Wednesday, May 30, 2018

கழனிமேடு கட்டாஞ்சோறு

காலை நீட்டி அசை போடும் போது
கழனி கட்டுல வேலை இல்லைன்னா
சமையக்கட்டுல அடுப்பைத் துடை சுப்பிரமணி!

ஏறுகட்டி உழவு செய்ய
பொழுதில்லை உனக்கிப்ப
குண்டு சட்டி குதிரை ஓட்டி
என் மனசைக் கொல்லுர நீ!

பாத்தி கட்டி நீர்ப்பாய்ச்ச
பனங்காடு போகலை நீ
பரிசல் துறையில் பந்தல் கட்டி
பல்லிளிக்கும் பரமனா நீ!

வேட்டி சட்டை மடிச்சுக் கட்டி
வேர்க்க விறுக்க ஏறு பூட்டலை நீ
மல்லு வேட்டி கட்டி
மைனராக நிக்குற நீ!

மாந்தோப்பு கிளியெல்லாம் மையலிட்டு பறக்குதய்யா
பறிச்சு வைக்குற மாங்கனியை எட்டிப் பறிக்க
வணங்கலையே மனசுனக்கு!

கூடு கட்டி வாழுற குருவி
குனிஞ்சு நிமிந்து நிக்குதப்பா!
மாடி வீடு கட்டுற கனவு
மாராய்ப் போகுதய்யா!

பாட்டி சொல்லைத் தட்டுற நீ
பானை வயிறு நிறையனுமப்பா!
ஏறுநடை போடனுமய்யா
ஏப்பமாய் ஆகிவிடாதே!

கழனிமேடு கட்டாஞ்சோறு!

வைகாசி விசாகம்

வைகாசி விசாகத்தில் பிறந்தோம்
விசால மனதோடு உறவுகளைப் பெற்றோம்!

பழனி முருகனுக்கோர் உற்சவ தினம்
சுப்ரமணிக்கோர் அர்ச்சனை தினம்!

வைகையும் காவிரியும் சிலிர்க்கும் வைகாசி
விசையும் சாகசமும் திறமை கொண்ட விசாகம்!

கோவத்தில் குன்றின் மீது நிற்கும் குமரனாவோம்
குரல் கொடுப்போர்க்கு மயிலிறங்கி தோள் நிற்போம்
அஞ்சாநெஞ்சுடன் எதையும் எதிர்கொள்வோம்!

துன்பங்களை தினமும் தோளில் சுமந்தாலும்
துவளுகின்ற மனதில்லை பிறப்பிலிருந்தே
அஞ்சி நடுங்கி ஒதுங்கும் மனதில்லை என்றும்
உயிர் கொண்டெழுந்து எதிர்பபோம் எதையும்!

தோழமையாய்ப் பிறந்த சக வைகாசி விசாகங்களே!
போற்றிப் பாடிடுவீர் உங்கள் பிறந்த தினத்தை
உற்றார் உறவினர் உள்ளத்தாரோடு
ஒன்றாய் குழுமி கொண்டாடிடுவீரே!

இனிய பிறந்த தின வாழ்த்துகள்!

நல்லதொரு விடியல் விடியட்டும்

உயிர் நட்டம்
உலை நட்டம்
உணர்வு நட்டம்
காலம் நட்டம்.
கனவுகள் நட்டம்.
கஞ்சிக்கு நட்டம்

ஆலையைத் திறந்தவன் மூடச் சொல்கிறான்
காலம் கடந்த செயல்களில்
இழந்த உயிர்களின் சேதம் சுமையாய் நிற்கிறது!

தினமொரு ஒப்பாரியில் ஊரை வசை பாடுகிறான்
வேலையிழந்தவன் பிழைப்பிற்கு
வழி சொல்லத் தெரியாதவன்!

இழந்த உயிர்கள் மீண்டு வரப்போவதில்லை
இழந்தவன் வேலைக்கு இழப்பீடுமில்லை
புகைச் சூழலில் துன்புற்றவர்களுக்கு ஏதுமில்லை!

இனி
ஊருக்கு வழி பிறக்க உதவுபவன் எவனோ!

நல்லதொரு விடியல் விடியட்டும்!

காற்றில் கரைந்த கோட்டைகள்

உண்மைகள் ஒளிமிளர உத்தமர் வேதம் ஓத
சாத்திரங்கள் அரணாய் நிற்க
சாதி மத பேதமின்றி சமர்பிப்போம் ஒருமைப்பாடு!

அட்டுக்கட்டிய பொய்கள்
அரைஞான் கயிறாய் அறுந்த போது
இட்டுக்கட்டிய இடிந்துரைகள்
தூசாய்ப் பறந்தனவே!

நாட்டில் எட்டுத் திசையிலும்
அசையும் கொடிகள் ஒன்றாய் பறந்தாலும்
கொடியின் நிறத்தில் கலக்கும் கலவை
கசங்கிய துணியில் ஒட்டவில்லை!

மிட்டு மிளர எதிரில் கண்ணாடியில் மிதப்பவை
மஞ்சள் துணிப் போர்த்தி மருந்தடித்தாலும்
கட்டுகிற கோட்டையை எட்டிப் பிடிக்காது!

ஒட்டுகிற உளியைத் தேடிப் பிடித்தால்
கட்டுகிற கோட்டைக்குத் தூண் கிடைக்கும்!

காற்றில் கரைந்த கோட்டைகள்!

இழப்பிற்கு மரியாதை

நேரில் வந்து துக்கம் கேட்டால்
எள்ளி நகையாடும் கூட்டம்
வரவில்லை என்றாலும்
அதையே பொலி போடும் கூட்டம்!

போராடியவனும் ஆதாயம் தேடிப் போனான்
மூடியவனும் ஆதாயம் தேடிப்போனான்
துக்கம் விசாரிக்கப் போனவனும்
அதையே தேடிப்போனான்!

எள்ளி நகையாடுபவர்களுக்கு எவருமில்லை
விருப்பங்கள் நிறைவேறுவதில்லை
எவரும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை!
டெபாசிட் கூட கிடைப்பதில்லை!

இழப்பிற்கு மரியாதையில்லை!
இழப்பில் எள்ளி நகையாடும்
ஏசும் கூட்டத்திற்கு
ஏசுவதைத் தவிர ஏதுமில்லை!

Saturday, May 12, 2018

உனது அரவணைப்பே எனது வலிமை

அடி எடுத்து வைக்கும் பாதையில்
ஆடிக் காற்றில் அசையும்
தடைகற்களாய் நிற்கின்றன!

பாதை தடுமாறாமல் வழி காட்டி
செல்ல வைக்கின்ற மைல்கல் யாரோ!

நித்தம் ஒரு துன்பம் தொடர்ந்து
மலைபோல் நிற்கின்ற போது
மலையருவியாய் இறங்கி வந்து
பாரம் இறங்கச் செய்யும்
அந்த துணைக்கல் யாரோ!

உலகமே இடிந்து விழுகின்ற நிலைபோலிருந்தாலும்
சிரித்து தோள் கொடுத்து
சுமக்கின்ற அந்த தோள் யாரோ!

கூவாமல் குரல் கொடுக்காத மனிதர்கள்
மண்ணில் விடைபெற்று செல்லும்
வலி உணரவைக்கும்
அந்த வலிமை யாரோ!

எந்த ஒரு இடரிலும் அருகிலேயே
தடம் காட்டி நின்று எளிதாய்
சுமை இறக்கும் அந்த சுமைதாங்கி யாரோ!

எங்கோ அழைத்துச் செல்கிறாய்
உன் அழைப்பிலோ ஏற்ற இறங்கங்களை உணர்ததுகிறாய்!
மானுடம் நீண்டு வாழ அழைக்கிறாய்
உனை அறிந்தும் அறியாமலும் தொடர்கிறேன்!

உனது அரவணைப்பே எனது வலிமை!

வியாபர வெற்றியிலோர் மரகதம்

மரகதமே மரகதமாய் நிற்கையில்
பச்சை நிறத்திற்கோர் மனரதம் மனோகரம்!

மரகதச் சிரிப்பிலோர் பழனி முருகன்
கையிலோர் பெருஞ்சுவரை மீட்டெடுத்த புன்னகை!

வியாபாரச் சுற்றுலாவில் மிளிரும் மரகதம்
கழுத்தில் தொங்குமோர் அடையாளம்
புன்னகைக்கோர் மரகத மாலையாக!

வியாபர வெற்றியிலோர் மரகதம்!

செத்தமையா நிக்காதடே வாங்கடே

மேட்டூர் சந்தையில மேகம் கறுக்கையில
ஊரு சனம் கூவுதடி கோடை குளிருதடி!

கொட்டுதடி கொட்டுது மழை செமத்தையா கொட்டுதடி
அடிநாக்கு வழுக்குதடி செத்தமையா நிக்குதடி!

காவிரியில தண்ணி கரை புரண்டோடுமென
மேச்சேரி ரோட்டுல ஊறு தண்ணி ஒதுங்குதடி!

காட்டு மேட்டுல வளர்ந்தோமடி
மழைத்தண்ணியில குதிச்சோமடி
எங்க மேட்டூர் கோடை மழையில
நனையாத மாடு  இல்லடி நாங்க!

அடேய் சளிபுடிக்குமென சொன்னாரு கவுண்டரு
கேட்குற ஆளுக நாங்கயில்லை மன்னாரு
ஊரு சனம் ஏங்கி நிக்குற மழையில
டயரு சறுக்காத சிறுசில்ல கோனாரு நாங்க!

வாங்கடே தண்ணியடிப்போம்
அண்ணாந்து வாயத்திறந்து
கொட்டுற மழையை அள்ளிப் பிடிப்போம்!

செத்தமையா நிக்காதடே வாங்கடே!