Tuesday, December 16, 2014

வெட்கித் தலைகுனியும் மானுடம்

 தலைகுனியும் மானுடம்
பிஞ்சுடலைப் பறித்து 
பசியாற நினைக்கும் வெறியர் கூட்டம் 
வெல்வது மதமும் அல்ல மானிடமும் அல்ல 
மதவெறியைத் தூண்டுபவனுக்கு 
மாலையிடும்  கயமைத்தனம்!

பிஞ்சுடலைப் பறிப்பதால் 
யாரை வெல்ல நினைக்கிறாய் 
இவ்வுலகில் எவரும் நிலையான 
நண்பனுமல்ல எதிரியுமல்ல! 
பறித்தவை மண்ணுள் மறையும் முன் 
உன் மேல் எழும் வெறுப்பு கனலாய் மாறிடும் !

எரியும் கனலில் வெந்து போவப் போவது 
உன் மதவெறிக் கூட்டம்!நீ பிஞ்சைப் பறிக்கவில்லை 
மனித குல கழிவிரக்கத்தைப் பறிக்கிறாய்!
மரித்துப் போகிறது மானிடம்
வெட்கப்படு உன் செயலைக் கண்டு !

மதவெறியால் மானிடம் அழிகிறது 
மனிதகுலம் அழுகிறது
இவ்வுலகில் வெல்லப் போவது 
நீ வெல்ல நினைக்கும் மதமன்று 
அன்பும் பாசமும் கொண்ட மானிடம் மட்டுமே!

Thursday, December 4, 2014

மேனேஜர்

தினமொரு கடுப்பு மேனேஜர் மேல்
செயலை கண்காணிப்பதால்
சொல்பவை பிடிக்காததால்!

மேனேஜரின் நண்பனானால் மேல் செல்கிறார்கள்!
பகை கொண்டாலும் மேலிடம் செல்கிறார்கள்!
இருப்பினும் தினமும் நிந்திப்பவனிடம்
மேற்கொண்டு செல்ல முடியாது
சொல்லவும் முடியாது!

ஆபீசில் பகை கொள்பவன் வீட்டிலும் நிம்மதி இழக்கிறான்.
பகை தாண்டி அன்பாய் மெல்லவும் முடியாமல் தவிக்கிறான்.
வருமானமின்றி வாழ்வு கொள்ளாது.
மானமின்றி வாழ்தலும் நிலை கொள்ளாது!

பகை தாண்டி செல்ல வழியுண்டோ
மேனேஜர் எனும் தடைக்கல்லை தாண்ட வழியுண்டோ!
மனதின்றி மார்க்கமில்லை.
உன் பணியே மார்க்கமென்று பணி புரிந்தால்
தடைக்கல் உன் முன் நிற்க வழியில்லை
தடைக்கல்லும் தவிடாகும்!

தினமொரு நிந்தனை தேவையின்றி
நின்பணி கடிந்து செயல்பட்டு
செய்யும் பணி சிறக்கச் செய்திட்டால்
அகம்பாவம் வென்றதோர் காரியமது
பெற்ற ஊழியத்திற்கு சிறுமையின்றி ஆகிடும்
பகைவனும் நண்பனாவான்
வாழ்வும் நிலைகொள்ளும்!

Friday, November 28, 2014

கரிய இரவில்

கரிய இரவில் தனியாய்
கசிந்துருகி நோக்கில்
கரை தொடும் கால்களில்
கசிந்துருகும் கண்ணீர்த்துளிகள்!

கரிய நிழல்களில் படரும் கனவில்
உறவுகளின் மறைந்திருக்கும் பகைமை !
ஒருவரின் கூற்றில் மற்றவரின் திரித்தல்
இருவரின் மீது நட்பாடும் நெஞ்சில் ஓர் களக்கம் !

கரியவிடாமல் களமிறங்கி
கனிவாய் நகர்திடும் காய்கள்
கண்டோர் காணிடும் களப்பரப்பில்
களமிடும் விதைக்குவியல்!

கரிய இரவில்
கரியும் தகனமேடை
கரையும் மனதுடன்
கரையில் ஒருவன்!

Tuesday, November 25, 2014

விண்மீனை தொடும் முன்

உயரப்பறக்கும் விண்மீனை 
கயிற்றில் கட்டி இழுக்கும் மணவாழ்வு!
ஒன்றாய்ப் பறந்திடும் பறவைகளுக்கு 
கடல் காடு மணல் அனைத்தும் சுகமே !

விண்ணில் மின்னும் ஒளிநட்சத்திரங்கள் 
மணவாழ்வின் விரிசலில் ஒளியிழக்கின்றன!
பரந்த வெளிப்பரப்பில் பறவைகளின் கூட்டுக்களவுகள் 
திணை சாய்ந்து விழும் கழனியின் சுக ஆரவாரங்கள்!

எவ்வெளிப் பறந்தாலும் கூடு வந்து சேரும் பொழுதில் 
சுகமாய் சோர்வு நீங்க நல் இல்லறமே கூடு!
ஆத்மார்த்த நட்பின் அணைப்பில் 
பறந்திடும் தூரம் 
விண்ணையும் கையால் பிடிக்க உதவும்!

பிடிப்பற்ற உறவில் கைபிடித்து பறந்தாலும் 
காலில் கட்டிய கயிறு வழுக்கி இழுக்கும்!
பிரிந்த கூட்டிற்கு பாதுகாப்பு அளித்தாலும் 
துணையற்ற கூட்டில் பாதுகாப்பு யேது !

எந்தோ தூரம் பறந்திடுவோம்!
கூடு சிறக்க செய்திடுவோம்
விண்மீனை தொடும் முன் !

Sunday, November 23, 2014

விடைபெறும் தருணம்

எம்பதுகள் விடைபெறும் நேரமிது!
தீர்காயுஷ்மான் பவ என்று
வாழ்த்திய நெஞ்சங்கள்
ஒவ்வொன்றாய் விடை பெறுகின்றன!
எஞ்சி நிற்பது நினைவலைகள் மட்டுமே!


செல்வதற்கு முன்
என்ன ஓடியிருக்குமோ
அவர்களது நினைவில்!


காடு வா வாங்கிறது
வீடு போ போவென்பதை
நேரில் கேட்கும் துரதிர்ஷ்ட வயதிலும்
ஒரு கம்பீரத்தை இழக்காமல்
விடைபெறுகின்ற பெருமை
கிடைக்கப் பெறுவது அரிதாய்ப் 
போகும் போது
தான் வாழ்ந்த ஒரு
போற்றுதல்குரிய வாழ்வை
அவர்களது நினைவலைகள்
சுமைதூக்கிப் பார்த்திருக்கும்!


பலரது தகன மேடைகளைப்
பார்த்திருந்த போதும்
மரண பயம் கவ்வாமல்
விடைபெறக் கூடிய
வலிமையற்று தள்ளாமை
வீழ்த்தும் அந்த கொடிய மணித்துளிகள்
சிறுகச் சிறுக மறைந்து
நித்திரை கவ்வும் நேரத்தில்
கடைசியாய் அழைத்து
விடைபெறும் பாக்கியமற்று
வீழும் போது
கைதூக்கி நிறுத்தியவர்களிடம்
கண்மூடியே விடைபெற மட்டும்
முடிந்திருக்கும்.


தள்ளாமையின்பால் தள்ளி நின்ற
பிள்ளைகள் சுமந்து சென்று
தகன மேடையில் விடை கொடுத்துச்
செல்லும் சமயத்தில் விழும்
அவர்களது கண்ணீர்த்துளிகளை
ஏற்பதா ஏற்க கூடாதாவென்று
நம்மிடம் சொல்லமுடியா
தூரத்தில் விடைபெற்று நிற்கிறோம்.


சாம்பலில் பொறுக்கி எடுத்த
சுள்ளிகளை அள்ளிக்கொண்டு போய்
கரைக்கும் நேரத்தில்
அனைவரது வலிகளும்
ஒன்றாய் கரைகின்றனவா
தெரிவதில்லை.


தள்ளாமை தள்ளிவிடா விட்டால்
ஒவ்வொரு மனிதனின் அந்திம நேர
விடைபெறுதல் என்றும் எளிதாய்
நிகழக்கூடிய நிகழ்வாய் மாறி
மண்ணில் கரைய வேண்டிய
நேரத்தில் மனிதத் தன்மையோடு
விடைபெறும் தருணமாயிருந்திருக்கும்!


எதை மனதில் நினைத்துக் கொண்டு
விடை பெற்றுச் செல்கிறார்களோ
தெரியவில்லை !
நம்மனதில் சுமக்கும் துக்கங்களை
தெரிவிக்க முடியா தூரத்திற்கு
விடைபெற்றுச் செல்கிறார்கள்.


தனித்து நிற்பது அவர்கள்
விட்டுச் சென்ற
நினைவலைகள் மட்டுமே!

Saturday, November 15, 2014

பயணம்

கடைசி நேரத்தில்
சுகமாய் பிரயணிக்க
அளித்த நன்கொடை என
உளமறியா பேதை மனம்
ஊரில் இறங்கியவுடன்
நடைபெயன்று
ஆட்டோ மிச்சம் பிடித்து
மனதாறிக்குள்ளும்
பேதை மனம்.

படுத்து உறங்கும் பயணத்திற்கு
செலவால் உறக்கமின்றி
பயணிக்க வைக்கும் கட்டணம்.

தேவையற்ற கவலைகளை
உருவாக்கும் பயணத்தை
சுலபமாய் கடைசியில்
உருவாக்கி கொடுத்தவைக்கு
நன்றி நவிலும் போது
உறக்கம் அமைதியாய் 
பயணிக்கும்.

பயணம் இனிதாய் அமையட்டும்.


Tuesday, October 21, 2014

கூடு

கூடு 

கூட்டைக் கட்டினேன்.
குஞ்சுகளை வளர்த்தேன்.
குஞ்சுகள் வளர்ந்தன.

படிப்பறிவின்றியும் பொருளாதாரம்
அறிந்து வளர்த்தேன்.
குஞ்சுகள் படிப்பு, வாழ்வினை கற்றன.
பலமாய் பறந்தன.

மிக பொறுப்புடன் உழன்று
திரிந்த ஆண்மகன்
கூட்டின் கவலையற்று திரிந்தாலும்
உற்றாரை மிகவும் ஒட்டி வந்து
உறவுகளை புதுப்பித்து கொடுத்து வந்தான்.

முதுமையும் வந்தது.
முதுமையில் ஆண்மகன் வலுவிழந்தான்.
கூடும் கலைந்தது.
உறவுகளின் கூட்டில்
ஆண்மகனை கரையேற்றினேன்.

இன்று.
ஆண்மகனும் நீண்டு உறங்கிவிட்டான்.
குஞ்சுகளும் தூரத்தே உறங்கி விட்டன.
உடலும் வலுவிழக்கிறது.
நோய்களின் தாக்கம் உடலை குலைக்கிறது.

எஞ்சியுள்ள தனிக்கூட்டில்
உறக்கம் தேடுகிறேன்.

கூடு கட்டி வளர்த்த போது
இருந்த மனஉறுதி தேடி வருகிறேன்.
தனியாய் விழ மாட்டேன்.

நான் கட்டிய கூடு.
அவிழ்ந்து போகாது.
சகலருக்கும் எனது கூடு
ஒரு வாழ்க்கைப் பாடம்.

Wednesday, September 24, 2014

உன் சுமைக்கு என் இரங்கல்கள்

இறந்தவன் சமாதியில்
இறக்கும் சுமைகள்
இடம் பெயர்ந்து செல்லும் தூரம்
தன் சுமையை சமாதியில்
அடக்க முடியா தூரம் அது.

இறந்தவன் தன் சுமையை
இன்னொருவர் தோளில்
இறக்கிச் செல்லவில்லை,

ஆனால் தன் சுமையைத் தூக்கி
இறந்தவன் சமாதி வரை
கொண்டு செல்லும் மானுடம்.

அறிஞன் இறந்தாலும்
அறிவிலி இறந்தாலும்
தோள் கொடுத்து சமாதி வரை
கொண்டு சென்றவரையும்
சென்றடையும் உன் சுமை.

அழுத்தும் சுமையை
சுமைதாங்கியாய் 
பிடிப்பதும் மானுடம்
மண்ணுள் சேர்த்து 
தைப்பதும் மானுடம்.

உன் சுமையை அறிய 
நான் இல்லை இப்புவியில்.
என் சமாதியில் நீ இறக்கிய 
உன் சுமைக்கு என் இரங்கல்கள்.Sunday, August 31, 2014

ஏமாற்றப்படுதல்

 சமீப காலமாக பொருளாதார ரீதியாய் ஏமாற்றுவதற்கான முயற்சிகள் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் அதிகரித்து வருகின்றது. இத்தனை வருட வாழ்க்கையில் நம்மை இவ்வளவு தூரம் யாரும் நெருங்கியது இல்லை. இப்பொழுது நெருங்கி வருகிறார்கள் என்று நினைக்கும் போது ஒரு பக்கம் கவலையாக இருந்தாலும், இன்னொரு பக்கம் இதை எதிர் கொள்ள எவ்வாறு நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.


பத்து நாட்கள் முன் உள்ளூரில் கிரெடிட் கார்டு கொடுத்து pizza வாங்கும் போது கார்டு transaction deny ஆயிருச்சு. அடுத்த நாளும் transaction deny ஆனவுடன் கிரெடிட் கார்டு கஸ்டமர் சர்வீஸ் க்கு போன் பண்ணினால் இதே கார்டில் சிகாகோ அருகில் இரண்டு transaction நடந்திருக்கு. நீ தான் அந்த transaction பண்ணியா, 4 நாளா எங்க இருக்கன்னு கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.


கிரெடிட் கார்டு கம்பெனிகளின் ஆட்டோமாடிக் fraud detection மூலம் கண்டு பிடிக்கப் பட்டு உடன் கார்டு transactionகள் தடை செய்யப் பட்டதால் அதிக damage இல்லாமல் தப்பி விட்டது. என் கார்டு மூலம் செய்யப்பட்ட இரண்டு fraud transaction இல் ஒன்று மட்டும் ஆன்லைன் அக்கௌன்ட் இல் தெரிந்தது. இன்னொன்று, பெண்டிங் transaction ஆக இருந்ததால், நான் செய்யவில்லை என்று சொன்னவுடன் அதை approve செய்ய மறுத்து விட்டார்கள். எனது அக்கௌண்டில் இருந்த ஒரு fraud transaction க்கு இன்று பணம் திருப்பி போட்டு விட்டார்கள்.


எனக்கு தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போய் விட்டது. ஒன்றில் நஷ்டம் கார்டு கம்பனிக்கும், மற்றொன்றில் அந்த கடையில் முதலில் authorize கொடுத்து வாங்கிச் சென்ற பிறகு deny செய்யப் பட்டவற்றில் அந்தக் கடைக்கு வரும் நஷ்டம். பெரிய அமௌண்ட் transaction நடந்திருந்தால் எளிதாய் பிடித்து விடுவார்கள் என்றாலும் நமக்குள் ஒரு ஏமாற்றத்தின் கலக்கம் இல்லாமல் போகாது.


கார்டு கஸ்டமர் சர்வீஸ் ஆளிடம், யாரது என்று கண்டு பிடித்து prosecute பண்ண முடியாதா என்று கேட்டதற்கு, எங்களால் முடியாது, நீ வேண்டுமானால் உனக்கு அது யாரென தெரிந்தால் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடு. எங்களைப் பொறுத்த வரை, நீ மறுத்த transaction க்கு உனக்கு பணம் திருப்பி தர முடியும், உனக்கு வேற கார்டு கொடுக்கிறோம். அவ்வளவு தான் என்று விட்டார்கள். பழைய கார்டு பில் உனக்கு வராது அவ்வளவு தான் என்று சொல்லி விட்டார்கள்.


சில சமயங்களில் இங்குள்ள சர்வீஸ் சேவை பற்றி பார்க்கும் போது கடினமான தொல்லை நேரும் நேரங்களில் இவர்கள் சுலபமாய் நம்மை இதை எதிர்கொள்ள அழைத்துச் செல்லும் பாதையை பார்க்கும் போது ஒரு மரியாதை மதிப்பு அதிகரிக்கிறது. எந்த விதத்திலும் இது உன் பிரச்சனை இதை நீ பார்த்துக் கொள் என்று தனித்து விடாமல், நேரிலும் இல்லாமல் போனில் உங்களை அழைத்துச் சென்று ஆறுதல் அளித்து, நஷ்டங்களை ஏற்றுக் கொண்டு நம்மை அடுத்தவற்றில் கவனம் செலுத்தச் சொல்வது சிறப்பானது.


இது மட்டுமல்ல, தினமும் எனக்கு, என் மனைவிக்கு, வீட்டு போன் மற்றும் எங்கள் செல்போன் களில் தனியாக வெளிநாடுகளிலிருந்து மிரட்டல் போன் வருகிறது. IRS லிருந்து கூப்பிடுகிறோம் என்றும், இந்த போன்காலை துண்டித்தால் உங்கள் வீட்டிற்கே IRS ஆபீசர்ஸ் வந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று மிரட்டல் வேறு.


இது சமீபத்தில் அதிகரித்து விட்டது. இது ஏமாற்று வேலை என்று எங்களுக்குத் தெரிவதால், செல் போனில் காண்பிக்கும் நம்பர் எடுத்து கூகிள் search பண்ணினால் இது ஒரு ஏமாற்று பேர்களின் செயல் என்று தெரிய வருது. iphone இல் இந்த நம்பர் களை பிளாக் செய்து விட்டதால், இவர்கள் இப்போது வீட்டு நம்பர் க்கு கூப்பிட்டு மிரட்டி வருகிறார்கள். அவர்கள் accent கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதால் அதிகம் கண்டு கொள்வதில்லை. ஆனால் வீட்டில் போன் எடுக்கவே பயப்படும் சூழ்நிலை உருவாகிறது. பலரது கால்கள் answer machine போன பிறகு, திருப்பி கூப்பிட வேண்டி வருகிறது.


எப்பிடி நம்மைப் பற்றிய விவரங்கள் கிடைக்கிறது? எப்பிடி இந்த அளவு இவர்களால் நெருங்க முடிகிறது? அரசால், அமைப்பால், வெறும் நட்டத்தை ஈடுகட்டவோ அல்லது மேலும் ஏமாறாதீர்கள் என்று மட்டும் சொல்ல முடிகிறது. வேறொன்றும் செய்ய முடிவதில்லை. ஏன்?

 எவ்வாறு நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வது?
இதுவும் செய்ய முடியும். விழிப்பாய் இருந்தால்.


நம்மிடம் உள்ள சிறு துரும்பையும் நம்மை காப்பாற்றிக் கொள்ளக் கூடிய ஆயுதமாய் பயன்படுத்த வேண்டியது தான். சட்டம், அமைப்பு, அரசு உதவியுடன் காப்பாற்றிக் கொள்ளத் தான் வேண்டும்.

நமது மனதில் இது நமக்கு இது ஒரு பாதகமான செயல் என்று தோன்றும் போது, அடுத்த கட்ட பாதுகாப்பு நடவடிக்கையில் இறங்கி விட வேண்டும்.

முறையாக அரசு, அமைப்பு, சட்டத்திடம் நடப்பவைகளை தெரிவித்து விட வேண்டும்.
நமது கிரெடிட் கார்டு மற்றும் பேங்க் transaction களை உடனடியாக ஆன்லைன் acct லாகின் செய்து சரி பார்க்கணும்.


ஆன்லைன் acct வெளி இடங்களில், பொது இடங்களில் ஓபன் பண்ணி பார்க்காதீர்கள். மாதம் ஒரு முறை அல்லது 45 நாட்களுக்கு ஒரு முறையாவது password மாற்றி விடுங்கள். Browser cookie , history எல்லாம் கிளியர் பண்ணிக் கொண்டே இருங்கள். கம்ப்யூட்டர் antivirus சாப்ட்வேர் அடிக்கடி அப்டேட் பண்ணி வாருங்கள்.


போனில் வரும் மிரட்டல்களை சமாளிக்க தொலைபேசித் துறை மற்றும் அரசு போலீஸ் துறைகளை நாடுங்கள்.


ஏமாற்றங்களை ஏமாற்றப்படுதலை குறைப்போம் தவிர்ப்போம் எதிர்ப்போம்.

Friday, May 16, 2014

வெற்றியின் எண்ணிக்கை

ஒரு பரிட்சை எழுதப்போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். கேள்வி ஒன்றில் நான்கு ஆப்ஷன் கொடுத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது ஒன்றே ஒன்று தான். யார் அதிகமாக ஒரே பதிலை தேர்ந்தெடுக்கிறார்களோ அதுவே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று விதிமுறையும் அறிவிக்கப் பட்டுள்ளது.

100 பேர் பங்கேற்பதில் ஒரு பதிலை மட்டும் 26 பேரும் மற்றவைகளை 25, 25, 24 என்று தேர்ந்தெடுத்தால், 26 பெற்றவைகளை விதிமுறைப்படி வென்றதாக ஏற்றுக் கொள்வீர்களா அல்லது 74 பேர் அதற்கு எதிராக பதிலளித்து உள்ளதால் 26 வெற்றியல்ல என்று அறிவிப்பீர்களா?

நான்குவிதமான பதில்கள் தராமல் இரண்டு பதில் மட்டும் தந்து விட்டு ஒன்றை மட்டும் செலக்ட் பண்ண வேண்டிய நிலையைக் கொடுத்தால் மட்டுமே அது பெரும்பான்மை என்பீர்களா?

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், 50 கோடிப்பேர் வாக்களிக்கும் நாட்டில், வெறும் இரண்டில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்க வாய்ப்பு கொடுக்குமாறு வற்புறுத்தினால் மக்கள் ஜனநாயகம் மறைந்து விடாதா?

இரண்டிற்கும் மேல் யோசிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பதே எவ்வளவு பெரிய வெற்றி ஒரு மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டிற்கு.


வெற்றி பெற்றது 26 பேர் மட்டும் தேர்ந்தெடுத்து அல்ல. பதில் நான்காய் அமைவதற்கு வாய்ப்பளித்ததே.

Saturday, March 8, 2014

ராசக்காவின் அந்திமம்

ராசக்காவின் அந்திமம்

இன்று தனது நீண்ட வயோதிகத்தின் சுமைகளை அனுபவித்தது போதுமென நிறுத்திக் கொண்டிருச்சு எனது ராசக்கா. இன்னும் சில மணித்துளிகளில் மண்ணில் கரைந்து விடும். இனி என் வாழ்வில் என் ராசக்கவை காண இயலாது. அது என்னிடம் விட்டுவிட்டுச் சென்ற நினைவலைகள் மட்டும் என்றும் இருக்கும்.

ராசக்காவின் மாமன் போய்  15, 20 வருடம் கரைந்து விட்டது. மாமன் இருக்க கொடுத்து விட்டுப் போன அந்த ஒரு வீட்டை மட்டும் கடைசி வரை காப்பாற்றி தன் இருப்பிடமாய் ஆக்கிக் கொண்டாலும், தன் ஆயுளும் இந்த வீட்டிலிருந்தே முடிய வேண்டும் என பிடிவாதமாய் தன முரட்டு குணத்தை விடாமல் காப்பாற்றி வந்தது. கடைசி வரை இந்த வீட்டிலேயே இருந்தாலும் கடைசி ஒரு வாரம் தனது சுய நினைவில் முழுவதும் இல்லாமல், கடைசியில் ஒரு முதியோர் இல்லத்தில் தனது உயிரை விட்டிருக்கு. உயிரற்ற உடலின் கடைசி பயணம் மட்டும் இந்த வீட்டிலிருந்தே புறப்பட மட்டும் ராசக்காவிற்க்கு கிடைத்திருக்கு.

தான் தத்து எடுத்த மகனை கடைசி வரை வைது கொண்டே இருந்துச்சு. அக்காவின் ஏச்சுப் பேச்சைக் கேட்டு அந்த மகன் இனி வரமாட்டர்ன்னு நினைச்சிருந்தேன். ஆனால், கடைசி இரண்டு மூன்று மாதங்கள் அவரே வந்து கவனித்துக் கொண்டிருந்திருக்காரு.

ஒரு காம்பீரத்தோட, தனது  பெண்மையை தடையா  நினைக்காமல் , எப்போதும் ஒரு முரட்டு குணத்தோட  ஒரு பெண் காளையாய்  திரிஞ்சு கிட்டு இருந்துச்சு. அதுவே யாரையும் நெருங்க விடாம செய்திருச்சு. வளர்ப்பு மவனும் விதிவிலக்கல்ல. நெருங்க முடியவில்லை.

உடல்ல வலிமை இருந்த வரை முறுக்கு சுட்டு வித்து கொஞ்சம் காசு சேர்க்க முடியுமான்னு பார்த்தது. முடியவில்லை. மாமன்  சாம்பதிச்ச காசை சரியா சேர்க்காம, வீட்டுல உறவு சனங்களுக்கே  பெரிதும் செலவு பண்ணியது, பிற்க்காலத்தில தனது நீண்ட ஆயுளுக்கு உதவாம போயிருச்சு.

தனது வாழ்வில தனது 75 ஆவது வயது வரை ஒரு நிறைவான ஒரு பெரும் வாழ்வை பெற்றிருந்தாலும், அடுத்த 11 ஆண்டுகள் வறுமையிலும் முதுமையிலும், அதிலும் கொடுமையாக கடைசி ஒரு வருடம் மனம்பிறழ்ந்து எதையும் உணரா வண்ணம் வாழ்ந்து மறைந்திருக்கு என் ராசக்கா.

அது என்னிடம் காட்டிய அன்பும் பரிவும் கடைசி வரை நானும் மறக்காமல் நீண்ட காலம் தொடர்பிலேயே இருந்தேன். இருந்தும் அக்காவின் மறைவு வாழ்வில் ஒரு வடுவை ஏற்படுத்தி தவிர்க்க இயலாமல் போய்விட்டது.

ஒரு தனிப்பட்ட அன்பையும் பரிவையும் என்னிடம் காண்பித்து கடைசியில் தனது அந்திம வாழ்க்கையை எனக்கு ஒரு பாடமாக நடத்திக் காண்பித்து விட்டு இந்த உலகை விட்டு மறைந்து விட்டது.

எனது கண்ணீர் அஞ்சலிகள் ராசக்கா. உன் அந்திமம் எனக்கு ஒரு பாடம்.