Sunday, November 23, 2014

விடைபெறும் தருணம்

எம்பதுகள் விடைபெறும் நேரமிது!
தீர்காயுஷ்மான் பவ என்று
வாழ்த்திய நெஞ்சங்கள்
ஒவ்வொன்றாய் விடை பெறுகின்றன!
எஞ்சி நிற்பது நினைவலைகள் மட்டுமே!


செல்வதற்கு முன்
என்ன ஓடியிருக்குமோ
அவர்களது நினைவில்!


காடு வா வாங்கிறது
வீடு போ போவென்பதை
நேரில் கேட்கும் துரதிர்ஷ்ட வயதிலும்
ஒரு கம்பீரத்தை இழக்காமல்
விடைபெறுகின்ற பெருமை
கிடைக்கப் பெறுவது அரிதாய்ப் 
போகும் போது
தான் வாழ்ந்த ஒரு
போற்றுதல்குரிய வாழ்வை
அவர்களது நினைவலைகள்
சுமைதூக்கிப் பார்த்திருக்கும்!


பலரது தகன மேடைகளைப்
பார்த்திருந்த போதும்
மரண பயம் கவ்வாமல்
விடைபெறக் கூடிய
வலிமையற்று தள்ளாமை
வீழ்த்தும் அந்த கொடிய மணித்துளிகள்
சிறுகச் சிறுக மறைந்து
நித்திரை கவ்வும் நேரத்தில்
கடைசியாய் அழைத்து
விடைபெறும் பாக்கியமற்று
வீழும் போது
கைதூக்கி நிறுத்தியவர்களிடம்
கண்மூடியே விடைபெற மட்டும்
முடிந்திருக்கும்.


தள்ளாமையின்பால் தள்ளி நின்ற
பிள்ளைகள் சுமந்து சென்று
தகன மேடையில் விடை கொடுத்துச்
செல்லும் சமயத்தில் விழும்
அவர்களது கண்ணீர்த்துளிகளை
ஏற்பதா ஏற்க கூடாதாவென்று
நம்மிடம் சொல்லமுடியா
தூரத்தில் விடைபெற்று நிற்கிறோம்.


சாம்பலில் பொறுக்கி எடுத்த
சுள்ளிகளை அள்ளிக்கொண்டு போய்
கரைக்கும் நேரத்தில்
அனைவரது வலிகளும்
ஒன்றாய் கரைகின்றனவா
தெரிவதில்லை.


தள்ளாமை தள்ளிவிடா விட்டால்
ஒவ்வொரு மனிதனின் அந்திம நேர
விடைபெறுதல் என்றும் எளிதாய்
நிகழக்கூடிய நிகழ்வாய் மாறி
மண்ணில் கரைய வேண்டிய
நேரத்தில் மனிதத் தன்மையோடு
விடைபெறும் தருணமாயிருந்திருக்கும்!


எதை மனதில் நினைத்துக் கொண்டு
விடை பெற்றுச் செல்கிறார்களோ
தெரியவில்லை !
நம்மனதில் சுமக்கும் துக்கங்களை
தெரிவிக்க முடியா தூரத்திற்கு
விடைபெற்றுச் செல்கிறார்கள்.


தனித்து நிற்பது அவர்கள்
விட்டுச் சென்ற
நினைவலைகள் மட்டுமே!

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மைகள்.... - கனத்த மனதுடன்...

ஓலை said...

நன்றி தனபாலன்.