்ஸ் ன்னாரு.

என் வாய் சும்மா இல்லாம, வர்ற patient பாவம்ல ன்னு சொல்லிட்டேன். அவர் சிரிச்சுக்கிட்டே, அதுவும் emergency வார்டு ல வேலை செய்யறாங்கன்னு சொன்னாரு. பகிருன்னுச்சு. ரோடு accident ல மாட்டுறவன் கதி அதோகதி தான்னு நினைக்கையில, சும்மா இருக்க முடியாம, 'பாவம். emergency டாக்டருக்கு இன்னொரு நர்ஸ் இருந்தா தான் வர்றவன் பொழைப்பான்' ன்னுட்டேன்.

அவர் சிரிச்சுக்கிட்டே, இரு இன்னும் பாக்கி இருக்குன்னாரு.

என் மனைவிக்கு நைட் ஷிப்ட் தான் ரொம்ப பிடிச்சிருக்கு. ஏன்னா இரவிலத் தான் உண்மையான experience கிடைக்குது. வர்ற கேஸ் எல்லாம் மாபியா கும்பல் ஒருத்தனுக்கு ஒருத்தன் சுட்டுகிட்டு வர்ற கேஸ், இல்லாட்டி இரவில் விபத்தில் வர்ற கேஸ். இரண்டுக்குமே அவசர உதவி முக்கியம், சதை பிஞ்சும் ரத்தம் கொட்டிக்கிட்டு இருந்தாலும், நர்ஸ் அம்மாக்கு ஒன்னும் ஆவுரதில்லையாம், ரத்தம் ஒன்னும் பயமுறுத்துவதில்லை ன்னாரு.

பகல்ல வர்ற கேஸ் எல்லாம் ஒண்ணா மூக்கொழுகல் இல்லாட்டி சுரம், வலின்னு. என்னா த்ரில்லு இதிலன்னுட்டாங்கலாம்.

நம்ப முடியாம, நம்பலாமா வேணாமானு யோசிக்கையில, அவரே தொடர்ந்தார்.

இரண்டு வருஷம் முன்னாடி தான் நர்ஸ் பயிற்சி முடிச்சாங்களாம். அதுக்கு முன்னே இவருக்கு அல்லது பிள்ளைங்களுக்கோ துளி அடி அல்லது சிராய்ப்பில் ரத்தம் வந்தா இரண்டு பண்ணிருவாங்கலாம்.

திருமணமான புதிதில் ஒரு நாள் கையில ரத்தம் வருதுன்னு அவசர அவசரமா இவருக்கு அழைப்பு வந்து ஓடிப் போய் பார்த்தா கையை அழுத்திப் பிடிச்சிகிட்டு கால் நடுவே தலையைப் புதைத்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்து பயந்து போய் ரத்தம் எங்கேன்னு கேட்டா, தலையை எடுக்காம விரலைக் காட்டினா, வெறும் ஒரு சொட்டு காய்ஞ்சு போன ரத்தமாம்.

இவருக்கோ இவர் பிள்ளைகளுக்கோ ரத்தம் வந்தா இப்பவும் நடக்கிற கூத்து செமையா இருக்குமாம். ஆனால் emergency வார்டு செம த்ரில்லிங் experience ன்னு கேட்கும் போது, வரும் patient பொழைக்கலாம்ன்னு ஆஸ்ப்பத்திரி வந்து உயிர் விடற நிலைமையை நினைச்சு ஒன்னும் சொல்ல முடியல.

எந்த hospital ள்ள வேலை செய்யறாங்கன்னு மட்டும் தெரிஞ்சு வைச்சிகிட்டேன். நம்ம உசுரு நமக்கு முக்கியமுள்ள! :-)