Wednesday, December 26, 2012

சோற்றுக்கணக்கு

ராசக்கா காலையில நேரத்தில எழுந்திரும். எழும் முன்னவே நாள் முழுக்க என்ன செய்யனும்ன்னு எதையோ யோசிச்சிட்டே இருக்கும். ராசக்காவின் மாமனோட உறவு சனம் தினம் பத்து பதினைந்து பேரோ அவங்க வீட்டுல சாப்பிடும். அக்கா  எல்லோரையும்  மிரட்டி எதோ வேலை வாங்கி கிட்டே இருக்கும். ஒருத்தரும் சம்பாதிச்சு கொடுக்க இல்லை. மாமன் கொண்டு வருவது தான். இத்தினி பேர் சாப்பிடுதுங்கலேன்னு ஒரு தடவையும் சொல்லிக் காமிக்காது. ஆனால் ராசக்காவின் பேச்சுத் தொனியே அவிங்களை விலக்கி வைச்சிரும். தன்னோட தடித்த உருவத்தையும் தடித்த குரலையுமே தனது பலமாக வைத்தே வாழும் உசிரு அது.

நான் அது வீட்டுக்குள்ள நுழையும் போது அதன் முகத்தில ஒரு தனி மலர்ச்சி தெரியும். இத்தனிக்கும் மாமன் தான் என்னை தூக்கி வைச்சு விளையாடும். அக்கா வேலையா இருந்தாலும் கண்ணு மட்டும் என்னோட விளையாட்டையும் குறும்பையும் தனியாப் பார்த்து ரசிக்கும். பிறவு தனியா என்ர  ஆத்தா கிட்ட சொல்லும் போது தான் இத்தினியும் கவனிச்சிருக்குன்னு தெரியும். ஒரு வெள்ளி கிண்ணத்துல சோறு பிசைஞ்சு ஊட்டும். மாமனோட வெள்ளித் தட்ட வையுன்னு அடம் பிடிச்சாலும் எதையோ சொல்லி வெளியத் தூக்கி கிட்டு வந்திரும். மாமனோட அக்கா அந்த தட்டை மாமனுக்குத் தவிர யாருக்கும் கொடுக்காது. ரொம்ப கேட்டா போய் உன்ர வீட்டுல துன்னுன்னு விரட்டும். ராசக்கா  வெளிய கூட்டி வந்திரும்.

தினம் பத்து பேரு திங்கிற வீட்டுல ராசக்கா ஏதொ சொல்லிச்சுன்னாத் தான் சண்டை வரும். மாமனோட மச்சான் உள்ள வராம வெளிய நின்னு பேசிட்டுப் போயிரும். யாரும் சாப்பிடுவதற்கு ஒன்னும் சொல்லாது. ஆனால் ஏதொ ஒன்னு சொல்லி சண்டை வர வழவைச்சிரும். எதுவும் புரியாம அங்கேயே விளையாடிகிட்டு இருப்பேன். யாராவது கண்ணு கசங்கிச்சுன்னா ஓடியாந்துருவேன்.

ஊராம் புள்ளைய எடுத்து வளர்த்தா தன்  புள்ளை தானே வளரும்ங்கும். ஆனால் அக்கா வீட்டுல புள்ளைகுட்டி கிடையாது. என்னைத் தவிர அது வளர்த்து விட்டது மாமனோட உறவு சனத்துல மட்டும் தான். அந்த புள்ளைங்களோட விளையாடுவேன். அங்கிருக்கிற வாலிபப் பசங்க பொண்ணு பிள்ளைகளோடு விளையாடுவேன். வீட்டுக்கு சாப்பிட தூங்க மட்டும் வருவேன்.

நான் வளர வளர அந்த வீட்டுல வளர்ந்த மற்ற புள்ளைங்களுக்கும் கல்யாணம் சேர்த்தி எல்லாம் செய்து வைச்சது. அந்த வீட்டு கல்யாணம் பண்டிகை சேர்த்தி எல்லாத்திலும் என்னை பக்கத்தில வைச்சுக்கும்.

ஜெயமோகனின் சோற்றுக்கணக்கு  படிக்கும் போதெல்லாம் அதில் வர்ற கேத்தேல் சாஹிப் என்ர ராசக்கவாத்தான் இருக்கும். ராசக்காவின் சோத்துக் கணக்கை யாராலயும் அடைக்க முடியாது.

No comments: