Sunday, August 12, 2018

முன் கோவம் மிதிபட்டுப் போனது

இன்னிக்கு காலையில ஒரு தடியன் நாலு தடவை காலிங் பெல் அடிச்சதுமில்லாம, வாசற்கதவை படபடவென தட்டவும் தட்டினான். உட்கார்ந்திருக்கிற சோபாவிலிருந்து எழுந்து போய் கதவைத் திறக்க பத்து நொடி கூட ஆகாது! அதற்குள் அவனுக்குப் பொறுமையில்லை! 

இந்த ஊர் மக்கள் கதவைப் படார் படாரென தட்டுவது இயற்கையானாலும் பொறுமையற்ற தட்டல்கள் அயர்ச்சியையும் எரிச்சலையும் உருவாக்கும்.

வீட்டிலிருப்பவர்களுக்கோ இப்படி கதவை தடதடன்னு தட்டியதுல செம கிலி வேற! கால நடப்பும் அப்படி! கதவைத் திறக்க பயம்!

திறந்து பார்த்தா பத்து வீடு தள்ளியிருக்கும் தடியன். கேட்டதைக் கொடுத்து அனுப்பியாச்சு! அவன் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையுடன் பதில் சொல்ல கடினமாய்ப் போனது. கேள்விகளும் அப்படி. இன்றைய கால கட்டத்தில் சகிப்புத் தன்மையே அதிகம் தேவைப்படுகிறது! கூடி வாழவேண்டிய சுயநலம்!

இதே நிகழ்வு சாயங்காலமும்! ஐந்தாறு தடவை இடைவிடாது காலிங்பெல் மற்றும் தடதடவென கதவைத் தட்டும் சத்தம்.

எரிச்சலின் உச்சத்தில் கதவைத் திறந்தால்  பக்கத்து வீட்டு அல்பேனியக் குழந்தை எம்மா கதவிடுக்கில் நம் வீட்டிற்குள் ஓடுகிறது! மூன்று நாள் முன் அல்பேனியாவிலிருந்து வந்த அதன் பாட்டி கையில் பணியாரத்துடன் மலர்ந்த முகத்தோடு நிற்கிறார்கள். எனது முன் கோவத்தில் திறந்ததில் ஒரு கணம் தடுமாறிப் போய்விட்டேன். 

ஆங்கிலம் ஒரு வார்த்தை கூட அவர்களுக்குப் புரியாது! மொழியிருந்தும் மொழியற்ற மலர்ந்த முகத்தின் பரிபாஷையிலேயே நன்றிகளைப் பகிர்ந்து கொண்டோம்!

கோவத்தின் உச்சம் சடாரென பனிக்கட்டி போல் உருகி தரைமட்டமாகிப் போன நிகழ்வு!


முன் கோவம் குழந்தையின் காலில் மிதிபட்டுப் போனது!

No comments: