Sunday, August 12, 2018

பிறந்த தினம் ஓர் சீரமைப்பு தினம்

சிலர் தனது பிறந்த நாளை மிக விமரிசையாக கொண்டாட விரும்புவர். அதும் 50, 60, 70, 75, 80 எல்லாம் வாழ்வின் மைல்கற்கள் என்று கொண்டாடுபவர்கள் உண்டு.

75 வது பிறந்த நாளுக்கு ஒன்றும் செய்யவில்லை. பேரன் வீட்டில் இல்லாததால் கோவிலுக்கு கூட வரவில்லை. இரண்டு மூன்று தடவை கேட்டும் கோவில் வரவில்லை. மகள் பேரன் வந்தா போய்க்கலாம்ன்னுட்டாங்க. நேற்று பையனைக் கூட்டி வந்த போது கூட ஒரு கேக் வாங்கி வந்தேன். கட் பண்ணாமல் ப்ரிட்ஜில் உறங்குகிறது!

பிறந்த நாள் பரிசாக shoulder massager வாங்கிக் கொடுக்கலாம் என்று கடைகள் ஏறி இறங்கினேன். அவர்கள் என்னுடையதை உபயோகிக்கிறார்கள். அது தான் நன்றாக இருக்கு என்கிறார்கள். அது மாதிரி தேடி கிடைக்கவில்லை.

சரி 501$ கேஷ் வைத்து ஒரு க்ரீட்டிங் கார்டை பையன் மூலம் கொடுத்தேன். பேரன் கட்டிப்பானான்னு எதிர்பார்ப்பு. அவனை செய்யுடான்னு சொன்னவுடனே அவனை நெருங்க கட்டிகிட்டதோட சரி. இப்போது 1$ மட்டும் எடுத்துக் கொண்டு 500 திரும்பி விட்டது!

ஊரிலிருந்து வந்த நாளிலிருந்து கடுமையாக உழைக்கிறார்கள். மகள் பேரன் நான் - இங்க இருக்கும் அருகாமையைத் தவிர வேற எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அடுத்த மாதம் ஊர் திரும்பி விடுவார்கள். அதற்குள் இங்க வீட்டை சீரமைப்பதில் மட்டுமே கவனம். 


பிறந்த தினத்தை விட பிறந்த தினத்தில் வீட்டை சீரமைப்பது மட்டுமே பிரதானமாக இருக்கு!

முன் கோவம் மிதிபட்டுப் போனது

இன்னிக்கு காலையில ஒரு தடியன் நாலு தடவை காலிங் பெல் அடிச்சதுமில்லாம, வாசற்கதவை படபடவென தட்டவும் தட்டினான். உட்கார்ந்திருக்கிற சோபாவிலிருந்து எழுந்து போய் கதவைத் திறக்க பத்து நொடி கூட ஆகாது! அதற்குள் அவனுக்குப் பொறுமையில்லை! 

இந்த ஊர் மக்கள் கதவைப் படார் படாரென தட்டுவது இயற்கையானாலும் பொறுமையற்ற தட்டல்கள் அயர்ச்சியையும் எரிச்சலையும் உருவாக்கும்.

வீட்டிலிருப்பவர்களுக்கோ இப்படி கதவை தடதடன்னு தட்டியதுல செம கிலி வேற! கால நடப்பும் அப்படி! கதவைத் திறக்க பயம்!

திறந்து பார்த்தா பத்து வீடு தள்ளியிருக்கும் தடியன். கேட்டதைக் கொடுத்து அனுப்பியாச்சு! அவன் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையுடன் பதில் சொல்ல கடினமாய்ப் போனது. கேள்விகளும் அப்படி. இன்றைய கால கட்டத்தில் சகிப்புத் தன்மையே அதிகம் தேவைப்படுகிறது! கூடி வாழவேண்டிய சுயநலம்!

இதே நிகழ்வு சாயங்காலமும்! ஐந்தாறு தடவை இடைவிடாது காலிங்பெல் மற்றும் தடதடவென கதவைத் தட்டும் சத்தம்.

எரிச்சலின் உச்சத்தில் கதவைத் திறந்தால்  பக்கத்து வீட்டு அல்பேனியக் குழந்தை எம்மா கதவிடுக்கில் நம் வீட்டிற்குள் ஓடுகிறது! மூன்று நாள் முன் அல்பேனியாவிலிருந்து வந்த அதன் பாட்டி கையில் பணியாரத்துடன் மலர்ந்த முகத்தோடு நிற்கிறார்கள். எனது முன் கோவத்தில் திறந்ததில் ஒரு கணம் தடுமாறிப் போய்விட்டேன். 

ஆங்கிலம் ஒரு வார்த்தை கூட அவர்களுக்குப் புரியாது! மொழியிருந்தும் மொழியற்ற மலர்ந்த முகத்தின் பரிபாஷையிலேயே நன்றிகளைப் பகிர்ந்து கொண்டோம்!

கோவத்தின் உச்சம் சடாரென பனிக்கட்டி போல் உருகி தரைமட்டமாகிப் போன நிகழ்வு!


முன் கோவம் குழந்தையின் காலில் மிதிபட்டுப் போனது!

முன் கோவம் மிதியடியில்

இடைவிடாது அழைக்கும் 
வாசல் மணி அழைப்பில்
பொறுமையற்றுப் போய் 
வெடுக்கென வரும் கோவத்தில் 
திறக்கும் கதவின்
இடுக்கடியில் புகுந்தோடும் 
குழந்தை கண்டு
பஞ்சாய்ப் பறந்து போனது கோவம்!

சுருக்கென கேட்க வேண்டி 
கதவு திறந்தால்
மலர்ந்த முகத்துடன் 
தட்டில் பணியாரத்துடன்
பேத்தியும் தாத்தியும்
சிரிக்கும் சிரிப்பில்
என் முன்கோவம் 
சிலிர்த்து விட்டது!

அவர் பேசும் மொழி நாமறியோம்
நாம் பேசும் பொது மொழி அவரறியார்
அன்பெனும் பெருங்கடலுக்கு மொழி எதற்கு!

முன்கோவத்தில் முழுமையிழந்தேன்
முன் கதவு திறக்கையிலே
முட்டி மோதிய குழந்தையின் காலடியில்
பட்டுத்தெறித்த கோவம் பதமாய்ப் போனது!


குழந்தையின் மிதியடியில் முன் கோவம்!

பறவையின் பிறந்த தினம்

கடந்த பதினைந்து வருடத்துல இன்று ஆகஸ்ட் 10 தான் பையன் தனது பிறந்த தினத்துல வீட்டுல இல்லை. தனது ஃபுட்பால் டீமோடு பள்ளியிலேயே நேற்றிலிருந்து உணவு உறக்கம் இருப்பிடமெல்லாம். நாளை இரவு தான் வீடு திரும்புவான்.

மாலை வரை காத்திருந்து நேரில் பிறந்த தின வாழ்த்துகளைச் சொல்லி விட்டு இப்போது தான் இரண்டு பேரும் வீடு திரும்பினோம்.

உடன் பணிபுரிபவர்கள் பிறந்த தினம் திருமண தினத்தன்று எப்போதும் லீவு எடுத்துச் சென்றுவிடுவார்கள். நாங்கள் இதுவரை அதற்காக என்றுமே லீவு எடுத்ததில்லை. 
எனக்கு எல்லா தினமுமே it's another day என்றே காலத்தை ஓட்டியாச்சு! ஆனால் இன்று வீட்டிலிருந்தாலும் நேற்றிலிருந்து இன்று மாலை வரையான காத்திருப்பு ஏதோ ஒரு வெறுமையை உருவாக்கி விட்டது. 

மனைவியின் தாயாருக்கும் இன்றே பிறந்த நாள். 75 வயது. வீட்டில் பேரன் இல்லாததால் எதிலும் விருப்பமில்லாமல் இருந்து விட்டார்கள். கோவிலிற்கும் வரவிரும்பவில்லை.

நான் மட்டும் போய் கோவிலில் இருவருக்கும் அர்ச்சனை பண்ணிவிட்டு வந்தேன். அங்கே கோவிலில் இன்னொரு 2 வயது திருச்சி/நெல்லை குழந்தை தன் தாத்தா பாட்டி அப்பா அம்மாவுடன் தனது பிறந்த தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. கையிலிருந்த கோவில் ஆப்பிளை அதனிடம் கொடுத்து ஆசி வழங்கி விட்டு வந்தேன். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தது மனதுக்கு நிறைவாக இருந்தது.

ஆனால் மாலைப்பொழுது மற்ற பெற்றோர்களுடன் பள்ளியில் கலந்து உரையாடியதில் மிக மகழ்ச்சியாக இருந்தது. அதிலும் சில ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் சிரிப்பலையில் அனைத்தையும் மறக்க வைத்து விடுவார்கள்.


பறக்கத் துடிக்கிற பறவைகளின் பிறந்த தினமாய்ப் போனது!

நீண்டதோர் வாழ்விற்கு அஞ்சலி

ஒரு சகாப்தம் நிறைவுற்றது!

வாழ்வில் ஏற்ற இறக்கங்கள்
என்றும் நிலையற்றது
என்று வாழ்ந்து காட்டி
வேந்தனாகவே வாழ்ந்து மறைந்தார்!

கொள்கையும் கோட்பாடும்
வாழ்வின் உச்சத்திற்கு ஏறும்
படிகளாக்கி கொள்ள உணர்த்தியவர்!

பகுத்தறிவும் நாளை கடவுளாகலாம்
சமாதியும் கோபுரமாகலாம்
சிலைகளும் வழிபாடு ஸ்தலமாகலாம்!

தமிழகத்தின் 60 ஆண்டு கால
திராவிட ஆளுமைகள் விடைபெறுகின்றன
கொற்றவன் ஏற்றிய கொள்கைகளை
கொடி பிடித்து ஏற்பவர் எவரோ!

மனித வாழ்வில் சகாப்தங்கள்
தோன்றி மறைகின்றன
நிலைத்து நிற்பவை
கொள்கையும் கோட்பாடும் மட்டுமே!

ஏற்பவர்கள் எவரோ வீழ்த்துபவர்கள் எவரோ!


அஞ்சலிகள்!