நீண்டதொரு பயணம் அது
நீண்டதொரு பயணத்தில்
உடன் பயணித்தவர்கள் இறங்கிவிட்டனர்!
பயனத்தின் களைப்பை உணரும் முன்
விட்டுச் சென்ற சருகுகளின் சத்தம் குடைகிறது!
ரயில்சிநேகமான பயணத்தில்
அசைபோடும் விஷயங்கள் பலவானது
அவற்றில் ஒருமித்தவை சில எதிர்த்தவை பல
கொண்டு செல்லும் நினைவுகள் காற்று போல் கரைந்தது!
அவர் தம் பயணம் அவரவர் இலக்கு நோக்கி
ரயில் பெட்டி கொண்டு சென்றதென்னவோ ஒன்றாய்
பெட்டிகள் இணைத்துச் செல்லலாம் ஒரே வழியில்
மனது என்றும் ஒன்றாய் பயணிப்பதில்லை!
அவரவர் எல்லை அவரவர் நியமிப்பில்
ரயில் செல்லும் பாதை என்றும் ஒன்றே
தண்டவாளம் இரண்டாய் தெரிவது போல்
நம் பயணமும் இரு தடங்களில் இருக்கலாம்!
நடைபாதையில் நம் கால்கள் பிரிந்தே செல்லும்
இலக்கை நோக்கிச் செல்ல இரு கால் தேவை!
இருப்புப்பாதையில் சக்கரங்கள் பிரிந்தே செல்லும்
இலக்கை அடைய ஒரு பிரிதல் தேவை!
பயணம் ஒன்றே எண்ணம் வேறு
திசை ஒன்றே மனது வேறு
பாதை ஒன்றே களம் வேறு
நினைவு ஒன்றே திசை வேறு!
நீண்டதொரு பயணம் அது!