Sunday, February 26, 2012

புரியாமப் புரியுது

அம்மா என்னை காலையில ஆட்டி எழுப்பும் போதே என்ர அப்பன் கருப்பட்டி காபியோட வெளியே நிப்பாரு. கண்ணத் துறக்கலாமா வேணாம்னு யோசிச்சு அசையும் போதே அம்மாவ்வோட கேப்பக் களியோட வாசம் இல்லாட்டி ராகிக் கஞ்சி வாசம் இழுத்து அணைக்கும்.

அம்மா இன்னையாவது இட்லி வைக்கலையான்னு லேசா குரல் விடுவேன். அடி சக்கை ன்னு குரலோ அல்லது பெரிய துரைமாரு புள்ளைன்னு நெனப்பு சத்தம் கொஞ்சம் பக்கத்துல வர மாதிரி இருந்துச்சுன்னா புடுறா சொக்கா ஓட்டம்னு இழுத்தெரிஞ்சு ஒரு ஓட்டம் புழனி பக்கம் ஓடிர வேண்டியது தான்.

கழனி மேட்டுல வேலை செய்ய இட்லி தோசை உதவாதுட போக்கத்தப் பயலேன்னு திட்டிக்கிட்டே அம்மா வந்து பல்ல விளக்குறாங்கும். அது கையில வேப்பன் குச்சி ஒன்னு ரெடியா நிக்கும். அத வாங்கி கையில வைச்சு கிட்டே, எப்பிடிரா நம்மஅப்பன் வேணும்னா மட்டும் அம்மா இட்லி வடை சுடுதுன்னு யோசிக்கையில அந்தக் குச்சி முதுக சொரியவாக் கொடுத்தேன் கண்ணுங்கும்.

அப்பன் என்னிக்குமே தனக்கு எதுவும் வேணும்ன்னு நேரச் சொல்லாது. களி திங்கும் போது அந்த அய்யண்ணன் கடை வழியாப் போனேன், இட்லி வடை வீச்சம் நம்ம தோட்டத்துக்கே வந்துருச்சுப் புள்ளங்கும். அம்மா ஒரு பார்வையோட உள்ளாரப் போய் சிரிச்சிக்கும். அடுத்த நாள் காலயில ராசக்காவை வைச்சு வடை சுட வைச்சிரும். அள்ளி வைச்சப் புருசனுக்கு ஆட்டவைச்சுப் படைக்குது பாரு உன்ர ஆத்தான்னு ராசக்கா சுட்டுக் கொடுக்கும்.

அப்பனும் ராசக்கா மாமனும் தோட்டத்துல இதச் சொல்லி சிரிச்சுக்கும். அப்பன் மாமன்கிட்ட எப்பவும் சொல்லுவாரு. எலேய் விளையாட்டுக்கு கூட பொஞ்சாதி மேல கையைத் தூக்கிராதரே, பொஞ்சாதியப் பகைச்சுகிட்டா நட்டம் உனக்குத்தாம்ல என்கும். மாமன் கேட்காத மாதிரி அங்கிட்டு எதோ சத்தம் வந்தம் மாதிரி நடிக்கும்.

ராசக்கா எந்த வேலையை செய்தாலும் ஒரு காரியத்தோட தெரிஞ்சுவைச்சு செய்யும். கவனமா செய்யும். ஆனால் மாமன் வந்தாலே அங்கிட்டு எல்லாமே மாறிரும். மாமன் அதக் கொண்டா இத செய்யுன்னு மிரட்டுவதும் உதைப்பதுமா இருக்கும். அக்கா ஒரு பிடிப்பில்லாமலே செய்யும். நான் மாமன் இல்லாத சமையமாத் தான் ராசக்கா வூட்டுப் பக்கம் தலைஎடுப்பேன், எங்க நம்மையும் சாத்திருமோன்னு. அக்கா புள்ள இல்லாம படர கஷ்டமும் சேர்த்துப் படும். எலேய்! உன்ர அப்பனாத்தவைப் பாருலே. ஒண்ணா இருக்க மாதிரியும் இல்லாம சேர்ந்தா மாதிரியும் இல்லாம பாசாங்காப் பழகிற மாதிரி நடிச்சு ஒட்டிகுதுங்க. என்ர நிலைமையைப் பாருலேங்கும்.

ராசக்கா சொல்றது புரியுதா இல்லையான்னு யோசிக்கத் தெரியாம, அக்கா தெரிஞ்சுவைச்சு தான் சொல்லும்ன்னு வந்துருவேன்.