Thursday, May 30, 2013

காரத்தொழுவு

காரத்தொழுவு - இது என் அம்மா பிறந்த ஊர். ஒரு தடவை தான் போயிருக்கிறேன். ஆனால் சிறுவயதிலிருந்து இன்று வரை இந்த ஊர் பெயரை வீட்டில் கேட்காத நாட்கள் குறைவு.

அம்மா தன் சகோதரன் சகோதரிகளோடு சிறுவயதிலேயே இந்த ஊரை விட்டு வந்தாலும், ஊரையும் ஊர் மக்களையும் பற்றி பேசாத நாட்கள் இல்லை. அம்மா பாட்டி அனைவரது அடிமனதிலும் காரத்தொழுவு பற்றி ஒரு ஆழ்ந்த நினைவலைகள் இருந்து கொண்டே இருந்ததை சிறு வயதிலிருந்தே அறிவேன்.

என் மாமா, பாட்டி மற்றும் அம்மா அடிக்கடி உரையாடலில் மிகவும் அதிகமாக குறிப்பிட்ட ஒரு குடும்பம், என் மனதிலும் அந்த குடும்பத்தின் மீதான ஒரு மரியாதை மிகவும் உயர்ந்து இருப்பதாக நினைப்பது, தியாகராஜ  தீக்ஷிதர் - குஞ்சம்மா தம்பதியரின் குடும்பம்.

தீக்ஷிதரும் அவர் மனைவியும் நான் பிறக்கும் முன்னரே இவ்வுலகில் இல்லை. ஆனால் அவர்கள் பெயரில் உள்ள ஆளுமை எங்கள் வீட்டில் இன்றும் உணரலாம்.

என் அம்மா குடும்பத்தைப் போல, தீக்ஷிதர் குடும்பத்திலும் நிறைய குழந்தைகள் உண்டு. எல்லோரும் இன்று முதியோராய் தளர்ந்து கொண்டிருந்தாலும், எங்கள் குடும்பத்தின் மீதுள்ள அன்பில் இன்றும் உயர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

தீட்சிதர் மகன்களில் ஜெயராமன் அவர்களை மட்டும் சில தடவை பார்த்திருக்கிறேன். இந்த தடவை எங்களது அடுத்த தலைமுறை கல்யாணத்திற்குப் போயிருந்த போது, தீக்ஷிதரின்இன்னும் இரு மகன்களையும் அவர்கள் குடும்பத்துடன் அங்கு ஒரு சேரப் பார்த்த போது  ஆச்சரியமும் மரியாதையும்  கலந்தோடியது.

இளையவர் விசு அவர்களிடம் போய் கொஞ்சம் உளறி கொட்டினாலும், அவரது எளிமையும், எப்போதும் அமைதியாகவே இருக்கும் அவரது அண்ணன் நாகு வையும் பார்த்து மனதில் இவர்களை ஒரு போட்டோ எடுத்து பத்திரப் படுத்திக் கொள்ளத் தோன்றியது. நாகு அங்கிளின் மனைவி தான் பழைய விஷயங்கள் சிலவற்றை சொல்லி பரவசப் பட்டுக் கொண்டார். ஆனால் பரவசத்திலிருந்தது  நான் தான்.

இவர்கள் என் அண்ணனுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே ஓரிரு போட்டோக்கள் எடுத்து வைத்துக் கொண்டேன். விவரங்களை என் அம்மாவிடம் பகிர்ந்து கொண்ட போது அவர்கள் முகத்தில் ஒரு பரவசம் தெரிய வந்தது.

போன வாரம் தீக்ஷிதரின்  மகளும் என் அம்மா தன் நெருங்கியத் தோழியாக இன்று வரை நினைத்து வரும் அவரது மகள் இந்திராவை போய்  பார்த்து வந்திருக்கிறார்.

நாங்கள் அறியாமலேயே எங்கள் குடும்பத்தில் ஒன்றியிருக்கும் தீக்ஷிதர் குஞ்சம்மா தம்பதியருக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.

6 comments:

vasu balaji said...

juper

ஓலை said...

Sir :-)

”தளிர் சுரேஷ்” said...

உங்களின் இந்த பதிவு வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_18.htmlஅறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது! வாழ்த்துக்கள்!

ஓலை said...

நன்றிங்க சுரேஷ். 

Anand Subramaniam said...

என் பார்வையில் எந்தன் ஊர்
(காரத்தொழுவு )


சிறு வயது ஞாபகங்கள்
பசுமையாய் நிற்குது.

எனை ஈன்ற மண் இது.
என் உதிரத்தில் ஊறியது.

இந்த ஊரைப் பற்றி
சொல்லு முன்
என் அம்மாவைப் பற்றி
சில வார்த்தைகள்.

அவள் ஊருக்கே அம்மாதான்.
எங்கள் ஊரையே காப்பவள்
தான்.

அழகுநாச்சி அம்மன் என்று
அவளை அன்புடனே நாங்கள்
அழைப்போம்.

இந்த ஊரின் காவல் தெய்வம்.

அம்மா,

பண்டிகை தினங்களிலே
வித விதமாய் அலங்காரம்.

எங்கள் குருக்கள் மாமாவின்
கை வண்ணத்தில் நீ மிளிர்வாய்.

அழகான சேலையுடுத்தி,
மஞ்சள் நிற முகத்தினிலே
உன் மூக்குத்தி ஜொலிப்பினிலே,
உன்னை நாங்கள் பார்க்கையிலே
இப்படியும் ஓர் அழகா என
வியந்து வியந்து பார்த்திடுவோம்.
இரு கரம் கூப்பி வணங்கிடுவோம்
உந்தன் அருள் பெறுவதற்கு.

நம் ஊரைப் பற்றி நான்
சில வார்த்தை எழுத
நினைத்தேன்,
உன்னில் ஆரம்பித்து
தொடங்குகிறேன் தாயே.

கரை புரண்டு ஓடும்
ஆற்றங்கரையும்.

என் வீட்டின் பின் புறத்தில்
இருக்கும் சிறு வாய்க்காலும்.

பச்சை நிறம் பூசிக்கொண்டு
அந்த அழகிய வயல் பரப்பும்.

சிறு வயது நண்பர்கள்,
தோழிகள்,
அவர்களுடன் பல
விளையாட்டு.

பனை ஓலை காத்தாடி,
கிட்டிப்புல், கோலிக்குண்டு,
இவை எல்லாம் இன்றும்
விளையாட ஆசை உண்டு.

நான் பார்த்த சினிமாவை
காட்சி வாரியாக சொல்லும்
திறன்,
அதை மெய்மறந்து கேட்கும்
என் நண்பர் வட்டாரம்.

எங்கள் தெரு அக்ரஹாரம்
அதிலே அனைவரும்
சொந்தம் தான்.

சண்டையும் வந்ததுண்டு
பின் மறந்தும் போனதுண்டு.

என் உடன் படித்த மாணவர்கள்,
என் நினைவில் என்றும்
நின்றவர்கள்.

நான் ஒன்னாம் வகுப்பு
படிக்கையிலே செல்லமாக
என்னை மகன் என்று
உரிமை கொண்டாடிய
வள்ளியம்மா டீச்சரை
எப்படி நான் மறப்பேன் .

எத்தனையோ தெருக்கள் உண்டு
அவை அனைத்தும் எனக்கு
பழக்கம் உண்டு.

பத்து நிமிடம் போதும்
என் ஊரை சுற்றிப் பார்க்க.

அந்த சினிமா டாக்கீசும்
அண்ணா மண்டபமும்
சுங்கம் நால்ரோடும்
என் மனதில் பதிவான
சித்திரங்கள் என
சொல்வேன்.

சில பெயர்கள் இங்கே
குறிப்பிட ஆசைதான்.
இருந்தும்
யாரை சொல்வது யாரை
விடுவது.

இருப்பினும் அவரைப் பற்றி
சொல்லியே ஆக வேண்டும்.

ஒரே தெருவில் இருப்பதினால்
இவரைப் பற்றி சொல்லுகிறேன்.

என் போன்ற சிறுவர், சிறுமியரை
ஒன்றாக அழைத்து,
வெட்டிப் பேச்சு பேசாமல் அறிவு
பூர்வ பேச்சாலே
பல விஷயங்கள் சொல்லி
எங்களை வியப்பில் ஆழ்த்திய
சொர்ண மன்னிதான் அவர்கள்.

அப்படி ஒரு மரியாதை
அவர் மீது எங்களுக்கு.

பெரியவர் முதல் சிறியவர்
வரை, அனைவரும் மதிக்கும்
ஓர் அபூர்வ பெண்மணி.

வெளியூரில் இருந்தாலும்
என் நினைவெல்லாம்
என் ஊரில்தான்.

மற்ற பல விஷயங்கள்
நிறையவே உண்டு
இருப்பினும் அவைகளை
நாம் பாப்போம் பின்பு.

உங்களுக்கு சற்றே
நேரம் கிடைத்தால்
எங்கள் ஊர் வாரீர்.

அதன் அழகையும்
பாரீர்.

ஆனந்த் சுப்ரமணியம்

ஊர் - காரத்தொழுவு

தேதி - 19.08.2013

நேரம் - காலை 8.40 மணி

ஓலை said...

அஹா! அருமை ஆனந்த் சுப்ரமணியம் அவர்களே!
இங்கு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!
அன்புடன்