Friday, September 27, 2013

குழந்தை மனசுல

பையன் 3வது படிக்கும் போது ஒரு புது துணை ஆசிரியர் வந்து சேர்ந்தார். பேச்சில் கொஞ்சம் அதிகமா பிரிட்டிஷ் accent இருக்கும். அவரை பையனுக்கு ரொம்ப பிடிக்கும். அடிக்கடி சொல்லுவான். நடுவில வேற பள்ளிக்குப் போயிட்டார். பையன் ரொம்ப வருத்தப் பட்டான். அவர் போன பள்ளிக்கு என்னை மாத்துன்னு கொஞ்ச நாள் அடம் பிடிச்சான்.

2 வருடம் கழித்து இந்த வருடம் திரும்பி இவன் பள்ளிக்கே ப்ரொமோஷன்ல வந்துட்டார். பையனுக்கு செம சந்தோஷம்.

இப்ப நீ அந்த பள்ளிக்குப் போயிருந்தா என்னடா ஆயிருக்கும்ன்னா பையன் ஒரே வழிசல்.

இன்னிக்கு 15 நிமிடம் முன்னமே பள்ளிக்கு வந்துட்டோம். என்னடா பண்ணப் போறேன்னா அவர்ட்ட போய் பேச நேரம் இருக்குங்கிறான். எப்பிடியாவது தினமும் ஒரு தடவைப் போய் அவரைப் பார்ப்பானாம். என்னடா பேசுவேன்னா ஏதோ ஒரு டாபிக் அப்பிடிங்கிறான்.

ஒரு 26‍ 27 வயது ஆம்பிள்ளை வாத்தி ஒரு குழந்தை மனசுல இடம் பெற்றிருப்பது ஆச்சரியமா இருக்கு.

எனக்கு இப்பிடி ஒரு வாத்தி அமையலையே. கை முட்டியைப் பேர்த்தாங்க, முட்டி போட வச்சாங்க, 2 மாசம் தரையில் உட்கார வைச்சாங்க, மைதானத்தில ஓட விட்டாங்க.

வாத்தியைப் பார்த்தா நான் ஒடுவேன். பையன் தேடிப் போய் பார்க்கிறான்.

#உனக்கு அப்பன் சரியில்லைடே

Thursday, September 12, 2013

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 11

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 11

பெரும்பாலான வயதானவர்களின் வாழ்க்கையைப் பார்த்தால் அவர்கள் பிள்ளைகளைச் சார்ந்தே retire ஆன பிறகு வாழ வேண்டிய நிலை இருக்கிறது. ஒன்று உடல் நலம் இடம் கொடுத்தாலும் தேவைக்கேற்ப வருமானம் retirement காலத்தில் இருப்பதில்லை. பிள்ளைகளை அண்டி கூட இருக்க விரும்பினாலும், வளர்ந்து வரும் நகரச் சூழ்நிலைகளில் இடம் போதுவதில்லை, மருத்துவச் செலவுகள் சமாளிக்கும் அளவுக்கு பிள்ளைகளுக்கும் வசதி இல்லாமல் போக வாய்ப்பு இருக்கு.

ஒரு நாகரீகமான கௌரவமான வாழ்வு வாழ்ந்த நமக்கு நமது ஓய்வு காலத்தில் ஒரு நல்ல வாழ்வு அமைத்துக் கொள்வது எப்பிடி? ஒவ்வொரு மனிதருக்கும் டிகினிட்டி இன் லைப் தேவை. கட்டிய மனைவி வேலை செய்யா விட்டாலும் அவர்களுக்கும் நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு திடமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள நமது 40 வயதிலிருந்தே சேமிக்கத் துவங்க வேண்டும்.

எமெர்ஜென்சி fund சேர்த்த பிறகு அடுத்து செய்ய வேண்டியது ஒரு retirement fund ல் சேமிக்கத் துவங்குவதே. மாத வருமானத்தில் குறைந்தது 15 சதவீதம் சேமிக்க வேண்டும்.

எவ்வளவு சேமித்தால் ஒரு திடமான வாழ்வு அமையும் என்று நம்மால் இப்போதே சொல்ல முடியாது. ஆனால் ஒரு குறிப்பிட்ட இலக்கு நோக்கி சேமிக்கத் துவங்கி அதற்குள் வாழ வழி வகுத்துக் கொள்ள இப்போதே முடியும்.

மாதம் 20000 ரூபாய் வருமானத்தில் நாம் இப்போது வாழ்கிறோம் என்றால், ஓய்வுக்குப் பிறகு இவ்வளவு வருமானம் ஓய்வு நிதியிலிருந்து வருமளவுக்கு சேமிக்க முடியுமா? அந்த கால கட்டத்தில் பணத்தின் மதிப்பு எப்பிடி இருக்கும்? 10000 மட்டுமே வந்தால் எப்பிடி வாழ்வது?

Retirement  வாழ்வு அனைவருக்கும் கடினமானதே. அதை ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள்வதுடன், நம்மால் முடிந்த அளவு எதிர் கொள்வதே நம் நோக்கு. அதற்காக இப்போதே சேமிக்கத் துவங்குவோம்.

எவ்வளவு சேமிக்க வேண்டும்? - இப்போது குறைந்தது மாதம் 15%. நமது 52 வயதில், வீட்டுக் கடன், கார் கடன் எதுவுமில்லாமல் இருக்கும் போது, பிள்ளைகள் பெரியவர்களாகி கல்லூரிக்குப் போய் அவர்கள் வாழ்வை நோக்கி பயணிக்கும் போது , மாத சம்பளத்தில் பெரும் பகுதி retirement நோக்கி சேமித்தால், சொல்லுங்கள் நண்பர்களே நம்மால் எதிர்க்கொள்ள முடியுமா முடியாதா? தேவைப்பட்டால், உடல்நலம் நன்றாக இருக்கும் நிலையில் இன்னும் சில வருடங்கள் உழைத்தால் நம்மால் சேமிக்க முடியுமா முடியாதா?

மிக குறுகிய காலத்தில் கடன்களை அடைத்து விட்டால், பலகாலம் retirement மற்றும் பிள்ளைகளின் கல்விக்கு எளிதாகச் சேர்க்க முடியும். இதற்காகவே சொல்கிறேன். கடன் வாங்காதீர்கள். கடன்களை உடன் அடைத்து விடுங்கள். சேமியுங்கள்.

எவ்வளவு பணம் சேர்ந்திருந்தால் நிம்மதியாக இருக்க முடியும்? - இது ஒவ்வொரு மனிதருடைய மனநிலை சூழ்நிலை பொறுத்தது. நம்முடைய ஒட்டுமொத்த savings லிருந்து  கிடைக்கும் 10% வருமானத்தில் நம்மால் ஒரு வருட வாழ்க்கையை ஓட்ட முடியும் என்றால் நீங்கள் சேமித்து உள்ள பணம் மிக நன்று.

நாம் இன்னும் பத்து வருடத்தில் retire ஆகப் போகிறோம் என்றால், இணையத்தில் உள்ள ஒரு retirement calculator எடுத்து, ஒரு குறிப்பிட்ட இலக்கு அமௌன்ட் அடைய மாதம் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்று கணக்கு போட்டுக் கொள்ளுங்கள். இதன் படி சேமித்து வாருங்கள்.

இப்போது எதில் சேமிப்பது ? - சேமிக்கும் பணம் இழக்காமல் இருந்திட வேண்டும், inflation 4% + வட்டி/டிவிடெண்ட் வருமானம் குறைந்தது 8%-10%, ஆக மொத்தம் 12%-14% return வரக்க கூடிய இன்வெஸ்ட்மென்ட் கள் தேடி முதலீடு செய்ய வேண்டும்.

PF contribution 8-9% return தரக்கூடிய அளவு எந்த நாடும் இன்றைய பொருளாதார நிலையில் இல்லை. இது கிடைக்கும் போது நம்பகமான இடமானதால் எவ்வளவு அதிகமாகப் போட முடியுமோ அவ்வளவு போட வேண்டும்.

பென்ஷன் fund அல்லது 401கே இல் employer contribution 3-6% இருக்கும் போது, நமது பங்கான இந்த pre -டாக்ஸ் contribution தவறாமல் செய்ய வேண்டும்.

ஓய்விர்க்கான சேமிப்பு நிதிக்கு ஒதுக்க வேண்டிய 15% பணத்தில், இவை போக மீதியை ரோத் IRA அல்லது 401கே மற்றும் டாக்ஸ்-பெனிபிட் டுடன் இருக்கும் mutual fund இல் போடுவது சிறந்தது. Dave  போன்ற சில சிறந்த financial advisers மூலமாக செய்தால் சிறப்பாக இருக்கும்.

ஸ்டாக் அல்லது mutual fund இல் போடும் போது அதன் கூட இருக்கும் ரிஸ்க் க்கும் மிக அதிகம். நாட்டின் அரசியல் பொருளாதார சூழ்நிலைக்கேற்ப மற்றும் inflation கணக்கில் கொண்டு return வருகிற மாதிரி இன்வெஸ்ட் செய்ய வேண்டும்.

இந்தியாவில் சில இன்சூரன்ஸ் policies tax பெனிபிட் டுடன் வரலாம். இதில் கூட செய்யலாம். ஆனால் இன்சூரன்ஸ் என்பது வேறு savings என்பது வேறு. இன்சூரன்ஸ் பற்றி அடுத்து வரும் பதிவுகளில் எழுதுகிறேன்.

Mutual fund  என்று எடுத்துக் கொண்டால் சேமிக்கும் பணத்தில் ஒவ்வொன்றிலும் 20% கீழ்கண்டவாறு இன்வெஸ்ட் செய்தால், மாறிவரும் சூழ்நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டு வளர்த்துக்  கொள்ள உதவும்.

1. Stable Fund (intermediate bond, முனிசிபல், கவுன்டி, ..)
2. Index Funds
3. லாங் டெர்ம் growth
4. லோ/Midcap growth / ஸ்டாக் funds
5. இன்டர்நேஷனல் fund

இதைத் தவிர நெடுங்காலமாக நல்ல பலனைத் தரும் நல்ல stocks வாங்குவதும் நல்லது.

ஸ்டாக் மார்க்கெட் மீது நம்பிக்கை அல்லது அதில் பழக்கம் இல்லாதவர்கள் எப்போதும் போல் பேங்க் அல்லது போஸ்ட் ஆபீஸ் டெபொசிட் போன்றவற்றில் சேமிக்கலாம். சிறந்த financial advisers பார்த்து செய்வது நல்லது. அவர்கள் சொல்வதை முழுதும் நம்பி ஏமாறவும் அல்லது அதிக கட்டணமும் செலுத்தி நஷ்ட மடையக் கூடாது. கொஞ்சம் ஹோம் வொர்க் பண்ண வேண்டும்.

முன்பெல்லாம் போஸ்ட் ஆபீஸ்ல் NSCஅல்லது இந்திர விஹாஸ் பத்திரத்தில் போட்டால் 5-6 வருடங்களில் இரட்டிப்பானது. இப்போது தெரியவில்லை. பிறரைக் கேட்டு செய்ய வேண்டும்.

தொடர்ந்து 15-20 ஆண்டுகள் ஓய்வு காலத்தை ஒட்டி சேமித்து வந்தால் ஒரு வலிவான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள முடியும். Retire ஆவதற்கு சில காலம் முன் அதிகம் சேமிப்பதற்கான வாய்ப்பை முன்னிருந்தே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

மேலும் தொடர்கிறேன்.

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 10

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 10

ஒருவரது வாழ்வில் மிக முக்கியமான period அவர்களது 40 - 50 வயது காலத்தில் தான் இருக்கும். ஒரு பக்கம் தன் சிறு  குழந்தைகள் வளர ஆரம்பித்து இருப்பார்கள். இன்னொரு பக்கம் நம் பெற்றோர் முதுமை அடைந்து நம் உதவி தேடி அமர்ந்திருப்பார்கள். குழந்தைகளின் வளர்ச்சிக்கு படிப்புக்கு  என்ன செய்வது? பெற்றோரின் நோய் நொடிகளை சமாளிப்பது எப்படி?

இதே கால கட்டத்தில் தான் நாம் வளர்ந்து வந்த சூழ்நிலையைப் புரட்டிப் பார்க்கும் காலம் கூட. நம்மை நம் வழிகாட்டுதலை நம்பி வாழ்வோரின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டிய நிலைமை இருக்கும். நம் எதிர்கால வாழ்க்கைக்கான திட்டமிடுதல் துவங்க வேண்டிய காலம் கூட. திட்டமின்றி செயல்படும் நிலையினால் ஏற்படும் தவறுகள் பிற்காலத்தில் ஒரு கடினமான வாழ்க்கைக்கு இட்டுச் செல்லும். நாம் தயாராக வேண்டிய நேரம் இது.

ஏன் 60 வயதில் ஒரு தொழில் தொடங்கி முன்னேற முடியாதா என்கிற கேள்வி எழலாம். முடியும். ஆனால் தொழில் தொடங்க மூலதனத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கு முன்பிருந்தே திட்டமிடுதல் தேவை.

வீட்டில் எழக்கூடிய பல்வேறு பிரச்சனைகளை சமாளிக்கும் திறன் இந்த காலகட்டத்தில் (40-50) அடையா விட்டால் இதுவே நம்மை வீழ்த்துவதற்கு எளிய கருவியாகி விடும்.

என்ன செய்ய வேண்டும்? எதை எப்பிடி செய்ய வேண்டும்? எவ்வளவு தேவைப் படலாம்? எவ்வாறு கடன் வாங்காமல் சமாளிக்க வேண்டும் என்பது பற்றிய ஒரு திட்டமிடுதல் வேண்டும்.

இதை சம்பாதிக்கத் தொடங்கிய நாளிலிருந்து அல்லது 30 வயதிலேயே ஆரம்பித்து விட்டால் எளிதாக் கோடீஸ்வரன் ஆகவும் வாய்ப்பு இருக்கு.

என்னவெல்லாம் செய்ய வேண்டும்.

முதலில் சேமிக்கத் தொடங்க வேண்டும். எதில் எதில் சேமிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

1. எமெர்ஜென்சி fund ற்கான சேமிப்பு - கடன் வாங்குவதைத் தவிர்க்க.
2. Retirement fund, பென்ஷன் fund,
3. லைப் insurance / disability இன்சூரன்ஸ்
4. லாங் term health இன்சூரன்ஸ்
5. சில்ட்ரேன்ஸ் education fund
6  fixed deposits, Shares / Mutual funds  போன்றவை

இவைத் தவிர நீங்கள் வருங்காலத்தில் நிகழக்கூடிய சம்பவங்களுக்கு, உதாரணமாக, வீடு வாங்க, கார் வாங்க, ... முன்கூட்டியே சேமிக்கத் தொடங்க வேண்டும்.

கடன் இருக்கும் போது மேலுள்ளவற்றிக்கான சேமிப்பு முழுவதும் தொடங்குவது தவறு. வீட்டுக் கடன் தவிர ஏனைய கடன்களை முழுதும் அல்லது பெருமளவு அடைத்து விட்டே இதைத் துவங்குவதாக இருக்க வேண்டும். வீட்டுக் கடனையும் முழுதும் அடைத்து விட்டால் சேமிப்பு எளிதில் பல மடங்காகும்.

கடன்களை வைத்துக் கொண்டு சேமிப்பையும் தொடங்குவது என்பது எளிதல்ல. கடனுக்கு வாங்கிய வட்டியை விட சேமிப்பின் வட்டி வருமானம் குறைவாகத் தானிருக்கும். கடன் வாங்கிய இடத்தில் கட்டாமல் சேமிப்பில் போடுவது நேர்மைக்கும் இழுக்கு. கடன் போன பிறகு கிடைக்கும் நிம்மதி, எளிதில் சேமிக்க அல்லது தேவைப் படுபவற்றை வாங்குவதற்கான ஒரு தெம்பை மன நிலையை உருவாக்கிக்  கொடுக்கும்.

பெரும்பாலான வீ ட்டுக் கடன்கள் அடைய 15 வருடங்கள் ஆகலாம். அதுவரை பிறவற்றிற்காக சேமிக்காமல் இருப்பது தவறு. வீட்டுக் கடனை 10 வருடத்தில் முடித்தால், அதன்  பிறகு அதற்கு கட்டி வந்த பணமும் முழுதாக சேமிக்க முடியும்.

வீட்டை முழு பணம் கொடுத்து வாங்குவதாலும் நல்ல பலனே. பெருமளவு சேமிக்க முடியும். Tax benefits க்காக வீட்டுக் கடன் வாங்குவதால் பலன் இல்லை என்று போன பதிவுகளில் விவரங்களுடன் குறிப்பிடிருந்தேன். சில இடங்களில் வீட்டுக் கடன் பேங்க் செக்யூரிட்டி என்கிறார்கள். பேங்க் பத்திரத்தை தொலைத்து விட்டது என்று அறிவித்து விட்டால் என்ன செக்யூரிட்டி இருக்கு? செக்யூரிட்டி இல்லாத இடத்தில் வீடு எதற்கு?

கடனற்ற வீட்டில் வாழும் நிம்மதி எவ்வளவு சுகமானது என்பதை அறிய வேண்டும்.அத்துடன் முதலில் கடன்களை அடைத்துக் கொண்டு ஒரு சுகமான சேமிப்புடன் நடைபோடும் போது ஒரு வலுவான எதிர்காலத்தை அமைத்துக் கொள்கிறோம் என்கிற நம்பிக்கை மனதில் உருவாகும். எல்லாப் பிரச்சனைகளையும் சமாளிக்கக் கூடிய ஒரு பலத்தை இது அளிக்கும்.

ஆகவே, இனி வரும் தொடர்களில் சேமிப்பு பற்றிப் பார்க்கலாம். 

Wednesday, September 4, 2013

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 9

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 9

நேற்றைய பதிவில் வீட்டுக் கடன் தவிர மற்றவற்றை முதலில் அடைக்க வேண்டும் என்றும், மறுபடியும் கடன் வாங்க வேண்டிய நிலைமை வராமல் இருக்க ஒரு தொகையை சேமித்து வைப்பதற்கான அவசியத்தைச் சொல்லியிருந்தேன்.

வீட்டுக் கடன் பற்றி விரிவாக எழுத நான் ஒரு financial adviser இல்லை. எனக்குத் தோன்றியவை மற்றும் Dave  ராம்சே குறிப்பிட்டுள்ள சில வற்றை மட்டுமே சுட்டிக் காண்பிக்க விரும்புகிறேன்.

பெரும்பாலான வீட்டுக் கடன்கள் நீண்ட வருடங்கள் செல்லக் கூடியது. இதை அடைக்க முழு மூச்சில் இறங்கினால், வாழ்வின் பிற்காலங்களுக்குத் தேவையான சேமிப்புப் பாதையில் இறங்க முடியாமல் போய்விடும். வீட்டுக்கடன் அடைக்கும் அதே நேரத்தில் வருங்காலத்திற்கான சேமிப்பும் தேவை. சேமிப்பு பற்றி வரும் தொடர்களில் எழுதுகிறேன்.

இப்போது வீட்டுக் கடன் பற்றி.

முதலில் வீடு வாங்குவதற்கு முன் நம்மை அதற்குத் தயார் படுத்திக் கொள்வது நல்லது. இது கடன் சுமையில் துவண்டு போகாமல் இருக்க உதவும். தனது மாத பட்ஜெட்டில் 25-30 சதீவீதத்திற்கும் குறைவான தொகையை மட்டும் வீட்டுக் கடனாக மாதா மாதம் கட்டுவதற்கு எவ்வளவு நம்மால் முடியும் என்று முதலில் பார்க்க வேண்டும். இதற்கு தகுந்த மாதிரி லோன் வாங்கி வீடு வாங்குவது உசிதம்.

ஒவ்வொருவரது மனநிலை வேற மாதிரி. எவ்வளவு பெரிதானாலும் பார்க்காமல் கடன் வாங்குவது. முடியவில்லை என்றால் விற்றுவிட்டுப் போய் விடலாம் என்ற எண்ணம் இருக்கும். இது ரியல் எஸ்டேட் வளர்ந்து வரும் நேரத்தில் சாத்திய மாகலாம் பெரும்பாலான நேரத்தில் விற்கும் போது நட்டத்தில் முடியும். அல்லது கடன் கொடுத்தவர்கள் நம்மை வெளியேற்றும் நிலைமை ஏற்படுத்தும். இதைத் தவிர்ப்பதற்கு திட்டமிடுதல் நலம்.

எவ்வளவு நம்மால் மாதம் கட்ட முடியும். எவ்வளவு முன்பணம் போட முடியும். எவ்வளவு லோன் வாங்க வேண்டும் என்ற திட்ட மிடுதல் அவசியம். வசிப்பதற்காக வீடு வாங்கி கடன் வைத்திருப்பவர்களுக்கு உதவவே இப்பதிவு.

வீட்டுக்கடன் முழுதும் அடைக்காமல் வட்டியுடன் கட்டிக் கொண்டிருந்தால் tax பெனிபிட் கிடைக்கும் என்ற பரவலான எண்ணம் எல்லோரிடமும் உண்டு. என் வீட்டிலும் கூட. இது சரியா தவறா என்று இரு சின்ன கணக்கு போட்டு பார்க்கலாம்.

10% வட்டிக்கு ஒரு லட்சம் கடன் வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம் எனில் ஒரு வருட வட்டி 10000 ரூபாய். நமது வருமானம் 30% tax வட்டத்தில் வருகிறது என்றால் நாம் அரசுக்கு கட்ட வேண்டிய வருமான வரியில் 3000 ரூபாய் மட்டுமே விலக்கு கிடைக்கும். மீதி 7000 வட்டியாகப் போகிறது. Tax பெனிபிட் க்காக கடனில் இருப்பதன்  அவசியம் என்ன என்கிறார் Dave.

இதைப் போல் Equity பற்றிய இன்னொரு எண்ணமும் மக்கள் மனதில் ஒரு பரவலான எண்ணம் உண்டும். வீடு மேல் இருக்கும் லோன் குறைய குறைய வீட்டின் மீதான நமது உரிமை (equity ) உயர்ந்து கொண்டே போகும். அதன் மீது லோன் வாங்கினால் குறைவான வட்டிக்கு கிடைக்கும், பிற பேங்க் லோன் விட குறைவான வட்டிக்கு கிடைக்கும் என்பது. கிடைக்கலாம்.

ஆனால் உங்கள் வீட்டின் மீதான உங்கள் உரிமை பறிபோகிறது என்பதை நினைத்துப் பார்க்க மறுக்கிறோம். Primary லோனும் ஹோம் equity லோனும் வேறு வேறு. ஒன்றைக் கட்ட மறந்தாலும் அல்லது முடியாமல் போனாலும் உங்களை foreclosure நிலைக்கு இட்டுச் செல்லும். வீட்டிற்கு இழப்பு ஏற்படும் நேரத்தில் இன்சூரன்ஸ் எந்த லோனையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாது. ஹோம் equity லோன் மற்றும் வீடு மீதான செகண்டரி லோன் தொடர்ந்து கொண்டே வரும்.

லோனில் கார் வாங்க முற்படும் போது ஹோம் equity லோன் மற்றும் செகண்டரி லோன் இருப்பதால் ஒரு பின்னடைவு ஏற்பட வாய்ப்புண்டு.

பெரும்பாலான மக்கள் செகண்டரி லோன் எடுத்து primary லோன்க்கு முன்பணமாக கட்டுவார்கள்.  வட்டியும் அதிகம், இரண்டில் ஒன்றுக்கு கட்ட முடியாமல் போனாலும் மிகப்பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொள்வோம். செகண்டரி எடுக்காமல் நம்மைத் தயார் பண்ணிக் கொண்ட பிறகே வீடு வாங்குவது உசிதம்.

வீட்டுக்  கடன் கட்ட ஆரம்பிக்கும் ஆரம்ப காலத்தில் நாம் கட்டும் பணம் பெருவாரியாக வட்டியில் போய் சேரும். அசல் கொஞ்சம் தான். மாதந்தோறும் ஒரு சிறு தொகையை கூடுதலாக அசலுக்கு கட்டி வந்தால் அது பிற்காலத்தில் இரு மாதங்களுக்கான கட்டணத்தை தடுக்க உதவும்.

ஒரு லட்ச ரூபாயை 30  வருடத்திற்கு 5 பெர்சென்ட் வட்டியில் வாங்கியிருந்தால், மாதம் கட்ட வேண்டிய தொகையுடன் கூடுதலாக 250Rs ஆரம்ப காலத்திலிருந்து கட்டினால் அது கடன் முன் கூட்டியே அடைப்பதற்கு துணை போவதுடன் மட்டுமல்ல, 80-90 ஆயிரம் ஒட்டு மொத்தமாக கட்ட வேண்டிய வட்டிப் பணத்திலிருந்து குறைவாக இருக்கும். 5% பதிலாக 8% வட்டிக்கு முன்னரே calculate பண்ணி கட்டி வந்தால் 30 வருட லோன் 12-15 வருடத்திற்குள் கட்டி முடிக்கப் படும்.

மறுபடியும் சொல்கிறேன். நான் financial adviser இல்லை. கடனற்ற வாழ்வு வாழ உதவி மட்டுமே செய்கிறேன். Dave பல நுணுக்கங்களை அவரது புத்தகத்தில் சொல்கிறார். வாங்கிப் பயனுறுங்கள்.

இணையத்திலும் பல கட்டுரைகள், amortization calculators கிடைக்கும். உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும் தொடர்கிறேன்.

Tuesday, September 3, 2013

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்பிடி - 8

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்பிடி - 8

நம்மிடம் ஒரு தொகையை சேமித்து வைப்பதன் மூலமே மறுபடியும் கடன் வாங்க வைக்கும் நிலைமையிலிருந்து தப்பிக்கமுடியும். இந்தத் தொகை எவ்வளவு இருக்க வேண்டும் என்பது நமது மாதந்திர பட்ஜெட் மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம். எவ்வளவு நாள் இந்த பணத்தை வைத்து சமாளிக்க முடியும் என்கிற ஒரு மனநிலை, ஒரு நம்பிக்கை நம் மனதில் கொண்டு வர 6 மாத சேமிப்பு என்கிறேன். இது ஒவ்வொருவரது குடும்ப நிலைமையைப் பொறுத்து மாறுபடலாம். ஆனால் கடனற்ற வாழ்வு வாழ இது அவசியம் தேவை.

இந்த சேமிப்பு பணம் இல்லாமல் கடனற்ற வாழ்வு வாழ முடியாது. இதிலிருந்து எடுத்து செலவு பண்ண வேண்டிய கால கட்டாயம் உருவானாலும், மறுபடியும் இந்த சேமிப்பு சேரும் வரை பிற செலவுகள், இன்வெஸ்ட்மென்ட்கள் தவிர்க்க வேண்டும். இதை சேர்த்து வைக்க வேண்டும்.

மாதந்திர பட்ஜெட் பணத்தில் செலவுகள் போக முதலில் இந்த safety இருப்புத்தொகையை சேமிக்கத் தொடங்க வேண்டும். இது தான் உங்கள் முதல் சேமிப்பாக இருக்க வேண்டும். இதுவே உங்களை கடன் வாங்கும் நிலையை உருவாக்காமல் தடுக்கும் சொத்து.

இந்த 6 மாத அத்தியாவசிய செலவுகளுக்கான சேமிப்பு என்பது, முதலில் நான் சொல்லிய emergency செலவுக்கான 2000-5000 தவிர்த்து பிறவற்றிர்க்கானது.

இந்தப் பணத்தை எங்கு எதில் வைத்திருக்க வேண்டும் என்பதிலும் ஒரு தெளிவு வேண்டும். தேவைப் படும் நேரத்தில் உடனடி எடுத்து உதவும் வங்கிகளில் சாதாரண savings account ல் மட்டுமே வைத்திருக்க வேண்டும். ஒரு term டெபொசிட் பண்ணி வைத்து தேவைப்படும் எடுக்க வேண்டிய சமயத்தில் எடுக்க முடியாமல் போகவோ அல்லது எடுப்பதற்கு பெனால்டி கட்டி எடுத்து நஷ்டப் படக்கூடிய வகையில் எடுத்து வைக்கக் கூடாது.

பேங்க் கில் வைப்பதன் மூலம் இதில் வரும் வட்டியைப் பார்த்து ஆசைப்பட்டு, தேவைப் படும் போது இன்னொருவரிடம் கடன் வாங்கி சமாளிக்கும் மனோபாவம் கூடவே கூடாது. கடனற்ற வாழ்வே நோக்கம்.

Emergency பணம் வீட்டிலிருக்க வேண்டும். இந்த 3-6 மாத கால அத்தியாவசிய சேமிப்புத் தொகை வங்கியில் அல்லது எளிதாக எடுக்க முடிய வகையில் ஒரு சேமிப்பு நிறுவனத்தில் இருக்க வேண்டும். இதை வைத்து முதலீடு செய்யும் மற்ற தனிநபர்களிடம் அல்ல.

பிறரிடும் கொடுத்து வைத்தல் அல்லது குறைந்த வட்டிக்கு பிறருக்கும் கடன் கொடுத்து வைக்கக் கூடாது. தேவைப்படும் நேரத்தில் நீங்கள் மறுபடியும் பிறரிடம் புரட்டும் நிலைக்கு இட்டுச் செல்லக் கூடாது.

இந்தப் பணத்தை எடுத்து மாதாந்திர பட்ஜெட் ஐட்டத்தில் இடம் பெற்றுள்ள செலவுகளுக்கு செலவழிக்கக் கூடாது. இதை வைத்து புதுப் பொருட்களை அல்லது பட்ஜெட்தில் இல்லாத திடீர் தேவைக்கான பொருள் அல்லது வேற செலவுகளுக்காகவும் இதைத் தொடுவதை தவிர்க்க வேண்டும்.

வருமானம் தடைபடும் போதும், வேலை போகும் போது ஒருவரது வருமானத்தில் பட்ஜெட் செலவுகளை சமாளிக்க முடியாமல் போகும் போது மட்டுமே இதில் கை வைக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் இதில் கை வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றால் உங்கள் பட்ஜெட் சரிவர நிர்ணயிக்கப் படவில்லை என்றே அர்த்தம். முதலில் பட்ஜெட்டை சரி செய்யுங்கள்.

இந்த பணத்தைத் தொடும் நேரத்தில் இனி இதை மறுபடியும் சேமித்து பூர்த்தி செய்வதற்கான சேமிப்பை உங்கள் மாத பட்ஜெட்டில் இடம் பெறச் செய்ய வேண்டும்.

இதைத் தொடர்ந்து இரண்டு மூன்று ஆண்டுகள் செய்து வந்தால், உங்கள் வாழ்வில் வரவு செலவுகளை சமாளிக்க கடன் வாங்காமல் வாழக் கூடிய ஒரு பக்குவத்தை உங்களிடம் நீங்கள் பார்க்கலாம்.

இதுவரை நான் எழுதியவற்றில் தேவையானது
1. வாங்கியுள்ள கடன்களின் பட்டியல், சிறிய கடன் முதலில்
2. மாதந்திர பட்ஜெட் தேவை
3. ஒருemergency fund
4. சிறு கடன்களிருந்து ஒவ்வொன்றாக அடைத்தல் (வீட்டுக் கடன் தவிர)
5. எக்காரணம் கொண்டும் மறுபடியும் கடன் வாங்கக் கூடாது (including கிரெடிட் கார்டு)
6. 6 மாத கால தேவைக்கான சேமிப்பு.

மேலுள்ளவற்றை பூர்த்தி செய்த பிறகே பலருக்கு அடுத்த கட்டமான வீட்டுக் கடன் அடைப்பது, ஓய்வு கால சேமிப்பு, இன்சூரன்ஸ், பிள்ளைகளின் கல்விக்கான சேமிப்பு  நோக்கி நாம் முன்னேற முடியும். இவைகளை வரும் தொடர்களில் பார்க்கலாம்.