Thursday, November 23, 2017

தூரிகை அன்னம்

வரைபடங்களை வரவேற்பதில் வல்லவன்
  வரைபவளை கையேந்தியவன்!

கை பிடித்தவளின் தூரிகையை
 உயர்த்தி நிற்கிறான் இங்கு!
வண்ணப்படங்கள் தூரிகைக்கு தேனூட்டுகிறது!

தூரிகை வரையும் படங்கள்
  விண்ணில் பறந்து நிற்கிறது!
மணாளனோ வண்ணத்திரை படங்கள் தேடி
 மாநகரவீதியில் பறக்கிறான்!

அழகிய ஓவியங்கள் அங்கும் இங்கும்
  ஆனால் இது அன்பு பெருங்கடலில்
தூரிகை ஏற்றிய தீபம்!

இது தூரிகை அன்னம்!

Friday, November 17, 2017

வாழ்ந்து மரணித்து விடு

என்னுள் ஒருவன் எனை நிலைக்கொணர்ந்தான்
உருவம் விலகியிதன் பயத்தை உணர்ந்தான்!

மரணம் என்ற பயத்தில் வீழ்வதை விட
வாழ்ந்து மரணிப்பதை வெளிகொணர்ந்தான்!

உள்ளும் புறமும் ஒன்றாகின்
அமைவதோர் அற்புத வாழ்க்கை!

வாழ்ந்து மரணித்து விடு!

சபையில் முதல்வன்

இன்றோர் சபையில் முதல்வன் அவன்
சான்றோர் சபைக்குத் தலைவன் அவன்!

சபையில் முதல்வனாய் அலங்கரிப்பவனை
உற்றாரிடத்தில் அலங்கரிக்க அநுமதியில்லை!

வீற்றிருக்கும் சிம்மாசனம் உலகிற்கு வழி காட்டும்
உலகம் வாழ்ந்திட ராஜகுமாரனாய்
வீற்றிருக்கிறான் சபையில்!

அன்று நாட்டைக் காக்க விவாதசபை உண்டு
இன்று உலகைக் காக்க உலக சபையில்
கோலேந்தி நிற்கிறான்!

உலக அழிவிலிருந்து நம்மைக் காக்க
வேலேந்தி நிற்கும் சபைத்தலைவனை
போற்றி வணங்குவோம்!

வாழ்க நண்பனே!

Saturday, November 4, 2017

அடுப்படியில் கறை

அறிவும் திறனும் ஒருங்கப் பெற்றின்
பிறரின் அறிமுகம் தேவையன்று!
பெருகி வரும் வெள்ளம் போல்
வந்தடையும் புகழும் புகழுரையும்!

கிடைக்காததை நினைத்து ஏங்குதலின்றி
அறிவும் செயல்திறனும் செழுமையுற செய்தால்
நினையாதவையும் வந்தடையும் மடை வெள்ளம் போல்!

அண்டை வீட்டுப் பகையில் அடுப்படியில் கறை!

கூடிப் பேசும் கூடு

Mourning Dove.

பேராண்டியைப் பார்க்கும் முன்
 புறாண்டியைப் பார்க்கப் போகும்
இவ்வாலிப வயோதிகனின் வாழ்வில்
அணிலும் காக்கையும் புறாவையும்
நேசிக்கும் வாசம் இது.

பேசும் மனிதனைத் தேடுவதில்
தேடி வந்துப் பேசும் பறவைகளின்
நேசத்தின் வாசம் இது.

கூடிப் பேசும் கூடு இது.

கொடுத்தவர்களே பறிக்கும் உறவு

வானுயர எழுந்து நிற்க முயன்றேன்
ஏறிய ஏணிப்படிகள் வலுவற்று நிற்கின்றன!

வலுப்பெற பாதைகளை சரிசெய்ய முயன்றேன்
நுணலின் வாய் இழுக்கின்றது!
பாதை வலுப்பெற படி அமைத்தேன்
வெண்ணையாய் நிற்கிறது!

காலில்லாதவன் ஏறிவிடுவான் மலை மீது
காலிருந்தும் கிணற்றில் தவிப்பேன் துணையின்று!

கொடுத்தவர்களே பறிக்கும் உறவு!

நீதியின் தண்டனையில் கல்லறை

கல்லறையில் புதைத்தனர்
கல்லறை காய நேரமில்லை
ஒவ்வொரு கறையும் கல்லறை மீது!

மண்ணைத் தூவி மலர் தூவி கல்லறையை மூடினாலும்
செய்கொடுமை நின்
அடித்துரைத்தலில் மாறாது!

பொம்மை மந்திரிகளின் புலம்பல்கள்
புதிய பொம்மைகளின் அஞ்சலிகள்
கல்லறையில் உருளுகின்ற புழுக்கள்!
வஞ்சகர்களின் சூழ்ச்சிகளிலிலும்
கூடா நட்பிலும் புரண்டது கல்லறை!

நீதியின் தண்டனையில் கல்லறை!

குஞ்சிலா கூட்டில் தாய் ஏது

புறா தன் கூடு விட்டு பறந்து விட்டது.
கூட்டில் அடைகாத்தவை எதுவாயினும்
இஃது கூடு கண்ட தாயின் பிரயத்தனம்.

குஞ்சு கருப்பா வெளுப்பா அறியும் முன்
பறந்து விட்டாள் தாய்.
தாயில்லாக் கூட்டில் உயிரில்லை.

கூடு இன்னொரு தாய்க்கு ஏதுவானாலும்
மலர்ந்த குஞ்சுகளின் கூக்குரலின்றி பிஞ்சுகளின் தஞ்சமற்று விரிந்த பாய் அது.

குஞ்சிலா கூட்டில் தாய் ஏது!

மண்ணின் மனதிலொரு சுரபி

வைசாகத்தில் பிறந்தோம்
    விசாகன் என்று நாமம் பெறாமல்
விசாலமாய்ப் பிறந்தோம்
   முன்கோபம் முன்னின்று குறுக்கி விடும்!

குன்றிருக்கும் இடத்தில் குமரனிருப்பான்
     என குன்றேறி விடுவோம்
குமரனின் விசாரத்தில் ஆண்டியாய்
     மனதளவில் இருந்திடுவோம்!

வைகாசியின் விசாகத்தில்
    மணிமேகலைக்கு அமுதசுரபி
   புத்தனுக்கு ஞானம்
வைசாகனுக்கோ தொலைதூரத்தில்
   மானைத் தேடும் மயக்கம்!

மண்ணின் மனதிலொரு சுரபி.

கண்ணாடித் திரை உறவுகள்

கண்ணாடித் திரையில் தடவிப் பார்த்த தாத்தா
தன் முன் நின்று பேசிய போது
பிஞ்சுக்கையால் தடவி
முன்தலை வழுக்கலில் பதிந்த பட்டை விபூதியை
முகர்ந்துணரும் முழு சுவாசம்!

மாமனைக் கண்டுணர்ந்து கட்டித் தழுவி
உனையும் அறிவேன் என உரைத்த போது
கண்ணாடித் திரையை உடைத்துணர்ந்த உறவுகள்!

பாட்டி தாத்தா மாமா சித்தி என அழைத்தவை
நேரில் வந்து நிற்கும் போது
ஒவ்வொன்றும்
தன் பிஞ்சுக் கையால்
தொட்டுத் தடவி உணரும்

கண்ணாடித் திரை உறவுகள்.

துள்ளிப் பறந்த மான்கள்

விடியற்காலையில் பறி போகும் பூக்கள்
மலர் படையலக்கின்றி பறிக்கப் படுவதை
தெய்வமே ஏற்பதாக கும்பிடும் தாய்!

ஒன்று இரண்டு என ஏழு கண்டு
ஜன்னலில் பரவசமாய் கும்பிடும் தாய்!

முன்னறிவிப்பின்றி வந்து ஏற்கும் மலர்களின்
சுவை கூட்டி அருந்தும் பொழுதில்
களவு உணரும் தருவாயில்

துள்ளிப் பறந்த மான்கள்!