Saturday, June 19, 2021

இளமையில் கார் ஓட்டக்கற்றால்

போன போஸ்ட்ல அமெரிக்காவில் கார் ஓட்டக் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் பற்றிச் சொன்னேன். இந்தப்பதிவில் சில எடுத்துக்காட்டுகளைச் சொல்ல விரும்புகிறேன். 

சுயதம்பட்டம்ன்னு நினைப்பவர்கள் கடந்து போயிரலாம். மற்றவர்களுக்கு இது உதவலாம். ஆகவே பதிவு செய்கிறேன்.

பையன் elementary school போனப்ப பள்ளி போய் வரும் காலத்தில் இங்குள்ள குடியிருப்பில் உள்ள மற்ற சில குழந்தைகளையும் காரில் ஏற்றிச் செல்வது வழக்கம். இது மற்ற பெற்றோர்களுக்கும் உதவிகரமாக இருந்தது. அவர்கள் கூட்டிச் செல்லும் போது நமக்கு உதவியாக இருந்தது. பையன் மிடில் ஸ்கூல் போகும் போது காலையில் எழுந்திரிக்க சிரமம் ஏற்பட, குழந்தைகளும் தான் ஆண் பெண் என உணர ஆரம்பித்தவுடன் இந்த carpool system உதவவில்லை. விலகி விட்டேன்.

மேலும் ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் மற்றும் கேம்ஸ் விளையாட ஆரம்பித்த பிறகு மாலையில் நீண்ட நேரம் காத்திருந்து பையனை இரவு 9 மணிக்கு மேலெல்லாம் கூட்டி வந்துள்ளேன். இது பல பெற்றோர்களுக்கு சிரமமானதால் சில குழந்தைகளை பல பெற்றோர்கள் ஸ்கூல் கேம்ஸ் விளையாட விடாமல் தடுத்தும் விட்டனர். 

இங்கு பள்ளிகளில் பத்தாவது முடிந்து high school junior (11 வது) போகும் குழந்தைகளுக்கு 16 வயது நிறைவடையும் போது அந்த சம்மர் ஹாலிடேஸி்ல் பள்ளியிலேயே driver education course நடத்துவார்கள். Excellent program இது. 

முதலில் 5 நாள் வகுப்பு ட்ரைவிங் பற்றி. முடிந்தவுடன் கிடைக்கும் சர்ட்டிபிகேட் வைத்து அரசு learners permit வாங்கிடலாம். பிறகு அதே பள்ளி மூலம் ஒரு ட்ரைவிங் ஸ்கூலில் அவர்களே சேர்த்து விட்டு 6 மணி நேரம் கார் ஓட்டும் பயிற்சி, அதில் இரண்டு மணி நேரம் இரவு வெளிச்சத்தில். இது அத்தனைக்கும் ஸ்கூல் வாங்கும் ஃபீஸ் 65$. இதையே நாம் தனியாகக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் ஒரு மணி நேரத்துக்கு 65-75$ கட்டனும்.

இந்த கோர்ஸ் முடிக்கும் போதே ஓரளவுக்கு கார் ஓட்டக் கற்றுக் கொண்டு விடுவார்கள். அதற்கப்புறம், பிள்ளைகளுக்கு 18 வயது நிரம்பாததால், அவர்கள் பெற்றோருடன் உட்கார்ந்து ஆறு மாதம் ஒரு குறிப்பிட்ட மணி நேரங்கள் (60 hours) ஓட்டிய பின் தானாகவே அடுத்த ஆறு மாதங்கள் கார் ஓட்டி ஒரு வருடம் முடியும் போது full provisional license கிடைக்கும். இது ஒரு அதிகாரப்பூர்வ ஆவணம். முக்கியமான ID.

நிறைய குழந்தைகள் தானாகவே இவ்வளவு பயிற்சி செய்ய சோம்பல் பட்டும், மற்றும் சில பெற்றோர்கள் அவர்களைத் தடுத்தும், கார் கொடுக்கனும் இன்சூரன்ஸ் ஏறிரும்ன்னு தவிர்த்து விடுகிறார்கள்.

பல பெற்றோர்களிடம் சொல்கிறேன், அவ்வாறு செய்யாதீர்கள், பசங்களிடம் கார் கொடுங்களென்று. செய்வதில்லை.

என் பையனுக்கு கார் கொடுத்ததன் பலன் எனக்கு நிறைய. 
1. பையன் தன்னோட வகுப்புகளுக்குத் தானாக போக முடிந்தது.
2. ஜூனியர் இயர் முடிக்கிற வருடம் 135 மணி நேரம் செய்ய வேண்டிய internship (shadowing) அவன் அந்த கார்டியாலஜிஸ்ட் இடம் 435 மணி நேரம் செய்ய முடிந்தது. அவர் கொடுத்த அந்த லட்டர் கல்லூரி அட்மிஷனுக்கு உதவியது.
3. இந்த சம்மர் முழுவதும் எமெர்ஜன்சி மெடிக்கல் ட்ரைனிங்கிற்கு பக்கத்து county college வரை போய் செய்து வர முடிகிறது. இந்த சர்டிபிகேஷன் அவன் வேலை வாய்ப்புக்கும் கல்லூரி படிப்புக்கும் உதவும்
4. நமக்கு தேவையான நேரத்தில் நம்மை கூட்டிச் செல்கிறான்.
5. பள்ளியில் கார் கண்ணாடி உடைந்தபோது(vandalism), இது போன்ற நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டுமென்று கற்றுக்கொடுக்க முடிந்தது.

ஆனால் கார் கொடுப்பதற்கு முன்னரே அவனுக்கும் சேர்த்து இன்சூரன்ஸ் எடுத்தேன். அதிகம் தான். ஆனால் மிகமிக முக்கியமானது இது.

இதைச் சொன்னால் பல பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் எண்ணமெல்லாம் தன்னோட கார் போச்சு, இன்சூரன்ஸ் ஏறிருச்சு, குழந்தைங்க காரை எடுத்துப் போனா கவலை ஜாஸ்தின்னு தான் சொல்றாங்களே தவிர, கார் கொடுப்பதால் கிடைத்துள்ள பலனை கண்டுக்கமாட்டேங்குறாங்க. 

இப்ப வந்து சில பெற்றோர்கள் கேட்கிறாங்க, அந்த இன்டர்ன்ஷிப்க்கு என்ன பண்றது, யார் கூட்டிப் போறது, எப்படி ஸ்கூலில் இப்படி அசைன்மெண்ட் கொடுக்கிறாங்க! இன்டர்வியூவிற்கு எப்படி போவதுங்கிறாங்க! உன் பையனுக்கு எப்படி கிடைச்சுதுன்னு கேள்விகள்.

இந்த சிக்கலிலிருந்து தவிர்க்கத் தானே ஸ்கூல் 65$லில் ஒரு முறையான ட்ரைவிங் பாடத்திட்டத்தை வைத்து அரசு பணத்தில் சொல்லிக்கொடுத்து பசங்களுக்கு காரைக் கொடுங்கன்னு சொல்லி அனுப்பறாங்க! ஆனால் அவர்கள் சொல்வதைப் புரிந்து கொள்ளாமல் செயல்பட்டால் நஷ்டம் யாருக்கு!

நம் பிள்ளைகளுக்கு முறையாக அரசு செயல்படி கார் ஓட்டக்கற்றுக் கொடுத்து, லைசன்ஸ் வாங்கி நம் காரை இன்சூரன்ஸோடு வாங்கிக் கொடுத்தால்

நம் பிள்ளைகள் வாழ்வினிது
when you empower them 
ओलै सिरिय !

கார் ஓட்டக் கற்றுக் கொள்ளுங்கள்

 ஒவ்வொரு நாட்டிலும் நாம் வாழ அந்த நாட்டுநிலைமைக்கேற்ப நம்மைத் தயார்படுத்திக்கனும். இது நாட்டுக்கு நாடு வேறுபடும். அப்ப தான் அந்தந்த நாடுகளில் சிரம மில்லாமல் வாழமுடியும். ஒரு வளமான வாழ்க்கையை நம்மால் அங்கு அமைத்துக் கொள்ள முடியும்.

அமெரிக்க மண்ணில் சுதந்திரமாகச் சுற்றித் திரிய முக்கியமாக இரண்டு தேவை: ஒன்னு கார் ஓட்டத் தெரியனும். இரண்டாவது எல்லாத்துக்கும் ஒரு இன்சூரன்ஸ் எடுத்துக்கனும்.

ஏன் இது இல்லாம வாழ முடியாதா? 

வாழலாம், வாழ்கிறார்கள். ஆனால் சீக்கிரமே இது நம்மை ஒரு இடத்தில் முடக்கிவிடும். ஆபத்துக்குப் பயன்படாது. இதை அநுபவித்து தெரிந்து கொள்ளலாம்.

சமீப காலமாக நிறையவே பார்க்கிறேன். இந்தியாவிலிருந்து, மற்ற அயல்நாட்டிலிருந்து, ஏன் இங்கயே பிறந்து வளர்ந்த சில கல்லூரி மாணவர்கள்/மாணவிகள் கூட கார் ஓட்டக் கற்றுக் கொள்ளாமல் இருக்கின்ற சூழ்நிலையில் தன்னை முடக்கிக் கொண்டு வாழ்கிறார்கள். இவர்களனைவரும் கல்லூரி படிப்பு முடித்து வெளியே வரும் போது கார் ஓட்டத் தெரியாமல் தடுமாறுவதை நிறைய பார்க்கிறேன். ஆகவே இவர்கள் வேலை தேடுவதும் கூட கார் ஓட்ட அவசியமில்லாத பெருநகரங்களில் மட்டுமே வேலை தேடுகிறார்கள். சிறுநகரங்களில் வேலை கிடைக்கும் போது பயணப்பட தடுமாறுகிறார்கள். வாடகை டாக்ஸி செலவு கொஞ்ச நாட்களில் சமாளிக்க முடியாது போய் விடுகிறது.

கார் ஓட்டக்கற்றுக் கொள்வதால் மிக முக்கியமாக கிடைக்கும் ஒன்று  ட்ரைவர் லைசன்ஸ். இது அமெரிக்க மண்ணில் மிக முக்கியமாகத் தேவைப்படும் ஒரு ஆவணம். அயல்நாட்டு மாணவர் மாணவியர்களுக்கு இதை இப்போது சில கட்டுப்பாடுகளுடன் கொடுக்கிறார்கள். முன்பு எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சுலபமாக கிடைத்த ஒன்று.

கார் ஓட்டக்கற்றுக் கொள்வது லைசன்ஸ் பெறுவது ஒன்றும் கடினமானது அல்ல. அதை கல்லூரியில் படிக்கிற காலத்திலேயே பெற்றுவிட்டால் பலவிதத்தில் படிக்கும் போதும் படித்து முடித்த பிறகும் கூட மிகமிக உதவிகரமாக இருக்கும். எனக்குத் தெரிந்து பலர் செய்யாமலிருக்கிறார்கள். வெளிநாட்டிலிருக்கும் பெற்றோர்களுக்கும் இங்கிருப்போர்களுக்கும் இதன் அவசியம் பற்றி சரிவர புரிவதில்லை. கடைசியில் அளவுக்கு அதிகமாக பணம் செலவளிக்க வேண்டியதாகி விடுகிறது. கல்லூரிப்படிப்பு முடிக்கும் மாணவர்கள் தடுமாறுகிறார்கள், மற்றவர்களைச் சார்ந்து நிற்கிறார்கள்.

பெரும்பாலான அமெரிக்காவில் வளரும் குழந்தைகள் குறிப்பாக பெண்கள் கார் ஓட்டத் தெரியாதவர்களைத் தவிர்த்து விடுகிறார்கள்.

எனக்குத் தெரிந்து இங்கு வளர்ந்த ஒரு இந்தியப் பெண் தனக்கு துணைவரைத் தேடும் படலத்தில், அந்த இளைஞரைப் பேட்டி கண்டபோது, அவர் நான் நியுயார்க் போன்ற பெருநகரத்தில் வாழ்கிறேன், எனக்கு கார் தேவையில்லை, இங்கு கார் வைத்திருப்பது சுமைன்னு சொல்ல, இந்த இந்தியப் பெண் அவருக்கு அழகாக பதிலளித்து விட்டாள்: உன்னை வாழ்நாள் முழுதும் சுமந்து செல்ல நான் உனக்கு கார் ட்ரைவராக இருக்க எனக்கு விருப்பமில்லையென்று.

இன்றைய தந்தையர் தினத்தில் இங்கு வசிக்க விரும்புவோர் தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் படிக்கிற காலத்திலேயே கார் ஓட்டவும் கற்றுக் கொடுக்கத் துவங்குங்கள்.

ஆகவே

படிக்கிற காலத்திலேயே இங்கு கார் ஓட்டவும் கற்றுகிட்டால்
வாழ்வினிது

இனிய தந்தையர் தின வாழ்த்துகள்.

ओलै सिरिय !